Sunday, May 31, 2015

பாபா கொடுத்த பிறந்த நாள் பரிசு



என் பெயர் ஜெயா. எஸ்ஆர் எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயில்கிறேன். சுமார் ஆறு மாதங்களாக பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வந்து செல்கிறேன்.
பாபா என் அப்பா- என் குரு. எனக்கு எவ்வளவோ அற்புதங்களைச் செய்திருக்கிறார். சமீபத்தில் சிறு நீரகக் கல் பாதிப்பினால் அவஸ்தைப் பட்டேன். கல்லின் அளவு 11 செ.மீ. இருந்ததால் அதற்கு கட்டாயம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்கள். ஏற்கனவே எனக்கு வேண்டிய ஒருவருக்கு எட்டு செ.மீ. அளவு இருந்த கல்லுக்காக அறுவை சிகிச்சை செய்திருந்தார்கள்.
அவர்கள் கூட என்னிடம் அறுவை சிகிச்சை செய்துகொள் என வற்புறுத்தினார்கள். நானோ, பாபா நிச்சயமாகக் காப்பாற்றுவார் எனக் கூறி, சாயி வரதராஜன் அப்பா கொடுத்த உதியை தவறாமல் சாப்பிட்டு வந்தேன்.
என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு பெரிய கல், சிறுநீருடன் சேர்ந்து வெளியேறிவிட்டது. நான் முழு அளவில் குணமடைந்துவிட்டேன். பாபாவின் உதியின் மகத்துவத்தை உணர்ந்து ஆனந்தப் பரவசப்பட்டேன்.
இதேபோல என்னால் மறக்கமுடியாத சம்பவம், இந்தப் பிறந்த நாள். பிறந்த நாளுக்கு ஒரு மாதம் முன்னரே, பாபாவிடம் அப்பா எனக்கு பிறந்த நாள் வருகிறது. எவ்வளவு வாழ்த்துக்கள் மற்றும் பரிசு வந்தாலும் என் மனம் உங்களிடமிருந்து வரும் வாழ்த்தையும் பரிசையும்தான் எதிர்பார்க்கும் என்று கூறியிருந்தேன்.
இந்த பரிசு விக்ஷயம் பற்றி ஒவ்வொரு நாளும் பாபாவிடம் நினைவுபடு;த்திக்கொண்டிருப்பேன். எனது பிறந்த நாளும் வந்தது. ஈஞ்சம்பாக்கம் பாபா ஆலயம் செல்லவிருந்தேன். ஆனால், என்ன தடையோ ஏற்பட்டு என்னால் அங்கு செல்ல முடியாத நிலையில், பெருங்களத்தூருக்கு வந்தேன்.
கோயில் உள்ளே நுழையும்போதே பாபா சிரிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. முதல் உணவாக எனக்கு சர்க்கரைப் பொங்கல் தரப்பட்டது. பாபாவைப் பார்த்துவிட்டேன், சர்க்கரைப்பொங்கலும் சாப்பிட்டுவிட்டேன் என்ற திருப்தியில், பாபவின் காலைப் பிடித்து, பாபா, ஏன் இன்னும் எனக்கு பரிசு அளிக்கவில்லை- என்னை ஏமாற்றினீர்கள்? நிச்சயமாக உங்களிடம் பேசமாட்டேன் என்றேன்.
பரிசு கூட வேண்டாம் பாபா, சாயி வரதராஜன் ஐயாவையாவது வரவழையுங்களேன், நான் ஆசி பெற்றுச் செல்கிறேன்!  என வேண்டிக் கொண்டு எழுந்து திரும்பிப் பார்க்கிறேன், என்ன அதிசயம்! சாயி வரதராஜன் ஐயா வருகிறார்!  எனக்கு அவரைப் பார்த்தவுடன் உடனே ஒன்றும் புரியவில்லை. ஓடிச் சென்று அவரை வணங்கி ஆசி பெற்றேன். அவருடன் மற்றொரு சாய் ராம் இருந்தார். இருவருக்கும் இனிப்புகள் வழங்கினேன்.
பிறகு, சாயி வரதராஜன் ஐயா ஆசி வழங்கி, இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எனக்கு வழங்கினார். வாய் மட்டுமே அதை வேண்டாம் எனக்கூறுகிறது. கரும்பு தின்னக் கசக்குமா? அதை வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டேன்.
பாபாவிடம் சென்று அவரை வணங்கினேன். என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க, அவருக்கு முத்தமிட்டுச் சென்றேன். நான் பிறந்த பத்தொன்பது ஆண்டுகளில் இந்தப் பிறந்தநாளை என்னால் மறக்கவே முடியாது.
நிறைய பக்தர்கள் சாயி வரதராஜன் ஐயாவிடம் நூறு ரூபாய் பெற்றேன், முன்னூறு ரூபாய் பெற்றேன் என்று கூறும்போதெல்லாம், எனக்கு ஒரு ரூபாய் கிடைத்தாலும் நான் பாக்கிசாலி என்று நினைத்துக்கொள்வேன். ஆனால் நம் பாபாவோ, தன் மகளுக்கு எது தேவை, எதில் ஆர்வம் உள்ளது என்பதை ஆராய்ந்து அதை நிறைவேற்றி வைத்தார். அப்போது எனக்கு ஞாபகம் வந்தது்
என் பக்தர்கள் எத்தனை மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அவர்களை சிட்டுக்குருவியின் காலில் கயிறைக் கட்டி இழுப்பதுபோல இழுத்துக்கொள்வேன் என்பதுதான்!
ஐயா கொடுத்த அந்த ரூபாய் நோட்டுகளை நான் பிரேம் செய்து என் பூஜையறையில் வைத்து பூஜித்து வருகிறேன்.
செல்வி. ஜெயா,
எஸ்.ஆர். எம். கல்லூரி, சென்னை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...