Friday, December 9, 2016

பாபாவினை வழிகாட்ட சொல்லுங்கள்

ஜி.கே. நார்கே. இவர் பாபாவின் பெரும் பணக்கார அடியவரான நாக்பூரைச் சேர்ந்த பூட்டியின் மருமகன். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கல்வி கற்றவர். புவியியல் துறையிலும், ரசாயனத் துறையிலும் பேராசிரியர். நரசிம்மசுவாமி இவரைச் சந்தித்து அவரின் அனுபவங்களைப்பற்றி கேட்ட போது, அது ரகசியம் எனக் கூற மறுத்து விட்டார். எதைப் பெற்றாயோ, அது ரகசியமாகவே இருக்கட்டும் என கபீர் சொன்னதை நினைவுபடுத்தினார். பாபாவிடம் பெற்ற அனுபவத்தைக் கூற முயன்றாலே தன் வாய் தானாகவே மூடிக்கொள்கிறது என்றார்.
பாபா பற்றி மேலெழுந்த வாரியாக சொல்லிவிட்டுப் போய் விடலாம். ஆனால் பொய்யும், புரட்டும் நிறைந்த உலகில் உண்மையைக் கூறுவது அவசியம் எனறு கூறி தான் பாபாவிடம் பெற்ற அனுபவத்தை உண்மையான அனுபவத்தை சுவாமியிடம் கூறினார்.
பாபா, ஒரு தெய்வீகப் புருக்ஷர். கடவுளின் அவதாரம். தினந்தோறும் வீட்டிலேயே வழிபடும் ஒரு தெய்வமாகவே அவரைக் கருதினேன். ஆகா என்ன ஒளி மிகுந்த கண்கள்! அவரின் செயல்பாடும், சக்தியும் அளவிட முடியாத ஆச்சரியத்தைத் தந்தன. இப்படிப்பட்டவரை நான் எப்படி சந்தித்தேன்!
என் மாமனார், தாய், மனைவி எல்லோரும் பாபாவின் பக்தர்கள். இவர்கள் அவரை கடவுளாகவே மதித்து வழிபட்டனர். 1905ம் ஆண்டு எம். ஏ. பட்டம் பெற்றேன். 1907 – 1909 ல் கல்கத்தாவில் புவியியல் துறையில் பயிற்சி பெற்றேன்.
1909- ம் ஆண்டு இந்திய அரசால் மான்செஸ்டருக்கு அனுப்பப்பட்டு புவியியல், சுரங்கத்துறையில் எம்.எஸ்.சி. பட்டம் பெற்றேன். 1912-ல் இந்தியா திரும்பினேன். என் மாமனார், தாய், மனைவி அடிக்கடி சீரடி சென்று வந்தார்கள். என்னையும் போகச் சொன்னார்கள்.
சாயிபாபா விரும்பினால் நான் போவேன் எனக் கூறினேன். பாபாவிடம் கேட்டு அனுமதி பெற்று சீரடி சென்று பாபாவை தரிசிக்கச் சொன்னார்கள். நான் 1913 ஏப்ரல் மாதம் சீரடி சென்றேன்.  மாதவ்ராவ் தேஷ்பாண்டே என்னை அழைத்துச் சென்று பாபாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
என்ன ஷாமா? இவனையா எனக்கு அறிமுகப்படுத்துகிறாய்? இவனை எனக்கு முப்பது தலைமுறையாகத் தெரியும் !என்றார் பாபா.
இதைக்கேட்டு நான் அதிர்ந்துவிட்டேன். முற்பிறவி பற்றி பாபாவுக்கு எத்தனை ஞானம்! என ஆச்சரியப்பட்டேன்.
பாபா, சில சமயம் என் தாயைப் பார்த்து, துள்ளிக் குதிப்பார். அவ்வளவு சந்தோசம்! அதன் விவரம் பாபா மட்டும் அறிவார். பாபாவைப் பார்த்தவுடன் என்னைக் கவர்ந்தவை அவரது கண்கள் தாம். அவை என் இதயத்தைத் துளைத்துச் சென்றன.
அடுத்தது, அவர் சாவடியில் அமர்ந்திருந்த நிலை. நானும் பாபாவின் ஆரத்தியில் கலந்து கொண்டேன். சிறு சிறு சேவைகள் செய்தேன். ஒரு ஆரத்தியின் போது, பாபா கோபப்பட்டார். ஆவேசப்பட்டார். காரணமே இல்லாமல் சபித்தார். இவரென்ன பைத்தியமா? என எண்ணினேன். ஆரத்தி முடிந்தது. அன்று மாலை பாபாவிடம் வந்தேன். காலை பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன். என் தலையை லேசாகத்தட்டி, “நான் பைத்தியமில்லை என்றார் பாபா.
நான் திடுக்கிட்டேன். மதிய ஆரத்தியின் போது நான் நினைத்ததை அறிந்து கொண்டார். அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அவர் என்னுள்ளே உள்ளார். எனது ஆத்மாவின் தலைவன், எங்கும் நிறைந்திருப்பவர். ஆகவே, எண்ணுவதை எல்லாம் நல்லதாகவே எண்ணுங்கள். உங்களுக்கு நல்லதைச் செய்வார்.
நான் நிறைய முறை பாபாவை சோதித்து உள்ளேன். நான் என்ன நினைக்கிறேனோ, அதை அப்படியே பேசினார். அப்போதுதான் உணர்ந்தேன்,
அவரே என் தெய்வம் என! 
அவர் எல்லாம் அறிந்தவர். எல்லாவற்றையும் பார்ப்பவர். தனது எண்ணப்படி ஒவ்வொருவரையும் உருவாக்கினார். அவரை மீறி எதுவும் நடக்காது. எந்தக் காலத்திலும் அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அவரின் தீர்க்க தரிசனம் வியக்கத்தக்கது.
1913ம் ஆண்டு, என்னிடம் பாபா, “உன் மாமனார் சீரடியில் மாளிகை ஒன்று கட்டுவார். அதில் நீ பொறுப்பு வகிப்பாய்என்றார். 1915 – 16ல் என் மாமனார், மாளிகை கட்டினார். அதுதான் பாபாவின் சமாதி மந்திர். 1918 – 19 க்குப் பின் நான் அந்த சமாதி மந்திர் நிர்வாகத்தில் ஒரு தர்மகர்த்தாவாகப் பொறுப்பேற்றேன்.
நான் நன்கு படித்திருந்தேன். ஆனால் சரியாக வேலை கிடையாது. கிடைத்த வேலையிலும் வெகு நாட்கள் நீடிக்க முடியவில்லை. முதன் முதலாக சீரடி சென்ற போது மூன்று நான்கு நாட்கள் மட்டுமே தங்கினேன். பின் வேலை விஷயமாக பர்மா சென்றேன். அங்கும் மூன்று மாதங்கள்தான் வேலை.
பின் நாக்பூர் திரும்பினேன். பின் சீரடி வந்தேன், அங்கு நான்கு மாதங்கள் மனைவியோடு தங்கிய பின் நாக்பூர் திரும்பினேன். ஷாமா என்னை சீரடிக்கு வரும்படி கடிதம் எழுதினார். சென்றேன். 13 மாதங்கள் தங்கினேன்.
வேலையில்லாத பட்டதாரி. கவலைப்படவில்லை. பாபாவைப் பார்த்து பக்கிரி வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது என எண்ணினேன்.
1914ம் ஆண்டு பாபாவிடம் நிறைய அங்கிகள் இருந்தன. அதை எல்லோருக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தார். எனக்கும் ஒன்று கொடுத்தார். விசேச நாட்களிலும், பஜனையின் போதும் போட்டுக் கொள்ளலாம் என நினைத்தேன். பாபா அங்கி கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். என்னைக் கூப்பிட்டு, ”நார்கே! வருத்தப்படாதே. உனக்கு அங்கி கொடுக்க கடவுள் அனுமதிக்கவில்லைஎன்றார்.
இப்போதும் என் மனதைப் படித்தறிந்தார். நான் படித்தவன், கல்யாணம் ஆனவன். ஆனால் வேலையில்லாதவன். சம்பாதிக்காதவன். என் அன்னைக்கு ஒரே கவலை. என் தாயும், உறவினர்களும் நார்கே வேலைக்காக கல்கத்தா, பர்மா என அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு நல்ல வேலையாகப் பார்த்து சொந்த ஊரிலோ அல்லது சீரடிக்கு அருகாமையிலோ அமைத்துக் கொடுங்கள் என பாபாவிடம் வேண்டினர். பாபாவும் அவனுக்கு பூனாவில் வேலை கிடைக்கும் என்றார்.
சில சமயம் எனக்கு ஒரே நேரத்தில் வேலைக்கான அழைப்பு நிறைய வரும். நான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் சிறு குழந்தை தன் தாயையே நம்பி இருப்பது போல், நான் பாபாவையே நம்பி அவரிடம் ஒவ்வொரு முறையும் வழி காட்ட வேண்டுவேன். ஆனால், அவரின் வழி முறை அலாதியானது. வேலை, கல்கத்தா அல்லது பர்மாவிலா என்றால்.. பாபா பூனா போஎன்பார். ஒவ்வொரு முறையும் அவர் பூனாவை சேர்த்துக் கொள்வார்.
எனக்கு ஒரு முறை காசியில் பேராசிரியர் வேலைக்கும் பர்மாவில் உயர் பதவிக்கும் வாய்ப்பு வந்தது. பாபாவிடம் கேட்டபோது, “பர்மா போ! பூனா போஎன்றார்.
எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. நான் ஒரு புவியியல் சுரங்கப்பொறியாளன். பூனாவில் இதற்கான வாய்ப்பே இல்லை. பின் ஏன் பாபா இப்படி சொல்கிறார் என சிரித்துக்கொள்வேன். என் எதிர்காலம் எப்படி என அவருக்குத்தான் தெரியும்.
1916ல் வெகுகாலம் கழித்து சீரடி வந்தேன். அன்று பாபாவுக்கு யார் என்ன என்ன சேவை செய்கிறார்கள் என கேட்டேன். வாமன்ராவ் படேல் என்கிற வக்கீல் பாபாவுக்காக யாசிக்கச் செல்வார் என்றார்கள். எனக்குள் ஒரு எண்ணம்! அடடா, நாம் ஏன் யாசிக்கக்கூடாது? என எண்ணிக்கொண்டு, கோட், சூட், தொப்பி, காலில் காலணியோடு பாபாவிடம் சென்றேன்.
இன்று பாபாவுக்காக யாசிக்க வாமன்ராவை அனுப்பலாமா? என மூன்று முறை கேட்டார்கள். பாபா என்னைக் காட்டி, நார்கேவை அனுப்பு என்றார்.
நான் அப்படியே யாசிக்கச் சென்றேன். நான்கு மாதங்கள் பாபாவுக்காக யாசித்தேன். இதன் காரணம், யாருக்கும் தெரியாது. எனக்கு மட்டும் தான் தெரியும். எனது ஆசையை பாபா பூர்த்தி செய்துவிட்டார்.
ஒவ்வொரு முறையும் பாபா என்னுள்ளே இருந்து எனது ஆசையைப் பூர்த்தி செய்கிறார் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்தது. அவரே என் அந்தர்யாமி. பாபாவுக்காக யாசிப்பதை அவர் வெகு சிலருக்கே அனுமதி தந்தார்.
1917ல் பூனா பொறியியல் கல்லூரிக்கு புவியியல் துறைக்குப் பேராசிரியர் தேவை என அறிவிப்பு வந்தது. விண்ணப்பிக்கலாமா என பாபாவிடம் கேட்டேன். விண்ணப்பிக்குமாறு கூறினார். பூனா சென்றேன், விண்ணப்பித்தேன். வேலைக்கு நிறைய பேர் விண்ணப்பித்து இருந்தனர். நிறைய சிபாரிசு வேறு! ஆகவே, எனக்கு அந்த வேலை கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை.
நான் சீரடியை விட்டுப் புறப்பட்டவுடன்அங்கே இருந்தவர்களிடம், ”நார்கே எங்கே?” என்று பாபா கேட்டுள்ளார்.
வேலை விஷயமாக பூனா சென்றுள்ளார்என்று சொல்லியுள்ளனர். உடனே பாபா, ”கடவுள் ஆசீர்வதிப்பார்என்றாராம்.
மீண்டும் பாபா, ”நார்கேக்கு குழந்தைகள் உண்டா?” எனக் கேட்டாராம். குழந்தைகள் இறந்து விட்டன என்ற போது. பாபா, கடவுள் ஆசீர்வதிப்பார் என்றாராம்.
பாபா ஜெயித்து விட்டார். அன்று என் வேலை பற்றி பாபா, பூனா என்று சொன்னபோது நான் உள்ளுக்குள் சிரித்தேன். என் அறியாமை. நிறைய விண்ணப்பங்கள், பலத்த சிபாரிசு. பூனா பொறியியல் வேலை எனக்குக் கிடைக்காது என சந்தேகப்பட்டேன். 1918ல் புனா கல்லூரியில் பேராசிரியர் வேலை கிடைத்து விட்டது. என்னுள்ளே நான் நெகிழ்ந்து விட்டேன்.
1919ம் ஆண்டு அந்த வேலை நிரந்தரமாகிவிட்டது. பாபாவிடம் என் தாயார், என்ன பிரார்த்தித்தார்? என் மகனுக்கு சீரடிக்குப் பக்கத்திலோ, சொந்த ஊருக்குப் பக்கத்திலோ வேலை அமைய வேண்டும் என்றார். அப்படியே சீரடிக்குப் பக்கம் பூனாவிலே வேலை கிடைத்துவிட்டது. என் தாயின் ஆசையையும் பூர்த்தி செய்துவிட்டார்.
அது மட்டுமல்ல, இதுவரை பிறந்த குழந்தைகள் இறந்தன. இதற்குப்பின் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர். எல்லோரும் நன்றாகவே உள்ளனர். இவையெல்லாம் பாபாவின் ஆசீர்வாதம் இல்லாமல் நடந்திருக்க முடியுமா?
பாபாவிடம் யாராவது உதவி, பாதுகாப்பு என்று கேட்டால், கேட்பவர் தகுதிக்கு ஏற்ப தன்னையே மாற்றிக்கொண்டு நன்மை செய்தவர். செய்கிறவர். அவரைப்பற்றி மேம்போக்காக அறிந்தவர்க்கு எல்லாம் இது தெரியாது. ஆழ்ந்து நோக்கினால் பாபாவின் அற்புதம் புரியும்.
என்னுடைய பழக்கம் என்னவென்றால், எதையும் கலந்துநோக்கி, சீர்தூக்கிப்பார்த்து நியாயம் சொல்வேன். இதை கவனித்த பாபா, என்னை புத்திசாலி என்றார்.
சில சமயம் தவறு நேரும்போது என்னை சுத்த சோம்பேறி என்பார். யாராவது சரியான முறையில் கேள்வி கேட்டால், அவரை அடக்காமல் சரியான பதில் சொல்வார்.
அவரது சொல்லும் செயலும் அர்த்தம் பொதிந்தவை என்பது எனக்கு நன்கு தெரியும். என்னைப் பொறுத்தவரை, அவர் எனது சரியான ஆசையை சரியாகவே நிறைவேற்றினார்.  யாருக்கு எது உகந்தது என அறிந்து அதை தப்பாமல் செய்திடுவார். இது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நடக்கும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
ஒவ்வொரு முறையும் வேலைக்கு விண்ணப்பிக்கும் போதும் பாபாவிடம் வழிகாட்டச் சொன்னேன் அல்லவா? அப்படியே நீங்களும் கேட்டால் வழிகாட்டுவார். நடப்பவை எல்லாம் நன்மைக்கே. நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கிறது.

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...