Monday, September 23, 2013

சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் - பாகம் 6



சீரடி சாய்பாபா  ஒரு அற்புத மகான் - பாகம் 6

தேனி. எம். சுப்பிரமணி

(முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(இரண்டாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(மூன்றாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(நான்காம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(ஐந்தாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)

            இதுபோல், கோபர்காங்வின் ஆய்வாளராக இருந்த கோபால்ராவ் குண்ட் என்பவருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் அவருக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது. அவருக்கு சாய்பாபாவின் அருளினால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியினால் 1897ல் அவருக்கு சீரடியில் சிறப்பான ஒரு திருவிழா கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இதைச் சீரடி சாயிபாபா பக்தர்களாக இருந்த சிலரிடம் தெரிவித்தார். அவர்களும் இதற்கு சம்மதித்தனர். இதை பாபாவிடம் தெரிவித்து அதற்கான அனுமதியையும் ஆசியையும் பெற்றனர். இந்த விழாவை இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்களுக்கும் சேர்ந்த ஒரு பொது விழாவாக அமைக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். இசுலாமியப் பண்டிகையான உரூஸ், ஸ்ரீ ராம நவமி தினத்தன்றுதான் வருகிறது என்பதைப் பாபாவிடம் பேசி முடிவு செய்தனர். இவர்கள் திருவிழா கொண்டாட விரும்பிய நிலையில், சீரடி ஊருக்குத் தண்ணீர் அளித்துக் கொண்டிருந்த இரண்டு கிணறுகளில், ஒன்றில் தண்ணீர் வற்றிப் போய் விட்டது. வற்றிப் போன அந்தக் கிணற்றில்தான் நல்ல தண்ணீர் இருந்தது. இன்னொரு கிணற்றுத் தண்ணீர் உப்பு நீராகும். சாயிபாபாவிடம் இது பற்றித் தெரிவித்தனர். அவர் அங்கிருந்து அந்த உப்புத் தண்ணீர் கிணற்றுக்குச் சென்றார். அந்தக் கிணற்றில் சில மலர்களை வீசினார். அந்தக் கிணற்றுத் தண்ணீர் நல்ல தண்ணீராக மாறியது.
                          திருவிழா ஊர்வலத்துக்காக கோபால்ராவ் குண்ட் சாதாரணமான ஒரு கொடியைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார். அதே சமயம் நானா சாஹேப் என்பவர் அழகிய பூ வேலைப்பாடுகளுடன் மற்றொரு கொடியைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார். இரண்டு கொடிகளுமே தயாரிக்கப்பட்டு விட்டதால் திருவிழாவில் இரண்டு கொடிகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சாயிபாபாவினால் துவாரகமாயிஎன்று அழைக்கப்பட்ட மசூதியின் இரு மூலைகளிலும் அந்தக் கொடிகள் ஊன்றப்பட்டன. 
                               இத்திருவிழாவில் கோர்ஹாலாவைச் சேர்ந்த சாயிபாபாவின் இசுலாமியப் பக்தரான அமீர்சக்கர் தலாலுக்கு சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. சாயிபாபாவை முகமதிய ஞானியராகச் சிறப்பிக்கும் வகையில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் சந்தனக் குழம்பும், சந்தனப் பொடியும் தாலிஎனும் தட்டுக்களில் வைத்து, இசையுடனும், நறுமணப் பொருட்களின் வாசனையுடனும் எடுத்து வரப்பெற்று கிராமம் முழுக்கக் கொண்டு சென்றனர். கடைசியாக மசூதிக்குச் சென்று திரும்பி அந்த சந்தனப் பொருட்களை நிம்பாஎன்னும் குழிகளில் கொட்டினர். 
                                 இப்படி ஒரே நாளில், இந்துக்களின் கொடி ஊர்வலமும், இசுலாமியர்களின் சந்தனக்கூடு ஊர்வலமும் எவ்விதப் பிரச்சனைகளுமின்றி அருகருகே கொண்டு செல்லப்பட்டன. இந்த விழா வருடந்தோறும் படிப்படியாக மாற்றமடைந்து ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 8ல் தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவாக மாறிவிட்டது. 
                                பாபா இந்துவா அல்லது இசுலாமியரா என்ற கருத்து வேறுபாடு பலருக்கும் இருப்பது உண்டு. இந்துக்களின் ஸ்ரீ ராம நவமித் திருவிழாவைப் போல் இசுலாமியர்களின் சந்தனக்கூடு விழாவையும் அவர் அனுமதித்தார். கோகுலாஷ்டமியின் போது கோபால்காலாதிருவிழாவை உரிய முறைப்படி செய்வித்தார். ஈத்திருவிழாவின் போது இசுலாமியர்களின் நமாஸ் தொழுகையை தமது மசூதியில் அனுமதித்தார். அவருக்கு இந்து வழக்கப்படி காது குத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் இசுலாமியர்கள் வழக்கப்படி சுன்னத் செய்து கொள்ளவில்லை. ஆனால் சுன்னத் செய்யும் வழக்கத்தை அவர் ஆதரித்தார். இசுலாமியர்களுக்கான மசூதியில் அவர் வாழ்ந்தார். இந்துக்களைப் போல் துனிஎனும் அகண்ட நெருப்பை எப்போதும் மசூதியில் வைத்திருந்தார்.

                              மேலும் இசுலாமிய சமயத்திற்கு விரோதமான மூன்று வழக்கங்களைக் கடைப்பிடித்தார். அதாவது திருகையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது. இதுபோல் நெருப்பில் ஆகுதி செய்தல், பஜனை, தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தைக் கழுவி வழிபாடு செய்தல் போன்றவையும் அனுமதிக்கப்பட்டன. 

                              சாயிபாபாவின் அற்புதங்களைக் கண்ட, இந்து சமயத்தில் அதிகமான பற்றுடையவர்கள் (பிராமணர்கள், வேத சாத்திரங்கள் கற்ற அறிஞர்கள்) பலர் சாயிபாபா முன்பு தங்கள் வைதீக முறைகளை விட்டுவிட்டு, அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினர். சாயிபாபா தன்னிடம் அருளாசி பெற வருபவர்களிடமிருந்து தட்சிணையைப் பெற்றார். தட்சிணை மூலம் பெறப்பட்ட பணத்தில் பெரும்பகுதியை தர்மத்திற்கும், மீதமுள்ள தொகையை விறகு வாங்குவதற்கும் செலவழித்தார். அவர் விறகை எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருக்கும் துனிஎனும் புனித நெருப்பில் போட்டு வந்தார். இந்நெருப்பிலிருந்து வரும் சாம்பல் உதிஎன்று அழைக்கப்பட்டது. அவரைக் காணவரும் பக்தர்கள் சீரடியை விட்டுச் செல்லும் போது உதி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

                              இந்த உதியின் மூலம் சாயிபாபா எதைத் தெரிவித்தார்? இவ்வுலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் நிலையற்றது. பஞ்சபூதங்களால் அமைக்கப்பட்ட நம் உடல் அனைத்து இன்பங்களையும் அடைந்த பின்னர் இறுதியில் சாம்பலாக்கப்படும். இந்த உடல் சாம்பலாகப் போகும் உண்மையைத் தன் பக்தர்களுக்கு உணர்த்தவே அவர் உதியை வழங்கினார். பிரம்மம்ஒன்றே உண்மையானது. பிரபஞ்சம் எனப்படும் இவ்வுலகம் நிலையற்றது என்றும், தாய், தந்தை, மக்கள் என நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகள் அனைத்தும் உண்மையில் நம்முடையது அல்ல. இவ்வுலகிற்குத் தனியாக வந்த நாம், தனியாக இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.


(தொடரும்)

நன்றி:  தினத்தந்தி - ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...