உலகம் தோன்றிய நாள் முதல் போட்டியும் போராட்டமும் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சங்களாகி விட்டன. உண்மையை எதிர்த்து பொய்மை போராடுவதும், நன்மையை எதிர்த்து தீமை போராடுவதும் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. இந்தப் போராட்டங்களின் தொடக்கத்தில் தீய சக்திகளின் கைகளே வலுப்பெற்று ஓங்கி இருப்பது போல் ஒவ்வொரு முறையும் தோன்றுவது உண்டு. ஆனால், எப்போதும் இறுதியில் வெற்றி பெறுபவை, உண்மையும் நன்மையுமே என்பது கடந்த கால வரலாறு கற்றுத் தரும் பாடமாகும்.
ஷீரடியில், சாயிபாபாவுக்கும் மொஹித்தின் தாம்போலிருக்கும் நடைபெற்ற மல்யுத்தத்தைக் காண கிராம மக்கள் பெருந்திரளாகக் கூடி இருந்தனர். அவ்வப்போது கைதட்டியும் உரக்க குரல் எழுப்பியும் உற்சாகப்படுத்தினர். பாபாவே வெற்றி பெறுவார் என்று வெளிப்படையாகப் பலர் கூறினார். மொஹித்தின் தாம்போலியின் ஆதரவாளர்கள் சிலர் அதை வன்மையாக மறுத்தனர். ஒரு பக்கம், அவர்களிடையே விவாதம் வலுத்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் உக்கிரமான சண்டை ஒரு முடிவுக்கு வந்தது. அதன் முடிவு - மொஹித்தின் தாம்போலிக்குச் சாதகமாக அமைந்தது. சாயிபாபாவின் ஆதரவாளர்கள் வியப்பும் வேதனையும் அடைந்தனர். ஆனால், பாபாவோ எப்போதும் போல் புன்முறுவல் பூத்த முகத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
No comments:
Post a Comment