Tuesday, December 4, 2012

சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் - பாகம் 2



சீரடி சாய்பாபா  ஒரு அற்புத மகான் - பாகம் 2

தேனி. எம். சுப்பிரமணி

                (முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
                   லட்சுமி, “எனக்குத் தோன்றிய கனவில் நம் குழந்தையைக் கேட்டு பக்கிரி ஒருவர் வந்தார். கனவில் வந்த இறைவன் அந்தக் குழந்தையை அவரிடம் கொடுத்தனுப்பச் சொன்னார்என்றாள்.
           ஹரிஸாடேயும், “என்ன ஆச்சர்யம். எனக்கும் அதே கனவு வந்தது. அதனால்தான் நானும் திடுக்கிட்டு எழுந்தேன்.என்றார்.
                 இதைக் கேட்ட லட்சுமியும், “காலை நேரத்தில் கண்ட கனவு பலிக்கும் என்பார்கள். சோதிடர் சொன்னது போல், நம் குழந்தையைக் கேட்டு ஒருவர் வந்து  விட்டார்என்றாள்.
           கனவு கண்டு எழுந்த இருவருக்கும் அதற்குப் பின்பு தூக்கம் வரவில்லை. காலை அவர்கள் வீட்டின் முன்பு பக்கிரி ஒருவர் வந்து நின்று, “அம்மாஎன்று அழைத்தார்.
                  லட்சுமி வெளியே சென்று பார்த்தார். அங்கு அவர் கனவில் தெரிந்த பக்கிரி நின்று கொண்டிருந்தார். லட்சுமி அவரிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
              என்னம்மா இது கேள்வி? நான் தங்கள் குழந்தையைக் கேட்டு வந்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் கனவில் தோன்றிய இறைவன் என்னிடம் தங்கள் குழந்தையைக் கொடுத்தனுப்பச் சொல்லியிருப்பாரே...? என் கனவில் தோன்றிய இறைவன் தங்கள் குழந்தையைப் பெற்றுச் செல்லும்படி சொன்னாரே...என்றார் அந்த பக்கிரி.
                  இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் நோக்கத்துடன் லட்சுமி உள்ளே சென்று, தன் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அவருடன் ஹரிஸாடேயும் வந்தார். அங்கு நின்றிருந்த பக்கிரியிடம் குழந்தையைக் கொடுத்து, “இந்தக் குழந்தை இனி தங்களுடைய குழந்தை. இறைவன் கட்டளைப்படி தங்களிடம் இந்தக் குழந்தையை ஒப்படைத்து விட்டோம். இனி இவனை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குங்கள்என்று கண்ணீர் வடித்தபடி கூறினர். 
                     குழந்தையைப் பெற்றுக் கொண்ட அந்த பக்கிரி, “அம்மா அழாதீர்கள். இனி இந்தக் குழந்தை குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம். இவனைச் சிறப்பான முறையில் வளர்த்து ஆளாக்குவதுதான் எனக்கு இறைவன் இட்ட கட்டளை.என்றபடி அங்கிருந்து சென்றார். அதன் பிறகு இருவரும், சோதிடர் சொன்னது போல் குழந்தையைத் தத்து கொடுத்த சில நாட்களில் மரணமடைந்தனர். 
                 குழந்தையைத் தத்து பெற்றுச் சென்ற அந்த பக்கிரி இசுலாம் சமயத்தவர் என்பதால் அந்தக் குழந்தைக்கு கபீர்என்று பெயர் சூட்டி வளர்க்கத் தொடங்கினார். அந்த பக்கிரியின் மனைவியும் அந்தக் குழந்தையைத் தான் பெற்றெடுத்த குழந்தையைப் போல் வளர்த்து வந்தார். குழந்தை கபீர் வளர்ந்து சிறுவனாக ஆன நிலையில், அந்த இசுலாமிய பக்கிரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 
                   ஒருநாள் அவர் தன் மனைவியை அழைத்து, “எனக்கு மரணம் நெருங்கி விட்டது. நான் மரணமடைந்த பின்பு, நீயும், குழந்தையும் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள சேலுஎனும் ஊருக்குச் செல்லுங்கள். அங்கு என் நண்பர் கோபால்ராவ் தேஷ்முக் எனும் ஜமீன்தார் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நான் அனுப்பியதாகச் சொன்னால் அவர் உனக்கும் உன் குழந்தைக்கும் தங்குவதற்கு வசதி செய்து கொடுப்பார்.என்றார்.
                      
சில நாட்களில் இசுலாமிய பக்கிரி மரணமடைந்தார். அவரது மனைவி, குழந்தை கபீருடன் சேலு எனும் ஊருக்குச் சென்று ஜமீன்தார் கோபால்ராவ் தேஷ்முக்கைச் சந்தித்து தன் கணவர் இறந்துவிட்ட தகவலைச் சொன்னார். அவர் இருவருக்கும் தங்குவதற்கு இடமளித்தார்.
                 சிறுவனாக இருந்த கபீருக்கு கோபால்ராவ் தேஷ்முக் பல சாத்திரங்களைக் கற்றுக் கொடுத்தார். சிறுவன் வளர்ந்து இளைஞனாக ஆகிவிட்டான். கோபால்ராவ் தேஷ்முக்கிடம் கல்வி கற்ற பல சீடர்களில் கபீர் நல்ல அறிவுத் திறனுடன் இருந்தான். இதனால் கோபால்ராவ் தேஷ்முக் கபீர் மீது அதிகமான அன்பு செலுத்தினார். கோபால்ராவ் தேஷ்முக், தங்களை விட கபீர் மீது அதிகமான அன்பு செலுத்துவது மற்ற சீடர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள், கபீரைக் கொன்று விட வேண்டுமென்று திட்டம் தீட்டினர்.
                   ஒரு நாள் கோபால்ராவ் தேஷ்முக், கபீர் இருவரும் ஒரு இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சீடர்களில் ஒருவன் கபீரைக் கொல்வதற்காக அங்கிருந்த செங்கல் ஒன்றை எடுத்து கபீரை நோக்கி வீசினான். அந்தக் கல் கபீர் மேல் படாமல் அவரருகே வந்து அந்தரத்தில் நின்றது. பின்னர் சப்தமின்றி கீழே விழுந்தது. 
                    இதைக் கண்ட மற்ற சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர். முதல் செங்கல்லை வீசிய சீடன் மீண்டும் ஒரு செங்கல்லை எடுத்துக் கபீரை நோக்கி வீசினான். அந்த செங்கல் கபீர் மேல் படாமல், அருகில் நின்ற கோபால்ராவ் தேஷ்முக் தலையில் பட்டது. இதனால், அவர் தலையிலிருந்து இரத்தம் கொட்டத்தொடங்கியது.

                   
தான் வீசிய செங்கல் குருவின் தலையில் பட்டு காயமேற்படுத்தியதைக் கண்டு கல் வீசியவன் அதிர்ச்சியுற்றுக் கீழே விழுந்தான். கீழே விழுந்த அவன் கையைப் பிடித்துப் பார்த்த இன்னொரு சீடன், “நாடித்துடிப்பு இல்லை. இவன் மரணமடைந்து விட்டான்என்று சொல்ல அங்கிருந்த மற்ற சீடர்கள் பயந்து போனார்கள். 

                     
இதையெல்லாம் பார்த்த குரு கோபால்ராவ் தேஷ்முக், தன் தலையிலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடி அவர்களை நோக்கி வந்தார். அவருடன் கபீரும் வந்தார். அங்கிருந்த சீடர்கள், “கல் எறிந்த சீடன் கபீரை நோக்கி செங்கல்லை வீசியதாகவும், அது கபீர் மேல் படாமல் தங்கள் மேல் பட்டு காயம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் அவன் மரணமடைந்து விட்டான்என்றனர். கோபால்ராவ் தேஷ்முக் இறந்து போன சீடனின் கையைப் பிடித்து, நாடித்துடிப்பைப் பார்த்து, அவன் மரணமடைந்து விட்டதை அறிந்தார்.

               
கோபால்ராவ் தேஷ்முக், அந்த இடத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவனிடம் ஒரு மாட்டைக் காண்பித்து, “இந்த மாட்டிலிருந்து பால் கறந்துகொடுஎன்றார். அவன், “அய்யா, இந்த மாடு மலட்டு மாடு. இந்த மாட்டில் பால் கறக்கமுடியாதுஎன்றான்.  “உண்மைதான். நீ அந்த மாட்டில் பால் கறக்க முடியாது. ஆனால், கபீர் கறந்தால் அந்த மாட்டில் பால் சுரக்கும்என்று சொல்லியபடி, அங்கிருந்த ஒரு பாத்திரத்தை எடுத்துக் கபீரின் கையில் கொடுத்தார் கோபால்ராவ் தேஷ்முக்.  கபீர் அந்த மாட்டிடம் பால் கறந்து தன் குருவிடம் நீட்டினார். இதைக் கண்டு மாடு மேய்ப்பவனும் மற்ற சீடர்களும் ஆச்சர்யமடைந்தனர். குரு கபீரிடம் நீ கறந்து கொண்டு வந்த பாலை இறந்து போனவன் வாயில் ஊற்றி, அவனை எழுப்பி விடுஎன்றார்.

                
என்ன ஆச்சர்யம். கபீர் இறந்து கிடந்த சீடன் வாயில் சிறிது பாலை ஊற்றியதும் அவன் எழுந்து அமர்ந்தான். உயிர்த்தெழுந்தவனும், கபீர் மேல் பொறாமை கொண்ட மற்ற சீடர்களும் கபீரிடமும், குருவிடமும் மன்னிப்பு கேட்டனர். குரு கபீர் மேல் அதிகமான அன்பு கொண்டிருப்பதன் காரணத்தையும் உணர்ந்தார்கள். குருவின் மேல் பட்டு காயமேற்படுத்திய செங்கலை கபீர் மிகவும் பாதுகாப்போடு பாதுகாத்து வந்தார். சில மாதங்கள் சென்றன. 
                  ஒரு நாள் குரு கபீரை அழைத்து, “என் மரணம் நெருங்கி விட்டது. நான் மரணமடைந்தவுடன் நீ இங்கிருக்க வேண்டாம். சீரடி என்ற ஊருக்குச் சென்று விடு. அங்கு உன்னுடைய அற்புதச் செயல்களால் மக்களுக்குப் பல்வேறு பயன்கள் கிடைக்கும். உனக்கும் நற்புகழும் கிடைக்கும்.என்று சொன்னார்.

                
அவர் இப்படிச் சொன்ன சில நாட்களில் அவர் மரணமடைந்தார். அதன் பிறகு கபீர் தான் பாதுகாப்பாய் வைத்திருந்த செங்கலை மட்டும் தன் கையில் எடுத்துக் கொண்டு குருவின் கட்டளைப்படி சீரடி நோக்கிச் சென்றார்.

(தொடரும்)

நன்றி:  தினத்தந்தி - ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...