குழந்தைக் கண்ணன் கடுமையான சேட்டைகள் செய்து கொண்டு இருந்தான்.
”ஏன் உபத்திரவம் செய்கிறாய்?” என்று கண்டித்த யசோதை. அவனது காதை
திருகினாள். உரலில் பிணைத்துக் கட்ட கயிரினைத்
தேடிப்போனாள். அவள் வரும் வரை ஆடாமல் அசையாமல் அங்கேயே கண்ணன் நின்றுக் கொண்டிருந்தான்.
அவனைக் கட்டும் போது கயிற்றினை முடிச்சு போட முடியாமல் யசோதை தவித்தாள். ஆயர்பாடியில் உள்ள அத்தனை பேர் வீட்டில் இருந்தும்
கயிற்றினை எடுத்து வந்தும் அவனைக் கட்ட முடியவில்லை. அவனைக் கட்ட இன்னும் ஒரு கயிறு
தான் பாக்கி. அதுதான் அங்குள்ள பெண்களின் தாலிக் கயிறு. அதை யாராவது தருவார்களா என்ன!
அம்மா திணறுவதைப் பார்த்த கண்ணனுக்கே ஒரு மாதிரியாகி விட்டது.
அங்கிருந்த ஒரு கயிற்றினைப் பார்த்து , “நீ என்னைக் கட்டு” என்று மனதுக்குள் உத்தரவு
போட்டான். உடனே அந்தக் கயிற்றினை எடுத்து வந்து யசோதா கண்ணனைக் கட்டிப் போட்டாள். முடிந்தது
கண்ணனின் லீலை.
பக்தி என்று வந்துவிட்டால், தன் காதினைத் திருகவும், கயிற்றினால்
கட்டவும் கூட பரமன் அனுமதிக்கிறான். கண்ணனின் இந்த எளிமையினைப் பற்றி படித்த நம்மாழ்வாருக்கு
மயக்கமே வந்துவிட்டது. மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார். மூர்ச்சை தெளிய ஆறு மாதமானது.
விழித்தவர் மீண்டும் மயங்கி விட்டார். இப்படி நம்மாழ்வார் கண்ணன் கயிற்றால் கட்டுண்ட
கதையினை நினைத்து பதினெட்டு மாதம் நம்மாழ்வார் மயக்கத்தில் கழித்தார் என்று சொல்வர்.
No comments:
Post a Comment