Friday, July 4, 2014

உனக்கு எல்லாம் இனிப்பாகவே இருக்கும்!



7e562-ba3



புதுப்பெருங்களத்தூரில் நடக்கும் கூட்டுப்பிரார்த்தனை, பஜன், சத்சங்கம் ஆகியவற்றில் ஒரு முறையாவது கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக எனக்குண்டு.



முதன்முறை பெருங்களத்தூர் பாபா மையம் பற்றி அறிந்து, அங்கு சென்றுவந்தோம். அப்போது ஸ்ரீ சாயி வரதராஜன் பற்றி ஏதும் தெரியாது. பிறகு, சாயி தரிசனம் மூலம் அறிந்து அவரை தரிசிக்க விரும்பினேன்.



இதற்காக பெருங்களத்தூர் செல்ல டிக்கெட் பதிவு செய்தும் ஏனோ செல்ல இயலவில்லை. ஏப்ரல் ஆறாம் நாள் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்ள அங்கு வந்த போது, சாயி வரதராஜன் ஊரில் இல்லை எனத் தெரிந்து ஏமாற்றத்துடன் திரும்பிவந்தோம். ஆனால், ராமநவமிக்கு அவர் நிச்சயம் வருவார் என்பதை அறிந்து திரும்பினோம்.



ஒருநாள் சென்னையில் தங்கி ராம நவமியன்று காலையிலேயே பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்குச் சென்றிருந்தோம். சாயி ஜெயந்தி வாய் நிறைய வரவேற்று, மாடியில் நடந்த ஹோமத்தில் கலந்துகொள்ளச் சொன்னார்.



ஹோமத்தில் குருக்கள் பிள்ளைகள் படிப்பு, குபேர சம்பத்து, ஆரோக்கியத்திற்கு என தனித்தனியாக சமித்துகள் அளித்து ஹோமத்தில் சேர்க்கச் சொன்னார்.



அப்போது சாயி வரதராஜன் வந்துவிட்டார் என்ற தகவல் கேட்டு மனம் துள்ளி குதித்தது. அவர் மாடிக்கு வந்த போது எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். கீழே அழைத்து வந்து எங்கள் நெற்றியில் உதி தடவி, எங்களுக்காகப் பிரார்த்தனை செய்தபோது, மனம் நெகிழ்ந்து கண்ணீர் வந்துவிட்டது.



அவர் என்னையே அன்பு ததும்ப பார்த்தார். மனதின் கனிவு கண்களில் பொங்கிவழிந்தது. நான் அழுததால் அவர் மனம் நெகிழ்வது கண்களில் தெரிந்தது. நான் யாரோ அவர் யாரோ. அவரை முன்பின் பார்த்ததில்லை, பழகியதில்லை. ஆயினும் நம் துக்கம் அவரை நெகிழவைக்கிறதே, இதனால் தான் அவரைப் பற்றி இவ்வளவு உயர்வாக மக்கள் நினைக்கிறார்கள் என்பது புரிந்தது.



எதற்கம்மா அழுகிறீர்கள்? ஒரு வருடத்திற்குள் உங்கள் கோரிக்கை நிறைவேறும் என்றார். ஆகா, என்னே பாக்கியம்? டிக்கெட் புக் செய்த நாள்முதல் பாபாவிடம், சாயி வரதராஜன் மூலம் எனக்கு பதில் அளிக்க வேண்டும் என பிரார்த்தித்து வந்தேன். இதோ பதில் கிடைத்துவிட்டது.



அதே நேரத்தில் மாடியிலிருந்து பூரணாகுதித்தட்டை எடுத்துவந்து நமஸ்கரிக்கச் சொன்னார்கள். அதில் போடுவதற்காக என் கணவர் ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்தார். சாயி வரதராஜன் அந்த நோட்டை எடுத்து என் கணவர் கையில் கொடுத்து விட்டு, தன்னிடமிருந்து காசுகள் எடுத்து என் கையிலும், கணவர் கையிலும் தந்து, தட்டில் சேர்க்கச்சொன்னார். காசுகள் ஹோமத்தில் சேர்ப்பதற்காக.. என்று கூறினார்.



பாபா காலத்தில் பாபாவால் தொடப்பட்டு தரப்பட்ட காசுகளை பலர் பெற்றதாக படித்துள்ளோம். இன்று சாயி வரதராஜன் தொட்டு எடுத்துக் கொடுத்த ரூபாய் நோட்டை அவர் ஆசியாகக் கருதி என் கணவரிடமிருந்து அப்போதே வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டேன்.



என் அம்மா வீட்டிற்கு எப்போது போனாலும் அங்கிருந்து கிளம்பும்போது, என் பெற்றோரிடம் இருந்து பணம் கேட்டுப் பெறுவேன். அவர்களும் அளிப்பார்கள். அது எந்தத் தொகையானாலும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த பத்து ரூபாய் நோட்டைப் பெற்றபோது எனக்கு அந்த நினைவு வந்தது.



சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் பாபாவுக்குப் பால் அபிஷேகம் நடந்தது.. சாயி ஜெயந்தி முன்னின்று நடத்தினார். எல்லோரையும் அப்பா அம்மா என்று அழைத்து பாபாவுக்கு அவர் பாலபிஷேகம் செய்ய வைத்தது கண்களுக்குக் குளிர்ச்சி. பக்தர்கள் அனைவரும் பாலபிஷேகம் செய்தனர். அபிஷேகம் முடிந்தவுடன், சாயி ஜெயந்தி பாபாவுக்கு நேர்த்தியாக அலங்காரம்செய்தார்.



ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் சிறுசிறு ரோஜா புஷ்பங்கள் நிறைய ஒன்று சேர்த்து கட்டிய பெரிய கனத்த தண்டு மாலை பாபாவுக்கு சார்த்தப்பட்டது.



”உங்கள் பாரங்களையெல்லாம் நான் சுமக்கிறேன் பாருங்கள்” என்று பாபா சொல்வதுபோல் எனக்குத்தோன்றியது. அனந்தகோடி பிரம்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகி ராஜ பரப்பிரம்ம ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாதனை, ஸ்ரீ சீதா ராமனாக கொண்டாடி, சாயி சகஸ்ர நாமார்ச்சனை, அஷ்டோத்ரம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்று பல்வேறு தோத்திரங்களால் துதி செய்தார்கள்.



பக்தர்கள் அனைவரும் தனித்தனியாக தங்கள் கைகளால் ஆரத்தி செய்ய அவகாசம் கிடைக்கப் பெற்றோம்.  ஸ்ரீ பகவானின் அபிஷேகப் பால், புஷ்பம் போன்றவை அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது.



இவை முடிந்ததும் அனைவரையும் அழைத்து அன்னப் பிரசாதம் அளிக்கப்பட்டது. சாம்பார் சாதம்,தயிர் சாதம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என அனைத்து வித உணவுகளையும் பக்தர்கள் உண்பதற்காகப்பரிமாறினார்கள். வெயிலுக்கு இதமாக நீர்மோர் அமிர்தமாக தொண்டையில் இறங்கியது.



நாங்கள் அன்று சென்றதில் இருந்து பாபாவின் பிரசாதமாக நிறைய இனிப்புகள் கிடைத்தது மனதுக்கு ஒரு சந்தோக்ஷத்தைக் கொடுத்தது. உனக்கு இனி எல்லாம் இனிப்பாகவே இருக்கும் என்று பாபா சங்கேதமாகச் சொல்வது போல் பட்டது.



மையத்தில் நடந்த எல்லா நிகழ்வுகளும் எந்த அமர்க்களமோ, ஆரவாரமோ இல்லாது அமைதியாக இயல்பாக நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.



என் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது என்ற நம்பிக்கையுடன் என் சாயி அப்பாவை தெரு முனை வரை திரும்பித் திரும்பி தரிசித்தபடி ஊர் திரும்பினேன். இது என்னால் மறக்கமுடியாத ஸ்ரீ ராம நவமி.



விஜயலட்சுமி,



ஹைதராபாத்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...