Saturday, July 26, 2014

மகா புண்ணியசாலி!

3ac3f-shirdi_sai_baba-shamadhi-1

புருவத்தை உயர்த்துவதால் மட்டுமே ஓட்டாண்டியையும் பெரும் செல்வராக்கக்கூடிய சக்தி பெற்றவராயிருந்தும், ஜோலியை (பிச்சைக்காக துண்டை மடித்து கையேந்தும் பொருளாக பயன்படுத்துதல்) தோளில் மாட்டிக்கொண்டு வீடு வீடாகச் சென்றார்.



யாருடைய வீட்டு வாசலில் பாபா பிச்சைக்காக நின்று, "ஒ மகளே எனக்கு உன் சோள ரொட்டியிலிருந்து கால் ரொட்டி கொண்டு வா" என்று கரமேந்திப் பிச்சை எடுத்தாரோ, அவர் மகா புண்ணியசாலி. ஒரு கரத்தில் ஜோலியை ஏந்தி, மற்றொரு கரத்தில் ஒரு தகர டப்பாவை வைத்துக்கொண்டு சில குறிப்பிட்ட இல்லங்களுக்கு வாயில் வாயிலாகச் சென்றார். பாஜி, சாம்பார், பால்,மோர் போன்ற திரவ ரூபமான பதார்த்தம் எதுவாக இருந்தாலும், அது அவர் வைத்திருந்த தகர டப்பாவில் கொட்டப்பட்டது. ஆனால், சாதத்தையோ,சோள ரொட்டியையோ வாங்கிக் கொள்வதற்கு அவர் தமது ஜோலியை விரிப்பார்.



விதவிதமான பதார்த்தங்களை தனித்தனியாக ருசித்து சாப்பிடவேண்டும் என்கிற ஆவல் எங்கிருந்து எழும்? ஜோலியில் வந்து விழுந்த உணவை அவர் திருப்தியுடன் உண்டார். சுவையுள்ளதாயினும் சரி, சுவையற்றதாயினும் சரி, அதை பற்றிக் கவலைப்படவேயில்லை. நாக்கு சுவை உணர்வை இழந்து விட்டது போலும்!



ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் அவர் பிச்சை எடுப்பார். கிடைத்ததைக் கொண்டு வயிற்றை நிரப்புவார். திருப்தியும் அடைவார். பிச்சையாவது ஒரு நியமனத்துடன் எடுத்தாரா? அதுவும் இல்லை. விருப்பப்பட்டபோதுதான் பிச்சை எடுக்க கிளம்புவார். சில நாட்களில் பிச்சை எடுக்கக் கிராமத்தினுள் பன்னிரண்டு சுற்றுகள் சென்றாலும் செல்வார்.



இம்மாதிரியாகப் பிச்சை எடுத்துச் சேர்க்கப்பட்ட உணவு, மசூதியில் இருந்த ஒரு வாயகன்ற மண் பாத்திரத்தில் கொட்டப்படும். இதிலிருந்து காகங்களும், நாய்களும் சுதந்திரமாக உணவு உண்டன.



பூனைகளையும், நாய்களையும்கூட கனவிலும் விரட்டாத மனிதர், எப்படி ஏழை எளியவர்களை விரட்டுவார்? அவரது வாழ்க்கை புனிதமானது.



 ஸ்ரீமத் சாயி இராமாயணம். அத்தியாயம் 8.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...