சில வருடங்களுக்கு முன், சென்னையிலிருந்து சீரடிக்கு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட சமயம்.. சாயி பக்தர் ஒருவர் இருபது முப்பது பேருடன் சென்றுவர ஏற்பாடுகள் செய்துவந்தார். நானும் எனது கணவரும் இக்குழுவில் சேர்ந்தோம். அப்பொழுதெல்லாம் நான்கு மாதங்களுக்கு முன்பே இருக்கை பதிவு செய்யலாம் என்ற நிலை. பயண நாள் வந்தபோது, அளவற்ற குதூகலத்துடன் இரு வேளை உணவு தயார் செய்துகொண்டு ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.
ஏற்பாட்டாளர் எங்களிடம் ரயிலுக்கு உரிய நேரத்தில் வந்து விடுமாறு கூறினார். என் கணவர் என்ன புரிந்துகொண்டாரோ தெரியவில்லை. பகல் பன்னிரண்டு மணிக்கு சென்னையிலிருந்து ரயில் புறப்பட்டால், இரண்டு மணி அளவில் காட்பாடி வரும். நாம் ஒரு மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும் என்று கூறினார். அதற்கேற்றவாறு நிதானமாக ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.
பயண ஏற்பாட்டாளர் போன் செய்து, “ரெடியாகி விட்டீர்களா? உடனே புறப்பட்டு ரயில் நிலையம் வந்துவிடுங்கள்” என்றார்.
”இரண்டு மணிக்குத்தானே ரயில் காட்பாடி வரும்? இப்போது வந்து என்ன செய்யப்போகிறேhம்?” எனக் கேட்டேன்.
”சென்னையில் 10.10க்கு ரெயில். காட்பாடிக்கு 11.50க்கு வந்துவிடும்.” எனக் கூறினார். அதைக் கேட்டு ஏற்பட்ட பதற்றத்தை வெறும் வார்த்தையால் சொல்லமுடியாது.
அப்போது மணி 11.20 ஆகியிருந்தது. சமைத்துக்கொண்டிருந்தேன். அதை அப்படியே போட்டுவிட்டு, ஏற்கனவே எடு;த்து வைத்திருந்த துணி மணிப் பைகளுடன் ஓட்டமும் நடையுமாக வந்து ஆட்டோ பிடித்து புறப்பட்டோம்.
வீட்டிலிருந்து ரயில் நிலையம் எட்டு கி.மீ.தொலைவில் இருந்தது. முப்பது நிமிடத்திற்குள் போகமுடியுமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் பாபாவிடம், ”பாபா நீங்கள்தான் எங்களை அழைத்தீர்கள். ஏமாற்றிவிடாதீர்கள். எப்படியாவது ரயிலை தாமதமாக அழைத்து வாருங்கள்!” என வேண்டிக் கொண்டிருந்தேன்.
ஆட்டோ ஓட்டுநர் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டு வேகமாக ஆட்டோவை ஓட்டிவந்து சரியாக 11.50க்கு ரயில் நிலையத்தில் இறக்கி விட்டார்.
பிளாட்பாரத்திற்குள் பறந்துவந்தோம். ரயிலைக் காணவில்லை. வந்து போய்விட்டதுபோலும் என நினைத்து அழஆரம்பித்தேன். அப்போது எதிர் பாராத விதமாக எங்களுக்காகக் காத்திருந்த பயண ஏற்பட்டாளர், “வந்து விட்டீர்களா? இன்றைக்கு ரயில் அரை மணி நேரம் லேட்” என்றாரே பார்க்கலாம்..
நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தூரத்தில் ரயில் வருவது தெரிந்தது. இந்த அன்பு மகளுக்காக, பாபா வண்டியை தாமதமாக ஓட்டிக்கொண்டு வருகிறார் என மகிழ்ந்தேன்.
வண்டிகள் தாமதமாக வந்தால் நொந்து புலம்பும்நான், இன்று தாமதமாக வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். இந்த நிகழ்ச்சி நடக்காமலிருந்தால், பாபாவை பார்க்கப் போனோம், பார்க்காமல் திரும்பி வந்தோம் என்றுதான் இருந்திருக்கும்.
பயண நாளில் எங்களுக்குத் தவிப்பை ஏற்படுத்தி, என்னை என்றுமில்லாத அளவுக்கு மனம் உருக வேண்ட வைத்து, என் கோரிக்கையை நிறைவேற்றி அவரது கருணையை எங்களுக்கு உணர்த்தி, பரவசமடையச் செய்தார் பாபா என்றே நான் உணர்கிறேன்.
ச.ஜெகதாம்பாள்
சத்துவாச்சாரி, வேலூர்
No comments:
Post a Comment