நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு!
”காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய
ஆசிர்வாதம் பலனளித்தது!.....சாயி எப்படி சொன்னாரோ, அப்படியே நடந்தது. சாயியின் வார்த்தைகள்
தப்பர்த்தம் செய்து கொள்ளமுடியாதவை, துல்லியமானவை, அவருடைய திருவாய் மொழியின் படி
குழந்தைகள் பிறந்தன.”
(சத்சரிதம் அத்: 25:-102-103)
வயதாகிவிட்டது...கருப்பையில்
சிக்கல்.......கணவனிடம் பிரச்சனை, ஜாதகக் கோளாறு...இப்படி நிறைய சிக்கல்கள்
இருக்கும்போது எப்படி எனக்கு குழந்தை பிறக்கமுடியும்?
இப்படியொரு
கேள்வி பாதிக்கப்படவர்கள் மனதில் இருக்கத்தான் செய்யும். ‘மனிதரால் கூடாதது, தேவனால் கூடும்’ என்கிறது பைபிள். கடவுளின் வாக்குப்
பொய்ப்பது கிடையாது. “காலப்போக்கில் பாபாவின்
திருவாய்மொழி உண்மையாயிற்று. அவருடைய ஆசிவாதம் பலனளித்தது.
சாயி
எப்படி சொன்னாரோ அப்படியே நடந்தது.
ஸாயீயின் வார்த்தைகள் தப்பர்த்தம் செய்து கொள்ள முடியாதவை. துல்லியமானவை,
அவரது திருவாய்மொழியின்படி குழந்தைகள் பிறந்தன என சத்சரிதம் (அத்: 25:-102-103)
கூறுகிற்து.
தாமு அண்ணாவை சத்சரித்திரம் படித்தவர்கள் அனைவருக்கும்
தெரியும். அவரது முழுப்பெயர் தாமோதர் ஸாவல் ராசனே. அகமது நகரைச் சேர்ந்த இவரை தாமு அண்ணா
என்பார்கள்.
பாபாவின் மீது ஆழ்ந்த பக்தியுள்ளவர். சீரடியில் நடக்கும் ராம நவமி ஊர்வலத்தில் இரு
கொடிகள் எடுத்துச் செல்லப்படும். அதில்
ஒன்றை ஆண்டு தோறும் சாயிக்கு அர்ப்பணம் செய்தவர் தாமு அண்ணா. இதற்க்குக் காரணம், பிறக்கவே பிறக்காது என்று
எல்லோரும் கைவிட்ட பின் குழந்தை பிறந்ததுதான். இச்சேவையினை நாற்பது ஆண்டுகளுக்கும்
மேல் தாமு அண்ணா செய்து வந்தார். இன்னொரு கொடி நிமோண்கருடையது.
குழந்தைப் பிறப்பதற்க்கு முன்பு தாமு அண்ணா
நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்!
அவருக்கு இரண்டு மனைவிகள். ஒரே குறை பிள்ளை எதும் இல்லாதது. என்னென்னவோ
செய்து பார்த்துவிட்டனர். அப்படியும் குழந்தைப் பேறு எட்டாக்கனியாகவே இருந்தது.
சிறந்த ஜோதிடர்களை நாடி அவர்கள்
சொன்னபடியெல்லாம் நவக்கிரக
பரிகாரம் முதல்
அனைத்தும் செய்ததுதான் மிச்சம், பலன் ஏதுமில்லை. ஆனால் இன்று இவரும் பெரிய ஜோதிட
நிபுணர் ஆகிவிட்டார். வாரிசுக்காக ஞானிகள், சாதுக்களை தேடித் தேடி வணங்கினார்.
எதனாலும் பலனில்லாத நிலையில் குழந்தைப் பற்றிய எண்ணத்தையே விட்டுவிட்டார்.
இந்நிலையில் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு,
1895ம் ஆண்டு வாக்கில் சீரடிக்கு வந்தார். இவர் வரும் வழியில் கோபர்காமில் இருக்கும்
போதே, சீரடியில் இருந்த சாயி, அவர் வருவதை அறிந்தார். குழந்தை வரம் வேண்டி வரும் தாமுவுக்கு
நான்கு மாம்பழங்களை எடுத்து வைக்க நானாவிடம் சாயி கூறினார்.
இந்த
பழங்கள் நானாவின் பெயருக்கு ராலே என்ற சப் கலெக்டரால் அனுப்பப்பட்டவை. இவற்றினை பாபாவின் பாதங்களில் பக்தியுடன்
சமர்ப்பிக்க நானாவிடம் சப்கலெக்டர் கேட்டுக்கொண்டிருந்தார்.
பாபாவின்
முன்னால் மாம்பழங்கள் பிரிக்கப்பட்ட போது அதில் சுமார் முன்னூறு பழங்கள் இருந்தன. பாபா அனைத்தையும் நானாவிடம்
ஒப்படைத்துவிட்டார். ஆனால் நானாவோ நான்கு
பழங்களை எடுத்து கொலம்பா எனப்படும் வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டுவிட்டு
மீதியினை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அவர் அதை பாத்திரத்தில் போடுல்போதே, ‘இவை
தாமு அண்ணாவிற்க்கு’ என்றார்
பாபா.
இரண்டு
மணி நேரம் முடிந்து பாபாவிற்க்கு பூஜை செய்ய நிறைய பூக்களுடன் வந்த தாமுவிற்க்கு
மசூதியில் நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாது.
அவரிடம் பழத்தைக் கொடுத்த பாபா, “இவற்றை சாப்பிட்டு சாவாயாக!” என்று கூறினார். இதைக்
கேட்ட தாமு திகைத்துப்போனார். அருகிலிருந்த
மகல்சாபதி, ‘பாபாவின் காலடியில் இறப்பதும் அனுக்கிரகமே!” என்றார். இதனால் ஊக்கம் பெற்ற தாமு அண்ணா பழங்களை
சாப்பிட முயன்றார்.
அவரைத்
தடுத்த பாபா, “இவற்றை நீயே சாப்பிட்டு விடாதே. உன் இளைய மனைவிக்குக் கொடு. எட்டு
குழந்தைகள் பிறப்பர். 4 ஆண் 4 பெண். முதலில் இரண்டு ஆண். மூத்தவனுக்கு தவுலத் ஷா, இரண்டாமவனுக்கு தானாஷா
என்று பெயரிடு!” என்றார்.
அவர்
ஏற்கனவே குழந்தை பிறக்காது என்று விட்ட எண்ணத்தை விட்டு குருவின் வார்த்தைகளில் முழுமையான
நம்பிக்கை வைத்தார். சாயியின்
உறுதிமொழியினையும், ஆசிர்வாதத்தினையும் கேட்டதும் அவருடைய மனதில் புது ஆசையும்
நம்பிக்கையும் துளிர்விட்டன. வீட்டுக்கு வந்த தாகு, அவரது டைரியில் பாபா சொன்ன
பெயர்களை குறித்து வைத்துக்கொண்டார்.
நாளடைவில் அதை மறந்துவிட்டார்.
ஒரு நாள் அந்த அதிசயம் நடந்தது. ஆம், பாபா
கூறியவாறே ஆண் குழந்தையும் பிறந்தது.
முதல் குழந்தையினை தூக்கிக்கொண்டு சீரடிக்கு வந்த தாமு அண்ணா, ‘குழந்தைக்கு
என்ன பெயர் வைப்பது?’
எனக்கேட்டார்.
‘நான் முன் சொன்ன பெயரினை மறந்து
விட்டாயா? டைரியின் மூன்றாவது பக்கத்தில்
அதை எழுதி வைத்திருக்குறாய். போய்ப் பார்!’ என்றார் பாபா. அதன்படியே
பெயரிடப்பட்டது.
பாபா
சொன்னார்:
”என்னுடைய
வார்த்தைகளை பிரமாணமாக நம்புங்கள்.
நான் இந்த பூதவுடலை நீத்த பிறகும், சமாதியிலிருந்து என்னுடைய எலும்புகளும்
உங்களுக்கு ஆசுவாசம் அளிக்கும்.
நான் மாத்திரம் அல்லன், எனது
சமாதியும் உங்களிடம்
பேசும்.
எவர் எனது சமாதியை சரணடைகிறாரோ
அவருடன் அது ஊஞ்சலாடும்.
நான் இல்லாமல் போய்விடுவேன்
என்று ஒரு காலும் கவலைப்படாதீர்கள்.
நீஙக்ள் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி என் எலும்புகள் பேசுவதை நீஙக்ள்
கேட்பீர்கள்.
விசுவாசம் நிறைந்த இதயத்துடன்
என்னை நினைத்தால் போதும், சுயனலம் கருதாது என்னை வழிபடுங்கள். எல்லா மங்களங்களும்
விளையும்”
பாபா தனது திருவாய்
மொழியாகக்கூறிய இந்த வார்த்தைகளை முழுமையாக நம்புங்கள். அப்போது உங்களுக்கு சர்வ மங்களங்களும்
விளையும்.
எனக்குக் குழந்தைப்பேறுதான் இருக்கிறதே...
எனக்கு இந்த தகவலால் என்ன பயன் என்று நினைக்காதீர்கள்.
விசுவாசம் நிறைந்த இதயத்துடன் நீங்கள்
கேட்பது நீங்கள் செய்கிற தொழிலில் லாபமாக இருக்கலாம், வாழ்வின் முன்னேற்றமாக இருக்கலாம். இப்போதுள்ள நிலையைவிட இரட்டிப்பான
மகிழ்ச்சியைத் தரும் நிலையாகவும் இருக்கலாம். அல்லது எதிர்பார்த்து இதுவரை கிடைக்கவே
கிடைக்காது என்று முடிவு செய்துவிட்ட விஷயமாகவும் இருக்கலாம்.
சமர்த்த (எல்லாவற்றையும் செய்யவல்ல) சாயியை
சரணடைந்து காத்திருங்கள். பலன் நிச்சயம்!
-
சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012
இதழில் வெளியான கட்டுரை.