Wednesday, December 12, 2012

குருவே தெய்வம்!



குருவே தெய்வம்!



     சீரடி சாயிபாபா மதம், இனம், எல்லை கடந்தவர்.  ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காதவர். அதிகாரி, ஊழியன் என்ற வித்தியாசம் அறியாதவர்.  தன்னிடம் வந்தவன், முழு சரணடைந்தவன் எல்லோரும் ஒன்றே. இந்தப் பூவுலகில் அமைதியும், ஆனந்தமும் பெருகுவதற்க்காகவே அவதரித்தவர். படாடோபம் இல்லாதவர்.
     எளிமையிலும் எளிமையான அவரை குருவாக அடைய புண்ணியம் செய்திருக்கவேண்டும். இலலாவிடில் முன்ஜென்ம தொடர்பாவது இருந்திருக்கவேண்டும்.  இல்லாவிடில் அவர் தனது பக்தனை தன் பக்கம் இழுக்கவேண்டும். அப்படி அவரால் இழுக்கப்பட்ட ஒருவரைப்பற்றி தெரிந்துகொள்வோமா?
     நானா ஆங்கிலேய அரசாங்கத்தில் டெபுடி கலெக்டர். அவரது தந்தை கோவிந்தராவ் சந்தோர்க்கரும் டெபுடிகலெக்டர்தான். இவர் தந்தை மும்பையை அடுத்துள்ள புறநகர்ப்பகுதியான கல்யாணில் வசித்து வந்தார்.
     ஒரு முறை இவரது தந்தை கோவிந்தராவ் சந்தோர்க்கருக்கும், கல்யாணில் உள்ள  உள்ளூர் முஸ்லிம்களுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அதனால் தனது குடும்பத்தினர் யாரையும் அவர்களிடம் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என அவர் கூறிவிட்டார்.  அவரது குடும்பத்தினரைப் பொறுத்தவரை அவர் தந்தை வைத்ததுதான் சட்டம்.  அதை யாராலும் மீற முடியாது.  ஆகவே, அவர் குடும்பத்தார் அக்கம் பக்கத்திலுள்ள முஸ்லிம்களிடம் பழகுவதை நிறுத்திவிட்டனர்.  இந்த சமயத்தில் நானா சாகேப் சந்தோர்க்கர் அலுவலகம் சம்பந்தப்பட்ட சுற்றுலா சென்றிருந்தார். அவர் திரும்பி வந்ததும் வீட்டிலுள்ளோர் தந்தையின் கட்டளையினைக் கூறினர். நானா அதைக் கேட்டதும் திடுக்கிட்டார். 
     எதற்க்காக?  அக்கம் பக்கத்திலுள்ள முஸ்லிகளிடம் பழக வேண்டாம் என்பதற்காக அல்ல. தனது சாயியை தன் தந்தை ஒரு முஸ்லிமாகத்தான் நினைத்திக்கொண்டு இருக்கிறார். ஆகவேதான் இப்படி முடிவு செய்துள்ளார் என நினைத்துத் திடுக்கிட்டார்.
     சாயிபாபா முஸ்லிமும் அல்ல.  இந்துவுமல்லர்.  அதற்க்கும் மேலானவர் என்பதை எப்படி தந்தையிடம் சொல்லி நம்ப வைப்பது என மூளையைப்போட்டு குழப்பிக்கொண்டார்.
     தந்தையார் என்ன சொல்வார் என்று நானாவால் நிச்சயம் தீர்மானிக்கமுடியவில்லை.  பாபாவை மறக்கவும் முடியாது.  மறப்பதை விட இறப்பதே மேல் என தெளிவான முடிவை எடுத்தார்.
     தன் தந்தையிடம் இதை பற்றி கலந்தாலோசித்தார்.  அவர் தந்தை, ‘இதோ பார் நானா! எனது குரு சகாராம் மகாராஜ்.  இந்த மகராஜ் உனது குரு அல்ல.  உனது குரு சாயிபாபா. அவர் முஸ்லிமாக இருந்தாலும் உனது குரு அவர்தான். அவரை நீ தொடர்ந்து வழிபடலாம். எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை’ , என்றார்.
     தந்தையிடமிருந்து இந்த வார்த்தைகளைக்கேட்ட நானா, தனது காதுகளையே நம்பமுடியாமல் ஆச்சரியப்பட்டார். தனது தந்தைக்கு நன்றி சொன்னார்.
     தன் தந்தை ஆச்சார அனுஷ்டானங்களை கடுமையாக பின் பற்றுபவர், அவர் மனம் எப்படி மாறியது என ஆச்சரியப்பட்டார். தன் சொல்லே சட்டம் என்றிருந்தவரை சாயிபாபா எப்படி மாற்றினார் என நினைத்து நினைத்து நானா பெருமிதம் கொண்டார்.


- கு.இராமச்சந்திரன்



ஸ்ரீ சாயி தரிசனம் செப்டெம்பர் 2012 இதழில் வெளியான கட்டுரை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...