என் பெயர் மோகனா ரவிக்குமார். வேளச்சேரியில்
வசிக்கிறேன். எனக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். என் கணவர் ஒரு நாள்
மைலாப்பூர் பாபா கோயிலில் இருந்து சாயி தரிசனம் புத்தகம் மற்றும் பல பாபா புத்தகங்களையும்,
மாத இதழ்களையும் வாங்கி வந்தார். மற்ற இதழ்களைவிட
சாயி தரிசனம் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது.
அந்தப் புத்தகம் முழுவதும் படித்தேன். படித்தவுடனே
அந்தக் கோயிலுக்குப் போகவேண்டும் என்று கேட்டேன். அவரும், நானும் ஒரு வியாழக்கிழமை, சாயி தரிசனம் புத்தகத்தில் போட்ட விலாசத்தைப் பார்த்து
விசாரித்து, அந்த கோயிலுக்கு
வந்து சேர்ந்தோம். அங்கு பாபாவை தரிசித்துவிட்டு சாயி வரதராஜன் கைகளில் உதியை வாங்கிக்
கொண்டு வந்தோம்.
என் மகன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். அரையாண்டு
தேர்வு எழுதும் நேரத்தில் திடீரென்று பயங்கரமான காய்ச்சல் வந்துவிட்டது. வைரஸ்
காய்ச்சல்கள் பரவிக்கொண்டிருந்த நேரம் அது. நான் மிகவும் பயந்துவிட்டேன். டாக்டரிடம்
சென்றோம். ஊசியைப் போட்டு விட்டு, ‘காய்ச்சல்
குறையவில்லை என்றால், உடனே ரத்தப்
பரிசோதனை பண்ண வேண்டும்’ என்று
சொன்னார்.
சாயி தரிசனத்தில் படித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு
வந்தது. பாபாவிடம் சென்று நம்பிக்கையுடன் வரத ராஜன் கொடுத்த உதியை எடுத்து என் மகனின்
நெற்றியில், கையில் மார்பில் பூசிவிட்டு
தண்ணீரில் கலந்து குடிக்கத் தந்தேன். இரண்டு மணி நேரம் கழித்து உடல் சூடு
தணிந்தது.
காய்ச்சல் இல்லை. சுறு சுறுப்பாக எழுந்து படிக்கத் தொடங்கினான்.
இரண்டு மாதம் கழித்து என் மகன் முகத்தில் கன்னத்தில் பெரிய கட்டி ஒன்று வந்தது.
ஒரு வாரம் அவன் பள்ளிக்குப் போக வில்லை. வீட்டு வைத்தியம் செய்து பார்த்தேன்.
கட்டி கரையவில்லை. டாக்டரிடம் சென்றேன், ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்தார். அப்படியும் கட்டி
கரைந்தபாடில்லை.
தோல் நோய் மருத்துவரிடம் சென்றோம். அவர் வேறு ஒரு
டாக்டரிடம் அனுப்பினார். அந்த டாக்டர், ‘மயக்க மருந்து கொடுத்து கட்டியை அறுவை சிகிச்சை செய்து கட்டியை வெட்டி அகற்ற
வேண்டும்ள’, என்று கூறினார்.
பெருங்களத்தூர் பாபா கோயிலில் தரப்பட்ட உதியை, பாபாவின் முன் வைத்து, ‘பாபா!, நீங்களே
மருத்துவராக இருந்து கட்டியைக் கரைய வைக்க வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டு, உதியை என் மகனின் கன்னத்தில் தடவினேன். தண்ணீரில் கலந்து
குடிக்கக் கொடுத்தேன். மறுநாள் முதல் கட்டி சிறிது சிறிதாகக் கரையத் தொடங்கியது.
இரண்டு மூன்று நாட்களில் கட்டி இல்லாமல் போய்விட்டது.
பாபாவுக்கு நன்றி சொன்னேன். என் மகள் பவித்ராவுக்கு திடீரென்று ஒரு நாள் கடுமையான
காய்ச்சல் வந்துவிட்டது. டாக்டரிடம் சென்று ஊசி போட்டு, மாத்திரை கொடுத்த
பின்னரும் காய்ச்சல் நிற்கவேயில்லை.
விட்டு விட்டு வந்தது. ஒரு வாரம் காய்ச்சல் இருந்தது.
மிகவும் சோர்வாக இருந்தாள். டாக்டர்
இரத்தப்பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்தார். அப்போதும் உடனே பெருங்களத்தூர் பாபா
கோயில் உதியை என் மகளின் உடலில் பூசினேன். நெற்றியில் பூசி, தண்ணீரில் கலந்து குடிக்கக் கொடுத்தேன்.
பாபாவிடம், இரத்தப் பரிசோதனை செய்யப்போகக் கூடாது, காய்ச்சல் வரக்கூடாது. அப்படி குணமானால் சாயி தரிசனம்
புத்தகத்தில் சாட்சியாக எழுதுகிறேன் என மனம் உருக வேண்டினேன்.
டாக்டரிடம் சென்றோம். காய்ச்சல் இப்போது இல்லை, இரத்தப் பரிசோதனையும் தேவை யில்லை என்று
சொல்லிவிட்டார். அவள் முகம் தெளிவடைந்தது.
மறுநாள் பள்ளிக்குக் கிளம்பினாள்.
சோதனை வரும்போது முதலில் மற்ற பரிகாரம் பற்றியே நினைவு
வருகிறது. முடிவில்தான் கடவுள் நினைவு வந்து வேண்டிக்கொள்கிறோம். அந்த நிலையிலும் நம்மை
மேலும் சோதிக்காமல் நாம் கேட்டவுடனே, வேண்டுதலை நிறைவேற்றி மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார் பாபா.
No comments:
Post a Comment