1910-ம் ஆண்டு. ராம நவமித் திருநாள் சீரடியில் கொண்டாடப்பட
இருந்த சமயம் அது... ராம ஜென்ம பூஜையைச் செய்வதானால்
கதா காலட்சேபம் செய்யவேண்டும், பக்க வாத்தியம்
இசைக்க வேண்டும், பிரசாதம் தயார் செய்யவேண்டும்.
சீரடியோ ஒரு குக்கிராமம். இங்கு எப்படி அதற்கு ஆட்கள் கிடைப்பார்கள் என பீஷ்மா, காகா மகாஜனி
ஆகியோர் விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.
பீஷ்மா ஒரு யோசனை கூறினார். நான் காலட்சேபம் செய்கிறேன், நீங்கள் ஹார்மோனியம் வாசியுங்கள், ராதாகிருஷ்ண மாயி வெல்லமும் சுக்கும் கலந்த
உருண்டை தயாரிக்கட்டும். நாம் போய் பாபாவிடம் அனுமதி வாங்கிவந்துவிடலாம் எனக்
கூறினார்.
இருவரும் மசூதிக்கு வந்தபோது பாபாவே, வாடாவில் என்ன நடந்தது? எனக்கேட்டு விஷயத்தை அறிந்து அனுமதி தந்தார். மறுநாள் கதாகாலட்சேபம் என உறுதியானது.
மறுநாள் பாபா லெண்டிக்குப் போன சமயம், கதாகாலட்சேபத்தைக்
கேட்க பக்தர்கள் வந்தார்கள். பீஷ்மாவும், காகாவும்
தயானார்கள். திடீரென ஒருவர் வந்து காகாவிடம், பாபா அழைப்பதாகக்
கூறினார். இதைக் கேட்ட காகாவுக்கு
பயம் வந்துவிட்டது.
பாபாவின் மனம் எப்போது மாறும் என்பது யாருக்கும் தெரியாது. நேற்று சரி என்றவர், இன்றைக்கு வேண்டாம் எனக் கூறி விடலாம். அல்லது
எதற்காக இப்படிச் செய்தாய் எனக் கேட்டு அடிக்கலாம். இதனால் நிகழ்ச்சி நடக்காமலும் போகலாம் என்பன போன்ற
சிந்தனைகளால் காகாவின் கால்கள் நடுங்கின. மனம் கொந்தளிப்பாக இருந்தது.
நடுக்கத்துடன் மசூதியின் படிகளில் ஏறிச் சென்று பவ்வியமாக பாபாவின் முன்னால்
நின்றார் காகா. அவரிடம் எதற்காக தொட்டில் கட்டப்பட்டிருக்கிறது? எனக் கேட்டார் பாபா.
அவருக்கு ராமருடைய பிறப்பைப் பற்றியும் அது தொடர்பாக நடக்கவுள்ள நிகழ்ச்சி
பற்றியும் காகா எடுத்துக் கூறியதும், பாபாவின் முகம்
மலர்ச்சியடைந்தது.
அருகிலிருந்த சுவர் மாடத்தில் ஒரு மாலை மாட்டப் பட்டிருந்தது. அதை எடுத்து
காகாவின் கழுத்தில் அணிவித்தார். பீஷ்மா அணிந்துகொள்ள இன்னொரு மாலையைக் கொடுத்து
அனுப்பினார்.
ஏன் இப்படி செய்தார்?
பாராட்டாகவும் இருக்கலாம், மற்றவர்களிடமிருந்து
கதாகாலட்சேபம் செய்பவர் மாலை அணிந்த கழுத்தினராக தனியாகத் தெரியவேண்டும்
என்பதற்காகவும் இருக்கலாம்.
நீங்கள் பாபாவுக்காக ஒரு பூஜையைச் செய்ய
நினைக்கிறீர்கள், அல்லது விரதம்
இருக்கிறீர்கள் என்றால், அதற்கு ஏற்ப உங்களைத்
தயார் படுத்திக் கொள்ளுங்கள். பிறகு பாபாவிடம் அனுமதி கேளுங்கள்.
பூஜை விக்ஷயத்தில் மட்டுமல்ல, எந்த ஒருவிக்ஷயத்தையும் தொடங்க வேண்டும் என்று
தீர்மானம் செய்து கொண்டு பாபாவிடம்
அனுமதி கேளுங்கள். அவ்வாறு கேட்டு வேண்டிக் கொண்ட பிறகு எது நடந்தாலும்
பயப்படாதீர்கள். உங்கள் அனுமதியோடு இதைச் செய்கிறேன் பாபா என தன்னடக்கத்துடன்
கூறிக்கொண்டு துவங்குங்கள். எடுத்தக் காரியம் இடையூறு இல்லாமல் நிறைவேறும்.
No comments:
Post a Comment