Friday, September 13, 2013

கவலைப்படாதே- என் வார்த்தையை நம்பு.




என் செல்லக்குழந்தையே!

                    இன்றைய தினம் உனது இதயம் எதற்காக குழம்பிக் கொண்டிருக்கிறது என்பதை ஊடுருவிப் பார்க்கிறேன்.  உனக்காக சாப்பிட்டு, உனக்காக வாழ்ந்து உன்னை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் போராடிப் போராடி ஒரு நிலைக்கு வந்துவிட்ட நீ, இப்போதெல்லாம் உனக்காக சாப்பிடுவதில்லை. உனக்காக வாழ்வதில்லை. உன்னை வளப்படுத்திக் கொள்ளவும் நினைப்பதில்லை. மாறாக, உனது எண்ணங்கள் அனைத்தும் உன் பிள்ளைகளைச் சுற்றியே ஓடிக் கொண்டிருக்கிறது.
                   பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும், அவர்கள் எதிர்காலமும், குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தே ஒவ்வொரு நாளையும் கழிக்கிறாய். ஆனால் உன் பிள்ளைகளின் நிலை உன் எதிர்பார்ப்புக்கு ஒத்து வருகிறதா என்ன? இல்லையே?
                   உனது பிள்ளைகள் உன் பேச்சுக்கு முக்கியத்துவம் தராமல், தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டதால் தன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறார்களே!  அவர்கள் உருப்படாதவர்களாகப் போய்விட்டால் என்ன ஆவது என்ற குழப்பத்தில் நீ தவிக்கிறாய், எதைப் பற்றியுமே கவலைப் படாதவர்கள் போல அவர்கள் தம் போக்கில் போய் உன் மனதை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
                  உன் எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது உனக்கு நிறைய கடமைகள், பொறுப்புகள் இருக்கின்றன. பலருக்கு பதில் சொல்லும் நிலையில் இருக்கிறாய். உனக்குக் கீழே பலர் இருந்தாலும்கூட நீ தானே பொறுப்பானவனாக நம்பப்பட்டு இருக்கிறாய். காலை முதல் உறங்கும் வரையில் குடும்பத்தை தாண்டி உனக்கு கடமைகள் காத்திருக்கின்றன. இந்த நிலையில் இப்படி ஓய்வும் இல்லாமல் உறக்கமும் இல்லாமல் உன்னை வருத்திக் கொண்டிருந்தால் எப்படி?
                   என் பிள்ளைக்கு ஓய்வும் இல்லை, மனதுக்கு இளைப்பாறுதலும் இல்லை என்ற கவலை என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கிறது. வெளியே திடமாகத் தெரியும் உன் உடலுக்குள் இருக்கிற மென்மையான மனது பிள்ளைகளால் நைந்து நைந்து கிழிந்து போயிருக்கிறது. தன்னந்தனியே உன் விழிகள் சிந்திய கண்ணீர் இப்போது வெளிப்படையாய் வழிகிறது.
எந்த நேரத்தில் என்ன நடக்குமோ, எப்போது மானம் மரியாதை போகுமோ என்ற பயத்தில், பிள்ளை பெற்ற சந்தோக்ஷத்தைவிட அதிக துக்கம் உனக்கு. உன் பிள்ளைகளால் உன் நல்ல பெயருக்கு வந்துகொண்டிருக் கும் களங்கம் தொடர்கதையாகிப் போனால் என்ன செய்வது என்று தவிக்கிறாய்.
எப்படியாவது இவர்கள் திருந்தி நல்லவர்களாக மாட்டார்களா? என்று அனுதினமும் நீ என்னிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறாய். உன் மனம் அங்கலாய்க்கிறது.
                   நான் இப்படியெல்லாம் இங்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். என்னை கண்டுகொள்ளவே இல்லையே தந்தையே என என்னை நோக்கி நீ கதறுவதையும், நான் பதில் சொல்லாமல் இருப்பதாக நினைத்து தவிப்பதுமாக இருப்பதால், உன் கடமைகளில் உன்னால் கவனம் செலுத்த முடியவில்லை. குடும்ப நிம்மதி, கவுரவம் போனதாக, உறவுகள் பகைகளாக, நண்பர்கள் சந்தேகப்படுகிறவர்களாக, உனது நேர்மை சந்தேகிக்கப் படுவதாக உனக்குத் தெரிகிறது.

என் மகனே- மகளே-

                  நீ என்னை அறியும் முன்பாகவே நான் உன்னை அறிந்திருந்தேன். நீ உனது தாயின் கர்ப்பத்திற்குள் வருவதற்கு முன்பே உன்னைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். நான் பூர்வத்திற்கும் முந்தியவன், எனக்கு துவக்கம் என்பது எப்படி இல்லையோ, அப்படியே முடிவு என்பதும் இல்லாததால், நீ முதன் முதலாக என்னால் படைக்கப்பட்டது முதல், கர்ம வினையாற்ற எடுக்கின்ற ஒவ்வொரு பிறவியையும் அறிவேன். இந்தப் பிறவியையும், இனி வரும் பிறவிகளையும்கூட நான் அறிவேன். இதனால்தான் என்னை எல்லாம் அறிந்தவன் என்று சொல்லுகிறார்கள்.
நான் தெரிந்துகொண்ட சாமாவே- உன்னை எப்படி நான் கைவிடுவேன்? எனக்காகவே தன்னை தேய்த்துக் கொண்ட லட்சுமி பாயே- உன்னை எப்படி மறப்பேன்?
                  கவளம் கவளமாய் சோறிட்டு, கண்ணீரை கை கழுவக் கொடுத்த உன்னை விட்டு எப்படி நான் விலகியிருக்க முடியும்? உன் சரீரத்தைப் பெற்ற தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்பதை அறிந்துகொள்வாயாக.
                  உன்னை பாதுகாப்பதற்காக நான் உன் உடனேயே இருக்கிறேன், ஒவ்வொரு நொடிப் பொழுதும் உன்னை தேற்றுகிறேன். ஆனாலும் மாயைத் திரை என்னிட மிருந்து உன்னை மறைக்கும் போது நீ படுகிற துக்கத்தைக் காண சகியாமல் நான் தவித்துப் போகிறேன்.
                    நான் வெறும் விக்கிரகமோ, போட்டோவோ அல்ல. இன்று முழச் சரீரத்திலிருந்து பேசாமல் போனாலும் சர்வாந்தர்யாமியாக சகல இடங்களிலும் வியாபித்து உனக்காக நான் உலவிக் கொண்டு இருக்கிறேன். மூச்சுக்களில் உன் உடலை தளர்த்தி சுகப்படுத்தும் பெருமூச்சாக இருப்பது நான். காற்றுகளில் உன்னை காக்கிற பிராண வாயுவும் நான். துக்கத்தில் நீ அழும்போது துடைக்கிற கைகளும் நானே-
                   என் குழந்தாய் அழாதே- மனதைத் தேற்றிக் கொள். கர்மத்தின் தீவிரத்தை நான் இதுவரை அனுமதித்தேன். அது உனக்குக் கேடாக இருந்தது. உன் பெயரைக் கெடுக்கும் வகையில் அவர்கள் போய்விட்டார்கள். இனி அது நடக்காது. நடக்கவும் விடமாட்டேன்.  உன் துக்க நாட்கள் முடிந்து போயின. நெடுங் காலம் பாழாய்க் கிடந்தவைகளை கட்டி, பூர்வ காலம் முதல் நிர்மூலமாகப் போனவைகளை மீண்டும் எடுத்துத் தந்து, தலை முறை தலைமுறையாக பாழாகிப் போனவைகளை மீண்டும் புதுப்பிப்பேன். இனி உனக்கு நானே நிரந்தரமான வெளிச்சமாக இருப்பேன்.
                    நீ சந்தோக்ஷமாக இரு. துக்கத்தை விடு. எத்தனை வந்தாலும் ஒருநாள் முடியப்போகிறது என்ற உண்மை உணர்ந்துகொள்.
இன்னொன்றையும் உனக்குச்சொல்கிறேன். உனக்குப் பிள்ளைகள் எப்போது பிறந்தார்கள்? நீ வாலிப வயதில் இருந்தபோது, இப்படியெல்லாம் நடக்கும் என நினைத்துப் பார்த்திருக்கிறாயா? அவர்கள் உனக்குப் பிறந்தபோது, இப்படி எல்லாம் எதிர்காலத்தில் நடந்து கொள்ளப் போகிறார்கள் என்று எண்ணினது உண்டா?
                     இப்போது நடக்கும் நிகழ்வுகள் நின்றுபோகுமா? நாளையும் தொடருமா? என்று நீ ஏன் குழம்பிக் கொண்டு இருக்கிறாய். நடந்ததும், நடப்பதும்,நடக்கப்போவதும் ஆகிய எதுவும் உன் கைகளில் இல்லை. உன்னால் நடந்ததும் இல்லை. எதற்குமே பொறுப்பாளியில்லாமல், வெறும் சாட்சியாக இருக்கிற நீ ஏன் குழம்பிக் கொண்டிருக்கிறாய்?
எங்கு தீர்வு கிடைக்கும் என்று தீர்வுகளைத் தேடிக் கொண்டு ஓடுவது ஏன்? உனக்குள்ளேயே என்னை வைத்துக் கொண்டு என்னைத் தேடித்தேடி ஊர் ஊராக ஓடுவதும், என் பெயரை மறந்து வேறு பெயர் பெயராக உச்சரித்தும் அலைவதும் ஏன்?
                      என்னை மறந்தவர்களின் குழந்தைகளை நான் கைவிடுவேன். ஆனால் என்னை நினைப்பவர்களுக்கு தலை முறை தலைமுறையாய் நான் துணை செய்வேன். நீ என் பிள்ளை. என் தாசன். நான் தெரிந்துகொண்டவன். என்னால் தேர்வு செய்யப்பட்டவன். உன்னை நான் எப்படி கைவிட முடியும்? இதை யோசித்துப் பார்.
                        இருந்த இடத்திலிருந்து என்னிடம் பேசு. உன் கவனத்தை மனத்தை என் பக்கம் திருப்பு. நான் பார்க்கிறேன். நான் கேட்கிறேன். நான் செய்கிறேன்
உன் உள்ளம் சரியாக வேலை செய்வதில்லை. அது மனம் சொல்வதைக் கேட்கிறதே தவிர, அதற்குள்ளும் சிறு நம்பிக்கையாய், ஆறுதலாய் ஒன்று எழுந்துவந்து அவ்வப்போது தேற்றுகிறதே- அது எங்கிருந்து வருகிறது என்று யோசிக்கவில்லை.அது உன் ஆத்மாவிலிருந்து வருகிற என் வார்த்தை. ஆழ்மனதில் இருந்து நான் அனுப்பி வைக்கிற நம்பிக்கை அது.
இதை நீ கவனிக்க மறுக்கிறhய். உன் மனதின் எண்ண அலைகளால் என் வார்த்தைகளை மூடிவிடு கிறாய். எழுந்து வரும் என் குரலை துவக்கத்திலேயே நீ நசுக்கிவிடுகிறாய். என் வார்த்தையைக் கேட்பாய் என்று காத்திருந்தேன். நீ கவனிக்கவில்லை. இப்போதாவது என் வார்த்தையைக் கேள். என் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொள். உன் பிள்ளைகளுக்குத் தேவையானதை செய்து தந்திருக்கிறாய். அது மட்டும்தான் உனக்கு நான் இட்ட வேலை. அதை நிறைவாகச் செய்திருக்கிறாய் என்ற அளவில் நிறுத்திக் கொள்.
வெறும் உடலுக்குச் சொந்தக் காரனான நீ, உன் பிள்ளை உன் பிள்ளை என்று துடித்துக்கொண்டும், தவித்துக்கொண்டும் கிடக்கிறாயே- உன் மரமண்டையில் நானே இப்படி என்றால், உயிருக்கும், அதில் ஒளிந்திருக்கும் ஆத்மாவுக்கும் சொந்தக்காரனான சாயி, எவ்வளவாய் இந்தப் பிள்ளைக்காக பரிதவிப்பான்? எவ்வளவு கண்ணும் கருத்துமாய் பாதுகாப்பான் என்ற சிந்தனை உனக்குத் தோன்றவே இல்லையே-
                   உன்னை விட நானும், என் வார்த்தைகளும் மேலானவை அல்லவா? உன் பிள்ளை இட்லியைக் கேட்டால் கல்லைக் கொடுப்பாயா? குளிர்பானம் கேட்டால் விஷ‌த்தைக் கொடுப்பாயா? அற்பமான நீயே இப்படி என்றால் அனைத்துக்கும் மேலான நான் எப்படி என்பதை கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கமாட்டாயா?
                     எனவே, என் குழந்தையே- இனி உன் பிள்ளைகள் பற்றி கவலைப்படுவதை விட்டுவிடு. பாரத்தை என் மீது வைத்துவிடு. மீண்டும் நீ அதை எடுத்து சுமந்து கொண்டிருக்காதே. அது உன் வேலையல்ல.
இன்றைக்கு அவர்களின் அடாத செயல்கள் அனைத்திற்கும் ஒரு விடிவு பிறந்திருக்கிறது. நான் முழுமையான கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்.
உன் முந்தை வினை கழியவும், அவனது முந்தை வினை தொடரவும் இப்படிப்பட்ட செயல்களை நான் அனுமதிக்க வேண்டியதாகிவிட்டது. அது மட்டுமல்ல, என் ஆணைப்படி என் பிள்ளையாகிய உன் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்க வேண்டும் அல்லவா? அதற்கு அவனுக்கு பாடங்களைப் புகட்டவும் அவர்கள் மனதை நான் இப்படி சிதைத்து, பிரித்து அடங்காதவர்களாகவும், அக்கிரமம் நிறைந்தவர் களாகவும், பொல்லாதவர்களாகவும் நடக்க விட்டிருக்கிறேன்.
                     உனக்கு அவர்கள் ஏற்படுத்திய இழப்புகளின் மதிப்பு கணக்கில் அடங்காது. மன வலி சொல்லி மாளாது. அவர்களுக்காக நீ சிந்திய கண்ணீரின் அளவை அளக்கவும் முடியாது. எல்லாம் உண்மை தான். இனி எல்லாம் குறைந்து போகும். இது உன் வேலையல்ல. என் வேலை.
வெளிப்படையாக உன் கண்கள் பார்க்கும் வகையில் உன் பிள்ளைகளை நான் சீர் திருத்துவேன். என்ன நடந்தாலும் அது என்னால் நடக்கிறது என நீ பொறுமையாக இரு. கை கட்டி வேடிக்கை பார். அவர்களை திருத்தி, அவர்கள் செய்கைக்காக அவர்களை வருந்த வைக்கிறேன். நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உயர்த்தியும் காட்டுகிறேன்.
                           கவலைப்படாதே- என் வார்த்தையை நம்பு. நீ என்னிலும், நான் உன்னிலும் இருக்கும்போது எல்லாமே நல்லதாகவே நடக்கும்.  நான் இதை உனக்கு சும்மா செய்யமாட்டேன். இரண்டு பைசாக்களை எனக்காக எடுத்து வை. (நம்பிக்கை மற்றும் பொறுமை) அதைப் பெற்றுக்கொண்டுதான் உனக்காக வேலை செய்வேன்.

எதுவும் தாமதமாகாது, தைரியமாக இரு.

அன்புடன் அப்பா சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...