Wednesday, February 27, 2013

அகங்காரம் அறவே அழிக்கப்படும்



 
நாம் வெற்றிபெறவும் நமது காரியங்கள் சித்தியாகவும் முதலில் அகங்காரத்தை  நமது சத்குருவின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அகங்காரத்தை ஒழித்தால்தான் வெற்றி சத்குருவால் உறுதி அளிக்கப்படுகிறது.

சாயி பாபாவை வணங்குவதால் இகபர சௌபாக்கியங்கள் இரண்டுமே கிடைக்கின்றன. நாம் உண்மையான இயற்கையில் நிலையாக்கப்பட்டு அமைதியும் மகிழ்ச்சியும் அடைகிறோம். எனவே எவரொருவர் அவரது சுபீட்சத்தைப் பெற விரும்புகிறாரோ அவர் சாயி பாபாவின் லீலைகளையும் கதைகளையும் பயபக்தியுடன் கேட்டு அவைகளை தியானம் செய்யவேண்டும். இவைகளை அவர் செய்வாரேயானால் தமது வாழ்க்கையின் இலட்சியத்தை சுலபமாக அடைந்து பேரானந்தம் பெறுவார்.

நம்மில் பலர், நான் பாபாவிடம் சரணடைந்து விட்டேன், பாபாவின் கதைகளையும் லீலைகளையும் தினமும் படிக்கிறேன், கேட்கிறேன், தியானமும் செய்கிறேன். ஆனாலும் எனக்கு வந்த கஷ்டங்கள் இன்னும் தொடருகின்றன. எப்போது பிரச்சினை முடியும் என்று தெரியவில்லை. அவர் எப்போது எனக்கு கலங்கரை விளக்காக இருக்கப் போகிறார்? எனப் புலம்புவார்கள்.
 
இது போன்றவர்கள் புலம்பும்போதும் கண்ணீர் விட்டுக் கதறும்போதும், சத்குருவே இவர்களுக்கு உடனடியாகத் தீர்வை தாருங்கள் என நம் மனம் கேட்டுக் கொண்டாலும், அவர்களுக்குள்யே உள்ள நம்பகத் தன்மை, அகங்காரம், எதிர்பார்ப்பு இவைகளால் தாமதம் ஏற்படுகிறது.

எதிர்பார்த்து சரணடைவதும், நம்பகத் தன்மையோடு பிரார்த்தனை செய்வதும் அகங்காரத்தோடு செயல்பட்டு நிந்திப்பதும், சரியான தீர்வு கிடைக்காமல் போகிறது, அல்லது கால தாமதம் ஆகிறது.

இதைப் பற்றி சத்சரித்திரம் 24 ம் அத்தியாயம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. தியானம், பக்தி, நம்பிக்கை, பொறுமை இவற்றை தெளிவாக உணர்ந்து அவற்றை கடைப்பிடித்து அகங்காரத்தை சத்குருவின் காலடியில் சமர்ப்பித்தால் வெற்றி உறுதி எனக் கூறுவதோடு, உண்ணும் முன் அவரை நினைவில் நிறுத்த வேண்டும் என்றும், சத்குரு எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
 
சாமா, வாமன்ராவ் மற்றும் ஹேமத் பந்த் மூலம் தானியங்களைப் பற்றி குறிப்பிட்டு அதன் மூலம் நீதியினை போதிக்கிறார். நமது புலன்கள், தேவைகளை அடையும் முன்னதாகவே மனமும், அறிவும் புலன்களை அனுபவித்துவிடுகின்றன. முதலில் பாபாவை நினை. அதுவே, உன் மனதில் நிலைகொண்டுள்ள பாபாவுக்கு நிவேதனம் செய்யும்முறையாகும்.

சாயி கலியன்
பொருட்களை அனுபவிக்கும் முன் பாபா அங்கிருப்பதாக நினைத்துக்கொண்டால் அப்பொருள் அவர் அனுபவிக்கத் தக்கதா எனத்தோன்றும். அனுபவிக்கத் தகாதவை என்றால் நம்மால் ஒதுக்கப்பட்டு நமது தீய பண்புகள், செயல்கள், அகங்காரம் நம்மை விட்டு மறைந்துவிடுகின்றன. இவை மறையும்போது ஞானம் துளிர்க்கிறது. ஞானம் துளிரும்போது நம்முள்ளே இருக்கும் அகங்காரங்களான நான், எனது அழிந்து ஆன்ம அறிவு கலக்கிறது.

சாயி பக்தர்கள் அவரவர்களுக்கு தெரிந்த வழியில் பூஜை செய்வதையும், சேவை செய்வதையும் பாபா ஏற்றுக் கொண்டார். அவர்கள் பூஜை, சேவை செய்வதில் யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது அது பாபாவுக்கு அறவே பிடிக்காது என்பதை அண்ணா சிஞ்சனீகர், மௌஷிபாயி ஆகியோரது வாழ்வில் நடந்த சம்பவங்களை சத்சரித்திரம் மூலம் பாபா விளக்கியிருக்கிறார்.

அன்புடனும், பக்தியுடனும் யாரொருவர் எனக்கு ஓர் இலை, மலர், பழம் அல்லது நீர் சமர்ப்பிக்கிறாரோ அந்த அன்புக் காணிக்கையை தாமதமின்றி ஏற்றுக்கொள்வதாக பாபா உறுதியளிக்கிறார். இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதி எதுவும்இல்லை.  தூய்மையான அன்பும் பக்தியும்தான் முக்கியம்.

அடியவர்கள் பிறர் சேவைகளில் குறுக்கிடக்கூடாது என்றும் தாங்கள் விரும்பிய வண்ணமே பாபாவுக்கு அவர்கள் சேவை செய்ய விட்டுவிட வேண்டும் என்கிற பாடத்தை மௌஷிபாயியின் சேவை மூலம் தெரியப்படுத்துகிறார்.

எனவே, நாம் பூஜை செய்வதிலும், சேவை செய்வதிலும் பாபாவை நாம் விரும்பிய வண்ணமே மனத்தூய்மையோடும், பக்தியோடும், பரிபூரண நம்பிக்கையோடும், சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து, நான் எனது என்ற அகங்காரத்தை அடியோடு புறந்தள்ளி, வணங்கினோமேயானால், நமது பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக பாபாவால் உரிய காலத்தில் தீர்க்கப்பட்டு விடும் என்பது நிதர்சனமான உண்மை.

                                                                                             ---- சாயி கலியன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...