மனித ஆத்மாக்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்தும், பல பிறவிகளிலிருந்தும் விடுபடுவதற்காக, அவர்களை தம் பக்கம் இழுத்து, உதவி செய்து, பண்படுத்தி, ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடையச்செய்வதே பரம சத்குருவான ஸ்ரீ சாயி நாதரின் முக்கியப் பணியாகும். 'ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா' புத்தகத்தில் பாபா அவர் முன்பிறவியைப்பற்றி பல கதைகள் கூறியிருக்கிறார். அவர் பரமாத்மாவாக இருப்பதால், எல்லா ஜீவாத்மாக்களின் முற்பிறவிகள் பற்றியும் அறிந்திருக்கிறார்.
"ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பக்தர்கள் எவரேனும் ஒருவர் இறப்பை சந்திக்க நேரிடும்போது, அந்த ஆத்மாவை என்னிடம் இழுத்துக் கொள்ள முடியும். எல்லோரையும் பற்றி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன்". ஓர் உண்மையான பக்தனுக்கு, இப்படிப்பட்ட ஒரு சமர்த்த சத்குருவை பற்றிக்கொள்வதே அடிப்படையான மற்றும் இறுதியான தேவையாகும்.
ஆனால், சத்குரு ஒருவர் மட்டும்தான் இறப்பிற்குப் பிறகும் நம்முடனேயே வருகிறார். ஆகவே, அவரே நமது சிறந்த, நிலையான துணையாவார். நாம் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு, பக்தி, நம்பிக்கை இவற்றை முழுமையாக அவர்பால் செலுத்தி அவரையே நாம் இறுகப் பற்றிக்கொள்வோம்.
இவ்வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுக துக்கங்கள்யாவும் அவருடைய கட்டுப்பாட்டிற்கும் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே நடக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும். இத்தகைய அனுபவங்கள் ஆத்மாவை உய்விக்கத்தான் என்பதால் அவை தேவையானவை என்றும் நாம் உணர வேண்டும். இத்தகைய தீவிர நம்பிக்கையும், பொறுமையும் உடையவர்கள், இவற்றை சீக்கிரமே இழந்து விடும் மற்றவர்களை காட்டிலும், விரைவாக முன்னேற்றம் காண்பார்கள், பாபா உறுதியளிக்கிறார்: "ஒரு கஷ்டமான நிலைமையை சந்திக்கும் போது மனம் உடைந்து போக வேண்டாம். பொறுமையுடன் என்ன நடக்கிறது என்பதை கவனித்த வண்ணம் இருங்கள் ஏனெனில் என்னுடைய குழந்தைகளையும், பக்தர்களையும், எப்படியாவது காப்பாற்றுவதே என்னுடைய கடமையாகும்." இதைவிட சிறந்த உறுதி மொழியை வேறு எவரால் நமக்கு கொடுக்க முடியும்?
No comments:
Post a Comment