Sunday, May 24, 2015

உன்னுடைய பிரச்சனைக்கு நல்ல முடிவே கிடைக்கும்!

அன்புள்ள குழந்தாய்!
அலுவலகத்திலும் வீட்டிலும் நீ அனுபவிக்கிற அல்லல்களைப் பற்றிய விக்ஷயம் என் காதுகளுக்கு எட்டியது. நிலைமைகளை சமாளிக்க முடியாமல் வாழ்க்கையில் விரக்தி நிலையை  அடைந்து, எதையெதையோ யோசித்து மனதுக்குள் குழம்புகிறாய்.
எல்லோருக்கும் போலத்தான் உனக்கும் வாழ்க்கை இன்பமாக ஆரம்பித்தது. ஆனால், கர்மவினைகள் உன்னைத் தொடர ஆரம்பித்ததும் கஷ்டங்களும், நெருக்கடிகளும் கூடவே வந்தன.
ஆரம்பத்தில் கண் திருஷ்டிகளாய் ஆரம்பித்த இந்த தொல்லைகள், இன்று உனது கழுத்தைப்பிடிக்கும் நிர்ப்பந்தமாய், மன உளைச்சலை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களாய், எதற்காக வேலைக்குப் போகிறோம் என்ற சோர்வினை தினமும் உனக்கு தந்து கொண்டிருக்கிறது.
அலுவலகத்து ஆட்களின் பொறாமைக் கண்கள் உன்மேல் விழுந்து அதனால் நீ பாதிக்கப்பட்டிருப்பதும், உனது அலுவல் தொடர்பான வெளியிடத்து விவகாரங்கள் உன்னை நெருக்கி, நாள் தோறும் பயமுறுத்துவதும் கண்டு நீ திகைக்கிறாய்.
எதற்காக இந்த வேலைக்கு வந்தோம்.. பேசாமல் விட்டு விட்டுப் போய்விடலாமா என்று நினைக்கிறாய்.. போனால் அசிங்கமாகிவிடும். தற்கொலை ஏதேனும் செய்து கொள்ளலாமா என்றுகூட நினைக்கிறாய்..
குழந்தாய்! நான் இருக்கும்போது நீ திகைப்பது ஏன்? பயப்படாதே! திகைப்படையாதே!  நான் உனது கடவுள்.  உன்னைப் பெயர் சொல்லி அழைத்து உனக்கு இன்றைக்கு இந்த நிலையைக் கொடுத்திருப்பவன். அவ்வளவு சீக்கிரத்தில் உன்னை யாரும் தொட்டு விட அனுமதிக்க மாட்டேன். நானும் உன்னைக் கைவிட மாட்டேன்.
பூர்வ ஜென்மங்களின் தொடர்பால் நீயும் நானும் பல ஜென்மங்களாக ஒருவரை ஒருவர் அறிந்திருக்கிறோம். இப்படியே நட்பு பாராட்டி வந்திருக்கிறோம். அப்போது உன்னால் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கப்பட்டவர்கள் இப்போது உன்னை மிரட்டுகிறார்கள்.
ஆனாலும், அவர்கள் பக்கம் நியாயமில்லை என்பதால் அவர்கள் ஜெயிக்கப் போவது இல்லை. நான் அவர்களை ஜெயிக்கவிடவும் மாட்டேன். நீ அவர்களைக் காட்டிலும் எனக்கு உயர்ந்த நிலையில் இருப்பதால் உன்னை அதிகம் விரும்புகிறேன்.
உன்னைத் தொட நினைப்பவனும், அச்சுறுத்த நினைப்பவனும், அலைக்கழிக்க நினைப்பவனும் உன்னையல்ல, என்னை அவ்வாறு செய்ய நினைக்கிறான் என்பதைப் புரிந்துகொள். என்னைத்தொடுகிறவர்களை நான் எவ்வாறு சும்மாவிடுவேன்.
உன் சார்பாக இருந்து அவர்களை நான் பந்தாடுவேன். உன்னை பகைக்கிறவர்களை நான் பகைத்து, உனக்கு எதிராக கோள் சொல்கிறவர்களின் நாக்குகளைப் பொய்யாக்கி, உனக்கு நல்ல பெயர் வாங்கித்தருவது எனது கடமை. ஆகவே, வேலையிடத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நினைத்துக் கவலைப்பட வேண்டாம். தவறான முடிவுகளை எடுக்கவும் வேண்டாம்.
சமீபத்திய உனது நடவடிக்கைகளை நான் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் உடன்பாடு எனக்கில்லை. உன்னைச் சுற்றி தேவையில்லாத ஆட்களை வைத்துக்கொண்டுள்ளாய். அவர்களால் உனக்கு நன்மை வருவதற்கு பதில் தீமைகளே அதிகம் வரும். உனது எதிர்காலம் அவர்களால் பாழாக்கப் படவுள்ளது. தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆகவே, எச்சரிக்கையாக இருந்து உன்னை காப்பாற்றிக் கொள்.
அலுவலகத்தில்தான் இப்படி என்றால், வீட்டிலாவது நிம்மதியிருக்கிறதா என்று ஆதங்கப் படுகிறாய்.
என்னைப் புரிந்துகொள்வாரும், அனுசரணையாக நடந்துகொள்வாரும் யாருமில்லையே எனக்கவலைப்படுகிறாய். ஒரே வீட்டில் அத்தனை பேர் ஒன்றாக இருந்தும், தனியாக இருப்பதைப் போன்று உணர்கிறாய். இந்த நிலைமை உனது விரக்தியை அதிகப் படுத்தி கொடுமைப்படுத்துகிறது. இந்த நன்றி கெட்ட ஜென்மங்களுக்காக நான் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உன்னை உசுப்பேற்றுகிறது. ஆனால் என்ன செய்வது?
வாழ்க்கைப் பட்டாயிற்று! வாழ்ந்தாயிற்று. விரும்பியோ விரும்பாமலோ அனைத்திற்கும் உடன்பட்டுத்தான் ஆகவேண்டும். இவற்றையெல்லாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். எல்லோரும் நமக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கக்கூடாது. இந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் ஏமாற்றத்தைத்தான் தரும்.
ஏனெனில், ஆளாளுக்கு ஒரு வேலை, ஆளாளுக்கு ஒரு பொழுதுபோக்கு, ஆளாளுக்கு ஒரு குணாதிசயம். இந்த நிலையில் உன்னைக் கண்டு கொள்ள யாருக்கு இங்கே நேரம் இருக்கப் போகிறது.
உன்னுடைய மன நிலையை  - எரிச்சல்களை பிறர்மீது  கோபமாக, வெறுப்பாகக் காட்டுகிறாய். இதனால் குடும்பத்தில் நிம்மதி குறைகிறது. உனக்கும் நிம்மதி என்பதே இல்லாமல் போய்விட்டது.
அனைத்தும் கெட்டுவிட்டது, அனைத்தும் வீணாகப் போய்விட்டது. எனது தியாகம் யாராலும் உணர்ந்து கொள்ளப்படவில்லை. குழந்தைகள் கெட்டுவிட்டார்கள் என்றெல்லாம் நீ என்ன நினைத்தாலும் அதை மாற்ற முடியாது என்பதைப் புரிந்துகொள். அவரவர் வினைப் பயனை அவரவர் நிச்சயம் சுமந்தே ஆகவேண்டும். இதில் மாற்றமில்லை.
இதே போன்ற நிலைமை அலுவலகத்தில் ஏற்படும்போது உன்னால் சமாளிக்க முடியவில்லை. மனம் தளர்ந்துவிடுகிறது. ஏதோ பாரம் நெஞ்சை அழுத்திக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.
அன்பான நிமிடங்களும், ஆதரவான நொடிகளும் எனக்காக இருக்குமா என ஏங்கத் தொடங்கி, அந்த ஏக்கம் நிராசையாகி நாள் தோறும் உன்னைக் கொன்றுக் கொண்டிருக்கிறது.
குழந்தாய்!  யாருக்காகவும் நீ படைக்கப்படவில்லை. எந்த வேலைக்காகவும் நீ படைக்கப்படவில்லை. எந்த வேலையும் உனக்காகப் படைக்கப்படவில்லை. உனக்காக நீ படைக்கப்பட்டிருக்கிறாய்.
எதற்காகவோ உருவாக்கப்பட்ட பணியில் தற்போது உனக்கென ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது போலவே, உன்னைப் போல கர்மவினைகளைக் கழிக்க வந்தவர்களோடு சேர்ந்திருக்கிறாய். அவ்வளவுதான்.
வேலையை விட்டு ஓடிப் போனாலும், உனது குடும்பத்தை விட்டு ஓடிப் போனாலும் நிம்மதி அடைந்துவிடலாம் என நினைக்காதே. அது நடக்கவே நடக்காது. பிறகு என்னதான் செய்வது என்கிறாயா?
உன்னைப் புரிந்துகொள்.  க்ஷணநேர இன்பத்துக்காக வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிப்பதுதான் மனித வாழ்வின் யதார்த்தம். நீ மட்டும் அல்ல, உன்னைச் சுற்றியுள்ள இந்த உலகம் முழுக்க இப்படித்தான் இருக்கிறது. எல்லோரும் இப்படித்தான் அனுபவிக்கிறார்கள்.
அவர்களின் தொல்லைகள் பிறருக்கு வெளியே தெரிவதும், அவர்களாலேயே அவை உணர்ந்துகொள்ளப்படுவதும் மிகக்குறைவு. உனக்கு இதன் தாக்கம் அதிகமாகத் தெரிகிறது என்பதால் நீ அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புலம்புகிறாய்.
இதனால் என் மீதும் உனக்கு நம்பிக்கைக் குறைவு ஏற்படுகிறது. நான் உனக்கு எதுவும் செய்யவில்லை என நினைக்கிறாய். இதனால் என்னை மட்டும் அல்ல, உன் வினையை மாற்றும் குருவின் தரிசனத்தையும் இழந்துவிடுகிறாய். அங்கு போவதால் என்ன நடந்துவிடுகிறது, அவரைப் பார்ப்பதால் என்ன மாறி நடக்கப் போகிறது என்ற நினைவு உனக்கு அடிக்கடி வந்துவிடுகிறது.
அனைத்தும் வினைப்படிதான் நடக்கிறது என எடுத்துக்கொண்டால் இந்த நிலை ஏற்படாது. உன்னை நீதான் தேற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த நிலை நீடிப்பதால் உன்னால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியவில்லை. விருப்பம் இல்லாத வாழ்க்கையில் கடமைக்கு இருப்பதாக உணர்கிறாய்.
மணமான புதிதில் இருந்த உனது கனவுகளும் கற்பனைகளும் மறைந்து நரகத்தில் இருப்பது போன்ற உணர்வில் தத்தளிக்கிறாய். எதன் மீதும் நாட்டம் வருவதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் உணர்ச்சிகளைக்கூட இழந்து விட்டிருக்கிறாய். இது தொடர்ந்தால் மிக விரைவில் உடல் நல மற்றும் மன நல பாதிப்புக்கும் ஆளாவது நிச்சயம்.
உனது இந்த நிலையால் இப்போதெல்லாம் தொடர் தோல்விகளும், கடன் தொல்லைகளும் ஏற்பட்டிருப்பது ஒரு பக்கம். உன் வேலையில், உன் கடமையில் நீ சரியாக செயல்படமுடியாத நிலை ஒரு பக்கம் ஏற்பட்டிருக்கிறது. விரைந்து இனியாவது இதை சரிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்.
நான் என்ன பாவம் செய்தேன், எனக்கு ஏன் இந்த நிலைமை? என நீ நினைக்கலாம். பாவமும் புண்ணியமும் நீ வேண்டுமென்றே சம்பாதித்துக்கொள்வதல்ல. அது உனது வாழ்க்கையில் தாமாக அமைவது. தெரிந்து செய்வது சிறிது, தெரியாமல் செய்வதோ அதிகம். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும்  வினைகளுக்கானப் பலன் என்னவோ நிச்சயம்தானே. அந்தப் பலனை இப்போது அனுபவிக்கிறோம் என நினைத்துக்கொள். நான் சிக்கிக் கொண்டேன், நான் அவஸ்தைப் படுகிறேன், எனக்குத் தான் பிரச்சினை என்கிற எண்ணத்தை அறவே விட்டுவிடுவாயாக. ஏன் உன்னை நீ குற்றவாளியாகக் கருதவேண்டும்? எல்லாம் _ ஸ்ரீ ஹரியின் மாயை என்பதை தெரிந்துக் கொள். செயல்படுபவன் அவனேயன்றி, நானில்லை என்ற உணர்வை ஏற்படுத்திக் கொள்.
நான் உனக்கு அடிக்கடி போதிக்கிற நம்பிக்கை, பொறுமை என்கிற  விசயங்களைக் கடைப்பிடி. அப்போது இன்னும் சமாளிக்கலாம் என்கிற தைரியம் வந்துவிடும்.
மனதுக்குள் கோணல் சிந்தனைகள் முளைக்கும் போது அது பாவத்திற்கு வித்திடுகிறது. பற்று வந்து பாடாய்ப் படுத்திவிடுகிறது. குடும்பத்தின் மீதுள்ள மோகம்தான் இந்த கோணல் சிந்தனைக்குக் காரணம்.
ஆகவே, நீ ஞானியாகிவிடு என நான் போதிக்க மாட்டேன். ஏனெனில், இந்த குடும்பத்திற்குள் இருந்தபடியே என்னைச் சிந்தனை செய். நித்தியம் எது அநித்தியம் எது என்ற யோசனை உனக்குள் வரட்டும். எதுவரை உனக்கு இந்த கஷ்டம் தொடரும் என்பதை சிந்தனை செய்து பார். எல்லா விக்ஷயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்ற உண்மையை உணர்ந்துகொள்.
நீ என் மீது பக்தி செலுத்துவதால் உன்னுடைய பிரச்சினைக்கு நல்ல முடிவே கிடைக்கும் என்பதைத்தெரிந்துகொள். குரு தரிசனம் செய்.. உன் பாவங்கள், பிரச்சினைகள் தீரும்.
பெருங்களத்தூரில் நான் உனக்காகக் காத்துக்கொண்டிருப்பதை பலமுறை கூறியிருக்கிறேன். இதுவரை அலட்சியப்படுத்திவிட்டாய். இனியாவது என்னுடைய ஆலயத்திற்குத் தொடர்ந்து வா.. இங்கு வந்து நாமஸ்மரணை செய்.. அனைத்தும் சரியாகும்.
நீ இப்போது உடன்பட்டிருக்கிற எதுவும் உன்னோடு வரப்போவதில்லை. நானும் நீயும்தான் கடைசி வரை - ஜென்ம ஜென்மமாய் ஒன்றாகப்பயணிக்கப் போகிறவர்கள். ஆகவே என்னிடம் வா.. உனக்காக காத்துக் கொண்டு நின்றிருக்கிறேன்.
குழந்தாய்! ஒரு விக்ஷயத்தைச் சொல்கிறேன்..
உனது வாழ்க்கையை மாற்றும் ஒரு பரிசுப் பொருள் எடுத்து வைத்திருக்கிறேன். அதை விரைந்து தருகிறேன்.. பெற்றுக்கொள்.. வா!
அன்புடன் அப்பா
சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...