என் இனிய குழந்தாய்!
எனக்கு தீட்சிதர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். தூய பிராமணரான அவரிடம் ஒருமுறை, ஆட்டை வெட்டுமாறு கூறினேன். தீட்சிதர் கத்தியை எடுத்து ஓர் அரைவட்டம் சுற்றி ஆட்டை வெட்டுவதற்குத் தயாரானார். எப்படியும் ஆட்டை வெட்டிவிடுவார் என்பதால், அவரை தடுத்து அதை விட்டுவிடுமாறு கூறினேன்.
“பிராமணரான நீர் மனதில் இரக்கமின்றி இப்படி நடந்துகொள்ளலாமா?” எனக் கேட்டேன்.
அவர் உடனே கத்தியை கீழே போட்டுவிட்டு, என் பாதங்களை வணங்கி, ”பாபா, தங்களுடைய அமுத மொழியே எனக்கு தர்ம சாஸ்திரம்.. இதைத் தவிர வேறு நீதி வழியும் தெரியாது. இது பற்றி எனக்கு வெட்கமோ அவமானமோ சிறிதும் இல்லை. குருவின் வார்த்தை ஒன்றே என் வாழ்வின் சாரம். அதுவே எனக்கு ஆகமம். குருவின் ஆணையை நிறைவேற்றுவதில் தான் சிஷ்யனுடைய சிஷ்யத் தன்மையே அடங்கி இருக்கிறது. அதுவே எனக்கு ஆபரணம். ஆணையை எவ்விதமாக அவமதித்தாலும் அது இழுக்காகும். சுகத்தைக் கொடுக்குமோ, கஷ்டத்தைக் கொடுக்குமோ என்கிற விளைவைப் பற்றிய பார்வையே எனக்கில்லை. நடப்பதெல்லாம் விதிப்படியே நடக்கும். அதை இறைவனிடம் விட்டு விடுகிறோம்.
எனக்கு ஒன்றுதான் தெரியும். எந்நேரமும் தங்களுடைய நாமத்தை மனத்தில் இருத்துதல், தங்களின் தெய்வீகமான தோற்றத்தை கண்களில் நிலை பெறச் செய்தல், இரவு பகலாகத் தங்கள் ஆணைக்குக் கீழ்படிந்து நடத்தல் ஆகியவையே. அகிம்சை மற்றும் இம்சை எனக்குத் தெரியாது. ஏனெனில் சத்குருவின் பாதங்களே எனக்குத் தாரகம். ஆணை எதற்காக என்று கேட்டு அறியேன், அதன் படி நடக்க வேண்டியதே என் கடமை.
குருவின் ஆணை தெளிவாக இருக்கும்போது இது செய்யக்கூடிய செயலா? செய்யத் தகாத செயலா? இது விருப்புள்ளதா? வெறுக்கத்தக்கதா என்றெல்லாம் கேள்வி எழுப்புபவன் கடமையில் இருந்து தவறியவன் என்றே நான் அறிகிறேன்.
குருவின் ஆணையை மீறுவது என்பது ஒரு ஜீவனின் வீழ்ந்த நிலையாகும். குரு பாதங்களிலே மனம் நிலைக்க வேண்டும். உயிர் இருந்தாலென்ன போனால் என்ன? குருவின் ஆணையே பிரமாணம். கடைமுடிவுகளை அவரே அறிவார்.
நாங்கள் தங்கள் ஆணைக்கு அடிமைகள். யோக்கியமான செயலா? அயோக்கியமான செயலா என்று கேள்வி எழுப்ப மாட்டோம். தேவையானால் உயிரையும் கொடுத்து குருவின் ஏவலை நிறைவேற்றுவோம்!” என்று சொன்னார்.
அதை எதற்காக இப்போது சொல்கிறேன் என்றால், குரு என்ன சொன்னாலும் மறுக்காமல் செய்யவேண்டும் என்பதை நியதியாக வைத்து இருந்த தீட்சிதரை விட, உன்னை மிக உயர்வான இடத்தில் வைத்து மகிழ்ந்திருந்தேன்.
உன்னை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக சாயி சாயி என்று சொன்னால் போதும் எனக் கூறி வைத்தேன்.. எனக்கு அபிஷேகம் வேண்டாம், ஆரத்தி வேண்டாம், பயமும் வேண்டாம், என் மீது பாசத்தைக் காட்டு என உன் முன் உருகிநின்றேன்.
ஆனால், நான் உன்னிடம் நெருங்க நெருங்க நீ நம்பிக்கை கொள்வதற்கு பதில் நம்பிக்கை இழந்து கொண்டே போகிறாய். என் வார்த்தைகளை நீ அலட்சியப்படுத்துகிறாய்.. அதனால்தான் உன் இஷ்டம் போல கவலைப்படுகிறாய்..
எந்தப் பிரச்சனையாக இருந்தால் என்ன? உன் கையை விட்டு எது போனால் என்ன? இந்த வேலை கிடைக்காவிட்டால் என்ன? நான் உனக்கு நன்மை செய்யமாட்டேனா? உன்னிடம் நானில்லையா? உன் பிரார்த்தனையை கேட்கமாட்டேனா?
உனக்காக எல்லாவற்றையும் செய்வேன் என ஒரு முறை சொல்லிவிட்டு நான் மனம் மாற மாட்டேன். இதையும் பலமுறை கூறிவிட்டேன்.
நீயோ, திருப்பிப் போடப்படாத ரொட்டியைப்போல அரைவேக்காடாகவே இருக்கிறாய்.. என் மீது முழு நம்பிக்கை வை.. எந்தப் பிரச்சினையையும் உன் சொந்த புத்தியை நம்பி அஹகாதே. என் மீது பாரத்தை வைத்து சாயி சாயி என்று சொல்லியபடி இரு.. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.
வாழ்வில் என்ன செய்வது எனத் தெரியாமல் துவண்டுப் போயிருக்கும் இந்த நிலையில், அப்பா என்ன செய்யப் போகிறாரோ என்ற எண்ணம் ஒரு பக்கமும், எப்படியும் எனக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கை ஒரு பக்கமும் உன்னை தாங்கிப் பிடிக்க, முடிவைத் தேடும் படலத்தைத் தள்ளிப்போட்டுவருகிறாய்.
உன்னுடைய பிரச்சினை இப்போதைக்கு உன் குடும்பச் சூழல் இல்லை. யார் உனக்கு வாழ்க்கை தருவார் என நினைத்தாயோ, அவர் உன்னை தள்ளி வைத்து உன்னைப் பிரிந்துவிட்டதால் ஏற்பட்ட சோகம் உன் மன நிலையை ஒவ்வொரு மணித்துளியும் மாற்றிக்கொண்டிருக்கிறது.
இதனால் உன்னை நேசிப்பவர்களைக்கூட நீ வெறுக்கிறாய், எல்லோருக்கும் பாரமாக இருப்பது போல நினைக்கிறாய்.. உன்னை சிறு சொல் சொல்லிப் பேசினாலும் அது உனது இந்த நிலையை குத்திக் காட்டுவதாக நினைக்கிறாய்..
போகும் இடத்திலெல்லாம் மனம் நிலைக்காமல் திரும்பிவந்துவிடுகிறாய்.. இதனால் வாழ்க்கையின் மீது உனக்கு நம்பிக்கைக் குறைந்திருக்கிறது.
என்னால் வாழமுடியுமா? வாழவே முடியாது. மானம் போனது, மரியாதை போனது..பாபா என்னை எடுத்துக் கொள் என புலம்புகிறாய்..
உன்னைப் புரிந்துகொள்ளாதவள் உன்னை விட்டுப் போனாள் என்பதை புரிந்துகொண்டு, புது வாழ்க்கையைத் துவங்கு..
எதிர்நீச்சல் போட்டு ஜெயித்துவிடலாம் என்றிருந்த பழைய திறமையை, தைரியத்தை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டு வா.. புதிய வாழ்க்கையை உனக்காக நான் வைத்திருக்கிறேன்.. ஆனால் உனது அவநம்பிக்கை அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
என்னை நம்பினால், இன்று முதல் புதிய முயற்சி செய்.. புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இதுவரை தோற்றதையும், நம்பிக்கை இழந்ததையும், மரண விளிம்புக்குச் சென்றதையும் மறந்துவிடு.. வாழ்வதற்கு வா.. உன்னை வசந்தத்திற்கு அழைத்துச்செல்ல நான் காத்திருக்கிறேன்.
என் குழந்தாய்
உன்னை வாழத் தகுதியில்லாத நபர் என நீயே முடிவு செய்துகொள்ளும் நிலைக்கு வந்திருப்பது தவறானது. அதை தள்ளிவிடு. இன்னும் சிறிது காலத்திற்குள் நல்ல சூழலை ஏற்படுத்துவேன்.
உன் போல இன்னொரு குழந்தை இருக்கிறாள்..புரிந்துகொள்ளும் முன்பே விட்டுப் பிரிந்துவிட்டு விவாகரத்துக் கேட்கும் கணவனை நினைத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்..
நான் என்ன பாவம் செய்தேன் என என்னிடம் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். பூர்வ கணக்கு தப்பாது.. அது முடிந்துவிட்டது. புதுக் கணக்கைத்தொடங்கு.. வாழ்வதற்கு முடிவு செய்.. நல்ல வசந்த காலம் உனக்காகக் காத்திருக்கிறது என்று சொல்கிறேன்.. அவள் காதுகளுக்குக் கேட்கவில்லை.
இன்னொரு குழந்தை, தனது கணவனின் உறவுக்காரர்களால் இன்னல் பட்டு, சொந்த வீட்டில் வந்து நொந்துகொண்டிருக்கிறாள். புரிந்துகொள்ளாத கணவனால் தனது வாழ்க்கையும், பிள்ளையின் வாழ்க்கையும் பறி போனது எனப்புலம்புகிறாள். என்னை நோக்கி தவம் செய்கிறாள்.. விரதமிருக்கிறாள். தனது வாழ்க்கைத் தொலைந்திட யார் யாரோ காரணம் என அவர்கள் மீது கோபமாக வும், வெறுப்பாகவும் இருக்கிறாள். இப்படி அவள் நினைப்பதை நான் விரும்புவது கிடையாது. எந்தத்தவறுக்கும் தனது சொந்த புத்தியே காரணம்.
விட்டுக் கொடுத்து வாழவேண்டிய நிலையில் விட்டுக் கொடுக்காமல் போவதும், விட்டுக்கொடுக்கக்கூடாத நேரத்தில் வாயை விட்டு விடுவதுமே பிரச்சினைகளுக்குக் காரணம் என்பதை அவள் புரிந்துகொள்ளவில்லை.
கணவன் மனம் அறிந்து நடந்துகொள்ளும் குணத்தை வளர்த்துக்கொள்ளாமல், என்னை நோக்கி கேட்டுக் கொண்டிருப்பதால் என்ன பிரயோசனம்?
அவளாக உணர்ந்து, தவறுக்கு வருந்தினால்தான் வாழ்க்கை என்பதில் நான் கறாராக இருக்கிறேன்..இப்படியே இன்னொரு குழந்தையிருக்கிறாள்..
அவளது நிலையோ வித்தியாசமானது. கணவன் கை நிறைய சம்பாதிக்கிறான்.. எல்லாம் மனைவிக்கு என்கிறான்.. அணிகலன்களை வாங்கிப் பூட்டுகிறான்.. ஆடம்பரமாக வாழ்வதாக வெளியே காட்டுகிறான்.. ஆனால், உள்ளுக்குள் அவளுக்கு நரகத்தைப் பரிசாகத் தந்திருக்கிறான். நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம்,சொன் னால் குற்றம், சொல்லாமல் விட்டாலும் குற்றம் என்று குற்றம் கண்டுபிடிப்பதும், துளியளவு நிம்மதியில்லாமல் வைத்திருப்பதிலும் அவன் கைதேர்ந்தவனாக இருக்கிறான்..
சின்னச் சின்ன விக்ஷயத்திற்குக்கூட, அவள் மேல் கோபப்பட்டு திட்டுவதும் அடிப்பதும், சொல்லிக்காட்டுவதுமாக அவன் செய்கிற சில்மிக்ஷங்களைப் பார்க்கும்போது எனக்குக் கோபம் கோபமாக வருகிறது. ஆனால், இவளது நேரத்தை நினைத்து அமைதியாகப் போகிறேன்..
தனது கணவனின் கவுரவம் போய்விடக் கூடாது என்பதில் அக்கறை காட்டுகிற என் மகளின் பெருந்தன்மையை நினைக்காமல், அவள் தன்னை இழிவு படுத்துகிறாள் என்று எண்ணி, சிறியதைப் பெரிதாக்கி மற்றவர்கள் முன்னிலையில் அவளை வெட்கப்படுத்துகிறான். இந்தக் கணவனைத் திருத்துவதற்காக நான் போராட வேண்டியுள்ளது..
இப்படியாக நிறைய விக்ஷயங்களுக்குப் போராட வேண்டியிருப்பதால், குழந்தாய் பிடித்த மில்லாத விக்ஷயங்களை நானே விலக்கி விடுகிறேன்..
உன் விக்ஷயத்திலும் இப்படித்தான் நடந்திருக்கிறது. எனவே, எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கையை தொடர்ந்து நடத்து.. வெற்றி பெறுவாய்..
அன்புடன் அப்பா
சாயி பாபா
No comments:
Post a Comment