Thursday, September 19, 2013

சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் - பாகம் 3

சீரடி சாய்பாபா  ஒரு அற்புத மகான் -  பாகம் 3

தேனி. எம். சுப்பிரமணி

(முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(இரண்டாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
சீரடியை அடைந்த அவர் அங்கிருந்த வேப்பமரம் ஒன்றின் கீழ் போய் அமர்ந்தார். அந்த மரத்தினடியில், பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் கூட அருந்தாமல் அவர் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். அவர் அப்படி அமர்ந்திருப்பதை அந்த ஊர் மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர அவருக்கு உணவு கொடுக்கவோ, தண்ணீர் கொடுக்கவோ எவரும் முன்வரவில்லை.

                
அந்த ஊரிலிருந்த சிவன் கோயில் ஒன்றின் பூசாரியான மகல்சாபதிக்கு, “யார் இவர்? இப்படி உணவு, தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் இப்படி அமர்ந்திருக்கிறாரே? இவரிடம் ஏதாவது சக்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படி ஒரே இடத்தில் உணவு, தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது என்கிற எண்ணம் ஏற்பட்டது. அவர் வேப்பமரத்தடிக்கு வந்தார்.
ஐயா! தாங்கள் யாரென்று நான் தெரிந்து கொள்ளலாமா? பல நாட்களாக இப்படி அமர்ந்திருக்கிறீர்களே...?” என்று கேட்டார்.
அவர் கேள்வியைக் கேட்டு விழித்த கபீர், “உயிர் இருக்கும் வரைதான் பெயருக்கு மதிப்பு. உயிர் போய் விட்டால் அது சடலம். அவனுடைய பெற்றோர் வைத்த பெயர் பல நேரங்களில் காணாமல் போய் விடுகிறது. ஒருவன் பணக்காரனாகி விட்டால் அவனைப் பணக்காரன் என்கின்றனர். ஏழையாகி விட்டால் ஏழை என்கின்றனர். அந்த ஏழைக்குக் கூட உடுத்த ஏதாவது ஆடை இருக்கிறது. சொந்த பந்தங்கள் இருக்கிறது. ஆனால், எனக்கென்று எதுவுமில்லை. எதுவுமில்லாதவனை எப்படி அழைப்பீர்கள்? பக்கிரி என்றுதானே அழைப்பீர்கள்! அப்படியே அழையுங்கள் என்றார்.

                          மகல்சாபதி, அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமடைந்தார். பின்பு, “ஐயா! நீங்கள் எதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். அவருடைய கேள்விக்குப் பதிலளிக்காமல் கபீர் மவுனமாக இருந்தார்.
மறுநாள் மகல்சாபதி தன் நண்பர்களான அப்பாஜோக்லே மற்றும் காசிநாத் ஆகியோர்களிடம் ஊருக்குப் புதியதாக வந்திருப்பவரிடம் தான் பேசியதையும், அவர் சொன்ன பதிலையும் சொன்னார். இதைக் கேட்ட அவர்களிருவரும், தாங்களும் அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.

                         மறுநாள் மகல்சாபதி தன் வீட்டில் செய்த உணவை எடுத்துக் கொண்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரைப் போய்ச் சந்தித்தார். அவர், “அல்லாமாலிக் என்று சொல்லி அவர்கள் மூவரையும் வரவேற்றார்.
மகல்சாபதி வீட்டிலிருந்து அன்புடன் எடுத்து வந்து கொடுத்த உணவை ஏற்று சாப்பிட்டார்.

                           பக்கிரியின் பேச்சுக்கள் அந்த மூவருக்கும் புதுமையாகவும், பல நற்கருத்துக்களை வழங்குவதாகவும் இருந்தன. காலை முதல் இரவு வரை அவர் பேச்சைக் கேட்பதற்காகவே மூவரும் தினமும் அவரைச் சந்தித்து வந்தனர். அவர்கள் மூவரும், ஊரிலிருக்கும் மக்களுக்கு அவருடைய சிறப்பான பேச்சுக்களையும், அதில் அடங்கியிருந்த சிறந்த தத்துவங்களையும் எடுத்துச் சொல்லத் தொடங்கினர்.
அதன் பிறகு, ஊரிலிருந்த மக்கள் அனைவரும் அவரை பக்கிரி என்று அன்புடன் பார்க்கத் தொடங்கினர். தங்கள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுத்து அவரிடம் ஆசிபெற்றனர். ஊரிலுள்ள பலரும் அவரை பக்கிரி என்று அழைத்தாலும், அந்த ஊரிலிருந்த அமன்பாய்க்கு மட்டும் அவரை பக்கிரி என்று அழைப்பது பிடிக்கவில்லை.
ஒருமுறை அவளுடைய மகன் அவரை பக்கிரி என்று சொன்னதைக் கேட்டு அவன் கன்னத்தில் அறைந்தாள். “பெரியவர்களை அப்படி அழைக்கக் கூடாது. நமக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடி வந்து காப்பவன் இறைவன். அவரை நாம் பாபா என்று அழைப்பது போல், இவரையும் பாபா என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் சொன்னாள்.   அன்றிலிருந்து அந்தச் சிறுவன் மட்டுமல்ல. ஊர் மக்கள் அனைவரும் அவரை அன்புடன் பாபா என்று அழைக்கத் தொடங்கினர். பக்கிரியாக இருந்து பாபாவாக உயர்ந்த அவர், தன்னிடம் உடல்நலம் சரியில்லை என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கியே அவர்கள் நோயைக்குணப்படுத்தினார்.
இதனால் அந்த ஊர் மக்களுக்கு நோய் குறித்த அச்சமில்லாமல் போனது. அதே சமயம் அந்த ஊரில் வைத்தியம் செய்து கொண்டிருந்த வைத்தியருக்கு வருமானமும் குறைந்தது. இதனால் அந்த வைத்தியர் பாபாவின் மேல் கோபமடைந்தார். அவர் பாபாவிற்கு எதிராக பொய்யான செய்திகளைப் பரப்பத் தொடங்கினார்.
பாபாவைப் பொறுத்தவரை தன்னை வணங்குபவர்களைதான் காப்பாற்றுவார் என்றில்லை. வாப்பா அப்பா பாபா…” என்று யார் எப்படி அழைத்தாலும் தக்க நேரத்தில் உதவுவது பாபாவின் குணம். ஒருநாள் பாபா, மசூதியில் இருந்து மறைந்து அவுரங்கபாத்துக்குச் சென்று விட்டார். அவர் அவுரங்காபாத்தில் ஓர் மலை மீது அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர் குதிரையை காணாமல் தேடிக் கொண்டு வந்தார்.
பாபா அவரை சந்த்பாடீல் என் அருகில் வா! என்று அழைத்தார். பாபா அழைப்பதைக் கேட்காமல் அவர், குதிரையைத் தேடும் கவனத்திலேயே இருந்தார்.  பாபா மீண்டும் சற்று சத்தமாக அழைத்தார்.
திரும்பிப் பார்த்த அவர், “என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? இதற்கு முன்னால் என்னைப் பார்த்திருக்கிறீர்களா? ” என்று கேட்டார்.
சில நாட்களுக்கு முன்னால் காணாமல் போன உன் குதிரையைப் பற்றி கேட்காமல், என்னைப் பற்றி கேட்கிறாயே என்றார் பாபா.
நான் காணாமல் போன குதிரையைத்தான் தேடுகிறேன் என்று உங்களால் எப்படி சரியாகச் சொல்ல முடிகிறது என்றார்.
உன் காணாமல் போன குதிரை எங்கிருக்கிறது என்று கூட என்னால் சரியாகச் சொல்ல முடியும் என்றார் பாபா.
பின்னர் அவரே, “உன் குதிரை நீ வந்த வழியிலுள்ள ஓடைப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருக்கிறது. போய் பிடித்து வா! என்றார்.
பாபா சொன்ன இடத்திற்கு சற்று முன்னர், குதிரையைத் தேடிச் சென்று திரும்பியிருந்தாலும், அவர் சொன்னதற்கேற்ப சென்று பார்ப்போமே? , என்றபடி அங்கு சென்றார். அங்கு தற்போது பாபா சொன்னவாறு, காணாமல் போன குதிரை ஓடையில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. குதிரையைப் பிடித்துக் கொண்டு பாபா இருக்குமிடத்திற்குத் திரும்பினார்.
அய்யா, நீங்கள் சொன்னபடி குதிரை கிடைத்து விட்டது. என்றார்.

                       கிடைக்க வேண்டிய நேரத்தில் அது சரியாகக் கிடைத்திருக்கிறது. அவ்வளவுதான். சரி வாருங்கள் நாம் இருவரும் புகைப்பிடிக்லாம் என்றார் பாபா. சாந்த்பட்டீல் தயங்கினார்.
என்ன தயக்கம் சாந்த்பட்டீல்?
ஒன்றுமில்லை அய்யா புகைப்பிடிக்கும் குழாய், புகையிலை எல்லாம் வைத்திருக்கீறீர்கள். ஆனால் இதைப் பயன்படுத்த தண்ணீர், நெருப்பு வேண்டுமே. இந்தப் பாறையில் தண்ணீருக்கும் நெருப்புக்கும் எங்கே போவது?” என்றார் சாந்த்பட்டீல்.
எங்கும் போக வேண்டாம். இருக்கும் இடத்திலேயே கிடைக்கும் என்று கூறி தன் கையில் இருந்த குச்சியால் தரையைத் தட்டினார்.
என்ன ஆச்சரியம் தண்ணீர் வெளிவந்தது. பக்கத்திலேயே மறுபடியும் தரையை தட்டினார். நெருப்பும் வந்தது. இதை கண்டு வியந்து போனார் சாந்த்பட்டீல். பஞ்சபூதங்களும் இவரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டார். இவர் சாதாரண மனிதர் அல்ல. இவர் சக்தி வாய்ந்த மகான் என்று உணர்ந்தார்.
உடனே அவர் மகானே நீங்கள் என்னுடனே இருக்க வேண்டும். என்று கூறி பிடிவாதம் பிடித்து தன் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.
(தொடரும்)


நன்றி:  தினத்தந்தி - ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...