அன்னதானம்
அன்னதானம்
உலகிலுள்ள மற்ற தானங்களை விட மிகச் சிறந்தது. சகல சவுபாக்கியங்களையும் தரவல்லது. பாவங்களைப் போக்கவல்லது. இதைப்பற்றி சத்சரித்திரம்
38-ம் அத்தியாயத்தில் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
’மனிதன் அடிக்கடி தான தர்மங்கள் செய்ய
வேண்டும். பசிப் பிணியைக் களைவதையே முக்கிய தானமாகக் கருத வேண்டும். நித்திய நியமமாக அன்னதானம் செய்வதையே தலையாய
கடமையாகக் கொண்டு வாழவேண்டும்.
மதியம்
12 மணிக்கு அன்னமேதும் கிடைக்காவிட்டால் மனம் குழம்புகிறது. நமக்கு எப்படியோ அப்படியே பிறருக்கும், இதை
உள்ளுக்குள் நன்கு உணர்ந்தவன் உயர்ந்த மனிதன்.
ஆசார
தர்மத்தில் பிரதானமானதும், முதலில் செய்ய வேண்டியதுமான தானம் அன்னதானம். இது பற்றி
நன்கு சிந்தித்துப் பார்த்தால் அதைவிட சிறந்த தானம் எதுவும் இல்லை என்பது நன்கு
விளங்கும். அன்னம் பரப்பிரம்ம சொரூபம், எல்லா உயிரினங்களும் அன்னத்திலிருந்தே
எழுகின்றன. அன்னமே உயிரைக் காப்பாற்றும்
சாதனம். உயிர் உடலைப் பிரிந்த பிறகு அன்னத்திற்குள்ளேயே
சென்று கலந்துவிடுகிறது.
அதிதி
(விருந்தாளி) நேரத்தோடு வந்தாலும் நேரம் தவறி வந்தாலும் இல்லறத்தோன் அவருக்கு
அன்னமிட்டு திருப்தி செய்ய வேண்டும்.
அன்னம் அளிக்காமல் விருந்தாளியை அனுப்பிவிடுபவன் இன்னலகளுக்கு அழைப்பு
விடுக்கிறான். இதில் சந்தேகமே இல்லை.
வஸ்திரங்களையோ,
பாத்திரங்களையோ தானமாக அளிக்கும் போது தானம் வாங்குபவர் தகுதியுள்ளவரா என்று
யோசிக்க வேண்டிய அவசியம் உண்டு. ஆனால்
அன்னதானம் செய்வதற்க்கு இந்த சிந்தனையே தேவையில்லை. வீட்டு வாயிலுக்கு எவர், எந்நேரத்தில்
வந்தாலும் அவரை அனாதரவாக விட்டு விடுவது தகாது.
அன்னதானம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது.
இதற்கு சுருதியே பிரமாணம். ஆகவே, பாபாவும்
உலகியல் ரீதியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஜனங்களுக்கு உணவளித்து திருப்தி
செய்தார்.
அன்னதானம் இன்றி செய்யப்படும் காசுதானம்
போன்ற தானங்கள் முழுமை பெறாதவை. எத்தனை
நட்சத்திரங்கள் இருப்பினும் சந்திரன் இன்றி வானம் அழகு பெறுமோ? பதக்கம் இல்லாமல் தங்கச்சங்கிலி முழுமை பெறுமோ?
அறுசுவை உணவில் பருப்பு எவ்வாறு
முக்கியமானதோ, அவ்வாறே புண்ணியங்களில் எல்லாம் சிறந்த புண்ணியம் அன்னதானம். கலசமில்லாத கோபுரத்திற்கும், தாமரை இல்லாத நீர்
நிலைக்கும் அழகு ஏது?
அன்னதானம் இல்லாது செய்யப்படும் தருமத்தை, பிரேமையில்லாத பஜனைக்கும், குங்குமத் திலகம்
இட்டுக்கொள்ளாத சுமங்கலிக்கும், குரல் இனிமை இல்லாதவனின் பாட்டுக்கும், உப்பு
இடப்படாத மோருக்கும் ஒப்பிடலாம்.
அன்னதானம் செய்யும்போது வியாதியஸ்தர்களுக்கும், பலம் குன்றியவர்களுக்கும்,
குருடர்களுக்கும், முடவர்களுக்கும், செவிடர்களுக்கும், ஏழை, எளியவர்களுக்கும்
முதலில் உணவு அளிக்கப்படவேண்டும்.
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதன் பின்னரே அளிக்கவேண்டும்”
பாபாவிற்குப் பிடித்தமானது
என்பதால் இதை சாயி பக்தர்களாகிய நாம் விரிவாகச் செய்கிறோம். இதைப் பற்றி மேலும்
விரிவாக நாளை பார்க்கலாம்.
ஜெய்சாயிராம்!
No comments:
Post a Comment