Saturday, December 17, 2016

ஜெயிப்பதற்காக எவ்வளவோ வழிமுறை





வாழ்க்கையில் நீ ஜெயிப்பதற்காக எவ்வளவோ வழிமுறைகளை உனக்குக் கற்பித்திருந்தேன். எனது அறிவுரைகளில் எதையெல்லாம் கேட்டு உன்னை நீ சரிப்படுத்திக் கொண்டாயோ, அதிலெல்லாம் நீ ஜெயித்திருக்கிறாய்.
நீ வெற்றி மீது வெற்றி பெறும்போது உன்னைப்பார்த்து பூரிப்பில் நான் மவுனம் காத்தேன். இப்போது மேலும் மேலும் வெற்றிகள் உன்னை வந்தடைய வேண்டும் என்பதற்காக நான் மவுனம் கலைகிறேன்.
நான் யார் மூலமாக வேண்டுமானாலும் பேசுவேன், எந்த விதத்திலும் பேசுவேன். கேட்பதற்கு நீ தயாராக இருக்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்திச் சொல்லி வந்திருக்கிறேன். இப்போது நான் உனக்குள் இருக்கும் விதத்தையும், செயலாற்றும் விதத்தையும் சுருக்கமாகச் சொல்லித்தருகிறேன்.. என் பேச்சை மறுக்காமல் நம்பு.
ததாஸ்துஎன்ற வார்த்தையை நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியே ஆகட்டும் என்பது இதற்குப் பொருள். நீ என்னை எந்த வடிவிலான இறைவனாகக் கும்பிட்டாலும் நான் உன்னை வாழ்த்துவதும், என்னிடம் எதைக் கேட்டாலும் அதற்குப் பதில் தருவதும் இந்த ததாஸ்து என்ற ஒற்றை வார்த்தையில்தான்!
உனது கிரக தேவதைகள், குல தேவதை, பித்ருக்கள், மற்ற தேவர்கள் என உன்னைச் சுற்றி காவல் செய்கிற அனைவரையும் இதே வார்த்தையைச்சொல்லி உன்னை ஆசீர்வதிக்கப் பணித்திருக்கிறேன். ஆகவே, அவர்கள் அனைவரும் நீ எந்த வார்த்தையை முதலில் சொல்கிறாயோ, அந்த வார்த்தையைக் காதில் வாங்கிக் கொண்டு ததாஸ்து என்பார்கள்.
என் மீது மாறாத பக்தி செய்கிற உனது அடிமை நான், உனது சேவகன் நான், உனது நலம் விரும்பி நான். இதைத்தான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நீ என்ன சொன்னாலும் இல்லை எனச் சொல்லாமல், சரி எனத் தலையாட்டுகிற இடத்தில் இருக்கிறேன்.
ஆகவேதான், என்னிடம் வேண்டிக் கொண்ட அனைத்தையும் நான் உனது கிரக நிலைகள், கர்ம வினைகள், எதிர்கால நிகழ்வுகள் என எல்லாவற்றையும் அனுசரித்து உடனுக்கு உடனேயோ, அல்லது சிறிது காலம் தாழ்த்தியோ நிறைவேற்றித் தருகிறேன்.
உனது விக்ஷயங்கள் நிறைவேறாத போது, நீ என்ன நினைக்கிறாய் என்றால், அப்பா எனக்காக எதையும் செய்யவில்லை என்று! உண்மை அதுவல்ல, நீ என்ன கேட்கிறாயோ அதை நிறை வேற்றுவதற்காக நான் உண்மையாய் உழைக்கிறேன் என்பதுதான் நிஜம்.
உன்னைப் பொறுத்தவரை நான் ஒரு பித்தன். உன் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருக்கிறேன். உனது அன்பென்னும் போதையில் என்னை மறந்து கிடக்கிறேன். இதனால், நீ சொல்லுகிற முதல் வார்த்தையை காதில் வாங்கியதும் அப்படியே ஆகட்டும் என நிறைவேற்றுகிறேன்.
எனக்கு தர்மம் அதர்மம் என்பதெல்லாம் கிடையாது. உனது மனம் என்ன சொல்லுகிறதோ அதை நிறைவேற்றுவதே எனது கடமை. ஏனெனில்,
நான் பரிபூரணமாக இருப்பதைப் போல நீயும் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக செயலாற்றுகிறேன்.
அப்பா, செல்வம் பெற வேண்டும் எனக்கேட்டால், உனக்கு செல்வம் வரும் வழி என்னவெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் சரி செய்து கொண்டு வருவேன். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என வேண்டினால், நல்ல வேலை கிடைக்கும் வழிகளை உருவாக்குவேன். நல்ல வாழ்க்கை வேண்டும் எனக் கேட்டால் அதையும் அப்படியே நிறைவேற்றுவேன்.
அப்பா பொய் சொல்கிறீர்கள்.. நான் கஷ்டப்படுகிறேன், விடுதலை செய் எனக் கேட்டுப் பிரார்த்தனை செய்கிறேன்.. நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை. மேலும் மேலும் கஷ்டம் என்னை சூழ்ந்துகொள்கிறது. கடன் தொல்லை தாங்க முடியவில்லை, காப்பாற்றுங்கள் எனக் கேட்கிறேன்..நீங்கள் மீட்கவில்லை.. மாறாக, செய்யாத ஒன்றை செய்வதாக பொய்யான விக்ஷயத்தை இப்போது என்னிடம் பேசுகிறீர்கள்.. என்றுதானே சொல்லப்போகிறாய்?
நான் பொய் சொல்வதில்லை. சத்தியத்திற்கு மாறான விக்ஷயங்களைச் செய்வதும் இல்லை. நீ சொல்கிற முதல்வார்த்தையை காதில் வாங்கிக்கொண்டவுடனே துரிதமாகச் செயல்பட ஆரம்பிக்கிறேன்.. அவ்வளவுதான்.
உதாரணமாக, நீ சொன்ன வார்த்தைகளை திரும்ப நினைவு கொள்.. நான் கஷ்டப்படுகிறேன்.என்பது உனது முதல் வார்த்தை. இதைக் கேட்டதும் ததாஸ்து என ஆசீர்வதிக்கிறேன். அதாவது அப்படியே ஆகட்டும்.. கடன் தொல்லை தாங்கமுடியவில்லை என்கிறாய். ததாஸ்து என்கிறேன்..
எல்லோரும் நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறாய்.. ததாஸ்து என்கிறேன்.. உன் பிள்ளையை சனியனே..தரித்திரம் பிடித்தவனே, உருப்படாதவனே என்கிறாய்ததாஸ்து என்கிறேன். இவனை கட்டிண்டு எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை எனப் புலம்பினாய்.. ததாஸ்து என்கிறேன்..
வேலையில்லை என்றாய்.. ததாஸ்து என்கிறேன்..நிம்மதியில்லை என்றாய்.. ததாஸ்து என்கிறேன்.. நோய் வந்து தொல்லை தருகிறது என்றாய்.. அதற்கும் ததாஸ்து என்றுதான் சொன்னேன்.. எனது வார்த்தைகள் வெறுமனே திரும்பாது.. நான் சொன்னால் நடக்கும்.. நான் சொல்ல ஆகும்.. என் வார்த்தையால் இந்த உலகத்தை உருவாக்கிறேன்.
என்னுடைய வார்த்தையே வேதங்களாயின.. என் வார்த்தையே அனைத்துமாக இருக்கிறது. வார்த்தையே நானாக இருக்கிறது.. ஆகவே, அது துரிதமாக செயல்பட்டு பலன் தர ஆரம்பிக்கிறது.
நான் கஷ்டப்படுகிறேன் என்ற உன் முதல் வார்த்தையைக் கேட்டு உடனே ஆசீர்வதித்து விடுவதால், நீ கஷ்டத்திலிருந்து விடுதலை பெற முடிவதில்லை. கஷ்டத்திலேயே எப்படியெல்லாம் இருக்க முடியுமோ, அப்படியெல்லாம் இருக்குமாறு அந்த வார்த்தை பார்த்துக் கொள்கிறது.
கடன் சுமை அதிகம் என்றால், நான் ததாஸ்து எனக் கூறும்போது, அந்த சுமை குறையாமல் கூட ஆரம்பித்துவிடுகிறது. உன் பிள்ளையை தரித்திரம் பிடித்தவன் எனத் திட்டும்போது, அவன் அதிலேயே இருக்குமாறு என் வார்த்தைகள் பார்த்துக்கொள்கின்றன.
இப்படி, நீ கெட்டதைச் சொல்லிப் புலம்பிய போதெல்லாம் அப்படியே நிறைவேற்றுகிறேன். நல்லதைக் கூறினாலும் அப்படியே நிறைவேற்றுவேன். இதனால், எப்போதும் உனது முதல் வார்த்தை சுபமான வார்த்தையாக இருக்கட்டும்.
அறிவில்லாதவனே எனக் குழந்தையைத்திட்டாதே.. அறிவாளி எனத் திட்டு.. கஷ்டப்படுகிறேன் எனச் சொல்லாமல் செல்வம் கொடு, கஷ்டம் தீரட்டும் எனக் கேள். கடன் தொல்லை என சொல்லாமல் செல்வம் இருந்தால் கடனை அடைப்பேன் எனச் சொல்லு.
எந்த வார்த்தையையும் சுபமான வார்த்தையில் பேச ஆரம்பிக்கப் பழகு. அப்படிச் செய்யும்போது, எனது ஆசீர்வாதத்தில் உனது நிலை அப்படியே உயர்வடையும், மாற்றமடையும்.
நீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் என்ற வார்த்தையை நீ கேள்விப்பட்டது இல்லையா? நீ சொன்னபடியே ஆகும் என்பதை அறிந்தது கிடையாதா?
நல்லதோ கெட்டதோ, உன் மனம் எதை முதலில் நினைக்கிறதோ அது உனது விருப்பம் எனத்தீர்மானித்துவிடுகிறேன்.. அதை நிறைவேற்றிட நான் எனது முழு கவனத்தையும் செலுத்துகிறேன். இதன் பலன் உனக்கு நன்மையாகவோ தீமையாக கிடைக்கும். நல்லதை நினைத்தால் நல்லதும், தீயதை நினைத்தால் தீயதும் உனக்குக் கிடைக்கும்.
எதையும் என்னால் முடியும் எனச் சொல். மலையளவு பிரச்சினையாக இருந்தாலும் நான் முடித்துத் தருவேன்.. ஏமாறமாட்டேன் எனச் சொல்.. உன்னை யாரும் ஏமாற்றாமல் பாதுகாப்பேன்.. வசதி வாய்ப்புடன் வாழ்வேன் எனச் சொல்.. உன்னை வசதியாக்குவேன்..
வண்டி ஓட்டுநர், தனது கையை ஸ்டியரிங்கில் வைத்து எப்படித் திருப்புகிறானோ அப்படி வண்டி ஓடும். அப்படியே உனது மனதில் ஒளிந்து கொண்டு, உனது இந்த வார்த்தைகளுக்கு ஏற்ப நான் உடனடியாக செயல்படுகிறேன்.
காலை நாலரை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என அலாரம் வைப்பாய். யாரேனும் அதை மாற்றி விட்டால், எழுந்திருக்க மாட்டாய்..
நான் அப்படியில்லை. நான் ஒரு நாளும் ஓய்வெடுப்பதோ, உறங்குவதோ கிடையாது.. உனது கட்டளையை கச்சிதமாகச் செய்து முடிக்கிற முனைப்பில்தான் எப்போதும் இருக்கிறேன். உனது பேச்சுக்கள் ஒவ்வொன்றும் எனது காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.
இனிமேலாவது நல்லதை நினை, நல்லதைப் பேசு, நல்லதைச் செய்.. எதிர்மறை எண்ணங்களோ, எதிர்மறை பேச்சுக்களோ உனது வாயிலிருந்து புறப்பட வேண்டாம்.
அவநம்பிக்கையை உண்டாக்கும் எந்தப் பேச்சுக்கும் உனது மனம் இடம் தரவேண்டாம். அனைத்தையும் செய்கிற நான் இருக்கும்போது, எல்லாம் சுபமாக நடக்கும் என நினை.. நான் அனைத்தையும் உனக்காக மாற்றுவேன்..
ஏமாற்றுவேன் என நினைக்காதே.. எனது சொற்படி நடந்தால் உனது வாழ்க்கை சொர்க்கமாக மாறும், நீ சொன்னதெல்லாம் நடக்கும். துன்பத்தின் பிடியிலிருந்து விலகியிருப்பாய்.. நானும் உனது கடவுளாக இருந்து, ஜன்ம ஜன்மமாய் காப்பாற்றுவேன்..
நேரம் வரும்போது மீண்டும் சந்திக்கிறேன்..அதுவரை நான் சொன்னதையெல்லாம் மனதில் வைத்து பயிற்சி செய்து வா!
மங்களம் உண்டாகும்!
அன்புடன் அப்பா
சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...