Thursday, February 28, 2013

சேலத்தில் சாயி பக்தர்களுடன் ஒரு நாள்



சாயி வரதராஜனுடன் நானும் உமாபதியும் ஜனவரி நான்காம் தேதி மாலை சேலத்திற்குச் செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்தோம். சேலம் போகும் பேருந்து எதுவும் வராததால், கோவை செல்லும் பேருந்தில் ஏறி, சேலம் பைபாஸில் இறங்கிக்கொள்ள தீர்மானித்தோம்.
சேலத்திலிருந்து பெருங்களத்தூர் பிரார்த்தனை  மையம் வருகிற திரு. பிரேம்குமார் அவர்கள் வீட்டில் பிரார்த்தனைக்கு வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார் சாயி வரதராஜன். அது மட்டுமல்ல, உடையப்பா காலனியில் உள்ள சண்முகம் அப்பா - வசந்தா அம்மாவை தரிசிக்கவும், கூடவே, சாயி தரிசனம் வாசகர்கள் சிலரை பார்த்துவிட்டு வரவும் தீர்மானித்திருந்தார்.
சேலத்திற்கு பயண தூரம் ஏழு மணி நேரம் என பிரேம் கூறியிருந்ததால், அதிகாலை நான்கு மணிக்கு சேலம் போய், அங்கிருந்து டாக்சி பிடித்து சிண்டிகேட் வங்கி மேலாளர் சிவக்குமார் வீட்டிற்க்குச் சென்று குளித்துவிட்டு அவருடன் பிரார்த்தனைக்கு போக முடிவு செய்திருந்தோம். பேருந்தில் கண்ணயர்ந்து விட்டோம். பேருந்தின் நடத்துனர், அவிநாசி அவிநாசி என்று குரல் கொடுத்தார்.  நாங்கள் சேலம் இறங்கவேண்டியிருந்ததே, அவிநாசி என்று சொல்கிறீர்களே’, என்று கேட்டோம்.
சேலத்தைக் கடந்து மூன்று மணி நேரமாகிறது.  இறங்கி எதிர்வண்டி வரும், போய்ச் சேருங்கள்  என்று நடத்துனர் கூற, மூவரும் இறங்கினோம்.  ஏறக்குறைய ஒன்று அல்லது இரண்டு மணிக்கு சேலத்தை பேருந்து கடந்திருக்கிறது. இது தெரியாமல் நாங்கள் உறங்கிவிட்டோம். ஒருவேளை நள்ளிரவில் அங்கு இறங்கி அவதிப்பட வேண்டாம் என பாபா உறக்கத்தைக் கொடுத்திருப்பார் என்று நம்பினோம்.
வழியில் இருந்த ஒரு டீ கடையில் மூவரும் டீ சாப்பிட்டோம். பாபா, டீ குடிப்பதற்காக அவிநாசிக்கு அழைத்து வந்திருக்கிறார்  என்றார் சாயி. டீ கடையில் பத்து சாயி தரிசனம் புத்தகத்தை கொடுத்துவிட்டு, வேறு பேருந்தில் ஏறினோம்.
பேருந்து ஈரோடு வழியாக வந்து காலை ஒன்பது மணிக்கு சேலத்தைத் தொட்டது. இனிமேல் சிவக்குமார் வீட்டிற்குப் போக முடியாது. பத்து மணிக்கு பிரார்த்தனைக்கு வருவதாகச் சொல்லிவிட்டேன். இங்கேயே குளித்து விட்டுப் போகலாம்  என்றார் சாயி.
பேருந்து நிலையத்திலேயே குளித்து உடைகளை மாற்றிக்கொண்டு பொன்னம்மா பேட்டைக்கு ஒரு வாடகை ஆட்டோ பிடித்து பயணித்தோம். பிரேம்குமார் எதிர்கொண்டு அழைத்துச் சென்றார். பிரேம்குமார் வீட்டில் பிரார்த்தனைக்காக சாயி பக்தர்கள் தயாராக இருந்தார்கள். சிண்டிகேட் வங்கி மேலாளர் சிவக்குமார் வந்திருந்தார். அற்புதமான சத்சங்கம், பிரார்த்தனை ஆகியவை நடைபெற்றது.
பிரேம்குமாரின் அப்பா, அம்மா, அக்கா டாக்டர் அகிலா, மனைவி பிள்ளைகள் மற்றும் அங்கிருந்த பக்தர்களிடம் விடைபெற்றுக் கொண்டு சாயி பக்தர் வீடுகளுக்குக் கிளம்பினோம். சாயி வரதராஜன் இரவு வந்தால் தங்குவதற்கு என்று ஒவ்வொரு பக்தரும் தங்கள் வீடுகளில் இடம் ஒதுக்கி வைத்திருந்ததைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது.
ஷண்முகம் அப்பா
சேலம் சதீஷ், மேலாளர் சிவக்குமார் ஆகியோரின் வழி காட்டுதலில் ஒவ்வொரு சாயி பக்தர் வீட்டுக்கும் பயணித்துவிட்டு, மாலை நான்கு மணியளவில் உடையப்பா காலனியில் இருக்கும் சண்முகம் அப்பா அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். ஏற்கனவே அந்த வீட்டிற்கு சென்றிருந்தாலும், வழி மறந்துவிட்டதால் அப்பாவுக்குப் போன் செய்தோம். அப்பாவும் அம்மாவும் செல்போனை கையில் வைத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்து வந்து அழைத்துச் சென்றார்கள். அவர்கள் பாதங்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோம். பேசிக்கொண்டிருந்தபோது, சாயி வரதராஜன்  அம்மா சாப்பாடு கொடுங்கள், பசிக்கிறது’, என்று கேட்டார். காலையிலேயே வருவாய் என காலை, மதியம் சாப்பாடு செய்து வைத்துக் காத்திருந்தோம்.. வரவேயில்லையே என கவலையாக இருந்தது. இதோ உடனே தருகிறேன் என்றார் வசந்தா அம்மா.
வசந்தா அம்மா
ங்களுக்கு ஒரே அதிர்ச்சி. பிரேம்குமார் இல்லத்திலிருந்து ஒவ்வொருவர் வீட்டிலும் எதையேனும் சாப்பிட்டுக்கொண்டுதான் வந்தார். வழியில் இனி எதையும் சாப்பிட முடியாது என்று சொன்னவர் அடுத்த பத்து நிமிடத்தில் சாப்பாடு சாப்பாடு என கேட்கிறாரே என அவரைப் பார்த்தேன்.
அன்பானவர்களின் கைகளால் ஒரு பருக்கை சாப்பிடுவதும் புண்ணியமானது என்று கூறி விட்டு சாப்பாட்டில் அமர்ந்தார். சிவக்குமார் மட்டும் எதையும் சாப்பிடவில்லை. வேறு வழியில்லாமல் நாங்கள் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தோம். சாப்பிட்டபிறகு அம்மா சொன்னார். நேற்று வரை அப்பாவுக்கு பேச்சு வரவில்லை. பேச்சே நின்று போயிருந்தது. நீ போன் செய்து வருவதாகச் சொன்னவுடன் குழறிக்குழறி பேச ஆரம்பித்தார். பேச்சு தெளிவாக இல்லை. நீ சேலம் வந்து விட்டதாக சொன்னதும் பரபரப்போடு இருந்தார். உன்னைப் பார்த்த பிறகு தெளிவாகப் பேசுகிறார். அது மட்டுமல்ல, இந்த அறையை விட்டு துணை இல்லாமல் நடக்க மாட்டார். உனது வருகைக்காக தெருவரை அவராகவே நடந்துவந்துவிட்டார். உன்னைப் பார்த்ததும் அப்பாவுக்கு புதுத் தெம்பு வந்துவிட்டது. இதனால்தான் கடைசி காலத்தில் பெருங்களத்தூரில் உன்னருகிலேயே வசிக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றார் உணர்ச்சி பொங்க.
அப்பா, சேலம் பகுதியில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தீவிர சாயி பக்தக்குடும்பம் அவருடையது. இவர்களைப் பற்றி நிறைய இதழ்களில் சாயி வரதராஜன் எழுதியிருக்கிறார். பத்தடி கூட நடக்கமுடியாத சண்முகம் அப்பா, பண்டரிபுரத்து மியூசியத்தின் பல மாடிகளை சாயி ராம் சாயி ராம் என்று சொல்லியே நடந்து கடந்தவர். அந்தப் பயணத்தின்போது நானும் அவர்களுடன் சென்றிருந்தேன்.
சாயி தரிசனம் பத்திரிகை சேலத்தில் சரியாக கிடைப்பதில்லை. ஐநூறு இதழ்களை அனுப்பு. அதை நானே விற்றுத் தருகிறேன். இதழ்களுக்கான பணத்தை நான் கொடுத்துவிடுகிறேன். இதழ்களை இலவசமாகத் தருகிறேன். இது ஒரு ஞானப்பொக்கிம். இது எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்றார்கள் அப்பாவும் அம்மாவும்.
சேலம் பிரேம்
வழியில் சாப்பிட சாப்பாடு கட்டிக்கொடுத்து அனுப்பினார்கள். எவ்வளவு அன்பானவர்கள் என்று வியந்தபடி, லலிதா, சதீஷ் என பல வீடுகளுக்குச்சென்று பஜன், பிரார்த்தனை செய்துவிட்டு கடைசியாக சிவக்குமார் வீட்டுக்கு வந்தோம்.
சிவக்குமார் மிகப்பெரிய சிவபக்தர். அவரை நமஸ்கரிப்பது சிவனை நமஸ்கரிப்பதற்குச் சமம் என்று அடிக்கடி சாயி வரதராஜன் கூறுவார். ஏற்கனவே அவர் பெருங்களத்தூரில் மேலாளராக இருந்ததால் அவரைப் பற்றி அனைவரும் அறிவார்கள். எல்லா வேலைகளையும் தூக்கி வைத்துவிட்டு சாயி வரதராஜனுக்காக ஒரு நாளை ஒதுக்கியிருந்தார் அவர்.
அவரது வீட்டுக்குச் சென்றதும், ஒரு வேட்டி துண்டை எடுத்து சாயியிடம் கொடுத்து, இதை ங்களுக்காகவே தனியாக நெய்து வாங்கி வந்தேன். இதை உடுத்திக் கொள்ளுங்கள் என்று தந்தார். சேலம் பேருந்து நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
சைலம் என்பதே சேலம் என்று வழங்குகிறது. சைலம் என்றால் மலை என்று பொருள். முன்னோர் இந்தப் பகுதி மலை சூழ்ந்த இடம் என்பதால் இதற்கு இப்பெயர் வைத்து இருப்பார்கள் என நினைக்காதீர்கள். இப்பகுதி மக்களின் மனம் மலை போல மிகவும் உயர்ந்தது. அதனால்தான் இதற்கு சேலம் என்றே பெயர் வைத்திருப்பார்கள் என்றார் சாயி வரதராஜன். சேலம் மக்களை ஆழமாக நேசிக்கும் அவர், என் இரு கண்களில் ஒன்று சேலம் என்பார். பேருந்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு நினைத்தேன்,  சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக சாயி வரதராஜனுடன் இருக்கிறோம். எங்கள் கண்களுக்கு சாதாரண விளையாட்டுப் பிள்ளை மாதிரி தெரிகிறார். ஆனால் இந்த சாயி பக்தர்கள் அவரை எப்படியெல்லாம் நேசிக்கிறார்கள்.
சாயி வரதராஜன்
இதற்கெல்லாம் சாயி வரதராஜனிடம் இருக்கிற ஏதோ சக்தி காரணமல்ல, அவர் சுமந்துகொண்டிருக்கிற சாயி பாபாவே காரணம். கள்ளம் கபடம் தெரியாமல் வெள்ளேந்தியாய் இருந்தால் நிச்சயம் நம்மையும் இவரைப் போல பாபா உயர்த்துவார் என நினைத்தபோதே, வீரமணி சொன்ன வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. உமாபதியிடம் ஒருமுறை அவர் கேட்டார். என்ன, சாயி வரதராஜன் மாதிரி ஆகிவிடலாம் என நினைக்கிறீர்களா? என்று. நிச்சயமாக ஆக முடியும், பாபா பாரபட்சம் பார்க்கிறவர் கிடையாது. உண்மையாக பக்தி செலுத்தினால் யாரையும் உயர்த்துவார்.  முயற்சி செய்வோம்.


கே. ஆறுமுகம், பெருங்களத்தூர்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...