உன்னை அறிந்துகொள்

வருமானத்தைப் பெருக்க நீ முடிவு செய்து களத்தில் இறங்கினால் முதல் தடை உன்னிடமிருந்து ஆரம்பிக்கும். பலர் தன்னைப் பற்றி அறியாமல் களத்தில் இறங்கி தோல்வியைத் தழுவுகிறார்கள்.
உலகத்தில் பணக்காரர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஜெயித்தவர்கள் என்பவர்களையும் விரல்விட்டு எண்ணி விடலாம். ஏழைகளையும், கடன் பட்டவர்களையும், தோற்றவர்களையும் எண்ணவே முடியாது. அவர்களின் எண்ணிக்கை அதிகம். காரணம் என்ன?
முதலாவது அவர்கள் தங்களைப் பற்றி அறிந்து கொள்ளாததுதான். இளம் வயதில் என்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். கற்பனை வேறு, நிதர்சனம் வேறு. நிஜத்தில் நாம் நினைப்பதைப் போல வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. தன் வலியை அதாவது திறமையை - வினை வலியை அதாவது செயலின் தன்மையை உணர்ந்து தொடர்ந்து செயல்பட்டுக்;கொண்டே இருக்க வேண்டும்.
உன்னால் அது முடியுமா என யோசித்துப் பார்.. நிச்சயமாக முடியாது. இளம் வயதில் பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செல்லும். நாற்பது வயதைக் கடந்தவரை கவனித்துப் பார். அவர் அதிகமாக எதிலும் ஈடுபடாமல் உழைப்பிலேயே கவனத்தைச் செலுத்துவார். காரணம் என்ன?
எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற வெறி அப்போதுதான் அதிகமாக இருக்கும். நீயாகச் செய்யவேண்டிய வேலையை நீயே செய்யவேண்டும். மற்றவர்களைக் கொண்டு செய்யவேண்டிய வேலையை மற்றவர்களை வைத்து துரிதமாகச் செய்யவேண்டும். நானே கற்றுக் கொண்டு சுயமாகச் செய்கிறேன் என்றால் காலம் விரையமாகும். எனவே, அதை கற்றவர்களிடம் சென்று கற்றுக்கொள்ளவேண்டும்.
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறவன் ஆறு விக்ஷயங்களைத் தவிர்க்க வேண்டும். அவை அதிகமான உறக்கம், உடல் அசதி என நினைத்தல், அச்சம், கோபம், சோம்பேறித் தனம், பின்பு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம். இவற்றுக்கு மேலாக இப்போது பேஸ் புக் போன்ற சாதனங்கள் வந்து விட்டன. இவை மனித நேரத்தை வெகுவாகக்கொன்று விடுகின்றன. எனவே, இவற்றின் பக்கம் அதிகமாகப் போகக்கூடாது. அவசியமில்லாமல் போகக்கூடாது.
வேலையாட்கள், உழைப்பாளிகளுடனான சேர்க்கை, கல்வி, பெண்கள் விக்ஷயம், வேலை செய்யும் இடம் ஆகியவற்றின் மீது எப்போதும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ஜெயிக்க வழி பிறக்கும்.
மனைவியால் வரும் தடை
இரண்டாவது தடை உனது மனைவியிடம் இருந்துதான் வரும். இப்படி வருவது தவறல்ல; உன்னை நீ சீர்தூக்கிப் பார்க்க கடவுளால் மனைவி மூலம் வைக்கப்படுகிற சோதனை.
எல்லாருடைய மனைவியுமே கணவன் ஒரு செயலைச் செய்ய ஆரம்பித்தால், இது தவறு, இதனால் நீ அதை இழப்பாய், இதை இழப்பாய்! எனக் கூறுவார்கள். உன்னுடன் ஆண் நண்பர்களோ, பெண் நண்பர்களோ சேர்ந்தால் அவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கவும், சண்டை போடவும் கூட செய்வார்கள். எது உன்னால் முடியவில்லையோ அதைக் குத்திக் காட்டிப் பேசுவார்கள். மற்றவர்களை ஒப்பிட்டும் பேசுவார்கள். ஒரு கட்டத்தில் நீ பேசாமல் வீட்டோடு இருந்தால் போதும், வேறு வசதி வாய்ப்புகள் கூட தேவையில்லை என்பார்கள். உன்னை அவர்கள் இழந்து விடுவார்களோ என்ற பயத்தில்கூட இப்படியெல்லாம் தடைகளைக் கொண்டு வருவார்கள்.
இந்த சமயத்தில் நீ சோர்ந்துவிடவோ, எரிச்சலடைந்து மனைவியுடன் சண்டை போடவோ வேண்டாம். மாறாக, உனது நோக்கத்தைப் பற்றியும். அதை அடைவதற்காக நீ எடுத்துள்ள முடிவு பற்றி யும் மனைவியிடம் எடுத்துக் கூறு. உனது வெற்றியில் அவளது பங்களிப்பின் அவசியத்தைப் பற்றி யும் எடுத்துக் கூறி, அவளது சம்மதத்துடன் செய்கிற தொழிலை சீராகச் செய். வெளி வேலையை வெளியில் வைத்துக்கொள். வீட்டில் மனைவியை முழுமையாக நேசி. அப்போதுதான் உனது தொழிலில் நீ வெற்றி பெற முடியும். வாடிக்கையாளர்களாக பெண்கள் அறிமுகமாகும்போது எச்சரிக்கையாக நடந்து கொள். அவர்களுடன் கண்ட நேரங்களில் பேசுவதைத் தவிர். இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் தோன்றுவதைத் தவிர்க்கலாம்.
போட்டியாளர்களை சமாளிக்க வேண்டும்:
அடுத்து, போட்டியாளர்களால் தொல்லைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நீ ஒரு வாய்ப்பை சிரமப்பட்டுப் பெற்றிருப்பாய். அதை உனக்குத்தெரிந்த போட்டியாளர்களோ, அல்லது உனது திட்ட மதிப்பீட்டை அறிந்துகொண்ட உரிமையாளரோகூட தவறாகப் பயன்படுத்தி குறைந்த செலவில் செய்து தருவதாக உனது தொழிலை அபகரித்துவிடுவார்கள். ஆகவே, எதைச் செய்தாலும் அதை கவனத்தோடும், செய்கிற விக்ஷயத்தை பிறர் அறிந்து கொள்ளாதவாறும் செய்ய வேண்டும். முதலில் குறைந்த திட்ட மதிப்பீட்டைக் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டு, கூடவே உனக்குச் சாதகமான ஒரு வரியைச்சேர்த்துக்கொள். அதைப் பிறர் அதிகமாக கவனிக்க மாட்டார்கள்.
நண்பர்களிடம் எச்சரிக்கையாக இரு்
பெரும்பாலான நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அங்கே பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமாக இருக்கும். ஆகவே நண்பர்களுடன் அதிக நேரத்தைச்செலவிடுவதைக் குறைத்துக் கொண்டால்தான் தொழிலில் வெற்றி பெற முடியும்.
இடம் காலம் அறியவேண்டும்:
ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான இடம், அதை சரியாக முடிக்கவேண்டிய காலம் ஆகியவற்றைத்திட்டமிட வேண்டும். மழைக்காலத்தில் உப்பு விற்கப்போகக்கூடாது என்பார்கள். இவ்வாறே நமது தொழிலுக்கு உகந்த காலம் வராத போது அதைத் தொடங்க நினைக்கக்கூடாது.
கடன் வாங்கவே கூடாது்
தொழிலைப் பெருக்குவதாக நினைத்துக்கொண்டு கடன் வாங்கி தொழிலில் முதலீடு போடுவதையும், போட்ட முதலீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தொழிலுக்கு எனத் தனியாக ஒதுக்க வேண்டும். அதை தொடவே கூடாது.
கடவுளை நம்பவேண்டும்:
நாம் எவ்வளவுதான் பெரிய புத்திசாலியாக இருந்தாலும், உழைப்பாளியாக இருந்தாலும், தைரியசாலியாக இருந்தாலும் நேரம் என்ற ஒன்றின் முன் னால் நம்மால் நிற்கமுடியாது. கெட்ட நேரம் தலை தூக்க ஆரம்பித்துவிட்டால், அரசனும் ஆண்டியாகி விடுவான். சோலையும் பாலையாகிவிடும். ஆகவே, கெட்ட நேரம் வருவதற்கு முன்பாகவே உனக்குப் பிடித்த ஒரு தெய்வத்தை இறுக்கமாகப் பற்றிக்கொள். தெய்வம் சோதிக்கும் என்பார்கள். அதுவே சத் குருவாக வந்து வாய்க்கும் போது சோதிக்காது. எனவே சத்குருவாக உள்ள கடவுளைப் பற்றிக்கொள். வெற்றி பெறலாம்.

கற்றுக் கொள்!

இயற்கைக்கு எதிராகச் செல்லாதே. இதனால் நிறைய தீமைகளை, ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பூமி, ஜலம், அக்னி, வாயு முதலியனவற்றுக்கு அனுகூலமாக நம் செயல்களைச் செய்தால், பரஸ்பரம் ஒத்துப் போகும் இக்குணத்தால் நாம் அதிகப் பலனையே பெற இயலும்.
உயரமான இடத்தில் இருந்து இறங்குகிற நீர் வீழ்ச்சியில் குளிக்கிறாய். என்ன தெரிந்துகொண்டாய்? உயரமான இடத்திலிருந்து வருகிற கங்கை, தாழ்ந்த உன்னை சுத்தப்படுத்தும் தொண்டு செய்கிறாள். அதுபோலவே, நீயும் உன்னிலும் தாழ்ந்தவராக உன்னால் கருதப்படுபவனுக்குத் தொண்டு செய்.
அக்னி எப்போதும் மேல் நோக்கியே எரிகிறது. மற்றவர்களுக்கு ஒளியைத் தருகிறது. உணவைத் தருகிறது. அவர்கள் வேண்டுவனவற்றைத் தருகிறது. அப்படியே உன்னிலிருந்து எழுகிற ஒளியானது பிறருக்கு எப்போதும் நன்மை செய்வதாக அமையட்டும். பிறருக்கு நீ வெளிச்சத்தைக் கொடு, பிறரையும் பிரகாசிக்கச் செய்.
வாயு எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நீயும் இயங்கிக் கொண்டே இரு. காற்றின் பயனால் மற்றவர்கள் உயிர் வாழ்கிறார்கள். உன்னுடய செயல்பாட்டால் மற்றவர்கள் எப்போதும் பயன் அடையும் விதத்தில் வாழ்.
நிலம் எல்லாவற்றையும் தாங்குகிறது. அனைவருக்கும் இடம் தருகிறது. அழிந்தவருக்கும் இடம் தருகிறது. அப்படியே, நீயும் அனைவரையும் தாங்கி, அனைவரையும் ஏற்று அருள் செய்.
வானம் எல்லையில்லாமல் பரந்திருக்கிறது. நீயும் ஒரு குடும்பத்திற்கோ, ஊருக்கோ, உறவுக்கோ, ஜாதிக்கோ கட்டுப் படாதவனாக அனைவருக்கும் பொதுவானவனாக வாழ்க்கை நடத்து. இந்த உலகத்தை உனக்குள் கொண்டு வா. உனது பரந்த மனப்பான்மையால் அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு நடந்துகொள். இந்த இயற்கைக்கு மாறாக நடக்கும்போதுதான் எல்லையில்லாத துன்பங்கள் தோன்றுகின்றன என்பதைப் புரிந்து கொள்.
-அதர்வண வேதம்

Powered by Blogger.