Wednesday, August 3, 2016

இப்போது உனக்கு சாதகமான சூழ் நிலை உருவாகியுள்ளது!



என் அன்புக் குழந்தாய்!
கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த நிகழ்வுகள் உன் மனதுக்கு நிம்மதியில்லாத பல விக்ஷயங்களை உனது வாழ்க்கையில் ஏற்படுத்திவிட்டது. திரும்ப வராதவாறு கைவிட்டுப் போனவைகளால் கவலையும் கண்ணீருமாக வாழ்க்கைக் கழிந்தது. உனது துன்பங்களுக்கு அளவே இல்லாதது போன்ற நிகழ்வுகளால் பெரிய சங்கடங்களுக்கு ஆளாகி துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாய்.
தனிப்பட்ட இழப்பு தவிர, உன்னைப் புரிந்து கொள்ளாதவர்களால் நீ அனுபவித்த துன்பங்களும் மிகப் பெரிதாகவே இருந்தன. தொல்லைகளும் தொடர்ந்து உன்னைத் துரத்தி வந்ததால் நீ சோர்ந்து உட்கார்ந்து விட்ட காலங்களே அதிகமாக இருந்தது.
ஒரு வாய் உணவைக்கூட உன்னால் நிம்மதியாக சாப்பிட முடியாத அளவுக்கு இழப்புகளை சந்தித்தாய். மனம்விட்டுக் கதறி அழக்கூட முடியாதபடி வாயைக் கட்டிப் போட்டு உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த உனது நிலையை மாற்ற எவ்வளவோ போராடி வந்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா?
விதி மிகவும் வலியது; கர்ம வினைகள் மிகவும் கொடுமையானவை. அவற்றின் வேகத்திற்கு ஈடுதர முடியாமல் எவ்வளவோ கேடுகள் நிகழ்ந்துவிட்டன.
என்னை உண்மையாக வணங்கி வந்தபோதும், முற்றிலும் கர்மத் தளையிலிருந்து மீட்க இயலாமல் சங்கடங்களோடு உன்னை வழி நடத்திவந்தேன்.
அந்தளவுக்கு பூர்வ வினைகள் உன்னைத் துரத்தி வந்தன. அவற்றையெல்லாம் பொடி செய்து உன் மனதுக்கு ஆறுதலை வழங்குவேன். நிச்சயமாக நீ நினைத்த விக்ஷயங்களை ஆறுதலாக அளித்துக் காக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன்.
அதற்கு முன்பாக சில விக்ஷயங்களை உனக்கு நான் தெளிவு படுத்தியாக வேண்டும். செய்யவேண்டாம் என எச்சரித்த பல விக்ஷயங்களை நீ செய்தாய். போக வேண்டாம் என உன் மனதிற்குள் நான் போராடிப்பார்த்த பல விக்ஷயங்களை மீறி, நன்மை நடக்கும் என நினைத்துப் போனாய். மிஞ்சியது இழப்பு மட்டும் தான்.
இழந்த பிறகுதான் இந்த இடத்திற்கு வந்ததால் தான் இழப்பை சந்தித்தேன். எனது உயிர் போன்ற பொருள் என்னை விட்டுப் போய் விட்டது எனத் துடித்து தினம் தினம் நொந்துகொள்கிறாய்.
என் குழந்தாய்! போனது போகட்டும். விதி உன்னை கொண்டு வந்து இப்படி தள்ளி விட்டது. இனியும் போனதைப்பற்றி நினைத்துக் கொண்டிராதே. வேறு வழியில் அது நிச்சயம் உன்னிடம் திரும்பி வரும்.
உனது மனதை தேற்றிக்கொள்ள இவ்வளவு காலம் அவகாசம் தந்தேன். நீ உனக்குள் ஆலோசனை செய்து கொள்ள அவகாசம் கொடுத்தேன். போனது திரும்ப வரப்போவதில்லை. ஆகவே, அதை நினைத்து வேதனைப்படாதே. எனக்காக நீ இதற்கு முன்பு செய்த அதே சேவைகளை தொடர்ந்து செய்ய உன்னை தயார் படுத்திக்கொள்.
உன்னைப் போன்ற உத்தம பக்தர்களால் நிறைய நன்மைகள் மனித குலத்திற்கு நடக்கவேண்டியது இருக்கிறது. எனவே, உனது துக்கத்தையும் என் மீதுள்ள கோபத்தையும் விட்டுவிட்டு எழுந்து வா!
உறவுகளால்; மோசம் போனாய் என்பதை மறந்து விடாதே. இவ்வளவுக்கும் அவர்களுடைய பொறாமை எண்ணங்களும் அவர்களுடைய கெடுமதியும் உனது இழப்புக்குக் காரணமாக அமைந்துவிட்டன. உனது வீழ்ச்சியை அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அது நடந்த பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். இதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மாயிருப்பேனா?
உனது கண்கள் பார்க்கப் பார்க்க அவர்களை நான் படுத்தும் பாடுகளைக் கண்டு, நீயே என்னிடம் அவர்களை விட்டுவிடு என கெஞ்சும் அளவுக்குச் செய்வேன் என்பதை மறந்துவிடாதே!
நண்பர்கள் உனக்கு ஆறுதலாக இல்லை என்பதை புரிந்துகொள். தங்கள் தேவைக்காக உன்னை அணுகி அலைந்தவர்களும் சோதனைக் காலத்தில் உன்னை விட்டுப் பிரிந்திருந்தார்கள் என்பதை மனதில் வை.  நேரமும் உனக்கு அனுகூலமாக இல்லை. அதனால் பல வழிகளில் நீ திண்டாட வேண்டியிருந்தது. இப்போதுதான் உனக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இனி நீ விரும்பினால் உனக்கு நன்மை நடக்கும்.
என் குழந்தாய்! கடந்த காலத்தில் உனக்கு நான் செய்த நன்மைகளை பட்டியல் போட்டுப் பார். உன்னை விழுங்கி ஏப்பம் விட்டுவிடலாம் என்றிருந்த எல்லா நிலைமைகளில் இருந்தும் உன்னை விடுவிக்கும் உபாயங்களைச் செய்தேன்.
நீ என்னிடம் வேண்டி வேண்டி கேட்டுக்கொண்ட ஒரு சில முக்கிய விக்ஷயங்கள் மட்டும் தாமதித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பெறும் காலம் வெகு விரைவில் வந்துகொண்டிருக்கிறது.
வாழ்க்கை கழியக் கழிய மனிதர்களுக்கு ஏற்படும் இயல்பான பயம் உன்னையும் தொற்றிக்கொண்டு இருக்கிறது. யாரை சதம் என்று நினைத்தாயோ அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு உன்னை விட்டு ஒதுங்கி நிற்கிறார்கள். தங்கள் செயல்பாட்டால் உங்களை ஆள நினைத்து கோபித்துப் போயிருக்கிற அவர்களைப் பற்றி கவலைப்படாதே. திரும்பவும் வருவார்கள்.
உன்னைப் பயன்படுத்தி எடுத்துக் கொண்டவர்கள் திருப்பித் தரும் நாளும் மிக விரைவில் வந்து கொண்டுள்ளது. ஊராரை எல்லாம் நம்புகிறாய். வீட்டில் உள்ளவர்களை அதைப் போலவே நம்பு. உன் மீதுள்ள எரிச்சல் காரணமாக நான் கிழிக்கப்படுகிறேன், தூக்கி எறியப் படுகிறேன். உடம்பெல்லாம் வலியாலும் தாங்க முடியாத வேதனையாலும் துடிக்கிறேன்.
இதற்குக் காரணம், நீ என் உபதேசத்தை சரியாகக் கடைப்பிடிக்காததுதான் என்பது என் வருத்தம். நீ எனது உபதேசத்தைக் கடைப்பிடித்தால் முதலில் உனது குடும்பத்தை நேசிக்கத் துவங்கு. வீட்டில் உள்ளவர்கள் மனம் நோகாமல் நடந்துகொள்வது எப்படி என்பதைப் பற்றி யோசி. உன்னைப் பார்க்க யாராவது வந்தால் உடனடியாக பதற்றமோ, கோபமோ படாதே! அவர்கள் செய்த துரோகம், மோசடி போன்றவற்றை எண்ணிக் கொண்டிராதே!
எல்லாமும் என்னுடைய அனுமதியுடன் நடந்தது என நினைத்து அவர்கள் மீது அன்பு காட்டு. அன்பு காட்ட முடியாவிட்டாலும் மரியாதை செலுத்து. இதைப் பற்றி உனது வீட்டில் விவாதித்து குடும்ப நிம்மதியைக் குலைத்துக் கொள்வானேன்!
உருக்குலைந்த நிலையில் நிற்கிற உனது நிலையை மாற்றி நிச்சயமாக செப்பனிடுவேன். சீர்திருத்தம் செய்து உன்னை வெளிக்கொண்டு வருவேன்.
உன்னைச் சூழ்ந்திருக்கிற கிரக தோக்ஷங்களை சீர் படுத்தி சாதகமான நிலைகளை உண்டாக்குவேன். உனக்காக வேலை செய்யும் வாய்ப்புகளை எனக்கு நானே உண்டாக்கிக் கொண்டு காத்திருக்கிறேன்.
நீ செய்த எவ்வளவோ தவறுகளை அது சின்னதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் மன்னித்து உன்னை திரும்பத் திரும்ப சேர்த்துக் கொண்டதைப் போல, நீயும் பிறரது குறைகளை மன்னித்து நடந்து கொள். உனது வாயிலிருந்து தவறுதலான வார்த்தைகள் எதுவும் புறப்பட வேண்டாம்.
எல்லா பிரச்சினைகளும் சரியாகவேண்டும் என்றால் முதலில் தம்பதியருக்குள் பரஸ்பர புரிந்து கொள்ளுதல் வேண்டும். எல்லா மனக்கவலைகளும் மாற வேண்டும் என்றால் இந்த இருவருக்குள்ளும் இருக்கிற அன்பு மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
நட்டங்களும் தோல்விகளும் மறக்கப்பட வேண்டும் என்றால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி அடுத்தக்கட்ட செயலில் இறங்க வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் வாழ்க்கையின் மீது நம்பிக்கை பிறக்கும். இல்லா விட்டால் வாழ்வே சூன்யமாகத் தெரியும். வாழப் பிடிக்காது. எரிச்சல் வரும், கோபம் வரும். யாரைப்பார்த்தாலும் விலகிப் போகத் தோன்றும்.
உனது தலைக்குப் பின்னால் உன்னைப்பைத்தியம் என்று பேசியவர்களும் இருக்கிறார்கள் என்பதை உனக்கு இப்போது தெரியபடுத்துகிறேன். அந்த அளவுக்கு உனது செயல்களும், பேச்சும் இருந்தன. அதை விட்டுவிடு. உன்னில் புதிய மாற்றத்தை உண்டாக்கு.
உணவில் தாதுச்சத்துக்கள் குறைவதால் உடலை இயக்குகிற ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், மன நிலை மாறுதல்களுக்கும் காரணமாக அமைந்து உன்னைப் பாடாய்படுத்துகிறது என்பதை புரிந்து கொண்டால் உடம்பை சீராக கவனித்துக் கொள்வாய். உனக்கு என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேள். அதை நான் தரவேண்டும் என்றால் அல்லது நீ பெற வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனைதான் உள்ளது. அது, வேறு எதிலும் நாட்டத்தைக் காட்டாத ஈடுபாடு. இந்த ஈடுபாட்டை என் மீது செலுத்தி வேண்டுதல் செய். அப்போது நடக்கும். வேண்டுதல் செய்யும்போது ஏற்படுகிற ஒரு துளி அவநம்பிக்கையும் உனது வேண்டுதலை தள்ளிவைத்துவிடும்.
தேவைப்படும் நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறாய், கொஞ்சுகிறாய். காரியம் கைகூடிய பிறகு அதைப் பற்றி சிறிதும் கவலைப் படாத போக்கு உன்னிடம் காணப்படுகிறது. என் பக்தர்களில் எவர் என்னிடம் கடன் பாக்கி வைக்காமல் இருக்கிறாரோ அவர் மீது எனக்கு பிரியம் அதிகம். அவர் எனக்கு சந்தோக்ஷத்தை அளிக்கிறார்.
எனக்கென்ன வீடா, வாசலா, குடும்பமா, குழந்தையா, நான் ஏன் விசாரப்பட வேண்டும்? எல்லாம் உனக்காகத்தான்.. இந்த விசாரத்தை என் தலை மேல் ஏற்றிக் கொள்கிறேன்.
உன் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடுகிறேன். ஆனால் உனது மனதில் தோன்றும் ஏதோ ஒரு கலக்கத்தின் காரணமாக வேண்டுதல் நிறைவேறாமல் போகிறது.
இப்போது நீயும் நானும் ஒரு தீர்மானித்துக்கு வருவோம். நீ என்னை சரணடைந்திருப்பது உண்மை தான். கூடவே இன்னொன்றையும் செய். அதாவது உனக்குப் பிடித்தமான உணவுப் பண்டத்தை விரதம் நிறைவேறும் வரை விட்டுவிட வேண்டும். இப்படிச் செய்தால் நிச்சயமாக உனக்கு காரிய சித்தியாகும்.
நீ உனது குழந்தைகளைப் பற்றி நினைத்து வருந்தும் விக்ஷயங்களில் எனக்குப் பிடிக்காதது, அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள், இப்படி பேசுகிறார்கள், என்னை இப்படி சொல்லிவிட்டார்கள் என்பது. அவர்கள்தானே சொன்னார்கள்.. இருக்கட்டும் என ஏற்றுக்கொண்டு செல்லும் மனப்பக்குவத்தை நீ உண்டாக்கிக்கொள். அவர்களைக் கடிந்து கொள்ள வேண்டாம், சபிக்கவேண்டாம். அவர்களைப் பற்றி வருத்தப்படவும் வேண்டாம். இப்படிச் செய்தால், அவை அவர்களுக்குச் சாபமாக முடியும் எனப் பல தடவை உனக்கு எச்சரிக்கை செய்திருக்கிறேன்.
என் மீதாயினும், குடும்பத்தின் மீதாயினும், பிள்ளை மற்றும் பிறர் மீதாயினும் நீ விதைக்க வேண்டிய முதல் விதை அன்பு. காரணம் இன்றி விளைவுகள் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து கொள். நடப்பது அனைத்தும் எதேஷ்டமாக என்னால் நடக்கிறது. உனது பூர்வ கர்ம வினையால் தொடர்கிறது.
எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது. நான் ஓர் ஆளைப் போய் பார்க்கவேண்டியுள்ளது. அவனுக்கு செல்வம் செல்வாக்கெல்லாம் கொடுத்தேன். நிறைய பணத்தையும், பேசக்கூடிய திறத்தையும் தந்தேன். எல்லாவற்றையும் அனுபவித்து கர்வமாக வலம் வந்த அவன், தன்னுடைய பேராசையால், விட்டதைப்பிடித்து விடலாம் என்ற வெறியால் தப்பு மேல் தப்பு செய்து தர்ம சங்கட நிலையில் இருக்கிறான்.
கையில் இருந்ததெல்லாம் போயிற்று. விரும்பி வாங்கி வைத்திருந்த பொருட்களும், கட்டியிருந்த வீடும், தன்னை கம்பீரமாகத் தெரிய வைத்த மானம் மரியாதையும் போய்விட்டது. யாரெல்லாம் நாய் போல இவன் முன் குழைந்து நின்றார்களோ அவர்கள் எல்லாம் இவனை நாயைப் போல நடத்துகிறார்கள்: அடிக்கவும் செய்கிறார்கள். மரண பயத்தில் ஒவ்வொரு நாளையும் நகர்த்திக்கொண்டிருக்கிறான்.
எனது ஆலோசனைகளை விட்டுவிட்டதால் இன்று சீர்கெட்டு நிற்கிறான். புத்தி கெட்டுப் போனதால் புதுப் புது சிந்தனைகளுக்கு ஆளாகி செல்லாக் காசாக நிற்கிறான். கடன்காரர்களை சந்திக்க தைரியம் இல்லாமல் சாக்குப் போக்கு சொல்கிறான். கையில் பணம் இல்லாததால் விரக்தி நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டான்.
குடும்பத்தில் வறுமை, நோய், போராட்டம் என பல பிரச்சினைகள் தலை தூக்கிவிட்டதால் தலை நிமிர முடியாத நிலைக்கு ஆளாகி துயரத்திலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறான். நான் போய் என்னால் முடிந்தளவு உதவி செய்து விட்டு வருகிறேன். அதுவரை எனது நாமத்தை தியானம் செய்.
அப்புறம்.. அவரைக்காய் சாம்பார் வைத்து எடுத்து வா.. நீயும் நானும் சாப்பிடலாம். எது எதற்காகவோ அலைந்து அலைந்து எனக்கும் களைப்பாக இருக்கிறது. நானாவது பரவாயில்லை. நீ உனது உடம்பை ஜாக்கிரதையாகப்பார்த்துக்கொள். எனது உதியை பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டு காலையில் மாலையில் அருந்துவதை கட்டாயமாக்கிக் கொள்.
நல்லதை நினை, நல்லதையே செய், மகிழ்ச்சியாய் இரு, மன நிறைவோடும் இரு.. எல்லாம் போகிற போக்கில் தானாகச் சரியாகும்..
அன்புடன் அப்பா
ஸ்ரீ சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...