Sunday, September 22, 2013

சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் - பாகம் 5



சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் -  பாகம் 5

தேனி. எம். சுப்பிரமணி

(முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(இரண்டாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(மூன்றாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(நான்காம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
          பாபா சீரடியில் கோதுமை மாவை அரைத்த நிகழ்வு சாதாரணமானதாக இருந்தாலும் அது மிகப்பெரும் தத்துவத்தை உணர்த்துகிறது. அவர் கோதுமையை அரைக்கவில்லை, பாவங்கள், உள்ளம், உடல் போன்றவற்றின் துன்பங்களையும், தன் அடியவர்களின் தொல்லைகளையும் அரைத்துத் தீர்த்தார். கர்மம், பக்தி என்ற இரு கற்கள் அவர் திருகையில் இருந்தது. இதில் கர்மம் கீழ் கல்லாகும். பக்தி மேல் கல்லாகும். திருகையின் கைப்பிடி ஞானமாகும். சத்துவ, ராஜச, தாமச எனும் மூன்று குணங்களைச் சேர்ந்த நமது எல்லா உணர்ச்சிகள், ஆசைகள், பாவங்கள், அகங்காரம் போன்றவைகளைத் துகள்களாக்கி முன்னோடி வேலையாக அரைக்கப்பட்டாலன்றி ஞானம் அல்லது தன்னை உணர்தல் என்பது முடியாதென்பதே பாபாவின் கருத்தாகும்.
                     ஒருநாள் சீரடியில் பலத்த மழையும், காற்றும் சேர்ந்து அடித்தது. பாபாவின் மேல் பற்று கொண்ட மகல்சபாதிக்கு தூக்கம் வரவில்லை. பாபா எப்படி இருக்கிறாரோ என்ற கவலை அவருக்கு ஏற்பட்டது. அவர் கொட்டும் மழையில் நனைந்தவாறு பாபா அமர்ந்திருக்கும் வேப்ப மரத்தடிக்கு வந்தார். 
          அங்கு பாபாவின் உடல் மணலாலும், இலைகளாலும் மூடியிருந்தது. இதைக் கண்டு பதறிப்போன மகல்சபாதி பாபாவின் உடலை மூடியிருந்த மணல் மற்றும் இலைகளை அகற்றினார். அங்கு பாபா நடந்த எதுவும் தெரியாமல் தியானத்தில் இருந்தார். பாபாவை நிஷ்டையில் இருந்து எழுப்பினார். இதைப் பார்க்க மக்கள் அங்கு கூடிவிட்டனர். 
                        பாபா, நீங்கள் கொட்டும் மழையில் இந்த வேப்பமரத்தின் அடியில் இருப்பதற்குப் பதிலாக அருகிலுள்ள மசூதியில் கூட தங்கியிருக்கலாமே...?” என்றார்.

                             உடனே பாபா, “எனக்கு எல்லாம் இடமும் ஒன்றுதான். எனக்கு என்று தனி இடம் எதுவும் தேவையில்லைஎன்று மறுத்தார்.
                          நீங்கள் இப்படிச் சொன்னால், நாங்களும் எங்கள் வீட்டிற்குச் செல்லாமல் உங்களுடனே இருக்கிறோம்.என்று அவர்கள் சேர்ந்து சொன்னார்கள். அவர்களின் அன்பிற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பாபா மசூதியில் தங்க சம்மதித்தார்.
           மசூதியில் தங்கியிருந்த சாயிபாபா இளம் பருவத்தில் தம் தலைமுடியை வளர்த்து வந்தாலும் அதை வெட்டி ஒழுங்கு படுத்திக் கொள்வதில்லை. தன் உடலைப் பற்றிய பாதுகாப்பிலும் அதிக ஆர்வம் காட்டிக் கொள்வதுமில்லை. ஆனால், அவர் தங்கியிருந்த இடத்தினருகில் மலர்த் தோட்டம் ஒன்றை உருவாக்க விரும்பினார். இதற்காகச் சில மலர்ச் செடிகளை நட்டு வளர்க்கத் தொடங்கினார். அந்தச் செடிகளுக்குத் தேவையான தண்ணீர் கொண்டு வருவதற்காக வாமன் தத்யா என்பவரிடம் இரண்டு மண்பானைகளை இலவசமாகப் பெற்றார். கிணற்றிலிருந்து நீர் இரைத்து, மண் பானைகளில் ஊற்றி அவரே சுமந்து கொண்டு வந்து ஊற்றி மலர்ச் செடிகளைப் பாதுகாப்பாய் வளர்த்து வந்தார். 

                          மண்பானைகளை அவர் தங்கியிருந்த வேப்பமரத்தடியில் வைத்திருப்பார். அந்த மண்பானைகள் நெருப்பில் சுடாத பானைகள் என்பதால் அது மறுநாள் பயன்படுத்த முடியாதபடி உடைந்து போய்விடும். இப்படியே தத்யா மூன்று ஆண்டுகளுக்கு தினமும் சுடப்படாத மண்பானைகளைக் கொடுத்து வந்தார். பாபா, சுடப்படாத மண் பானைகளில் நீர் கொண்டு வந்து அந்த இடத்தை அழகியப் பூந்தோட்டமாக உருவாக்கினார். அந்த இடத்தில்தான் தற்போது பாபா சமாதி மந்திர்உள்ளது.

                         சாயிபாபா பொதுவாக மக்களுடன் கலந்து பேசுவதில்லை. அவரிடம் யாராவது கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்வார். பகற்பொழுதில் வேப்பமரத்தடியில்தான் அமர்ந்திருப்பார். சில சமயம், கிராம எல்லையிலுள்ள வாய்க்கால் அருகிலிருக்கும் ஆலமரத்தடிக்குச் சென்று அமர்ந்திருப்பார். மாலை நேரங்களில் குறிக்கோளின்றி நடந்து செல்வார். 

                         பாபா பகற்பொழுதில் அவருடைய பக்தர்களால் சூழப்பட்டிருந்தார். இரவில் உதிர்ந்து கொட்டும் மசூதியில் படுத்திருந்தார். இந்த சமயத்தில் பாபாவிடம், ஹூக்கா, புகையிலை, ஒரு தகர டப்பா, நீண்ட கஃப்னி, தலையைச் சுற்றி ஒரு துண்டு துணி, ஒரு குச்சி போன்ற சிறு சிறு உடமைகள் மட்டுமே இருந்தன. தலையிலுள்ள அச்சிறு துணி நன்கு முறுக்கப்பட்ட முடியைப் போல் இடது காதிலிருந்து முதுகில் தொங்கியது. இத்துணி பல வாரங்களாகத் துவைக்கப்படாமல் இருக்கும். காலணி எதுவும் அவர் அணிவதில்லை. பெரும்பான்மையான நாட்கள் சாக்குத் துணி துண்டே அவருடைய ஆசனமாகும். ஒரு கௌபீனத்தை (கோவணத்தை) அணிந்திருந்தார். குளிரை விரட்டுவதற்காக புனித நெருப்பின் முன்னால் இடதுகையை மரக்கட்டைப் பிடியின் மேல் வைத்தபடி தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். எப்போதும் கடவுளே ஒரே உரிமையாளர்எனும் பொருளில் அல்லா மாலிக்என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

                                பாபாசாஹேப் என்பவரின் தம்பி நானாசாஹேப் என்பவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்தும் குழந்தைகள் எதுவுமில்லை. இதனால் பாபாசாஹேப், தன் தம்பி நானாசாஹேப்பை பாபாவிடம் ஆசி பெற்று வரும்படி அனுப்பினார். பாபாவிடம் அவர் ஆசி பெற்றுச் சென்ற ஒரு வருடத்திற்குள் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் பாபாவின் சக்தி பற்றிய செய்தி அஹமத் நகர் வரை பரவியது. அதன் பிறகு சாயிபாபாவைப் பார்க்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 

(தொடரும்)


நன்றி:  தினத்தந்தி - ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...