Saturday, August 6, 2016

குருவின் பாதங்களில் புகலிடம் தேடு…..



பக்தன் ஒருமுறை பூரண விசுவாசத்துடன் குருவின் பாதங்களில் புகலிடம் தேடி தன்னை ஏற்றுக் காப்பாற்றும்படி வேண்டினால், குரு அவனுடைய பாரத்தை ஏற்றுக் கொள்கிறார். அதன் பிறகு அவன் செய்யவேண்டியது ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் குருவின் பாதங்களில் சமர்ப்பித்து விட்டவருக்கு பயம் என்பதே இல்லை. குரு அவருக்குத் தன்னம்பிக்கையை அளித்து அக்கரை சேர்ப்பார்.
(அத்: 23-184,185)

மனிதராக பிறந்துவிட்டால் துன்பம் தொல்லையில்லாமல் வாழமுடியாது என்பதுதான் உலக நியதி. இன்பம் வந்தால் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்ளுகிற நாம் துன்ப நேரத்தில் துவண்டு விடுகிறோம். செய்வது அறியாது திகைக்கிறோம். பரிகாரம் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கிறோம்.
செய்கிற பரிகாரம் உடனடியாகப் பலன் தரவேண்டும் என விரும்புகிறோம். சில நேரங்களில் பலன் தருகிறது, பல வேளைகளில் பலன் கிடைப்பதில்லை.
ஏன் அப்படி என்றால், நாம் செய்கிற எந்தப்பரிகாரமும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகச் செய்யப்படுகிறது. ஆகவே, அந்த விக்ஷயத்திற்கு மட்டுமே பரிகாரம் வேலை செய்கிறது. அதைத் தாண்டி எதையும் அதனால் செய்யமுடிவதில்லை.
உதாரணமாக, ராகு கேது தோக்ஷம் இருந்தால் திருநாகேஸ்வரம் சென்று வரச் சொல்வார்கள். நீங்களும் போகிறீர்கள். ஆனால் பலன் கிடைத்ததா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும்.
ஏன்? திருநாகேஸ்வரத்தில் சக்தியில்லையா? அல்லது உங்கள் பிரார்த்தனையை கடவுள் ஏற்கவில்லையா? திருநாகேஸ்வரத்தில் சக்தியிருக்கிறது. உங்கள் பிரார்த்தனையையும் கடவுள் கேட்டார். உங்கள் பக்தி அளவுக்கு பலன் கிடைத்தது. அதற்கு மேல் அது நின்றுவிட்டது.
ஒரு கிணற்றில் நீர் மொள்ள கயிறையும் வாளியையும் இணைத்து கிணற்றில் தொங்க விட்டிருப்பார்கள். கயிற்றை இறக்கி தண்ணீர் மொண்டு கொள்ளலாம். வெறும் வாளியை வைத்துக் கொண்டு தண்ணீர் மொள்ள முடியுமா? அல்லது வெறும் கயிறை கிணற்றில் இறக்குவதால் தண்ணீர்வந்துவிடுமா? கயிறு தண்ணீரில் நனைந்ததால் ஈரம் தான் வரும். வாளி  - கயிறு ஆகிய இரண்டும் சரியாக இருக்க வேண்டும்.
ஒரு வேளைக்கு ஒரு வாளி நீர் போதும் என்று விட்டுவிடுகிறீர்கள். தொடர்ந்து நீரைப் பெற வேண்டும் என்றால் வாளியும் கயிறும் எப்போதும் கிணற்றருகிலேயே இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.
உங்கள் மனம் என்கிற வாளியை - பக்தி என்கிற கயிறு வழியாக இறக்கினால், இறைவனின் அருளாகிய நீரை அதாவது பரிகாரத்தை அடையலாம். அதைத் தொடர்ந்து அனுபவிக்க எப்போதும் அவரை நினைவில் நிறுத்த வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்.
பரிகாரத் தலங்களுக்குப் போய் வந்த நீங்கள் அப்படி செய்கிறீர்களா? இல்லையே! பிறகு எப்படி பரிகாரமாகும்? சத்சரித்திரம் கூறுகிற ஒரே பரிகாரம் குருவை சரண் அடைவது.
எப்படி சரண் அடைய வேண்டும் என்பதை சத்சரித்திரம் முழுவதும் பல இடங்களில் விளக்கிக் கூறுகிறது. இந்த இடத்தில் கூறப்பட்ட விளக்கத்தை மட்டும் தியானிக்கப் போகிறோம்.
பூரண விசுவாசத்துடன் சரண் அடைய வேண்டும்:
கடன் தொல்லை, பிள்ளை பிறக்கவில்லை என்ற வேதனை, கொடுத்த இடத்திலிருந்து பணம் திரும்ப வரவில்லை. வேலை கிடைக்கவில்லை. கணவன் மனைவியிடையே பிரச்சினை, உறவுகளால் பகை.. இப்படி எத்தனையோ பிரச்சினைகள் மத்தியில் வாழும்போது, நாம் மனதிற்கு அமைதியைப் பெற முடியாது. வாழ்க்கையிலும் உயரமுடியாது.
இப்பிரச்சினையிலிருந்து மீள ஒரே வழி குருவை சரண் அடைவது. எப்படிச் சரண் அடைய வேண்டும் என்றால், பூரண நம்பிக்கையுடன் சரண் அடைய வேண்டும். பூரண நம்பிக்கை எப்போது வரும்?
வைராக்கியமும், விவேகமும் நமக்குள் இருக்கும் போது வரும். வைராக்கியம் என்பது விடாப்பிடியாக ஒன்றைப் பிடித்துக்கொண்டு அதிலிருந்து மாறாத நிலையாகும். என்ன வந்தாலும் சரி இதை அடைந்தே தீருவேன். விட்டுத் தரமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நிற்பது வைராக்கியம். இந்த எண்ணத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையை செலுத்த வேண்டும்.
இது எங்கிருந்து நடக்கப் போகிறது எனப் பிறர் கேலி பேசலாம்? இது நடக்காது எனக் கட்டியம் கூறலாம். சூழ்நிலைகள் நமக்கு பாதகமாகப் போவது போலத் தெரியலாம். இத்தகைய நிலைகளில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
சில சமயம், இது நடக்காது போலிருக்கிறதே என்ற எண்ணம் நமக்கே தோன்றிவிடும். இதனால் வேறு வழியை யோசிக்கலாமா என மனநிலை குழம்பித் திரியும். இந்தக் குழப்பத்திற்குக் காரணம் உங்கள் உள்மனதில் உறுதியில்லாமை.
வெளிப்புற சூழ்நிலைகளை தகர்த்து நம்பிக்கை வைத்ததை போன்றே உள்ளுணர்வு கூறும் சந்தேக அலைகளையும் மாற்றி மன உறுதியை வலுப்படுத்த வேண்டும். இதற்கு பிரக்ஞையை வலுவேற்றுதல் என்று பெயர்.
மனது வைராக்கியம் பெற்றுவிட்டால் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வந்துவிடும். கண்ணுக்குத் தெரிந்த கடவுளான குருவின் திருவடிகள் மீது நமது பிரார்த்தனையை ஏற்றி, ஐயனே, எனக்குப் போக்கிடம் எதுவுமில்லை. எனக்கு அடைக்கலம் கொடுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள்.. என பாரத்தை அவர் மீது வைத்துவிட வேண்டும். ஒருமுறை பூரண விசுவாசத்துடன் குரு பாதங்களில் தஞ்சமடைந்து வேண்டிக் கொண்டால், நமது பாரங்கள் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொள்கிறார் என சத்சரித்திரம் கூறுகிறது.
விசுவாசம் நிறைந்த இதயத்துடன் என்னை நீர் நினைத்தால் போதும், சுயநலம் கருதாமல் என்னை வழிபடுங்கள், எல்லா மங்களங்களும் விளையும். (அத்:25:108) என்கிறார் பாபா.
எதையும் செய்யக்கூடாது;
வேண்டிக்கொண்ட பிறகு வேறு பரிகாரங்கள் ஏதும் செய்ய வேண்டியதில்லை. அவரது திருநாமத்தை எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தாலே போதும்.
பாபா சொன்னார்: ஃநீங்கள் வேறு எதிலும் நாட்டம் இல்லாத அன்பை என்னிடம் காட்டுங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். யோக சாதனைகள் எதுவும் தேவையில்லை, காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் மட்டும் இருந்தால் போதும்! (அத்:19: 73,74)
எல்லாவற்றையும் பாபா பார்த்துக்கொள்வார் என்ற எண்ணம் இருந்தால் போதும், மற்றவற்றை அவர் நிச்சயமாகவே பார்த்துக் கொள்வார்.

பயத்தை விட்டுவிட வேண்டும்:
மனம் சஞ்சல ஜாதியைச் சேர்ந்தது. அதைக் கட்டவிழ விடக்கூடாது. புலன்கள் கட்டுக்கு அடங்காமல் தலை தெறிக்க ஓடலாம். ஆனால். உடலாகிய சரீரம் பொறுமை காக்க வேண்டும். புலன்களை நம்பக் கூடாது. ஆகவே, புலனின்பங்களில் நாட்டம் வைக்கக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக அப்பியாசம் செய்தால் மனத்தின் சஞ்சலம் போய்விடும்.
(அத்: 49: 17,0171)
சஞ்சலப்படும் மனத்தில்தான் பயம் வந்துவிடும். நீங்கள் ஒரு தவறைச் செய்திருப்பீர்கள். உடனே உள் மனது, நீ தவறு செய்துவிட்டாய், பாபா உன்னை தண்டிப்பார்,  இனி அவர் உனது பிரார்த்தனையை கேட்க மாட்டார் என்று சொல்லி பயமுறுத்தும். நீயும் அதை நம்பி, நாம்தான் தப்பு செய்து விட்டோமே, இனி பாபா நம்மை காப்பாற்ற மாட்டார் என இருந்து விடுவாய். இது தவறானது. ஒரு முறை, இருமுறை, பல முறை தவறு செய்தாலும் மனம் வருந்தி, அந்தத் தவறு நடக்காமல் பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு என அவரிடம் உங்களை ஒப்படைத்து விட வேண்டும். நமது செயல்களால் வருகிற பயத்தை விட்டு விட வேண்டும். இப்படி விட்டவருக்கே தன்னம்பிக்கை உண்டாகும். வெற்றி பெற முடியும்.
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்:
பலரது பிரார்த்தனை கேட்கப்படாமல் போவதற்குக் காரணம் அவர்களிடம் தன்னம்பிக்கை இல்லாதது. ஒரு பிரச்சினை வந்தால் முதலில் பயம்தான் வரும். பிறகு அதைப் பற்றிய நினைவுகள் அலை அலையாக வந்து கவலை வரும்.
இந்த இரண்டும் வந்தால் தன்னம்பிக்கையின் அளவு குறைந்துவிடும். கவலை நமது உயர்வை தடுக்க விரிக்கப்படுகிற வலை என்பதை உணர்ந்து, பாபா என்னிடம் தன்னம்பிக்கை கூட கிடையாது. அனைத்தும் நீ விட்ட வழி என அவரது பாதத்தில் விழுந்துவிட்டால் போதும். அவர் இந்த உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தந்து, எதிர்த்துப் போரிடவும், வெற்றி பெறவும், உயர்வடையவும் வழி செய்து விடுவார். அதுதான் அவரது தனிச்சிறப்பு.
தான தர்மம் செய்வதை கடமையாக வைத்துக் கொள்!
பெருங்களத்தூரில் அனுபூதி சித்தர் என அழைக்கப்படுகிற ராஜரத்தினம், உபாசனை மார்க்கத்தில் நுழைந்து ஆன்மிக அறிவையும் தெளிவையும் பெற்றவர்.  ஸ்ரீ வித்யா போன்றவற்றைத் திறம்படக் கற்றுத் தேர்ந்தவர்.
உபாசனை மார்க்கத்திலிருந்து ஆத்ம ஞானம் பெறுவதற்காக இவர் சாயி பாபாவை சரண் அடைந்த போது, அவருக்கு பாபா உணர்த்திய விக்ஷயங்கள் சேவை செய், தியாகம் செய் என்பது.
சேவையே தியாகம்தான். சுயநலம் சாராது பிறர் நலம் காக்க தன்னால் முடிந்த ஒரு பணியை மனம் உவந்து செய்வது சேவை. தன் லாபத்தை பிறருக்காக விட்டுத் தருவதால் இது தியாகம்.
குறைந்த சம்பளத்தில் அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர், தான் பெறுகிற பென்க்ஷன் தொகையை பத்து இருபது ரூபாய் நோட்டுகளாக மாற்றி வைத்திருப்பார். வேண்டி அழைக்கிற வீடுகளுக்குச் சென்று ஹோமம் முதலியவற்றைச் செய்து தந்து, அவர்கள் தருகிற தட்சணைகளையும் பத்து இருபதாக மாற்றி வைத்துக் கொள்வார். இது இவருடைய பழக்கம். எதற்காக இப்படிச் செய்கிறார்?
பிச்சைக்காரர்;, கைவிடப்பட்ட முதியோர், நோயாளிகள், பசித்தவர்கள் என ஒருவேளை உணவுக்குக்கூட திண்டாடுபவர்களுக்கு தலா இருபது ரூபாய் தருவார். எதற்காக இருபது ரூபாய் தருகிறார் எனறால், ஒரு டீ விலை பத்து ரூபாய். ஒரு பாக்கெட் பிஸ்கோத்து அல்லது பன் (ரொட்டி) வாங்கி ஒருவேளை பசியைத் தீர்க்க பத்து ரூபாய். ஆக இருபது ரூபாய் தந்தால் ஓர் ஏழையின் வயிறு ஒருவேளை நிறைந்துவிடும்.
பசித்தவரின் வயிற்றை நிரப்புவது இறைவனுக்குச் செய்யும் ஹோமமாகும். மக்கள் சேவையும் இதுவே என்பார். ஒரே தானத்தால், அன்னதானப் புண்ணியம், தர்மம் செய்த புண்ணியம் என இரட்டைப் புண்ணியங்களை சம்பாதித்து பிள்ளைகளுக்கும், சந்ததிக்கும் நிரந்தர சொத்தாக சேர்த்து வைக்கிறார். இறைவனுக்கு தட்சணையும் தந்த சிறப்பை அனுபவிக்கிறார்.
இவர் செய்கிற செயலில் மறைபொருளாக இருக்கிற சில விக்ஷயங்களைப் பார்க்கலாம்.
உலகைப் படைத்த பிரம்மா தேவர்கள், மனிதர்கள், பிசாசுகள் ஆகியோரை என்ற எழுத்தை உச்சரித்து அழைத்து உபதேசித்தார்.
மேன்மை படைத்தவர்களான தேவர்கள், தங்களை தன்னடக்கம் உள்ளவர்களாக இருங்கள் என பிரம்மா உபதேசிப்பதாக உணர்ந்தார்கள். என்றால் தவம் அல்லது தானம் செய்யுமாறு தங்களிடம் கூறுகிறார் என மனிதர்கள் நினைத்தார்கள். தவம் செய்ய முடியாவிட்டால் தானம் செய்தே அந்தப் பலனைப் பெறலாம் என்பது சாஸ்திர உண்மை.
பிசாசுகள் அந்தச் சொல்லை, தங்கள் இயல்பு குணமான கொடுமை செய்வதை விட்டுவிட்டு, பிறர் மீது தயவு உள்ளவர்களாக இருக்குமாறு பிரம்மா உபதேசிப்பதாகப் புரிந்துகொண்டன. இப்படி பிருக தாரண்யக உபநிக்ஷதம் கூறுகிறது.
இந்த உபதேசத்தின் பலனாகத்தான் தேவர்கள் தம்மை விட தாழ்ந்த மனிதர் வேண்டும்போது இறங்கிவருகிறார்கள். நாம் தவம் தானம் செய்வதைக்கடமையாகக் கருதுகிறோம். பிசாசுகளும் வணங்கும் போது இரக்கம் காட்டுகின்றன. ஆவிகளே சிலருக்குக் காவல்தெய்வங்களாக உள்ளதை நாம் அறிவோம் அல்லவா?
தைத்ரீய உபநிக்ஷதம் எழுதி அருளிய குரு, மாணாக்கர்களுக்கு வேதம் முதலியவற்றைக் கற்பித்ததோடு, அவர்கள் நல்ல பண்புகளை கற்று வளர்த்துக் கொள்ளவும், தர்மம் செய்யவும், அவற்றை வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் உபதேசித்தார்.
தர்மத்தை நம்பிக்கையோடு கொடுங்கள், நம்பிக்கை இல்லாமலும் கொடுங்கள், பெருந்தன்மையுடன் தாராளமாகக் கொடுங்கள். இரக்கத்துடன் கொடுங்கள் என போதித்தார்.
தர்மம் நம்மைவிட கீழ் நிலையில் உள்ளவர்களுக்குத் தருவது. மேல் நிலையினருக்குத் தருவது தர்மம் ஆகாது. அது தட்சணை, காணிக்கை, அன்பளிப்பு எனப் பல பெயரால் அழைக்கப்படும்.
தர்மப் பலன்கள் மிகுதியானது. நம் பாவப் பலனை குறைத்து புண்ணியத்தை அதிகரிக்கிறது. வாங்குவோர் வடிவில் இறைவன் இருந்து நமது தீய கர்மச் செயல்களின் கொடுமையைக் குறைத்து விடுவதால், நமக்கு நன்மை கிடைக்கும்.
இறைவன், குரு, அரசன் ஆகியோருக்குக் கட்டாய தட்சணை அளிப்பதை சாஸ்திரங்கள் ஏற்படுத்தின. இவர்களைப் பார்க்கச் செல்லும்போது வெறுங்கையுடன் போகக்கூடாது என வற்புறுத்தின.
இறைவன் எல்லாவற்றையும் ஏற்று அருள் பாலிப்பவன். குரு நமது கர்மாக்களை ஏற்றுக்கொண்டு, நமக்கு இன்பத்தையும் ஞானத்தையும் அளிப்பவர். அரசனோ நமது பாவங்களில் நான்கில் ஒரு பங்கை ஏற்பவன். அதே போல நாம் செய்யும் யாகம் போன்றவற்றால் கிடைக்கும் பலன்களிலும் அரசனுக்கு நான்கில் ஒரு பங்கு பலன் சென்றுவிடும்.
குருவுக்குத் தட்சணை தரும்போது மூன்று வகை குணங்களான தாமசம், ராஜசம், சத்துவத்தால் வருகிற பாவங்களும், நம்முள் இருந்து நம்மை அழிக்கும் பகைவர்களான காமம், குரோதம், மோகம், மதம், மாத்சர்யம் ஆகியவற்றையும் சேர்த்தே அவருக்குத் தருகிறோம். இவற்றைப் பெற்றுக் கொண்டு நமக்கு அவர் ஷேமத்தை அளிக்கிறார். பிரதி பலனாக, வயது முதிர்ந்தவரானால் ஆத்ம ஞானம் கிடைக்கும். குடும்பஸ்தராக இருந்தால் குறையின்றி வாழ்வில் செல்வ வளம் பெருகும். பெண்களாக இருந்தால் தீர்க்க சுமங்கலியாக லட்சுமி அருளுடன் வாழ்வார்கள். குழந்தைகளானால் தீர்க்காயுசுடன் நல்ல ஞானம் வாய்க்கப் பெற்று வாழ்வார்கள்.
தன்னிடம் வந்தவர்களிடம் தட்சணை பெறுவதை வழக்கமாக வைத்திருந்தார் பாபா. சில சமயம் கடன் வாங்கியாவது தட்சனை தருமாறு கேட்டார். முடியாதவர்களைப் பிச்சை எடுத்து வந்தாவது தட்சணை தருமாறு கேட்டார். திரும்பத் திரும்பக் கேட்டுப் பெற்றார்.
யார் பெரிய பாவியோ, சுய நலமியோ, கடவுளால் கைவிடப்பட ஏற்ற தீய குண நலம் உள்ளவனோ மனசாட்சியில்லாதவனோ அவனிடம் தட்சணை பெறமாட்டார். சிலரிடம் மட்டுமே பெற்றார்.
அவர் யாரிடமெல்லாம் தட்சணை பெற்றாரோ அவர்கள் அனைவரும் மிகுந்த ஷேமத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை நரசிம்ம சுவாமிஜி பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். சத்சரித்திரத்திலும் இவை போன்ற நிகழ்வுகள் காணப்படுகின்றன.
முன்னேற நினைத்தால் முதலில் கொடு. அதையும் உள்ளன்போடு கொடு. கொடுத்தால் குறையுமோ என நினைத்துக் கொடுக்காதே. ஏற்பவன் இறைவன் என நினைத்துக் கொடுத்தால் நன்மை விளையும்.
இப்படி, இருபது ரூபாயில் அனுபூதி சித்தர் பெரிய ஆன்மிக நன்மை அடைகிறார். புண்ணியம் சம்பாதிக்கிறார்; இறைவனோடு நெருக்கமாக உள்ளார். மனி தருக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவராகவும் இந்த வயதிலும் தெளிந்த மனத்தோடு வாழ்கிறார். எவ்வளவோ இன்னல்கள், வழியிலே தொலைந்து விடுகின்றன. பிள்ளைகள் நன்றாக வாழ்கிறார்கள்.
நீங்களும் இவரைப் போல ஆத்மார்த்தமாக தான தர்மம் செய்வதை  வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கை மிக விரைவில் மேன்மையடையும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...