நீ என் மனதில் இருக்கிறாய்!
யார் என்னை
நினைக்கிறாறோ அவரை நிரந்தரமாக
நான் ஞாபகத்தில்
வைக்கிறேன்!
’நான் எப்போதும் அவரை நினைத்துக்கொண்டு
இருக்கிறேன். ஆனால் அவர் என்னை ஒரு முறையாவது நினைத்துப் பார்க்கிறாரா? என்று
யாராவது நினைத்துக்கொண்டிருந்தால் அது தவறான நினைப்பு என்பதைத் தீர்க்கமாக
அறியவும். ஏனெடில், சிசுவுக்குத் தாயார் எப்படியோ அப்படியே பக்தருக்கு ஸாயீ
பிரதட்சம். குழந்தையைக் காக்க தாய் எப்படி ஓடி வருகிறாரோ அப்படி பக்தன்
எங்கிருந்தாலும் ஸாயீ ஓடி வருகிறார்.’
(சாயி சத்சரிதம்: அத்-40-20)
தன்னை
நினைப்பவர்களைக் காக்க ஓடி வருவதால்தான் கடவுளைத் தாய்த் தெய்வமாக வழிபடுகிறோம். இந்தக் கடவுளைப்பற்றி நிறைய சாஸ்திரங்கள்,
புராணங்கள், பக்தர்களின் அனுபவங்கள் என ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. அதே நிலை
நமக்கும் வரவேண்டும் என்றால், நாம் எப்போதும் அவரை நினைக்கிறவர்களாக
இருக்கவேண்டும்.
’இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்று
அப்பர் பாடுவார். அனுமன் தன் இதயத்தினைக் கிழித்துக் காட்டுவார். இதெல்லாம் இறைவன்
எப்போதும் நமது நினைவில் இருக்கிறவன் என்பதை உணர்த்தும் அடையாளங்களாகும்.
தன்னை நினைத்து அழைக்கிறவர்களுக்காக சாயி
பாபா உடனடியாக ஓடி வந்து விடுகிறார் என்பது சாயி பக்தர்கள் பலரின் அனுபவங்களாகும்.
ஆனாலும், அந்த நேரத்தில் வந்தது சாயிதான் என்பதை யாரும் அறிவதோ, உணர்வதோ கிடையாது.
ஏன் அப்படி?
சாயி பாபா பக்கீர் உருவத்தில் மட்டுமே
வருவர் என்பதில்லை. அவர் நினைத்த உருவில், நாம் எதிர்பாராத வடிவத்தில்
வந்துவிடுவார். இதனால் நாம் எந்த வடிவில் அவரை எதிர்பார்க்கிறோமோ அந்த வடிவில்
அவரைக் காணாமல் ஏமாந்துவிடுகிறோம்.
சத்சரித்திரத்தில் இதற்கு பல உதாரணங்கள்
உண்டு. மீனாத்தாய் பிரசவித்திற்காக
ராம்கீர் புவாவுடன் வண்டிக்காரனாக சென்றார்.
உபாசினி நைவேத்தியம் தயாரிக்கையில் புலையனாகவும், கருப்பு நாயாகவும்
சென்றார். அடிபட்ட பூனையும் தானே என்றும் அவர் நிரூபித்தார்.
இப்படித்தான் பால கிருஷ்ண விஸ்வனாத தேவ்
என்ற பக்தரின் இல்லத்திற்கு பாபா விருந்துக்குச் சென்றிருந்தார். அது எப்படி
என்பதை இப்போது தெரிந்துகொள்வோமா?
பாப கிருஷ்ண விஸ்வநாத தேவ் என்பவர் யார்
தெரியுமா? சத்சரித்திரத்தை முடித்து வைத்தவர்.
ஹேமாட்பந்த் சத்சரித்திரத்தை சாயி லீவாவில் தொடராக எழுதி வந்தார். முடிவுரை எழுதுவதற்க்குள் அவர்
சமாதியடைந்துவிட்டார். இதை பூர்த்தி செய்ய பாபாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான்
இந்த பாப கிருஷ்ண விஸ்வநாத தேவ். இவரை பாலா ஸாகேப் தேவ் என அழைப்பார்கள்.
தாசில்தார் உத்தியோகம் பார்த்த இவரது
வாழ்வில் இப்படியொரு அற்புதம் நடந்தது. அவர் சாயி பாபாவை விருந்துக்கு
கூப்பிட்டார். பாபாவும் வந்தார். ஆனால் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. பாபா
வரவில்லை என ஆதங்கப்பட்டு சீரடிக்குக் கடிதம் போட்டார் தேவ்.
தான் வந்ததை ஆணித்தரமாக சீரடியில்
அமர்ந்துக்கொண்டு உறுதிப்படுத்தினார் பாபா. எப்படி என்று கேளுங்கள்....
டஹாணூ என்ற இடத்தில் தாசில்தாராக வேலை
பார்த்த தேவ் ஒரு சாயி பக்தர். அவரது தாயார் தனது குடும்ப நலனுக்காகவும், பிறரது
நலனுக்காகவும் வழக்கமாக விரதம் இருந்து வருவார்.
இப்படி தொடர்ந்து இருபது முப்பது வாரங்கள் வரை இருந்தால் அதை நிறைவு
செய்வதற்காக உத்தியாபன விழா அதாவது நிறைவு விழா கொண்டாடுவார்கள். அந்த விழாவைக்
கொண்டாட விரும்பினார் தேவ்.
சாயி பக்தரான அவர், பாபாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். ’வயிற்றுப் பிழைப்பிற்காக
வேலை செய்யும் நான், என்னால் முடிந்த அளவு ஆன்மீக சாதனை செய்து வருவது உமக்குத்
தெரியும். இந்த சாதாரண பக்தனால் வேலைப் பளுவின் காரணமாக, நீண்ட தொலைவிலுள்ள
சீரடிக்கு வரமுடியவில்லை. எனவே, கடித்தை அழைப்பாக ஏற்று விருந்துக்கு
வரவேண்டும்’, என்று
அழைப்பு விடுத்தார்.
பாபு சாகேப் ஜோக் இந்தக் கடிதத்தை
பாபாவிற்க்குப் படித்துக் காண்பித்துவிட்டு, தேவுக்கு உதவி செய்யுங்கள், விழாவினை
சிறப்பாக முடித்துக் கொடுங்கள் என்று வேண்டினார்.
பரிசுத்தமான மனத்தோடு எழுதப்பட்ட கடித்தை
கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த பாபா ‘யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக
ஞாபகத்தில் வைக்கிறேன். எனக்கு வண்டியோ, குதிரை, ஆகாய விமானமோ, ரயில் வண்டியோ
தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ அவருக்கு தாமதம் இன்றி உடனே
தோன்றுவேன். நான், நீங்கள், இன்னொரு நபர்
என மூன்று பேராக விருந்துக்கு நிச்சயம் வருவதாக பதில் கடிதம் எழுதுங்கள்’ என ஜோக்கிடம் பாபா
கூறினார்.
பதில் கடிதம் கிடைத்ததும் பாபா நிச்சயம்
வருவார் என தேவ் நம்பினார். விழாவிற்க்கு ஒரு மாதம் இருந்தது. எனவே, பாபாவை
எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.
டஹாணூ ரயில் நிலயத்திற்க்கு தேவ்
போகவேண்டியிருந்தது. அங்கே ஸ்டேஷன் மாஸ்டரிடம்
ஒரு சன்னியாசி பசு காப்பகம் நடத்துவது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அந்த ஸ்டேஷன் மாஸ்டர், ‘தாசில்தாரிடம் பேசினால்
செல்வந்தர்கள் அறிமுகம் கிடைத்து உமக்கு அதிக நிதி கிடைக்கும்’ என்று அவரிடம்
சொல்லிக்கொண்டிருக்கும்போதே தேவ் அந்த இடத்திற்க்கு வந்தார்.
விபரத்தை அறிந்த அவர், ‘இப்போது வேறு ஒரு
காரியத்திற்க்காக நிதி திரட்டுகிறோம். இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்குப்பிறகு
வாருங்கள், பார்க்கலாம்’ , என்று
கூறிவிட்டு வந்தார்.
தேவ் வீட்டில் உத்தியாபன விழாவிற்கான
ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன. உணவு தயாரிக்கும் வேலையில் பலர்
ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த
நேரத்தில் டஹாணு ரயில் நிலையத்தில் சந்தித்த சன்னியாசி வருவதை கவனித்தார்
தேவ். நான்கு மாதங்கள் கழித்து வரச்
சொன்னால் இப்போது வந்து நிற்கிறாரே என நினைத்தபடி அவரிடம் சென்றார். ‘நான்கு மாதம் கழித்து வரச் சொன்னால், ஒரு
மாதம் கூட ஆகாத நிலையில் வந்திருக்கிறீரே!’, என்று
கேட்டார். அந்த சன்னியாசி, ‘நான்
காசுக்காக வரவில்லை. சாப்பாட்டிற்காக வந்திருக்கிறேன்’ என பதில் கூறினார்.
’சாப்பாடு இன்னும் தயாரகவில்லை, சாப்பாடு தயார் ஆனதும் நானே
நேரில் கூப்பிடுகிறேன், நீங்கள் தங்கியுள்ள விலாசத்தைக் கூறுங்கள்’, என்றார் தேவ்.
’இல்லை...இல்லை...நானே சாப்பாட்டு வேளைக்கு வந்துவிடுவேன்.
உங்களுக்கு ஆட்சேபணை இல்லாவிட்டால் என்னுடன் இரு சிறுவர்களை அழைத்து வரட்டுமா?’, எனக் கேட்டார்.
’எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள்... நான் உணவு
தருகிறேன்’ என்றார்
தேவ். சன்னியாசி கிளம்பிப்போனார். மீண்டும் உணவு நேரத்தில் தனது சகாக்களுடன்
வந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றார்.
தேவ் வழி நெடுக கண்களை விரித்து பாபாவை
தேடிக்கொண்டிருந்தார். யார் வடிவிலாவது வருவாரா என்று வருவோரை எல்லாம் அலசிப்பார்த்தார்.
தெரிந்தவர் போல வருவாரோ என்று கூட நினைத்துப்பார்த்தார். எதுவும்
புலப்படவில்லை. பாபாவும் வந்த பாடில்லை.
இது தேவிற்க்கு வருத்தத்தை
உண்டாக்கியது. உடனே அவர் பாபாவிற்க்கு
கடிதம் எழுதினார். ‘கண்டிப்பாக வ்ருவேன், ஏமாற்ற மாட்டேன். என் வார்த்தை மாறவே
மாறாது’ என்றெல்லாம்
கூறிவிட்டு, உங்களது பரம பக்தனை ஏமாற்றிவிட்டீர்களே! மாறு வேடத்திலாவது வருவீர்கள் என
எதிர்பார்த்தேன். எப்படியும் வாராமல்
போனீர்களே, இதுதான் நீங்கள் பக்தர்களைக் காக்கிற லட்சணமா?’ என்று கோபத்தோடு அதில்
எழுதியிருந்தார்.
சீரடிக்கு கடிதம் வந்தபோது, ஜோக் அதனைப்
படித்தார். படிப்பதற்க்கு முன்பே அதிலிருப்பதை அறிந்திருந்த பாபா பதில் சொன்னார்.
’நான் வாக்குறுதி கொடுத்தபிறகு அவரை
ஏமாற்றிவிட்டேனென்கிறார். என்னை அடையாளம்
கண்டு கொள்ளமுடியாதவர் எதற்காக எனக்கு அழைப்பு விடுத்தார்? என்று
அவரைக்கேளும். நான் வந்தேன்.
என்னைப்பார்த்து நான் பணத்திற்க்காக வந்திருப்பதாக அவர் பீதியடைந்தார். பீதியடைந்தரா? இல்லையா? எனக்கேளும். சொன்னபடி இருவரோடு நான் சென்று
சாப்பிட்டுவிட்டு வந்தேன். இதோ பாரும், என் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தையைக்
காப்பதற்காக எனது உயிரையும் கொடுப்பேன். எனது வார்த்தை என்று பொய்யாகாது’ என்றார்.
இதைக் கேட்ட ஜோக் சந்தோஷப்பட்டார். கடிதத்தினை அனுப்பி வைத்தார். அதனைப் பார்த்த
தேவ் ஆனந்தக் கண்ணீர்விட்டார். சாயி மீது மேலும் அவருக்கு பக்தி வளர்ந்தது. அந்த
பக்திதான் சாயி சத்சரித்திரத்தை நிறைவு செய்யும் அளவிற்க்கு இவரை தேர்வு செய்தது.
தெரியாத நபரைப் போலத்தான் பாபா வருவார் என
நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது தவறு. தெரிந்தவர் வடிவிலும் பாபா வருவார்
என்பதை நாம் அறிய வேண்டும்.
ஒவ்வொரு நாளும் பாபா நம்மை நோக்கி
வருகிறார். நம்மிடம் பேசுகிறார். நம்மிடம் கேட்கிறார். ஆனால் நாம்தான் அவரை
அடையாளம் கண்டு கொள்வதில்லை. நமக்கு
தெரிந்தவர் போலவே கூட அவர் வந்து செல்வார். எச்சரிக்கை உணர்வுடன் அவரை அடையாளம்
கண்டுகொள்ளுங்கள்.
அந்நியரை உபசரியுங்கள். அந்நியர் மட்டும் அல்லாமல் நமக்கு
தெரிந்தவர்களையும் உபசரியுங்கள். யாராவது
ஒருவர் அதில் பாபாவாக இருக்கலாம்.
ஜெய் சாய் ராம்!
-
சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் செப்டெம்பர் 2012 இதழில் வெளியான கட்டுரை
No comments:
Post a Comment