ஹே! சாயி மகாப் பிரபு!
பாமரர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு ஏவல் செய்து, அவர்கள் தரும் எச்சில் உணவையும் இனிய பிரசாதமாக ஏற்கிறவரே! உயிர்களுள் பேதம் பார்க்காதவரே! உண்மையானவர்களின் எண்ணத்தில் இருந்து நன்மை செய்கிறவரே! நன்றி! நன்றி!
எனது பிரார்த்தனை பலித்தது. எனது பிரார்த்தனைகள் மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதாயும், உறவுகள், நண்பர், தெரிந்தோர் என எல்லோராலும் நகைக்கத்தக்க ஒன்றாகவும் இருந்தது. நான் வேண்டிக்கொண்டபோது எனக்கே நம்பிக்கையில்லை.
உள்ளத்தில் கவலைகளை வைத்துக் கொண்டு, உதடுகளால் உம்மிடம் பிரார்த்தனை செய்தேன். மகான்களாலும் எட்டமுடியாத உன்னை மிகச்சாதாரண
அறிவுடன் அணுகினேன்.
எனது நல்லதிருஷ்டம்,
எனது வேண்டுதல்கள் அனைத்தையும் கேட்டீர்கள். என்னை எல்லா சங்கடங்களில் இருந்தும் விடுதலை செய்தீர்கள். என்னை ஒரு பொருட்டாக நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் பெரியவன் அல்லன்.
எளியவனும், சிறியவனும், அற்பனும், தனித்துவிடப்பட்டவனுமாக இருந்தேன். தேற்றுவார் இல்லாததால், தெருநாய் போல கேட்பாரற்று, நம்பிக்கையின்றி தளர்ந்த நடையோடு கால்கள் பின்னிக்கொள்ள நடந்தேன்.
கவனிப்பார் இல்லாததால் பரந்த இந்தவுலகில் பசியோடு திரிந்தேன். படுக்கையில் படுத்தாலும் இனம் தெரியாத பயமும் திகிலும் என்னை
பிடித்துக்கொண்டு, படுக்கவிடாமல் அச்சுறுத்தின. நாளைய பொழுது விடிய மாட்டேன் என பயமுறுத்தி என் வாழ்வை
இன்றே
அஸ்தமனம் செய்ய முயன்றது.
என்னை ஏளனமாகப் பார்த்து உதாசினப் படுத்தியவர்களும்,கேலி செய்தவர்களும், விரட்டியவர்களும் ஒட்டு மொத்தமாக வெட்கப்படும் வகையில்
நீர்
என்னைத் தேற்றினீர். உமது பாற்கடலுக்கு அழைத்துவந்து, அசுரர்களிடமிருந்து பறித்து வைத்திருந்த அமுதத்தை உமது அருட்கரங்களால் என் வயிறு முட்ட ஊட்டி களைப்பாற்றினீர். நான் தெளிந்த பார்வையுடனும், திடமான சிந்தையுடனும் எழுந்து நின்றேன்.
உலகத்தார் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, எனது முந்தையக் கர்மத் தளைகள் அனைத்தும் விடுபட்டன. எனது கண்களின் தேஜஸ் அனைவரையும்
கட்டியிழுத்து என்னிடம் கொண்டு
வந்து சேர்த்தது.
அவர்களிடம் உமது அற்புதங்களை சொல்ல ஆரம்பித்தேன். எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோடும், உறுதியோடும் உமது புகழை, நீங்கள் செய்த அற்புதங்களை ஆதாரமாகக் கொண்டு வெளியே எடுத்துச் சொல்ல ஆரம்பித்தேனோ
அவ்வளவுக்கவ்வளவு என்னை
ஆசீர்வாதம் சூழ்ந்தது. எனது பெயரை உமது இதயத்தில் எழுதி, எனக்கு தனியிடம் ஒதுக்கினீர். உம்முடைய வல்லமை மிக்க அருள் எனக்குள் பாய்ந்து நான் எழுந்து நடப்பதை பொறுக்க முடியாத சிலர் என்னை
முடக்குவதற்காக உருவானார்கள்.
தங்களுக்குள் ஆலோசனைகளை நடத்தினார்கள், என்னை எனது எல்லைவரை விரட்டி அடித்தார்கள். கால்கள் இல்லாத காற்றையும் ஒலி ஒளியையும் வேகமாகப் பயணிக்கச் செய்கிற என்
இறைவனான
நீங்கள், என் பாதையை வேறு பக்கமாகத் திருப்பிவிட்டீர். அவர்கள் சொல்லடியும், கல்லடியும் என் மீது படாமல் நீங்கள் தாங்கிக்கொண்டீர்கள்.
இதோ நான் உம்மைக் கேடயமாகவும்,
உமது பாதங்களை எனது அம்புறாத் தூணியாகவும், உமது திருநாமத்தை அம்புகளாகவும்
வைத்துள்ளேன். தைரியமாக
எல்லாவற்றையும் எதிர்கொண்டேன். என்னை மறைத்து எனக்காக யுத்தம் செய்தீர்கள்.
உமது பாதம் எனக்கிருந்த அச்சத்தைப் போக்கியது. உமது திருநாமம் எனக்குத் துணை
செய்தது.. இதோ காட்டாற்றின்
வெள்ளத்தைப் போல நான் ஜனங்கள் மத்தியில் பாய்கிறேன்.
ஏதும் அறியாத பாமரனாகஇருந்த நான் எனக்குள் உள்ள உன்னை அறிந்துகொண்ட பிறகும் அதே நிலையில் இருக்கவே விரும்புகிறேன்.
எனது
இதயத்தை இன்னும் நன்றாக சோதித்துப் பார்த்து, அதில் தீமைகள் இருந்தால் நீக்குங்கள். அழியும் பொருள் மீது ஆசை வைக்கும் நிலையிலிருந்தால் அதை அப்புறப்படுத்தி என்னை
சுத்தப்படுத்துங்கள்.
நான் கூப்பிடும்போது மவுனம் சாதிக்காமல் மறுமொழி கொடுத்து, நான் திகைக்கும் போது மறக்காமல் உதவிக்கு வாருங்கள். இன்று போல் என்றும் என்னுடன் இருக்க வேண்டி நான் செய்த இந்தப் பிரார்த்தனைகளை கேட்டதற்கும், அது பலித்ததற்கும்
நன்றி! நன்றி! நன்றி!
No comments:
Post a Comment