Friday, May 29, 2015

சீரடியில் பல்லக்கு ஊர்வலம்

பெருங்களத்தூர் சீரடி பாபா பிரார்த்தனை மையத்தின் சார்பாக நிகழ்ந்து வரும் மாதாந்திர சீரடி யாத்திரையில் கடந்த மாதம் 163 பேர் கலந்து கொண்டார்கள்.
அக்டோபர் பத்தாம் நாள் புறப்பட்ட இந்த யாத்திரை குளித்தலை ஆனந்தன், நெய்வேலி முகுந்தராம், சென்னை புஷ்ப பரிமளா ஆகியோர் தலைமையில் மூன்று அணியாக வந்தது. கோவை மற்றும் அதன் சுற்றுப்புற யாத்ரீகர்களுக்கு ஆனந்தன், நெய்வேலி யாத்ரீகர்களுக்கு முகுந்த ராம், சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு பரிமளா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
கோவையிலிருந்து 35 பேர் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் மூலம் வந்தபோது, ரயில் தடம் புரண்டும், மின் இணைப்பு இன்றியும், கடும் மழையாலும் திருப்பத்தூரிலேயே நிறுத்தப்பட்டது. ஐந்து மணி நேரமாகத்தவித்த இவர்கள், இந்த யாத்திரையில் கலந்து கொள்ள முடியுமா என்ற தவிப்பில் இருந்தார்கள்.
ஆனந்தன் தலைமையில் இன்னொரு பிரிவினர் முன்னதாக வந்துவிட்டதால், ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட செய்தி கேட்டு அனைவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது.
வண்டி சீராகி சென்னை வருவதற்கு நள்ளிரவை தாண்டும் என்பதால் மாற்று ஏற்பாட்டுக்கு அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். பெருந்தொகை தந்தால் மட்டுமே சென்னைக்கு வரமுடியும் என்ற நிலையில், ஆனந்தனின் அறிவுறுத்தல்படி, வேறு ரயிலில் ஏறி அரக்கோணத்திற்கு வந்துவிட்டார்கள்.
மும்பை மெயில் அரக்கோணத்தில் நின்றால் மட்டுமே அவர்கள் மற்ற யாத்ரீகர்களோடு பயணம் செய்ய முடியும் என்ற நிலையில், மும்பை மெயில் கார்ட்டிடம் பேசி, அரக்கோணத்தில் ரயில் நிற்கும் விவரம் தெரிந்தபிறகே, நிம்மதிப் பெரு்ச்சு வந்தது.
டிக்கெட்டை கேன்சல் செய்துவிடாமலிருக்க,பரிசோதகரிடம் பேசி, ஒருவழியாக பக்தர்களை அரக்கோணத்தில் ஏற்றி, உரிய இருக்கையில் அமர வைக்க அதிகாலை மூன்று மணி ஆகிவிட்டது.
பதினோறாம் தேதி முழுவதும் குருதேவரின் சத்சங்கம் மற்றும் பிரார்த்தனை தொடர்ந்தது. அவருக்காக இந்த முறை யாத்திரை வந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். அவருடன் பயணம் என்பது அறுசுவை உணவு உண்பது போலிருக்கும்.
12ம் தேதி அதிகாலை பேருந்தில் ஒவ்வொரு யாத்ரீகரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டு,சீரடி தரிசனத்திற்கு உற்சாகமாகக் கிளம்பினார்கள். சீரடியில் அறைகள் ஒதுக்கப்பட்டு, காலைசிற்றுண்டி முடிந்ததும், நேராக சிவ நேசன் சுவாமிகள் சமாதி மந்திருக்குச் சென்ற யாத்ரீகர்களுக்கு, சிவநேசன் சுவாமிகளின் சிறப்பு பற்றி குரு தேவர் விளக்கினார். அந்த இடத்தின் மகத்துவம், நிறைவேறிய பிரார்த்தனைகள் பற்றியும் பேசப்பட்டது.
இந்த முறை பல்லக்கு எடுப்பதன் மேன்மை பற்றியும், கோரிக்கைகள் நிறைவேற பிரார்த்தனை செய்யவேண்டியது பற்றியும் எடுத்துக் கூறி, அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. அதன் பிறகு, பல்லக்கு அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் துவங்கியது.
சிவநேசன் சுவாமிகள் சமாதி மந்திருக்கு உரிய பல்லக்கை அலங்கரித்து, கட்டியக்காரர்களின் உடைகளை நமது பக்தர்கள் அருண் குமார், பாலமுருகன் ஆகியோருக்கு அணிவித்து, பிரம தாளம் கொடுத்து, பூஜை செய்து வழியனுப்பி வைத்தார் மந்திரின் நிர்வாகி மூரி சுவாமிகள்.
பாபாவின் பிரதிமையோடு, சிவநேசன் சுவாமிகள் உருவப்படமும் பல்லக்கில் வைக்கப்பட்டு, ஆடல் பாடல்களுடன் யாத்திரை புறப்பட்டது. 163 பேரும் பல்லக்கை மாற்றி மாற்றி சுமந்தபடி, கடும் வெயிலில் நடந்தார்கள்.
யாரெல்லாம் தன்னால் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடக்கமுடியாது, நடக்க இயலாது என நினைத்தார்களோ அவர்கள் பல்லக்குடன் நடந்து வந்தார்கள். மூட்டு வலி, முதுகு வலி என்ற வயதான பெரியவர்களும் சாயி கோக்ஷத்துடன் நடந்தார்கள்.
பேண்டு வாத்தியங்கள் முழங்க, கட்டியம் கூறி நடந்த பக்தர்களின் வருகைக்காக சீரடியே ஏங்கியது போன்ற பிரமை தெரிந்தது. பாபா சீரடியில் முதலில் வந்திறங்கிய கண்டோபா ஆலயத்தில் பல்லக்கு இறக்கப்பட்டு, அங்குள்ள பூசாரிகளால் பூசை செய்யப்பட்டது. சோட்டே பாபா மந்திர் பொறுப்பாளர் மதன் பாபா அனைவரையும் வரவேற்று ஆசி வழங்கினார்.
இந்த இடத்தின் சிறப்பு பற்றி எடுத்துரைத்த குரு தேவர், முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். உலக அளவில் சாயி பக்தர்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்வதற்காக சாயி மிக்ஷன் என்ற ஆன்மீக அமைப்பை குரு தேவர்  ஸ்ரீ  சாயி வரதராஜன் உருவாக்கி பதிவு செய்திருந்தார். இந்த அற அமைப்பு பதிவு செய்யப்பட்ட தகவல் அது.
இருக்கும் இடத்திலுள்ள சாயி பக்தர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு சாயி பக்தியை போதிப்பது, நற்காரியங்களை அவர்களுடன் இணைந்து செய்வது, சாயி கோயில் போன்ற அமைப்புகளை வலுப்படுத்துவது, சாயி பக்திப்பிரச்சாரம் மேற்கொள்வது ஆகிய முக்கிய அம்சங்களை உள்ளடக்கி இந்த அமைப்ப செயல்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், பாபாவின் வாழ்க்கை வெளிப்படத்தொடங்கியதும், பாபா வாழ்க்கையின் துவக்க இடமுமான இந்த கண்டோபா மந்திரில் செயல்படத்துவங்குகிற இந்த மிக்ஷனுக்கு முதன்மைச் சீடர்களாக தன்னுடன் சேவையாற்றுகிற சாயி கலியன், சாயி முனுசாமி, சாயி ஸ்ரீதரன் ஆகியோரை அறிவித்தார்.
சாயியின் உத்தம பக்தர் என்று குருதேவர் சுட்டிக்காட்டிய குளித்தலை ஆனந்தன், நெய்வேலி முகுந்தராம் ஆகியோரும் அமைப்பின் சீடர்களாக விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களும் சேர்க்கப்பட்டனர்.
இந்த அமைப்பின் செயல்திறன் உலகளவில் பேசப்பட வேண்டும் என்ற குருதேவரின் ஆவல், அந்த இடத்தில் அறிவிப்பாக வெளிவந்ததைக்கேட்டு அனைவரும் ஆனந்தப் பரவசமடைந்தனர். பல்லக்கு அதன் பிறகு, பாபாவின் சமாதி மந்திர் நோக்கி புறப்பட்டது.
இதற்கு முன்பெல்லாம் பல்லக்கு ஊர்வலத்திற்கு தனி வழி ஒதுக்கப்பட்டிருக்கும். இப்போது அதை ரத்து செய்துவிட்டிருந்தார்கள். இதனால் பக்தர்கள் வரிசையில் சென்றுதான் பாபாவை தரிசிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
பாபாவை தரிசிக்க இரண்டு மூன்று மணி நேரமாகலாம் என நினைத்தபடி சென்ற பக்தர்கள், சாயியின் அருளில் நனைந்தார்கள். வெறும் இருபது நிமிடங்களுக்குள் பாபாவை தரிசித்தார்கள்.
துவாரகாமாயியில் கால் வைத்தவர்கள் எத்தனை துன்பத்தில் இருந்தாலும் அவை அனைத்தும் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்கிற சாயி பாபாவின் அருளுரையை பக்தர்களுக்கு நினைவூட்டி குருதேவர் அனுப்பி வைத்தார். இப்படியே பாபா விரும்பிச்சென்ற குசால் சந்த் இல்லம் (ரகதா)                    சீரடியில் பாபாவின் கண்கள் பார்த்த எந்த விக்ஷயமும் அப்படியே இருந்ததில்லை. சமாதி மந்திர் மற்றும் சிற்றாலயங்கள் தவிர- ஆனால், அவர் தன் கண்களால் பார்த்த, கைகளால் தொட்ட, கால்களால் மிதித்த, விரும்பி அமர்ந்த இடம் ரகதாவில் பழமை மாறாமல் அப்படியே இருக்கிறது. பாபாவை அதிகமாக நேசித்த சந்திரபான் சேட், குசால்சந்த் ஆகியோரை பார்ப்பதற்காக பாபா நான்கு மைல் தூரம் நடந்தே வந்து விடுவார் . அவர் வந்து நிற்கும் இடத்திலிருந்து மேள தாளங்களுடன் அவரை அழைத்துவந்து மரியாதைச் செய்வார்கள் சேட் சகோதரர்கள். நீண்ட நேரம் அங்கே சம்பாக்ஷணை செய்துவிட்டுத் திரும்புவார். இந்த இடத்தை சாயி பக்தர்கள் ஒருமுறையாவது தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
சீரடியின் பல பகுதிகளையும் பார்வையிட்டு பக்தர்கள் பரவசப்பட்டார்கள். சீரடியிலிருந்த ஒவ்வொரு மணித்துளியிலும் குரு கிருபா என்கிற பெயரில் மொத்தப் பொருள்விற்பனைக் கடை நடத்துகிற தம்பி ரமேஷ் உடன்         இருந்து உதவி செய்தார்.
13ம் நாள் காலையில், பாபா வாழ்நாளில் சீரடியை விட்டுச் சென்று வந்த நீம்காவன், ரகதா ஆகிய இடங்களை தரித்தார்கள்.               பாபாவின் பக்தர், சீடர், நண்பர் என்ற முறையில் அவருடன் நெருங்கிப் பழகிய நானா சாகேப் டெங்ளேவின் ஐந்தாவது தலைமுறையின் வாரிசு மூலம், சத்சங்கம் நடைபெற்றது. சாரதா அம்மையார் மொழி பெயர்த்தார்கள்.
பாபா உட்கார்ந்திருந்த வேம்பின் ஒரு பக்க இலைகள் இனிப்பதையும், மறுபக்கம் கசப்பதையும் சுவைத்துப் பார்த்து அதன் தெய்வீகத் தன்மையை எண்ணி சிலிர்ப்படைந்தார்கள் பக்தர்கள்.
அதன் பிறகு, நேராக சகூரி சென்று, உபாசனி மகராஜ் சமாதி மந்திரை தரிசித்து, அதன் சிறப்புகள் மற்றும் பெண்களுக்கு அங்கு தரப்படும் முக்கியத்துவம் ஆகியவற்றை குருதேவர் விளக்கத்தின் மூலம் தெரிந்துகொண்டார்கள்.
ரகதாவுக்குத் திரும்பி, பாபாவின் குரு என்று சொல்லிக் கொண்ட ஜாவர் அலியால் உருவாக்கப்பட்ட இத்கா சுவர் (புலம்பல் சுவர்), அவர் விரட்டி அடிக்கப்பட்ட விவரம், வீரபத்ரர் ஆலயம் ஆகியவற்றை தரிசித்து, குசால் சந்த் இல்லத்திற்கு பக்தர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.
பாபா சீரடியிலிருந்து வந்து நிற்கும் இடம், பேண்டு வாத்தியங்கள் முழங்க அவர் குசால் சந்த் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் விவரம் போன்ற விக்ஷயங்கள் விளக்கப்பட்டன.
மிகப் பெரிய கூட்டத்தைக் கண்டு திகைத்த, குசால்சந்த் -  சந்திரபான் குடும்பத்து வாரிசு, அவர்களை உள்ளே அழைத்து  இடம் கொடுத்து, ஒதுங்கிக்கொண்டார். பாபா நுழைந்த வாயில், தொட்ட கதவு, நடந்த தரை, அவர் கைகள் பிடித்திருந்த தூண்கள், உட்கார்ந்த இடம், பார்த்த பெல்ஜியம் கண்ணாடிகள் என அனைத்தும் அப்படி அப்படியே இருப்பதை குரு தேவர் விளக்கினார்.
சீரடி மாறிவிட்டது. பாபாவின் சுவடுகள் அங்கு மாறிவிட்டன. ஆனால், இந்த இடம் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறது என அவர் கூறிய போது, பக்தர்கள் மெய்ச்சிலிர்த்தார்கள். ஆன்மீகப் பயணம் என்றால், ஏனோ தானோ என்றிருக்கும் என நினைத்த யாத்ரீகர்கள் அனைவருக்கும், ஒவ்வொரு இடத்தின் பெருமைகளை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிக் கூறியது வியப்பாகவும் இருந்தது.
அதன் பிறகு, வேதமாதாவான ரேணுகா தேவி, சுயம்புவாகத் தோன்றியிருக்கும் ரேணுகா மந்திர், சனி பரமாத்மா சுயம்புவாகத் தோன்றி அருள் பாலிக்கும் சனி சிக்னாப்பூர், விநாயகர் சுயம்புவாகத் தோன்றியிருக்கும் மகாகணபதி மந்திர் ஆகியவற்றை தரிசித்துக் கொண்டு பக்தர்கள் பூனா நோக்கி விரைந்தார்கள்.
இவ்வளவு சிறப்பு மிக்க யாத்திரை தங்களுக்கு ஆனந்தன் -  ரேவதி தம்பதியினர், முகுந்தராம்- கோமதி தம்பதியினர், புஷ்ப பரிமளா ஆகியோரால் கிடைத்தது. அவர்கள் இல்லாவிட்டால் இப்படியொரு ஆத்மார்த்தமான பயணம் அமைந்து இருக்காது என உணர்ச்சி வயப்பட்டு பக்தர்கள் நன்றி கூறினார்கள்.
பல்லடத்திலிருந்து வந்திருந்த காளியம்மாள், திருப்பூர் பூங்கொடி, சாவித்திரி, இதுவரை பஸ்ஸே ஏறாதவரான பொள்ளாச்சி சாவித்திரி, மருத்துவப்படுக்கையிலிருந்து எழுந்து யாத்திரை வந்திருந்த கொடுமுடி கிருஷ்ணவேணி போன்ற பலர் மூத்த குடிமக்கள். கால்வலி,  மூட்டு வலி, முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டு சிறிது தூரம் கூட நடக்க முடியாதவர்கள்.
பயந்தவாறு ரயிலிலும், பேருந்திலும் ஏறிய இவர்கள், கடைசி வரை பாபா அருளால் நடந்து வந்தார்கள். இந்த அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டபோது உணர்ச்சிப் பிழம்பாக இருந்தனர்.
திரும்பி ரயிலில் வரும்போதும், அனைவரும் குரு தேவர் சாயி வரதராஜனுடன் சத்சங்கம் செய்து, சந்தேக நிவர்த்திகளைப் பெற்றுக்கொண்டதோடு, பல அற்புதங்களையும் அனுபவித்தபடி வந்தார்கள்.
சாயி கலியன் சத்சங்கம் மிக உயர்வாக இருக்கிறது என முகுந்தராம் பாராட்டியது மறக்கமுடியாததும், என் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் கருதினேன்மொத்தத்தில் இந்த யாத்திரை உயர்ந்த பக்தர்களோடு நடைபெற்ற சிறந்த யாத்திரை.


சாயி கலியன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...