சீரடி சாயியினை வழிபடும் வழிமுறையை
பாபாவே பல தடவை கூறி இருக்கிறார். ‘‘என்னையே தியானம் செய்து, என் நாமத்தை சதா உச்சரித்து, என் புகழ் மட்டுமே பாடி, இப்படியாக நானாகவே விரைவில் யார் மாறிப் போகிறாரோ, அவரது கர்மத்தளைகள் ஒவ்வொன்றாக விடுபட்டு விடும். அவர் அருகிலேயே நான்
நிரந்தரமாக தங்கி விடுவேன்.
அது மட்டுமல்ல, என்னை தனது சிந்தனை முழுவதும் நிரப்பி
ஆனந்தம் கொண்டு, எனக்கு நைவேத்தியம் (படைத்தல்)
செய்யப்படாத உணவை ஒரு போதும் சாப்பிடுவதில்லை என்று சொல்லும் அளவுக்கு யார் வாழ்கிறாரோ, அவருக்கு நான் அடிமையாகிடுவேன்.
இந்த உலகில் வேறு
எதுவுமே முக்கியம் இல்லை என்று என்னையே நினைத்துக் கொண்டு, என்னையே பசியும்
தாகமுமாகக் கருதி வாழ்பவர்களுக்கும் நான் அடிமையாக
இருப்பேன்’’ இப்படித்தான் பக்தர்கள் தன்னை வழிபட வேண்டும் என்று பாபா
வரையறுத்துள்ளார்.
அதாவது நாம் அவரை நினைத்தால், அவர் நம்முடனே இரண்டற கலந்து விடுவார். பாபாவை நம்பியவர்கள் இந்த ஜென்மத்தில் கடைத்தேறி உள்ளனர். இது
நிதர்சனமான உண்மை. ஒரு பக்தன் தன் வாழ்வில் ஏதாவது ஒரு
காரணத்தால் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டால், அப்போது பாபாவின் கைகள் தாமாகவே ஓடி
வந்து அந்த பக்தனை தாங்கிப்பிடிக்கும். இத்தகைய அற்புதம்
பாபா உயிரோடு இருந்த போதும், அதன் பிறகும்
கணக்கிட முடியாத அளவுக்கு நடந்துள்ளன. இப்போதும் நடந்து வருகின்றன.
உதாரணத்துக்கு
சில.... மராட்டிய மாநிலம் அகமத் நகரைச்
சேர்ந்தவர் தாமோதர் சால்வாராம் ராஜனே சாகர். வளையல்
வியாபாரம் உள்பட பல விதமான தொழில்களை இவர் செய்து வந்தார். ஒரு தடவை இவர் மற்றொரு வியாபாரியுடன் சேர்ந்து பஞ்சு வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பு வந்தது. அந்த வியாபாரத்தில் ஈடுபட தயாரான தாமோதர், எதற்கும் தான் கண்கண்ட தெய்வமாக வழிபடும்
பாபாவிடம் அனுமதி கேட்போம் என்று நினைத்து
சீரடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தை படித்த பாபா, ‘‘இவனுக்கு பண ஆசை
போகவே போகாது. இருக்கிற பணத்தை வைத்துக்
கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டியது தானே.... ஏன் இப்படி பணம், பணம் என்று
அலைகிறான்’’ என்று கோபப்பட்டார். பிறகு அவர் பஞ்சு வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று தாமோதருக்கு கடிதம்
எழுதி அனுப்புங்கள் என்று
உத்தரவிட்டார். பாபாவின் கடிதத்தைப் படித்த தாமோதர் அதிர்ச்சி அடைந்தார். பல லட்ச ரூபாய் கிடைக்கும் வியாபாரத்தை
பாபாவின் உத்தரவால் கைவிட
வேண்டியதிருக்கிறதே என்று நினைத்தபடி பஞ்சு வியாபாரத்தை அவர் விலக்கினார்.
சிறிது நாட்கள்
கழித்து தாமோதர் சீரடிக்கு வந்தார். பாபாவிடம் ஆசி பெற்ற அவர், ‘‘பாபா நான் தானியம்
ஏற்றுமதி தொழில் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். இந்த தொழிலில் நிறைய லாபம்
கிடைக்கும். அதற்காக இப்போதே தானியம்
உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இந்த தொழிலை செய்யட்டுமா?’’ என்று கேட்டார். அதைக் கேட்டதும் பாபா சிரித்தார். ‘‘நீ உன்னிடம் இருக்கிற பணத்தை வைத்துக்
கொண்டு சந்தோஷமா இரு. இப்போதைக்கு நீ எந்த
தொழிலிலும் ஈடுபட வேண்டாம். அமைதியாக இரு’’ என்றார். பாபா இப்படி சொல்லி விட்டாரே
என்று தாமோதருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த சமயத்தில்
பஞ்சு விலையும் தானியங்கள் விலையும் பல மடங்கு உயர்ந்து விற்பனை ஆயின. அதைக் கண்ட தாமோதர், ‘‘ச்சே... பாபாவிடம் கேட்டதால் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்காமல்
போய் விட்டதே. புதிய தொழில் பற்றி அவரிடம் கேட்காமல்
இருந்திருக்கலாமோ?’’ என்று தாமோதர் நினைத்தார். மனதுக்குள் குமைந்தார். வேதனைப்பட்டார்.
இந்த நிலையில் ஓரிரு நாட்களில் சர்வதேச
சந்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன. நாடெங்கும் தானியங்கள் விலையும் பஞ்சு விலையும் அதிரடியாக குறைந்தன. அடுத்த ஓரிரு நாட்களில் அவற்றின் விலை
படுபாதாளத்துக்குப் போய் விட்டது. அந்த வியாபாரத்தில் ஈடுபட்ட அனைவரும் பல
லட்சம் ரூபாய் நஷ்டத்தால் தலையில் துண்டு போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தாமோதர் இந்த வியாபார மாற்றத்தை கண்டு ஆச்சரியத்தில்
மூழ்கினார். அவர் மட்டும் அந்த இரு தொழில்களிலும் ஈடுபட்டிருந்தால் எல்லாவற்றையும் இழந்து தெருவுக்கு வந்திருப்பார். எல்லாம் அறிந்த பாபா உரிய
நேரத்தில் தாமோதரை தடுத்து நிறுத்தி காப்பாற்றி விட்டார். இதை நினைத்து கண் கலங்கிய தாமோதர் சீரடி திசை நோக்கி கண்ணீர் வழிந்தோட கைக் கூப்பி வணங்கினார்.
தாமோதரை எல்லாரும் செல்லமாக தாமு அன்னா என்றே
அழைப்பார்கள். பாபாவும் அவ்வாறே அழைத்தார். ஒரு தடவை கோவாவைச் சேர்ந்த ராலே என்ற பணக்காரர் ஒரு பெரிய பார்சலில் மாம்பழங்களை சீரடி பாபாவுக்கு
அனுப்பி வைத்தார். பார்சலை திறந்த போது சுமார் 300 மாம்பழங்கள் அதில் இருந்தன. அதில் 8 நல்ல மாம்பழங்களை பாபா எடுத்து வைத்துக் கொண்டார். ‘‘இந்த 8 மாம்பழங்களையும் நான் தாமு அன்னாவுக்காக எடுத்து வைத்திருக்கிறேன். அவை இங்கேயே
இருக்கட்டும்’’ என்றார்.
மசூதியில் இருந்த
மற்ற பக்தர்களுக்கு, பாபா ஏன் 8 மாம்பழங்களை தாமோதருக்காக எடுத்து வைக்கிறார் என்ற உண்மை
முதலில் தெரியவில்லை. தாமோதருக்கு மொத்தம் 3 மனைவிகள். அவர்களில் ஒருவருக்குக் கூட குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. வசதி, வாய்ப்புகள் எல்லாம் இருந்தும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு குழந்தை
இல்லையே என்ற ஏக்கம் தாமோதருக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. ஏராளமான ஜோதிடர்களிடம் அவர் தன் ஜாதகத்தை கொடுத்து, ‘‘எனக்கு குழந்தை பாக்கியம் உண்டா?’’ என்று கேட்டார். ஜோதிடர்கள் அனைவரும் தாமோதரனின் ஜாதகத்தில் முக்கிய
இடத்தில் பாவக்கிரகம் ஒன்று இருப்பதால்
இந்த பிறவியில் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டனர். இதனால் அவர் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்திருந்தார். என்றாலும் அவர் ஏதோ ஒரு
நம்பிக்கையுடன் பாபா தனக்கு ஒரு
குழந்தையை அருள மாட்டாரா என்ற ஏக்கத்துடன் சீரடிக்கு வந்து கொண்டே இருந்தார். தாமோதரின் உள்ளக் குமுறலை பாபா நன்கு
அறிந்திருந்தார். தாமோதரனின் மனக்குறையை போக்க அவர் தக்க
நேரத்துக்காக காத்திருந்தார்.
அன்று மாம்பழ
பார்சல் வந்ததும், பாபாவுக்கு முதலில் தாமோதர் நினைவுதான் வந்தது. எனவே அவர் 8 மாம்பழங்களை எடுத்து தனியாக வைத்துக்
கொண்டார். பாபா... சொன்னது போல சிறிது நேரத்தில்
தாமோதர் மசூதிக்குள் ஏறி வந்தார். பாபா கணித்தது போலவே அவர் வந்து விட்டாரே என்று மற்ற எல்லா பக்தர்களும் ஆச்சரியம் அடைந்தனர். தாமோதரைப் பார்த்து புன்னகைத்த பாபா, ‘‘இங்கே வா’’ என்றழைத்தார். உடனே தாமோதர் ஓடோடிச் சென்று பாபாவின்
காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்து
வணங்கினார். அவரை ஆசீர்வதித்த பாபா, ‘‘இந்தா பிடி 8 மாம்பழங்கள்’’ என்று கொடுத்தார். மகிழ்ச்சியோடு அந்த 8 மாம்பழங்களையும் தாமோதர் பெற்றுக் கொண்டார். அப்போது பாபா, தாமோதரனைப் பார்த்து, இந்த 8 மாம்பழங்கள் உனக்கு குழந்தைப் பாக்கியம் தரும் சக்தி
கொண்டவை. எனவே இவற்றை கவனமாக எடுத்துச் செல். இந்த 8 மாம்பழங்களையும் நீ சாப்பிடக் கூடாது.
உன் இளைய மனைவிக்கு கொடு. அவள் இந்த மாம்பழங்களை
சாப்பிட்டால் உன் விருப்பம் நிறைவேறும்’’ என்றார்.
ஏனோ தெரியவில்லை, அந்த சமயத்தில் பாபா மீது தாமோதருக்கு நம்பிக்கை வரவில்லை.
எல்லா ஜோதிடர்களும் தனக்கு குழந்தைப்பேறு இல்லை என்று சொல்லி விட்ட நிலையில் இதை எப்படி உறுதியாக நம்புவது என்று யோசித்தார். அவர் பாபாவை
பார்த்து கடவுளால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை கடவுளாலேயே
மாற்ற முடியாது என்கிறார்கள். இப்போது கடவுள் இயற்கைக்குப் புறம்பான செயலைச் செய்வாரா? என்றார். உடனே பாபா ‘‘ஒரு ரோஜாச்
செடியில் ஒரு கிளையில் சிவப்பு ரோஜாவும் மற்றொரு கிளையில் வெள்ளை ரோஜாவும் பூக்க முடியுமா?’’ என்று கேள்வி கேட்டார். அதற்கு என்ன சொல்வது என்று தாமோதரருக்குப்
புரியவில்லை. அதை உணர்ந்த பாபா, ‘‘நாளைக்காலையில்
நான் உலாப் போகும் போது தோட்டத்துப் பக்கம் வா தாமோதர்’’ என்றார்.
மறுநாள் பாபாவுடன்
தோட்டத்திற்குச் சென்றார் தாமோதர். தோட்டத்தில் ஒரு ரோஜாச் செடியை தாமோதரருக்கு சாய்பாபா சுட்டிக் காட்டினார். அந்த ரோஜா செடியில் ஒரு சிவப்பு ரோஜாவும், பக்கத்திலேயே ஒரு வெள்ளை ரோஜாவும் பூத்திருந்தது. அதை கண்டதும்
தாமோதரரருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அப்படியே சாஷ்டாங்கமாக பாபாவின் கால்களில் அவர் விழுந்தார். ‘‘தாமோதர் இது என்னால் ஏற்படவில்லை. என்
பக்தனின் சந்தேகம் தீர்க்க ஆண்டவனை வேண்டினேன். அதனால் இந்த அற்புதம் விளைந்தது’’ என்றார்.
அதன் பின் பாபா கொடுத்த 8 மாம்பழங்களையும் தாமோதர் பெற்றுச்
சென்றார். அதில் துரதிர்ஷ்டவசமாக 4 மாம்பழங்கள் காணாமல் போய் விட்டன. அப்படி
மாயமான 4 பழம் போக மீதமிருந்த 4 மாம்பழங்களைக் கொண்டு சென்று தாமோதர் தன் மனைவியிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். தாமோதர்
மனைவிக்கு பாபாவின் அருளால் அடுத்தடுத்து எட்டுக் குழந்தைகள் பிறந்தன. அவர்களில் 4 மாம்பழங்கள் மாயமானது போல 4 குழந்தைகள் இறந்து போய்விட்டனர். மற்ற 4 பேர் சவுபாக்கியங்களுடன் வாழ்ந்தனர்.
இப்படி பாபா
நிகழ்த்திய அற்புதங்கள் லட்சக்கணக்கில் உள்ளன.
எத்தனை மைல் தொலைவில் இருந்தாலும் அவரை நினைத்து விட்டால் நிச்சயம் அதற்கு பலன் உண்டு. சிலர் அவரை நேரில் பார்த்து பலன் பெற்றனர்.
No comments:
Post a Comment