Thursday, August 4, 2016

என்னுடைய பக்தனை வீழ்ச்சியடைய விடமாட்டேன்!

1917 ல் திருமதி. தார்கட் என்ற பெண்மணியும் அவருடைய மகனும் பாபாவை தரிசிக்க சீரடிக்கு வந்தனர். சிறுவனிடம் பாபா எட்டு ரூபாய் தட்சணை கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று அவன் கூறியதும், பாபு சாகேப் ஜோக்கிடம் போய் வாங்கி வா என அனுப்பி வைத்தார்.
சிறுவன் சென்ற சமயத்தில் துருவ சரித்திரத்தைப்படித்து விளக்கிக் கொண்டிருந்தார் ஜோக். பாபா அனுப்பியதன் நோக்கம் என்னவெனில் எட்டு வயது சிறுவனான துருவன் மிகப் பெரிய ஆன்மீக சாதனைகளைப் படைத்து துருவ நட்சத்திரமாக விளங்கும் அளவுக்கு உயர்ந்தான், நீயும் அப்படி விளங்க முயற்சி செய் என்பதற்காகத்தானே!
ஜோக், தனது பேச்சினூடே, மகான்கள் கடவுள் அல்ல, கடவுளிடம் பெற்ற சில சக்திகள் மட்டுமே அவர்களிடம் உள்ளன என்பது போல பேசினார். இதைக் கேட்ட சிறுவனுக்குக் கோபம் வந்து விட்டது. அங்கிருந்து வேகமாக பாபாவிடம் வந்தான்.
பாபா, ஏன் அங்கு அனுப்பினீர்கள்?’ எனக் கேட்டான்.
என்ன நடந்தது? என விசாரித்தார் பாபா.
நீங்கள் சாதாரண மனிதராம், கடவுளாக மாட்டீர்கள் என உங்களை குறைத்துப் பேசுகிறார்கள். எனக்கு இது பிடிக்கவில்லை! என்றான் சிறுவன்.
உண்மைதானே குழந்தாய்! கடவுளுடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவர் மிக உயர்ந்தவர், நான் எளிய பக்கீர்! என்றார் பாபா.
பொய் சொல்கிறீர். நீங்கள் கடவுள் என முழுமையாக நாங்கள் நம்புகிறோம். உங்களைத் தாழ்த்தி யார் பேசினாலும் கோபம் வருகிறது. மகான்களை தரக்குறைவாகப் பேசும் இடத்தில் இருக்கக்கூடாது அல்லவா பாபா? எனக் கேட்டான் சிறுவன்.
ஆம் குழந்தாய்! என்று கூறிவிட்டு, அவனை தேற்றுவதற்காக, ’நீ எங்கும் போகாமல் நாம ஜெபம் செய் எனக் கூறினார்.
நான் செய்யமாட்டேன் என்றான் சிறுவன்.
ஏன் அப்படி கூறுகிறாய்? எனக் கேட்டபோது, அதைப் பாதியில் நிறுத்திவிட்டால், பாவம் வந்து சேரும்! என்றான் சிறுவன்.
இதைக் கேட்ட பாபா, அவனது தாயிடம் திரும்பி,  தாயே உனது மகனுடைய பொறுப்பை நானே ஏற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது!என்று கூறினார்.
பேசிக் கொண்டிருக்கும்போதே சில பக்தர்கள் வந்தார்கள். உடனே பாபா, அவர்களிடம் நான் எனது பக்தர்களது நலனை நினைக்க வேண்டியிருக்கிறது.  ஒரு பக்தன் விழுந்து விடுவது போலத் தோன்றினால் நான் எனது நான்கு கைகளையும் நீட்டி, அவனைத் தூக்கி நிறுத்தி, அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியுள்ளது. அவனை வீழ்ச்சியடைய விடமாட்டேன்! என்று கூறினார்.
உடனே சிறுவன், ‘ பாபா இப்போதுதான் தாங்கள் சாதாரண பக்கீர், கடவுள் அல்ல என்று கூறினீர்கள். அப்படியானால் உங்களுக்கு எங்கிருந்து நான்கு கைகள் வந்தன? ” எனக் கேட்டான். பாபா பதில் கூறாமல் புன்முறுவல் செய்தார்.
பிரம்மா எழுதும் தலையெழுத்தைப் போல பாபாவின் வாக்கு எப்போதும் மாறாதது. சொன்னால் செய்வார். அதைப் பெறுவதற்கு நமக்குத் தகுதி வேண்டும். என்ன தகுதி என்கிறீர்களா?
குழந்தையைப் போன்று மனதில் விகற்பமில்லாததும், அன்பு நிறைந்ததுமான பக்தி மட்டும் நிலையாக இருந்துவிட்டால் போதும், உங்களை நான்கு கைகளையும் நீட்டி இழுத்துக் கொள்வார்.
கடவுள் கூட சற்று யோசிக்கிறார் குழந்தாய். தன் ஒரு கையை நீட்டி இழுத்தாலோ, இரு கைகளை நீட்டி இழுத்தாலோ ஒருவேளை அவரது பிடியிலிருந்து தவற நேரிடலாம் என்பதற்காக தனது அத்தனைக் கைகளையும் நீட்டி இறுக்கமாகப் பிடித்து தூக்கி நிறுத்திக் காப்பாற்றுகிறார். இது தான் இறைவன் தனது பக்தரைக் காக்கிற இலக்கணம்.
என் குழந்தாய்! இனிமேலாவது இப்படிப்பட்ட பக்தியைச் செய். அவர் உன்னைக் கைவிடாமல் உறுதி யோடு காப்பாற்றுவார்.

ஸ்ரீ சாயி வரதராஜன்

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்