Thursday, August 31, 2017

மந்திரம் தேவையில்லை...




அனுபூதி சித்தர் என்கிற அடியாரை சாயி தரிசனம் வாசகர்களுக்கு நன்கு தெரியும். அம்பாள் உபாசகர். அவர் என்னிடம், ”உங்களை நாடி மக்கள் அதிக எண்ணிக்கையில் வர ஆரம்பித்துவிட்டார்கள். நீங்கள் நிறைய அற்புதங்கள் அடையாளங்களைச்செய்யவேண்டும். அதற்குரிய மந்திரங்களைப்பிரயோகம் செய்தால் இது சாத்தியமாகும். நான் சில மந்திரங்களைக் கற்றுத் தருகிறேன்!” எனக் கூறுவார்.
அவர் அமர்ந்திருக்கும்போது யாராவது ஒருவர் வந்து, ”சாயி ராம்! நீங்கள் எனக்கு உதி தந்தீர்கள். பிரச்சினை தீர்ந்தது”  என்றோ,  “குழந்தை பிறந்தது” என்றோ கூறுவார்கள். அப்போது,  “மந்திரமெல்லாம் உனக்கு சரிப்படாது.. என் உதியே போதும் என பாபா கூறுகிறார் பாருங்கள்! எனக் கூறுவேன்.
ஆனால் தனிமையில் பாபாவிடம், ”பாபா எனக்கு மந்திரத்தைச் சொல்லித் தாருங்கள்” எனக் கேட்பேன்.
சாயி பாபா எந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து இத்தகைய அற்புத சக்தியைப் பெற்று இருப்பார் என யோசிப்பேன். எந்த மந்திரமும் அவருக்கு சக்தியைத் தந்திட வாய்ப்பில்லை. மனதின் உறுதியும், தன்னை அறிந்துகொண்ட விதமும் தான் அவருக்கு இறைத்தன்மையை அளித்தது என முடிவு செய்தேன்.
மனதிற்கு உறுதி வரவேண்டும் என்றால் அதை ஓரிடத்தில் கட்டி வைக்கவேண்டும். அதைக் கட்டும் கயிராகத்தான் முன்னோர்கள் மந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். நமோ நாராயணாய என்பதும், ராம ராம என்பதும்,சிவ சிவ என்பதும், சரவண பவ என்பதும் மந்திரம். இந்த நாமாக்களில் ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டு அதை திரும்பத் திரும்ப உச்சரிக்கும் போது அது பலன் தர ஆரம்பிக்கிறது.
பாபா, எப்போதும் சாயி சாயி என்று சொல்லிக்கொண்டிருந்தால் போதும், அனைத்தும் நமது கைவசமாகும் எனக் கூறியிருக்கிறார். ஆகவே, அவரது பெயரே ஒரு தீவிரமான மந்திரம் என்ற முடிவுக்கு வந்தேன்.
இவ்வாறே கபீரின் வாழ்க்கையைப் படித்தால், முஸ்லீமான அவர், ராம ராம என்ற வார்த்தைகளை இடைவிடாமல் சொல்லிச் சொல்லியே மிகப் பெரிய நிலைக்கு உயர்ந்தார்.
நூலை வானத்தில் விட்டெறிந்து அந்த நூலின் மீது ஏறிச் சென்று அதன் நுனியில் உட்காரவும், நினைத்த உருவை எடுக்கவும் அவர் செய்தார். எனவே, நாமத்திற்குப் பலன் உண்டு.
அப்பர் பெருமான் ”சிவாய நம”  எனக் கூறியே, கடலில் கல்லைக் கட்டி வீழ்த்தியபோதும் மிதந்தார். ஆக, நாமத்திற்குச் சக்தியுண்டு. அதில் நமக்கு ஈர்ப்புதான் இருக்கவேண்டும். இரண்டு நாட்கள் சாயி சாயி என்றும், அடுத்த இரண்டு நாட்கள் ராம ராம என்றும் கூறுவதால் பலனில்லை. எந்த ஒன்றை தேர்வு செய்கிறோமோ அதின்மீது நமது கவனத்தை முழுமையாகச் செலுத்தி அதையே பிடித்துக் கொள்ள வேண்டும்.
இப்படி பிடிப்பதற்குப் பெயர்தான் ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு வந்துவிட்டால் உங்களுக்கு அனைத்தும் கைவசமாகிவிடும்.
இதை உணர்ந்த பிறகு, நாம ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். இடைவிடாத நாம ஜெபம் என் வாழ்வைப் புரட்டிப் போட்டது. பெரிய அளவில் என்னை மாற்றியது.
யாரையெல்லாம் மகான்கள் என எண்ணி ஓடிக்கொண்டிருந்தேனோ, அவர்கள் என் பெயரைக் கேட்டதும் வியப்பும், அச்சமும், பொறாமையும் கொள்ளும் அளவுக்கு அந்த மாற்றம் இருக்கிறது.
புரியாத விக்ஷயங்களை நாம ஜெபம் எனக்குப் புரிய வைத்தது. நான் படித்து அறிந்திராத உபநிக்ஷத்துகளில் இருந்து செய்திகளை நான் எழுதியிருப்பதை, அந்த உபநிக்ஷத்துக்களைப் படித்த பிறகு, அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.
பாபா, எனக்கு மறைபொருளை விளக்கியிருக்கிறார் எனத் தெளிந்தேன். இதனால் அந்த நாமத்தின் மீது மேலும் ஈர்ப்பு ஏற்பட்டது. நாயன்மார் பதிகம் பாடியது தமிழில். அவர்கள் பிரயோகித்த மந்திரம் என்ற பதிகத்தை நாம் பாடினால் நன்மை தருவதில்லை. காரணம் என்ன?
அவர்களின் மனத்தின் திடம், நம்பிக்கை, தெளிவு.  ஆகவே, நான் அவர்களைப் போல மாறவேண்டும் என முடிவு செய்தேன்


சாயி வரதராஜன்
 
சாயி வரதராஜன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...