Wednesday, August 30, 2017

என்னிடம் வா! ஜெயிக்க வைக்கிறேன்!



ஒருவர் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால், தான் போகிற பாதை சரியானதுதானா என கவனத்துடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கத்தவறினால் வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்துவிடும்.
கவனத்தோடு அணுகாவிட்டால் நட்டத்தோடு உட்கார வேண்டும் என்பது எனது அனுபவம். நான் சாயி பக்தனான பிறகு, எனது வாழ்க்கை முற்றிலுமாக மாறத் தொடங்கியது. அதற்கு முன்பு இருந்த வரதராஜன் வேறு, இப்போதைய வரதராஜன் வேறு என்பதை உணரத் தொடங்கினேன்.
பாபா ஒவ்வொரு விக்ஷயத்தையும் கற்றுக் கொடுத்து வந்தார். அதில் ஒன்று எனது பழைய அணுகுமுறைகளை மாற்றுவது. அடுத்தது, எதையும் ஈர்த்துக்கொள்ள அறிந்து கொள்வது. இந்த ஈர்ப்பை அவர் தனது வாழ்க்கை சரிதத்தை படிப்பதிலிருந்து துவங்கி வைத்தார்.
இதற்கு முன்பெல்லாம் நான் பலரது வாழ்க்கை வரலாறுகளை படித்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன். அறிய வேண்டிய அரிய மனிதர்கள் என்ற தலைப்பில் நான் எழுதிய தொடர்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பல தலைப்புகளில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.
அப்போதெல்லாம் நான் அறிந்துகொள்ளாத ஒன்று இப்போது விளங்கியது. அதுதான் ஈர்ப்பு என்பது. ஒரு பொருளை எவ்வளவு உயரத்திலிருந்து தூக்கிப் போட்டாலும் பூமி அதை தனது ஈர்ப்பு சக்தியால் இழுத்துக்கொண்டுவிடுகிறது.
பல ஆண் - பெண்களைப் பார்த்தாலும் ஒருவரை மட்டும் கவர்கிறோம். ஒருவரால் மட்டும்தான் கவரப்படுகிறோம். இந்தக் கவர்தல்தான் காதல், நட்பு எனப்படுகிறது. காதல் என்பது ஒருவித மனதின் ஈர்ப்பு.
எனக்கு எழுதப் பிடிக்கிறது, இன்னொருவருக்கு வரையப் பிடிக்கிறது, அடுத்தவருக்கு விளையாடப்பிடிக்கிறது என்றெல்லாம் கூறுகிறோம் அல்லவா? இந்த பிடித்தல்தான் ஈர்ப்பு. இந்த ஈர்ப்பின் மீது நாம் கவனத்தைச்செலுத்தி அதையே லட்சியமாகக் கொண்டு தொடர்ந்தால் அது நம்மை எங்கோ அழைத்துச் சென்றுவிடுகிறது. இதை பாபா அற்புதமாகக் கற்றுத் தந்தார்.
மிகச்சாதாரணமாக வாழ்வை ஆரம்பித்து வெற்றி தோல்விகளோடு போராடிக் கொண்டிருந்த என்னை, ஜெயித்த மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்குமாறும், ஏற்கனவே படித்தவற்றைப் பற்றி அலசி ஆராயுமாறும் பாபா தூண்டினார்.
இந்தத் தூண்டுதலில் நான் படித்தது அவரது சத்சரித்திரத்தைத்தான். நீங்கள் அதை எப்படிப் படிக்கிறீர்களோ எனக்குத் தெரியாது.
பின்புலமே இல்லாத ஒரு சிறுவனால், தனக்கென எதுவுமில்லாத ஒரு பக்கிரியால் எப்படி உலகத்தைக் கவரமுடியும்! எப்படி கடவுளாக மாற முடியும் என்ற ரகசியத்தை அவரது வாழ்க்கை உணர்த்துவதாகவே உணர்ந்தேன். பிறகு, வாழ்வில் முன்னேறிய பலரது வாழ்க்கை வரலாறுகளைப்படிக்க ஆரம்பித்தேன். துறவிகளாக, சந்நியாசிகளாக, மகான்களாக வாழ்ந்து உயர்ந்து காலத்தை வென்ற பெரியவர்களின் வாழ்வை அலசத் தொடங்கினேன்.
இயேசு பற்றி மட்டுமல்ல, புத்தர், நானக், முகம்மது நபிகள், இராமர், கிருஷ்ணர், ரமணர், ராகவேந்திரர், ராம கிருஷ்ண பரம ஹம்சர், பாபா என யாரை எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்குப்பிறரிடமிருந்து ஏதோ ஒரு தனித் தன்மை இருந்தது.
பிறரைவிட ஏதோ ஒன்றில் அவர்கள் மாறுபட்டு தோன்றினார்கள். அந்த மாறுபட்ட ஒன்றை தங்கள் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருந்தார்கள். இது அவர்களை சாதாரண மனித நிலையைத் தாண்டி உயர்ந்த நிலைக்கு அழைத்துச் சென்றது.
அது என்னவாக இருக்கும் என என்னை யோசிக்க வைத்தது. அவர்கள் தேர்வு செய்த விசயங்களைப்போல, நானும் எனக்கென ஒரு விசயத்தை தேர்வு செய்துகொள்ள முடிவு செய்தேன். அந்த முடிவு என் வாழ்க்கையை மாற்றியது.
ஏதோ ஒன்றை நமக்குப் பிடித்தது என்கிறோம், எதையோ இது எனக்குப் பிடிக்காது என்கிறோம். ஒருவரை நல்லவர் என்றும், வேறு ஒருவரை கெட்டவர் என்றும், நண்பர் என்றும் பகைவர் என்றும், கூறுகிறோம். துன்பம் என்றும் இன்பம் என்றும், விருப்பு என்றும் வெறுப்பு என்றும் நமக்கு நாமே சொல்லிக் கொள்வதெல்லாம் என்னவென யோசித்தேன்.
எதிலெல்லாம் எனக்கு விருப்பம் உள்ளதோ அவையெல்லாம் எனக்குச் சாதகமானவையாக, எதிலெல்லாம் எனக்கு விருப்பம் இல்லையோ அவையெல்லாம் எனக்கு நேர்மாறானதாக ஆகிறது என்பதை அறிந்தேன்.
எந்த ஒன்றின் மீது விருப்பம் ஏற்படுகிறதோ, அதை நோக்கி எனது மனம் இழுக்கப்படுகிறது. இப்படித்தான் இதற்கு முன்னும் நடந்தது. இப்போதும் நடக்கிறது. இனியும் நடக்கும் என்பது எனக்குப் புரிந்தது.
எனது படிப்பு, வேலை, காதல், கல்யாணம், குழந்தைப் பேறு இவையெல்லாம் எனக்குள் ஏற்பட்ட உறுதியான விருப்பத்தால் வந்தவை. அது மட்டுமல்ல, நான் அணிகிற சட்டை, வாங்குகிற பேனா, உண்ணுகிற உணவு என எதுவாக இருந்தாலும் அவையெல்லாம் என்னை கவர்ந்தவை என்பதை உணர்ந்துகொண்டேன்.
இந்த விருப்பம் ஓர் ஈடுபாட்டைக் கொடுத்து என்னை அதன் பக்கம் சாய வைத்தது என்பதை அறிந்தபோது, எனது அணுகு முறையை அதற்கேற்ப மாற்றத் திட்டமிட்டேன். ஒன்று நாம் கவர வேண்டும், அல்லது கவரப்படவேண்டும். இதுவே நமது அணுகு முறையில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்ற தீர்மானத்தை எடுத்து, அதை யுகங்களைக்கடந்த மனிதர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.
அவர்களும் இத்தகைய விருப்பம் ஒன்றில் லயமாகி இருந்ததால்தான் ஜெயித்தார்கள் என்பதை அறிந்தேன். ஏதோ ஒன்றின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு அவர்களது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது போல, நான் ஜெயிக்கவேண்டுமானால் எதிலாவது கவனத்தைச் செலுத்தி, அதைக் கவரவேண்டும் என்பதை மெல்ல நடைமுறைப் படுத்தினேன்.
இதில் ஏற்பட்ட ஈர்ப்பு சக்தியை உணர்ந்த பிறகு எனது நடைமுறை, அணுகுமுறை மாறியது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...