ராவணனை வதம் செய்த பிறகு, போர்க்களத்தில் ராமன் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது. அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை அவளது நிழலின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார். உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்.
“நீ யாரம்மா?” என்றார்.
“நான் ராவணனின் மனைவி மண்டோதரி. என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இறுமாந்திருந்தேன். ஆனால் அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால், அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன். மேலும். க்ஷத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீ வரவில்லை. ஆச்சரியப்பட்டேன். இங்கே என் நிழல் உன் மீது படுவதைக் கூட நீ விரும்பவில்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்! என் கணவரிடம் கூட ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதன் அல்ல.
உலகைக் காக்கும் பரம்பொருள். விஸ்வரூபன். தன்னுடைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலகங்களையே தாங்கி நிற்கிறான். பாதாள லோகமே அவனது பாதங்கள். பிரம்மலோகமே அவன் சிரசு. கதிரவனே அவனது கண்கள். மேகமே அவனது கேசம். அவன் இமைப்பதே இரவு பகலாகிறது. திசைகளனைத்தும் அவனுக்கு செவிகள். அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப்பொழுதில் போக்கவல்லது. அவன் வேதத்தின் சாரம். ராமன் சாட்சாத் தெய்வ வடிவம் என்பதில் சந்தேகம் இல்லை. அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன். அவர் கேட்கவில்லை. உன் வெற்றிக்கு காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உன்னிடம் இருந்தது தான். அதுதான் உன் ஏகபத்தினி விரதத்தன்மை. அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள். உடனே ராமன் தன் சுயவடிவான நாராயணனாக அவளுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார்.
ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதரி. அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது, மண்டோதரி ஒழுங்காக உடையணிந்திருந்ததைக் கண்டு, இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம் கொண்டான். அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான், கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் அவளுக்கு நாராயண தரிசனம் கிடைத்தது.💐
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
No comments:
Post a Comment