Tuesday, December 11, 2012

வேண்டுதலை நிறைவேற்றிய சாயிபாபா



வேண்டுதலை நிறைவேற்றிய சாயிபாபா

சதீஷ், சேலம்
Photo from: saibabaofindia.com

நான் சேலத்தில் பெரமனூரில் வசிக்கிறேன்.  எனது மனைவி கவிதாவுடன் சேர்ந்து இனிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். எங்கள் வாழ்க்கைக்கு மெருகு சேர்க்க இரண்டு மழலைச் செல்வங்களை கடவுள் தந்தார்.  மூத்தவள் பிரகதி 9ம் வகுப்பும், சின்னவள் பிரீதி 3ம் வகுப்பும் படிக்கிறார்கள்.
      சேலத்தில் ஸ்டார்ச் மாவு தயாரித்து விற்பனை செய்யும் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த மாவில் இருந்து பசை, மருந்து, உணவுப்பொருட்கள் எனத்தயாரிக்கிறார்கள். கிழங்கை அரைத்து மாவாக்கும் தொழிலில் உள்ளவர்கள்,  என் மூலமாக பல நிறுவனங்களுக்கு மொத்த விற்பனை செய்வார்கள். நியாயமாக நடத்தும் இந்தத் தொழிலால் எனக்கும், என்னை நம்பி தொழில் செய்பவர்களுக்கும் நல்ல முறையில் வாழ்க்கை அமைந்தது. வசதி வாய்ப்புகளுக்குக் குறையேதும் பாபா அருளால் இருந்ததில்லை.
      பாபா என் வாழ்க்கையில் நுழைந்தது ஒரு வித்தியாசமான சூழ்நிலையில்!
      ஆரோக்கியமாக இருந்த நான் 2008-ம் ஆண்டில் திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்டேன். நடு வயிற்றுப்பகுதியில் வலி தோன்றி தாங்கமுடியாத அளவு வலிக்கும். பல மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் குணம் கிடைக்கவில்லை.  நோய்க்கு சரியான மருந்து கிடையாது என்று சொன்னார்கள்.
      பரிசோதனை செய்தபோது எனக்கு கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இத்தனைக்கும் எனக்கு எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லை.  கணையப்பகுதியில் இருந்த வடு பெரிதானாதால் இந்த பாதிப்பு எனத் தெரிந்தது.  என்னால் எதையும் சாப்பிட முடியாது.  தேங்காய், எண்ணெய், மாவுப்பொருட்கள் போன்ற எதைச் சாப்பிட்டாலும் வயிற்று வலி வந்துவிடும்.  இப்படி இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் தொழிலை கவனிக்க முடியாமல் போய்விட்டது.
      ஒரு தீர்மானமான முடிவை எடுக்க முடியவில்லை.  வாழ்வின் மீதிருந்த நம்பிக்கை தளர்ந்து போனது.  சின்னக் குழந்தைகள், தனியான சூழல், இந்த நிலையில் இவர்களை விட்டு நான் போய்விட்டால் உலகத்தில் இவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுவார்களோ என்ற கவலை வேறு என்னைக் குடைந்து கொண்டிருந்தது.
      வேண்டாத தெய்வமில்லை, போகாத கோயிலில்லை என்பார்களே, அப்படித்தான் நாங்களும் எல்லா கோயில்களுக்கும் போய் வந்துவிட்டோம். நடந்தது ஒன்றுமில்லை.  ஏதாவது ஒரு அற்புதம் நடந்து நான் வாழ்க்கையை மீண்டும் பெற்று விட மாட்டேனா என ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்ந்துக் கொண்டு இருந்தேன்.
      அந்த நம்பிக்கை என் மனைவி மூலமாக வந்தது.
      என் மனைவியின் தோழி காஞ்சனா, இவர் பாபாவைப்பற்றி என் மனைவியிடம் எடுத்துச் சொல்லி அவரை நம்புமாறு அறிவுறுத்தியிருக்கிறாள்.  அவரது அறிவுறுத்தலின்படி பாபாவின் ஒரு படத்தை வாங்கி வந்து வீட்டில் மாட்டி வைத்தாள் என் மனைவி.
      காஞ்சனாவின் மாமனார் திரு சண்முகம், மாமியார் வசந்தா தேவி அம்மா ஆகியோர் தீவிர சாயி பக்தர்கள். இவர்களின் அறிமுகம் கிடைத்த பிறகு வேகமாக சாயி பக்தியில் வளர்ந்தோம். பிரச்சனைகளும் தீர ஆரம்பித்தது.
      அதன் பிறகு நாங்கள் பாபா கோயிலுக்குப் போக ஆரம்பித்தோம்.  சத்சரித்திரம் வாங்கிப் படித்தோம். பாபாவின் சிறிய புத்தகமாக இருந்தாலும் வாங்கிவிடுவோம்.  என் மனைவிதான் முதலில் பாபா பற்றிய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தாள்.  பிறகு எனக்கும் தந்தாள்.  நான் ஓய்வு நேரங்களில் படிக்க ஆரம்பித்து பாபா மீது பக்தியை வளர்த்துக் கொண்டேன்.
      சேலத்தில் கோரி மேடு என்ற இடத்தில் பாபா ஆலயம் இருக்கிறது. இங்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தோம். அங்கு செல்ல ஆரம்பித்த பிறகுதான் அரைகுறையாக இருந்த நம்பிக்கையும், அடுத்து என்ன நடக்குமோ என்ற பயமும் குறைய ஆரம்பித்தது.  மனம் லேசாகத துவங்கியது. அதன் பிறகு உடம்பு படிப்படியாக குணமாக ஆரம்பித்தது.
      உணவு முறையிலும்,வாழ்க்கை முறையிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தேன்.  எனது மனைவி என்னிடம், ‘மருந்து மாத்திரையில்லாமல் பாபாவின் உதியினை மட்டும் நம்பிப் பயன்படுத்துவோம், அவர் கைவிடமாட்டார் என தைரியமூட்டி தினமும் உதியை மருந்தாகக் கொடுத்து வந்தார்.
      பாபா கைவிடவில்லை, தினமும் இருந்து வந்த வயிற்று வலி மாதம் ஒரு முறை வந்தது.  பிறகு இரண்டு மாதத்திற்க்கு ஒருமுறை வந்தது.  இப்போது இல்லை. தொழிலும் படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்தது.
      எனக்கு எந்தெந்த நேரத்தில் எதையெதைக் கொடுக்க முடியுமோ, கொடுக்க வேண்டுமோ அதையெல்லாம் உரிய நேரத்தில் என் பாபா கொடுத்து வந்தார். இப்படி அவர் செய்த அற்புதங்கள் பலப்பல.
      நோயாலும், பிரச்சனைகளாலும் துன்பப்பட்டு வந்த நேரத்தில், எங்கள் வீட்டில் குடியிருந்த நண்பர் சொந்தமாக வீடு கட்டி குடியேறினார்.  இவர் காலி செய்துவிட்டால் எப்படிப்பட்ட ஆட்கள் வருவார்களோ என யோசித்தேன். அவர் வெளியேறுவதற்க்கு முன்பாகவே இன்னொருவர் வந்து அட்வான்ஸ் கொடுத்தார்.
      ஒரு நண்பர் என்னை வேத வகுப்பு ஒன்றுக்கு அழைத்தார். வேதங்களை எளிமைப்படுத்தி இலவசமாக கற்றுத்தருகிறார்கள், நீ வந்து கற்றுக்கொள் என என்னைக் கூப்பிட்டார்கள்.  நானும் சென்றேன்.  சென்றபிறகுதான் தெரிந்தது.  வேதம் கற்றுத்தருபவர் ஏற்கனவே எனக்கு தெரிந்தவர் என்பது.
      படிக்க வந்தவர்களில் பல்ர் வேத பாடங்களின் மீது  சரியான கவனம் செலுத்தவில்லை என குறைப்பட்டுக் கொண்ட அவருக்கு இன்னொரு பிரச்சனையும் இருந்தது.  அதாவது வேத  பாடம் கற்பிக்க போதிய இடமில்லை.  யாராவது இடம் தருவார்களா எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.
      நான் என் வீட்டைக் கொடுத்தேன். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் இலவசமாக வேதத்தைக் கற்றுக் கொடுத்தார்.  அவர் வடிவில் பாபாவே வந்து எங்கள் இல்லத்தை வேதப் பாடம் நடத்தும் இடமாக மாற்றினார் என்று நான் திடமாக நம்புகிறேன்.
      அதன் பிறகு எங்கள் வாழ்வில் பல மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்தன.  வேதக்கல்வி இறை பக்தியை அதிகமாக்கியது. என் மகள் பெரிய பிள்ளையானாள்.  வீட்டை மாற்றவேண்டும் என்று நினைத்தோம்.  சீட்டுக்குலுக்கி போட்டுப் பார்த்தோம்.  வேறு வீடு மாற்றச் சொல்லி சீட்டு வந்தது. அதன் பிறகு வீடு மாறினோம். இந்த மாற்றம் மனதளவில் புது தெம்பினைக் கொடுத்தது. சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்துவிட்டேன்..
      நான் சீரடிக்கு வருவதாக உள்ளேன்.  என்னை அழைப்பதற்க்காக நான் விரும்பிய உணவை விட்டு விடுகிறேன்என வேண்டுதல் செய்து விருப்பமான உணவை விட்டுவிட்டேன். மூன்று மாதங்களாக முயற்சி செய்தும் முடியவில்லை. தினமும் பெருங்களத்தூருக்குப் போன் செய்து தொந்தரவு செய்வேன்.
      ஒரு வழியாக இந்த ஆண்டு ஜூலை மாதம் சீரடிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  இதில் கூடுதலான செய்தி என்னவென்றால், எங்களோடு மொத்தம் இருபத்து நான்கு பேர் மட்டுமே வந்திருந்தனர்.  ஒரே குடும்பத்தினராக பழகினர்.
      இதுவரை யாரும் சென்று பார்த்திராத இடங்கள் அனைத்திற்க்கும் சென்று வந்தோம்.  நிறைவான பயணமாக இருந்தது.  சாயி வரதராஜன் அவர்களுடன் நெருங்கிப் பழகுகிற வாய்ப்பும் கிடைத்தது. இது மேலும் சாயி பக்தியில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீ சாயி தரிசனம் செப்டெம்பர் 2012 இதழில் வெளியான கட்டுரை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...