காகா மகாஜன் பாபாவின்
மீது மிகவும் நம்பிக்கை உடையவராவார்,
அவரது முதலாளி டக்கர் அந்தளவு பாபா
மீது நம்பிக்கை இல்லாதவர். பாபாவை சோதிக்க நினைத்து, டக்கர் சீரடிக்கு காகாவுடன் பயணப்பட்டார். வரும் வழியில் காகா, பாபாவுக்கு திராட்சைகளை வாங்கினார். தனது முதலாளியுடன் சீரடி வந்து பாபா தரிசனத்திற்காகக் காத்திருந்தார்.
தர்கட் என்ற பக்தரை சந்தித்த டக்கர், “இங்கு ஏதாவது அற்புதங்கள் நிகழ்கின்றனவா?” என்று கேட்டார். சாயி தரிசனத்திற்காக மட்டுமே தான் வந்திருப்பதாகவும், அற்புதங்கள் நிகழ்கிறதா எனப்பார்ப்பது தனது வேலையல்ல எனவும், ஆனால் அனைவரது பிரார்த்தனைகளும் இங்கு கேட்கப்படுகின்றன என்று தர்கட் பதில் கூறினார்.
காகா கொண்டுவந்திருந்த திராட்சையில் ஒரு சிலவற்றை பாபா டக்கருக்குக் கொடுத்தார். அவருக்கு திராட்சை பிடிக்காது. அதிலும் கழுவப்படாத திராட்சைகளை சாப்பிடுவது அருவருப்பாக இருந்தது. ஆனால் பாபாவால் தரப்படுகிறதே என்ற எண்ணத்தில், அதை வாங்கி சம்பிரதாயத்திற்காக வாயில் போட்டுக் கொண்டார். அதில் கொட்டைகள் வேறு இருந்தன. அவற்றை மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
பாபா உண்மையிலேயே ஞானியாக இருந்திருந்தால், தனக்கு திராட்சை பிடிக்காது என்ற விக்ஷயம் கூடத்தெரியாதிருக்குமா? என்ன ஞானி இவர் என்று டக்கர் தனது
மனதுள் நினைத்தார். அவர் எதிர்பாராத வகையில் மேலும் சில திராட்சைகளை பாபா கொடுத்து, சாப்பிடச் சொல்லி கேட்டுக்கொண்டார்.
அவருக்கு ஆச்சரியம்! இப்போது சாப்பிட்ட திராட்சையில் விதைகளே இல்லை. அவருக்கு பாபா செய்த அற்புதங்கள் புரிந்தன. ஆனால் மேலும் அதை சோதிக்கவும், உறுதிப்படுத்தவும் நினைத்து, பக்கத்தில் இருந்த தர்கட்டிடம், ”எந்த வகை திராட்சையை வைத்திருக்கிறீர்? ” என்று கேட்டார்.
”விதையுள்ள திராட்சை” என்று தர்கட் பதிலளித்தார்.
அப்போதும் டக்கருக்கு பாபாவை சோதிக்க விருப்பம். தன் நம்பிக்கையை வளர்க்க பாபா இந்த அற்புதத்தைச் செய்திருந்தால், அல்லது அவர் உண்மையான ஞானியாக இருந்தால், இந்த திராட்சையை முதலில் காகாவுக்குக் கொடுக்கட்டும் என நினைத்தார். இந்த எண்ணத்தையும் அறிந்த பாபா, காகாவிடம் தொடங்கி திராட்சை பிறருக்கு விநியோகம் செய்யப்படட்டும் என ஆணையிட்டார்.
இப்போது டக்கருக்கு பாபாவின் மீதிருந்த நம்பிக்கை அதிகமானது. ஆரத்தி முடிந்து பாபாவின் அனுமதிக்காகச் சென்றார். இவரை காகா பாபாவுக்கு அறிமுகப்படுத்தும்போது, தன்னுடைய எஜமானர் என்று அறிமுகப்படுத்தினார்.
இவர் எப்படி உன் எஜமானராக இருக்கமுடியும்? இவருக்கு வேறு ஒரு எஜமானர் இருக்கிறார் என்று கூறி விட்டு, ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
om Sairam |
நிலையற்ற புத்தியுள்ள ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு செல்வம், ஆரோக்கியம் எல்லாம் இருந்தன. எந்தவித மன வேதனைகளும் இல்லை. ஆனாலும் தேவையற்ற கவலைகளையும் பாரங்களையும் தன் மீது போட்டுக் கொண்டு, மன அமைதியை இழந்து அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தான். ஒரு முறை கவலையை இறக்கி வைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது.
ஐயோ பாவம் அவன்! அவனுக்கு உதவி செய்ய இரக்கம் கொண்டேன். இப்போது நீ விரும்பும் ஏதாவது ஒரு இடத்தின் மீது நம்பிக்கையை தயவு செய்து வைப்பாயாக. வீணாகச் சுற்றுவதைக்காட்டிலும் எதன் மீதாவது நம்பிக்கை வைத்து அதைப் பற்றிக்கொள் என்று வழி காட்டினேன் என்று கூறினார்.
இந்த கதை தனக்காக சொல்லப்பட்டது என்றும், பகவானை சோதிக்கக்கூடாது என்றும் டக்கர் புரிந்துகொண்டார்.
No comments:
Post a Comment