Monday, March 31, 2014

தன்னம்பிக்கை வேண்டும்

எல்லா இதழ்களிலும் சாயி பக்தி, தன்னம்பிக்கை என்று வலியுறுத்திக் கொண்டே இருக்கிறீர்களே, இது உங்களுக்குப் போரடிக்கிற விக்ஷயமாகப் படவில்லையா?
(ஆர். காண்டீபன், சென்னை - 33)
உலகப்பற்றில் உழன்று கிடப்பவனிடம் சிறிது சிறிதாக வைராக்கியத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அவனுக்கு உலகப் பற்று கொஞ்சம் கொஞ்சமாகத் தணிகிறது. என்று பகவான் ராமகிருஷ்ணர் கூறுவார்.
நான் மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்தும்போது, பக்தி குறைவானவர்களுக்குக் கூடுதல் தன்னம்பிக்கை ஏற்பட்டு வலிமை ஏற்படுகிறது.


சாயி புத்ரன் பதில்கள்

Sunday, March 30, 2014

நல்லவர்களுக்கு சோதனை ஏன்?

நல்லவர்களுக்கு மட்டும் சோதனைக்கு மேல் சோதனை, கஷ்டங்கள் வருவது ஏன்?
( கே.பி. பவித்ரா, விருத்தாச்சலம்)
நல்லவர்கள் கெட்டவர்கள் என யாரையும் பேதம் பார்த்து கஷ்டம் வருவதில்லை. கஷ்டப்படுகிறவர்களுக்கு அனுபவத்திற்காகவும், பிறருக்குப் பாடமாக அமைவதற்காகவும் கஷ்டங்கள் வருகின்றன.
நான் ஒருமுறை, என் வீட்டுச் சுவரை உளி வைத்து உடைத்துக்கொண்டிருந்தேன். உளி மழுங்கிவிட்டது. கொல்லனிடம் கொடுத்து, பழுக்கக் காய்ச்சி கூராக்கி எடுத்து வந்து மீண்டும் உடைத்தேன். உளியின் தலையில் சுத்தியல் பட்டு, அது தலைப் பக்கத்திலும் பிசிறுகள் சிதறின.
அப்போது, அந்த உளி என்னிடம், நீ சுவரை உடைப்பதற்காக என்னை ஏன் இப்படி அடித்து, நெருப்பிலிட்டுக் காய்ச்சி வடித்து, மீண்டும் மீண்டும் அடிக்கிறாய்? நான் தப்பிப் போகாதபடி என்னை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு என் தலையிலேயே அடிக்கிறாயே நீ தலையில் அடிக்கிற வேகத்திற்கு, என் கால்கள் கடினமான காங்க்ரீட் ஜல்லியில் இடி படுகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் தாங்கமுடியாத அளவுக்கு அடிபடுகிறேன் என்று சொல்வது போல இருந்தது.
என்ன செய்வது? எனக்குத்தேவையில்லாத ஒன்றை நீக்குவதற்காகவே, பெரிய இரும்பாக இருந்த நான் உன்னைத் துண்டாக வெட்டியெடுத்து உளியாக  வடித்தேன். இப்போது உன்னைச்சிரமப் படு;த்தினால்தான் தேவையற்ற ஒன்றை என்னால் நீக்க முடியும் என்பதால் உன்னை அடிக்கிறேன் என்று சொன்னேன்.
மாமல்லபுரத்திற்குச் சென்ற போது, கல்லின் மீது உளியைப் பொருத்தி, சுத்தியலால் ஒருவன் அடித்து அடித்து கல்லை உடைப்பதைப் பார்த்தேன். கல் உடைந்து சிலையாக வேண்டுமானால், உளி அடிபட்டுத்தான் ஆகவேண்டும்.
பிறர் நன்மை பெற வேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
நீண்ட இரும்புக் கம்பியாக இருந்த ஒன்றை துண்டாக வெட்டி உளியாக்கி பயன்படுத்துவதைப் போல, பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்களாய் இருந்த உன்னை, மானுடனாய் கடவுள் பிறக்க வைத்தது, அவன் தன் தேவைகளை உன்னை வைத்துப்பூர்த்தி செய்து கொள்ளவே!
நாம் பயன்படுத்துகிற அழகு சாதனம் முதல், அணிந்து கொள்ளும் நகைகள், கட்டுகிற கடிகாரம் உட்பட அனைத்துமே அடிபட்டதால் உருவானவை. அனுபவிக்க மட்டுமே நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, எதற்காக என்று கேள்வி கேட்க நமக்கு உரிமையில்லை.
கேட்டாலும் இறைவன் நம்மை விடமாட்டான் என்பதைப் புரிந்து கொண்டேன் நான். எதற்காகவோ இந்தக் கஷ்டத்தை கடவுள் அனுமதித்து இருக்கிறான் என நினைத்து சகித்துக் கொள்ளுங்கள்.. அதிலும் சந்தோக்ஷம் இருக்கத்தான் செய்கிறது.


சாயி புத்ரன் பதில்கள்

Saturday, March 29, 2014

போலித் துறவறம்!

நான் எல்லாவற்றையும் துறந்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நிறைய பகட்டு, ஆடம்பரம் இருக்கிறது. இது எதைக் குறிக்கிறது?
( சாயி சம்பத், வேலூர் 2)
போலித் துறவறத்தைக் குறிக்கிறது.
ஆந்திராவில் பரத்வாஜ் சுவாமிகள் இருந்தார். மெத்தப்படித்தவர், சாயியின் தீவிர பக்தர். அந்தப் பகுதியில் நிறைய சாயி கோயில்கள் அமையத் தூண்டுகோலாக இருந்தவர், பலரை சாயி பக்தியில் வழிநடத்தியவர். வசதியுள்ளவர். ஆனால், அவர் மிக எளிமையாக வாழ்ந்து சமாதியானார். சட்டையைக் கூட அயர்ன் செய்து போட மாட்டாராம். அப்படிப்பட்ட மகான் வாழ்ந்த ஆந்திராவிலேயே, இன்னொரு சாயி சாமியார் இருக்கிறார். ருத்ராட்க்ஷ கொட்டையில் தங்கத்தைச் சேர்த்து மாட்டியிருக்கிறார். துறவிக்கு தங்கமும் தகரமும் ஒன்றாக இருக்க வேண்டும். ருத்ராட்சை துறவின் அடையாளம். அதில் தங்கம் கலப்பது லவுகீகப் பெருமை.
பெண்கள் ஒரு புடவை எடுத்தால் அதற்கு மேட்சிங் ப்ளவுஸ் எடுப்பார்கள். அது போல சில துறவிகள் மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். அதற்கு மேட்சிங்காக மண்டை நிறைய பட்டையும் அடித்துக்கொள்கிறார்கள்.
புத்தகத்தைப் படித்து துறவியானால் இந்த நிலை நீடிக்கும். அனுபவத்தின் மூலம் துறக்கவேண்டும். அப்போதுதான் எதன் மீதும் ஆசையிருக்காது.
துறவிகள் எப்படியிருந்தால் நமக்கென்ன, நாம் சாயியை மட்டுமே பார்த்து, அவரது போதனைப்படி வாழ்ந்தால் போதுமானது.


சாயி புத்ரன் பதில்கள்

Friday, March 28, 2014

அற்புதங்கள் செய்வது எதற்காக?


பகவான் அற்புதங்கள் செய்வது எதற்காக?
(கௌசல்யா ராமானுஜம், திருவல்லிக்கேணி, சென்னை - 4)
அற்புதங்கள் என்பவை ஒரு மாடிக்குச் செல்வதற்குச் செல்வதற்கு இருக்கும் படிக்கட்டுகள் போன்றவை. ஒவ்வொரு படியாக ஏறினால் எப்படி மாடியை அடைந்துவிடுகிறோமோ, அப்படி ஒவ்வொரு அற்புதமும் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கின்றன.



Thursday, March 27, 2014

பாபா

   என்னிடம் சரண் 
   புகுந்தவன் தேவைகள்
    யாவற்றையும் நான்
     கவனித்துக் கொள்கிறேன்.
     எந்த ஒரு சிறிய 
      நிழற்படத்திலும்
      நிஜமாக 
     இருக்கிறேன்.

சுகம் பெற சுலப வழி!



     மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசை பாடினாலும், கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்து கசப்பாகவோ, மனம் புண்படும் படியாகவோ பேசாதே. அதைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வாயாக.      அதனால் உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும்.

என் மீது பாரத்தை வைத்துவிடு!

என் பெயர் ராம திலகம். கோவையில் வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் கண்ணன். எங்களுக்கு நிவேதா, சாய் ஹரீஷ் என இரண்டு குழந்தைகள்.
     என் குடும்பத்தில் சாயி ஆசீர்வாதம் நிறைய உண்டு என எப்பொழுதும் நம்பிக்கொண்டிருக்கிறேன். சமீப காலமாக இன்னும் அதிகமுள்ளதை உணர்கிறேன்.
     அப்பா அம்மா இல்லை, குடும்பத்தினர் உறவு சொல்வது போல் இல்லை. எனக்கு எல்லாமான பாட்டியும் தவறிவிட்டார். இப்பொழுது எனக்கு எல்லாமாக பாபா மட்டுமே இருக்கிறார்.
     நாங்கள் வீடு கட்டினோம். இஞ்சினியர் குறிப்பிட்ட நாளில் முடித்துத் தருவதாகக் கூறியதை நம்பி, அழைப்பிதழை அச்சிட்டு கொடுத்துவிட்டோம். ஆனால் வேலை முடியவில்லை. என் கணவர், கிரகப்பிரவேசம் வேண்டாம் எனக் கூறிவிட்டார்.
     அதை என்னால் ஏற்கமுடியவில்லை. என்னை பாபா கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். பிறகு பதில் சொல் கிறேன் என்று கூறி, பாபா கோயிலுக்குச் சென்று அங்கு பாபாவிடம் என் மனதில் உள்ளதைக் கூறி அழுது வேண்டிக் கொண்டு, பத்திரிகையை வைத்து, எனக்கென யாருமில்லை. நீதான் வந்து எனக்கு எல்லாவிதமான உறவுமாக இருந்து, கிரகப்பிரவேசத்தை நடத்தவேண்டும் எனக் கூறி விட்டு, இதையும் சொன்னேன்:
     “ஒரு சாயி பக்தை தன் திருமணத்திற்கு பாபாவை வரவேண்டும். நீ வந்தால்தான் எனக்குக் கல்யாணம் என்று சொல்லி பத்திரிகையைக் கொடுத்துச் சென்றாள். கல்யாணத்தில் பாபா முதல் வரிசையில் நின்று அவளை ஆசீர்வதிப்பதைப் புகைப்படத்தில் பார்த்தாள். இது எவ்வளவு உண்மையோ, அதைப் போல் எனக்கு நீங்கள் வந்து முதலில் வரவேற்பில் நின்று அனைவரையும் வரவேற்க வேண்டும்! என வேண்டி விட்டு திரும்பினேன்.
     பாதி வழியில் பாபாவின் படம் வாங்க வேண்டும் எனத் தோன்றியது. திரும்ப கோயில் சென்று என்னிடமிருந்த இருநூறு ரூபாய்க்கு போட்டோ வாங்கினேன். அதில் ‘என் மீது உனது பாரத்தை வைத்துவிடு என்றிருந்தது. பாபா வீடு வந்த ஒரே முழு நாளில் என் வீட்டு வேலை முடிந்து விட்டது.
     பாபாவை என் வீட்டு வரவேற்பறையில் வைத்திருக்கிறேன். அவரும் அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருக்கிறார். கன்னத்தில் கை வைத்திருக்கும் பாபாவை விட, கூட ஒரு விநாயகர் படத்தை வைக்குமாறு என் பெரியம்மா சொன்னார். அதை மறுத்துவிட்டோம்.
     எங்களுக்கு ஆண் வாரிசு இல்லை. எனக்கு ஆண் வாரிசு கொடுத்தால் சீரடிக்கு வந்து ஐயாயிரம் ரூபாய் காணிக்கை செலுத்துவேன் என வேண்டினேன். எனது வேண்டுதலைக் கேட்டு ஆண் வாரிசு தந்தார்.
     காணிக்கை தர மறந்துவிட்டேன். அதை என்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டார்.
     ஒரு பூஜையின் போது பாபா என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது. சமீபத்தில் நானும் பாபாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போலும், பாபாவுக்கு நான் சாப்பாடு போடுவது போன்றும் எனக்கு ஓர் உணர்வு ஏற்பட்டது. இது உண்மையா? கற்பனையா? என்று எனக்கு விளங்கவில்லை.

ராமதிலகம், துடியலூர், கோவை



(உண்மைதான் மகளே)

Wednesday, March 26, 2014

ஸாயியின் அமுதமொழி

செல்வமும் சுபிட்சமும் நிலையற்றவை. இவ்வுடல் அழிவிற்கும், மரணத்திற்கும் உட்பட்டது. இதை உணர்ந்து இம்மை மறுமைப் பொருட்களின் மீதுள்ள பற்று அனைத்தையும் விட்டுவிட்டு உனது கடமையைச் செய். இவ்வாறாகச்செய்து எவன் ஹரியின் பாதங்களில் சரணாகதி அடைகிறானோ அவன் தொல்லைகள் யாவற்றினின்றும் விடுபட்டு பேரானந்தப் பெருநிலை எய்துகிறான். அன்புடனும் பாசத்துடனும் எவன் அவரை நினைத்துத் தியானிக்கிறானோ பரமாத்மா அவனுக்கு ஓடிச் சென்று உதவி புரிகிறார். உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம். எனவே நீ இங்கு வந்துள்ளாய்.

                                          சென்னை துறவியிடம் பாபா

Tuesday, March 25, 2014

இது தவறு இல்லையா?

சிலர் தங்களை பாபா போல நினைத்துக் கொள்கிறார்களே, இது தவறு இல்லையா?
( ஆர். சுந்தரராஜன், பாண்டிச்சேரி)
எல்லோரும் பாபாவாக தம்மை நினைத்துக்கொள்வதில்லை. அவர் மீது பக்தி செலுத்தி, அவரது தன்மையைப் பெற்றவர்கள் மட்டும் அப்படி நினைத்துக் கொள்வது உண்டு.
எப்படியெனில், கடலில் கற்களும், சிப்பிகளும் உள்ளன. அவற்றை மீண்டும் தூக்கி கடலில் போட்டால், அப்படியே இருக்கும். ஆனால், கடல் நீரைக் காய்ச்சி ஆவியாக்கினால் கிடைக்கிற உப்புக்கல்லை, மீண்டும் கடலில் போட்டுப் பாருங்கள்.
உப்புக் கல் என்ற ஒன்று இருக்கவே இருக்காது. உப்புக்கல்லும் கடல் நீரும் ஒன்றாக இருக்கும். கடவுள் கடல் -  உப்புக் கல் அவரது பக்தன்.
எல்லோரும் பக்தராவது இல்லை. பக்தர் ஆகிறவர்கள், பலவித இன்னல்களைக் கடந்து, அவரோடு ஒன்றிப் போனவர்கள். தான் என தனித்தவர்கள் நாமில்லை என்பதைப் புரிந்துகொண்டவர்கள். அவர்கள் பாபாவாக இருப்பதை உணராமல், அப்படி நினைப்பது அவர்களின் அறியாமை.


Monday, March 24, 2014

நீங்காத புகழுடையவர்!


ஓராண்டுக்கு முன்னால் ஸ்தூலதேகத்தோடு வாழ்ந்து, இன்று அருள் உடம்பால் அனைவருக்கும் அருள் வழங்கும் நாகராஜ பாபா அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறோம்.
     சாயி தரிசனம் வளர்ச்சிக்கு அவர் காட்டிய அக்கறை, சாயி பக்தர்கள் மீது அவர் பொழிந்த அருள் மழை, வேறு எவரும் செய்திராத செய்கையாகும்.
     ஐயாவின் ஓராண்டு சமாதி நாள் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் எளிமையாக அனுஷ்டிக்கப்பட்டது. அவர் உருவாக்கியுள்ள ஆலயங்கள் மிகப் பெரிய அளவில் வளர சாயியிடம் பிரார்த்தனை செய்கிறோம்.
     நாகராஜ பாபா இன்றும் வாழ்கிறார் என்பதற்கு சான்றாக அவரது புகைப்படத்திலிருந்து விபூதிப் பிரசாதம் கொட்டுவதை சிட்லப்பாக்கம் சாயி பாபா ஆலயம் செல்வோர் இன்றும் கவனிக்கலாம்.

     ஐயாவின் குடும்பத்தாருக்கு சாயி தரிசனம் தனது வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறது.

யாரிடமும் விசாரிக்காதே!


லாலா லக்மிசந்த், ஒரு கிழவர், தனது பக்தர்கள் புடை சூழ நின்று கொண்டிருப்பதாக கனவு கண்டார். தாசகணு மகராஜ் கீர்த்தனை செய்யும்போது வைத்திருந்த படத்தைப் பார்த்துவிட்டு, அதில் இருப்பவரே தான் கண்ட கிழவர் என்பதை உறுதி செய்து கொண்டார்.
     சீரடிக்கு அவர் ரயிலில் வரும் போது, சீரடியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த இரண்டு முகமதியர்களிடம் பாபாவைப் பற்றி விசாரித்தார். அவர்கள், “பாபா ஒரு மாபெரும் ஞானி என்று சொன்னார்கள்.

     லக்மிசந்த் சீரடிக்கு வந்த போது, அவரைப் பார்த்த பாபா, ‘வஞ்சகமான ஆசாமி. வழியில் பஜனை செய்கிறான், மற்றவர்களை விசாரிக்கிறான். ஏன் மற்றவர்களைக் கேட்கவேண்டும்? நமது கண்களாலே எல்லாவற்றையும் நாம் காணவேண்டும். மற்றவர்களை கேட்க வேண்டிய அவசியம் என்ன? உனது கனவு மெய்யா? பொய்யா என்று நீயே எண்ணிப் பார். என்று கேட்டார்.

Sunday, March 23, 2014

சத்சரித்திரம் சொல்வது!



            உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள். உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால் கடவுளிடம் இரந்து கேளுங்கள். இவ்வுலக கவுரவத்தை விட்டுவிடுங்கள். கடவுளின் அருளையும் ஆசியையும் பெற முயலுங்கள். உலக கவுரவங்களால் வழி தவறி விடாதீர்கள். இறைவனின் ரூபம் மனதில் ஸ்திரமாகப் பதிக்கப்பட வேண்டும்.
     புலன் அனைத்தும், மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாக்கப் படட்டும். வேறு எவ்விதப் பொருட்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம்.
     உடல், செல்வம், வீடு முதலிய வேறு எதைப் பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே மனத்தை ஸ்திரப்படுத்துங்கள்.
     அப்போது அது அமைதியாகவும், அடக்கமாகவும், கவலையற்றும் இருக்கும்.

ஸத்சரிதம்! அத்தியாயம் - 6

Saturday, March 22, 2014

கடைசிப் புகலிடம் பாபாவே!

பீமாஜி பாடீல் பல வியாதிகளாலும், நெஞ்சு வலியாலும் துன்பப்பட்டார். அது கடைசியில் காசநோயாக மாறியது. சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் மரணத்தை நோக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் மனதிற்குள்தான் வாழவேண்டும் என்று, கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். நானா சாகேப் சாந்தோர்க்கரை கலந்தாலோசித்து என்ன செய்யலாம் எனக் கேட்டிருந்தார்.
     பாபாவின் பாதங்களைப் பணிந்து உதவி பெறுவதே ஒரே வழி என்று சாந்தோர்க்கர் கூறினார். இதையடுத்து பீமாஜியை தூக்கிவந்து பாபாவின் திருமுன்னர் வைத்தனர். முன்னைய தீய கருமங்களாலேயே இவ்வியாதி என்று பாபா சுட்டிக் காண்பித்து முதலில் இதில் தலையிட தீர்மானம் இல்லாதவராக இருந்தார்.
     நோயாளியோ தாம் அனாதரவானவர் என்றும், அவரையே சரணாகதி அடைந்திருப்பதாகவும், அவர்தாம் தனது கடைசி கதி என்றும் கூறி அலறத் தொடங்கினார்.
     அபபோது பாபாவின் உள்ளம் உருகியது. பாபா பீமாஜி பாட்டிலை குணப்படுத்தினார். அதாவது அவரது கர்மாவின் தளையிலிருந்து விடுதலையாக்கினார். இந்த பீமாஜி பாடீல் தான் சாயிசத்ய விரத பூiஜயை சத்ய நாராயண பூஜைக்குப் பதிலாக உருவாக்கி முதலில் செய்தவர்.



சாயி சத்சரிதம் 13 ம் அத்தியாயம்

Thursday, March 20, 2014

ஜெயிக்க வழி!


மூன்று விக்ஷயங்களை தினமும் தவறாமல் செய்துவந்தால் வாழ்க்கையில் பிரச்சினைகளே இல்லாமல் ஜெயித்துவிடலாம்.

     இறைவனுக்கு அதிகாலையில் பூஜை செய்வது. நாமாவளி சொல்வது, கற்பூர ஆரத்தி, ஏதேனும் ஒரு படையல். ஒரு இலையைக் கூட படைக்கலாம்.உயிருள்ள விலங்குகள் மீது பாசம் காட்டுதல். அவை சேட்டை செய்யும்போது விரட்டாமல் சகித்துக்கொள்ளுதல். அடுத்து, தினமும் பசித்தவருக்கு ஒருவேளை உணவு தருதல். பிச்சை கேட்போருக்கு மறுக்காமல் உணவு தருதல். இந்த மூன்றையும் தவறாமல் செய்பவருக்கு இறையருள் நிச்சயம்.

உன்னுடைய மனதின் விருப்பங்கள் தாமதமின்றி நிறைவேறும்!

நமது மனதில் நிறைய ஆசைகள் இருக்கின்றன. தோன்றி மறையும் ஆசைகள், சில காலம் நீடிக்கும் ஆசைகள், நம்மையே பிடித்துக் கொண்டிருக்கும் ஆசைகள் என அவற்றை வகைப்படுத்தலாம்.
     அவையெல்லாம் நிறைவேறிவிட்டால், நாம் பூலோக குபேரனாகி விடுவோம். நம்முடைய ஆசைகள் நமது லட்சியங்களாகிவிடுவதில்லை. விருப்பங்களே லட்சியங்கள் ஆகின்றன. பார்த்த உடனே அதன் மீது மனதைச் செலுத்துவது ஆசை. அது நல்லதா கெட்டதா?
     இதனால் நாம் பலன் அடையமுடியுமா? அடைய முடியாதா என்பதையெல்லாம் ஆராய்ந்து அதன் மீது வைக்கிற ஆசைதான் விருப்பம். ஒன்றை அடையவேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பிறகு, தீவிரமாக அதைப் பற்றியே சிந்தித்தும், அதை நோக்கியே நடைபோட்டுக் கொண்டும் இருந்தால் அதை நிச்சயம் நாம் அடைந்துவிடுவோம்.
     சில சமயம், பல தடைகள் நமது விருப்பத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருக்கும். இந்த முட்டுக்கட்டையை நீக்கி நமது விருப்பத்தை எப்படி அடைவது என்பதைப் பற்றி சத்சரித்திரம் நமக்கு அழகாகச் சொல்லிக்கொடுக்கிறது.
     சத்சரித்திரம் பத்தொன்பதாவது அத்தியாயத்தில் பின் வருகிற வாசகங்களைப் படியுங்கள்.
     இந்த உலகமே தலைகீழாக மாறலாம். ஆயினும் நாம் வழி தவறிவிடக்கூடாது. நம் நிலையிலேயே உறுதியாக நின்றுகொண்டு அமைதியாக இவ்வுலகை வேடிக்கை பார்க்கவேண்டும். உனக்கும் எனக்கும் நடுவேயுள்ள மதில் சுவரை உடைத்து முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குப் போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசன்னமான பாதை கிடைத்துவிடும்.
     குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையேயுள்ள தடுப்புச் சுவர் நீங்கள் நான் என்னும் மனோபாவமே. அதை உடைத்து எறியாவிட்டால், இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடையமுடியாது. அல்லாவே யஜமானர். அல்லாவே யஜமானர்! அவரைத் தவிர ரட்சகர் வேறு எவரும் இல்லை. அவருடைய செய்கைகள் உலகியலுக்கு அப்பாற்பட்டவை. விலை மதிப்பற்றவை, கற்பனை செய்து பார்க்க முடியாதவை.
     அவர் நினைப்பதே நடக்கும். அவரே வழியைக் காட்டுவார். நம் மனத்தின் இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும். பூர்வ ஜன்மங்களின் சம்பந்தத்தினால் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பாக்கியம் பெற்றோம்.
     இதயத்தின் அடித்தளத்திலிருந்து பொங்கும் அன்புடன் நாம் ஒருவரையொருவர் தழுவுவோம். சுகத்தையும், பூரணமான திருப்தியையும் அனுபவிப்போம்!
     நாம் இந்த திருவாய் மொழிகளை தியானிக்கலாம். நமது விருப்பங்கள் நிறைவேற வேண்டுமானால் முதலாவது் நம் நிலையிலேயே உறுதியாக நிற்கவேண்டும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு - என்று திருக்குறள் கூறுகிறது.
     ஒரு வீடு வாங்க வேண்டும், ஒரு கடனை அடைக்க வேண்டும், வாழ்க்கையின் முன்னேற வேண்டும் என்று எப்படி திட்டமிட்டாலும் அதை செயல்படுத்தும் வழியில் முனைப்போடு இருக்க வேண்டும். நமது செயல்களை இந்த உலகம் பழிக்கலாம், கேலி செய்யலாம், இது நடக்காத விக்ஷயம் என ஏளனமாகப் பேசலாம், இவருக்கு வேறு வேலையில்லை என்று புறக்கணிக்கலாம். இப்படிப்பட்ட சூழல்களில் நாம் டென்க்ஷனாகிவிடக்கூடாது.
     ஒரு வேளை நமது முடிவு தவறாக இருக்குமோ எனக் குழம்பக்கூடாது. சித்தம் தடுமாறாமல் அமைதியாக உலகத்தை வேடிக்கைப் பார்க்க வேண்டும். எது எப்படியிருந்தாலும் நமது கொள்கையில் நாம் திடமாக நின்றுவிடவேண்டும். இப்படி உறுதியாக நிற்கும்போது, எண்ணியதை எண்ணியவாறு நம்மால் அடைய முடியும்.
கடவுளை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்!
     இன்றைக்கு நீங்கள் பாபாவை வணங்குவது இந்த ஜென்மத்தில் ஏற்பட்ட தொடர்பினால் அல்ல பல ஜென்மங்களில் அவர் மீது பக்தி செய்ததன் தொடர்ச்சியாகத்தான் இந்த ஜென்மத்திலும் அவர் மீது பக்தி செலுத்துகிறீர்கள். இதுவே உண்மையான நிலையாகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
     ஜென்ம ஜென்மமாய் நம்மைத் தொடர்ந்து வரும் நமது சத்குருவின் மீது நாம் அன்பு செலுத்த வேண்டும். மாறாத சுயநலமற்ற இந்த அன்பு நாளடைவில் அதிகமாகும். இவ்வாறு அதிகரிக்கிற நிலைக்குத்தான் பக்தி என்று பெயர். இந்த பக்தியை அடிப்படையாக வைத்து இறைவனை மனதிற்குள் ஆரத்தழுவுகிற நிலையை உருவாக்க வேண்டும்.
     இப்படி அவரை உங்களுக்குள் வைக்கும்போது, அவருக்குள்ளும் நீங்கள் நிலை மாறாமல் இருப்பீர்கள். இதற்கு ஒன்றுபட்ட நிலை என்று பெயர். இந்த ஒன்றுபட்ட நிலையை அடைந்து விட்டால், நாம் வேறு பாபா வேறு என்ற எண்ணம் நீங்கிவிடும். இந்த நிலையை சுலபத்தில் அடைந்து விடமுடியாது.
     அவர் பரப்பிரம்மம், நான் சாதாரண பாமரன் என்ற எண்ணம் நம்மை அவரிடம் நெருங்கவிடாமல் தடுக்கும்.
     நான் இறைச்சி உண்கிறேன், புகைக்கிறேன், சுயநலமாக சம்பாதிக்கிறேன்.. என் பெண்டு பிள்ளை என்ற குறுகிய மனோபாவத்துடன் வாழ்கிறேன் என்பன போன்ற எண்ணங்கள் தோன்றும்போது, பாபா என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்ற முடிவுக்கு மனம் வரும்.
     மற்றவர்களைப் பார்க்கும்போது அவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிற நிலையை மனம் எடுக்கும். அவர்கள் மாதிரி நம்மால் பாபாவிடம் நெருங்க முடியாது என முடிவு செய்துகொள்ளும்.
     இவையெல்லாம் நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கிற தடுப்புச் சுவர்களாகும். இவற்றை உடைத்து எறிய வேண்டும். உன்னிடம் என்ன குறைபாடுகள் இருந்தாலும் சரி, அந்த குறைபாடுகளுடனேயே இறைவனைத் தஞ்சமடை. அவர் உன்னை ஏற்றுக்கொள்வார். அவர் ஏற்றுக்கொண்டதும் குறைகள் நிறைகளாக மாறும்.
தீர்மானம் செய்
     உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தீர்மானம் செய்து வைத்திருப்பார். உலகத்தாரால் உன்னால் முடியாது என்று சொன்ன விக்ஷயங்களாக இருந்தாலும், நமது மனமே நம்மிடம் இது உன்னால்முடியாது என்று சொன்ன விக்ஷயங்களும் மிக சுலபமாக நிறைவேறும்.
     ஏனெனில் செய்யப் போவது நீயல்ல, உனக்குள் இருக்கிற அவர். அவரது செயல்கள் கற்பனைக்கு எட்டாதவை. உலகியலுக்கு அப்பாற்பட்டவை. இந்த நிலைக்கு நீங்கள் வரும்போது உள்ளம் விரும்பிய அனைத்தும் தாமதமின்றி நிறைவேறும்.
       அது எப்போது வரும்?
     பாபாவே சொல்கிறார். உனது மனதின் விருப்பங்கள் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும். அப்படியானால் இப்போது அந்த நேரமில்லை என்றுதானே அர்த்தம்.
     இதிலென்ன சந்தேகம்?
     இன்றைக்கு நீ தீர்மானம் செய்.. பாபா, இந்த உலகமே என்னை ஏளனம் செய்தாலும் நான் உன்னைப் பின்தொடர்வதை விட்டுவிடமாட்டேன். உலகமே குறைகூறினாலும் உன் மீதுள்ள நம்பிக்கையைக் குறைத்துக்கொள்ள மாட்டேன்.
     என்னை பக்தியில்லாதவன், மடியில்லாதவன், குறையுள்ளவன் என்று பிறர் கூறினாலும் மனதிற்குள் நீயும் நானும் ஒன்று என்ற எண்ணத்தோடு வாழ்வேன். நான் நினைப்பதெல்லாம் நீ நினைப்பது, நான் செய்வதெல்லாம் நீ செய்வது, என் வாழ்வில் என்ன நடந்தாலும் அது உனக்காகவும், உனக்கும் நடப்பது என்று தீர்மானம் செய்யுங்கள்.
     தீர்மானித்தபடி அவரது நாம ஜெபத்தைத் தொடங்கித் தொடருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறப் போவது உறுதி.

சாயி வரதராஜன்

Wednesday, March 19, 2014

இந்த ஆசையை பாபா நிறைவேற்றுவார்!

எனக்கு இருபத்தோறு வயதில் திருமணம் ஆனது. முதல் குழந்தை எட்டு மாதத்தில் இறந்தது. என்னுடைய இதயத்தில் இரண்டு வால்வுகளும் பழுதடைந்திருப்பதால், இனி ஒரு குழந்தையைத் தாங்கும் சக்தியிருக்காது, குழந்தை உண்டானால் உயிருக்கு ஆபத்து என்று சி.எம்.சி. டாக்டர்கள் கூறினார்கள்.
                அறுவை சிகிச்சைக்கு நாற்பது லட்சம் ஆகும் என்றும், ஐம்பது விழுக்காடு உறுதி அளிக்கமுடியாது என்றும் கூறினார்கள். மிகவும் கஷ்டப்பட்டேன்.
     வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. 2007 ல் பாபாவை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அழுது வேண்டியபோது, ஓர் அடியார் மூலம், உனக்கு பாபா துணையாக இருப்பார். நீ குழந்தையுடன் கோயிலுக்கு வருவாய் எனக் கூறினார். பாபா மீது பாரத்தை வைத்தேன், கர்ப்பமானேன்.
     டாக்டர்கள் என்னவெல்லாமோ கூறினார்கள்.எதற்கும் பயப்படவில்லை. எல்லாம் பாபாவின் செயல் என தைரியத்துடன் இருந்தேன். நவம்பர் 5, 2007 ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த அற்புதம் பாபாவால் மட்டுமே முடியும்.
                2011 ல் எனக்கு இன்னொரு ஆண் குழந்தையும் பிறந்தது. டாக்டர்கள் இதற்கு, நான் உயிருடன் இருப்பது சாத்தியமல்ல என்று கூறினார்கள். ஆனால் பாபா என்னுடன் இருப்பதால் எல்லாமே சாத்தியமாயிற்று. என் இரு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். அவர்களுக்கு சாயி பாபா என்றால் மிகவும் பிடிக்கும்.
                நான் இதுவரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. இனி செய்யவும் விருப்பம் கிடையாது. இதுவரை என்னை வழி நடத்திய பாபா இனியும் என்னை நலமுடன் காப்பாற்றுவார்.  எனக்கு வரும் வியாதிகளுக்கு, வலிகளுக்கு அவரின் உதியே எனக்கு மருந்து.
     வியாழக்கிழமை விரதம் இருப்பேன். தினமும் அவருக்கு பால் வைத்து வணங்கி விடடுத்தான் மற்ற வேலைகளைச் செய்வேன். புதுப்பெருங்களத்தூர் வரவேண்டும், சாயி வரதராஜனை தரிசனம் செய்ய வேண்டும், சீரடி செல்லவேண்டும் என்ற ஆவல். இந்த ஆசையை பாபா நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.


கே.பரிமளா

Tuesday, March 18, 2014

சரணடை காப்பாற்றுகிறேன்!

பாபா தனது பக்தர்களை எவ்வளவு தொலைவில் இருப்பினும் ஒரு சிட்டுக் குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பது போல இழுத்துக் கொள்வார் என்பதை சத்சரித்திரத்தில் படித்த அந்த அனுபவம் எனக்கு ஏற்பட்ட விதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
     2008 ல் நாங்கள் ஒரு புதிய சூழலில் ஒரு வாடகை வீடடில் குடியேறினோம். பின் வீட்டில் இருந்த பிராமணப் பெண்ணின் நட்பு கிடைத்தது. ஒரு நாள் பாபாவின் அருமை பெருமையை கூறி அவரை பூஜிப்பவர்களுக்கு மட்டும்தான் ஆரத்தி புத்தகம் கொடுப்பதாகக் கூறினார்.
     எனக்கு பாபா கோயில் இருப்பது மட்டும் தெரியும். ஆனால் அவரைப் பற்றி எதுவும் தெரியாததால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
     சில மாதங்களில் ஒரு தம்பதியரை குருவாக ஏற்று அவர்களின் புகைப்படத்தை வைத்து பூசை செய்த பக்கத்து வீட்டார் பூசையில் கலந்துகொள்ள அழைத்தனர்.
                பூசை என்றதும் நான் போய் அமர்ந்து விட்டேன். அவர்கள் நட்பின் காரணமாக, “ஒரு முறை கோயிலுக்குப் போய் வாருங்கள், குருவருளால் நாங்கள் நலமுடன் இருக்கிறோம்! என்று கூறினர்.
                எனக்கு மனிதர்களை குருவாக ஏற்க மனம் இடம் கொடுக்காது. இருப்பினும் குடும்ப நலன் கருதி சென்று வர எண்ணினேன்.
                ஒரு வெள்ளிக்கிழமை, என் மகனை அழைத்துக் கொண்டு சாய் பாபா கோயில் உள்ள அந்த பிரார்த்தனைக்கூடம் சென்றோம். அங்கு சாட்சிகளாக பக்தர்கள். நான் இப்படி பிரார்த்தனை செய்தேன். நான் இங்ஙனம் உள்ளேன் என சாட்சி கூறினர்.  
     ஒருவர் என் தொலைபேசி வீட்டு முகவரியைப் பெற்றுக்கொண்டு, நாங்கள் வந்து உங்கள் வீட்டில் கனக பூசை நடத்துகிறோம். அதன் பிறகு நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள் என ஆசை காட்டினார். சிறிது நேரம் அங்கேயே இருந்து வேடிக்கைப் பார்த்து விட்டு வீடு திரும்பினோம்.
     பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் விட்டுப்போன எனது கல்வியைத் துவக்கினேன். ஒன்பது வார விரதத்திற்குப் பிறகு, படிப்பில் சற்று பின் தங்கியிருந்த என் மகள் எனது மனம் குளிரும்படி பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றாள். பள்ளி அறிவிப்புப் பலகையில் என் மகள் படம் இடம் பெறவில்லையே என கண்ணீர் சிந்தினேன். அதைத் துடைத்தெறிந்தார் என் பாபா. என் மகளுக்கு அடிக்கடி வலது கால் முட்டியில் வலி வரும். வலியால் துடிப்பாள்.
     ஒரு நாள் இரவு பதினோறு மணி. மருந்து வாங்க முடியாது. இருப்பினும் என் கணவரை மருந்து வாங்கி வருமாறு அனுப்பினேன். பின் உதியின் நினைவு வந்தது. எழுந்துச் சென்று பாபாவிடம் பிரார்த்தனை செய்து மிகுந்த நம்பிக்கையுடன் உதியை வலித்த இடத்தில் தடவி விட்டேன்.
     என்னே அதிசயம்! வலி மாயமாக மறைந்துவிட்டது. வாங்கி வந்த மருந்தின் தேவை இருக்கவில்லை. அன்றுதான் பாபாவின் உதியின் மகிமையைப் புரிந்துகொண்டேன்.
     ஜூன் 2, 2013 அன்று என் சித்திப் பையன் திருமணத்திற்குச் சென்றோம். நானும் என் மாமியாரும் அங்கேயே இரவு தங்குவது என முன் ஏற்பாடாகச் சென்றோம். திருமண விழா நடை பெற்று முடியும் தருணத்தில் என் கணவர் தான் மட்டும் வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டு காலை முகூர்த்தத்திற்கு வந்துவிடுவதாகக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
     ஓரிரு நிமிடங்களில் அவர் கால் இடறி கீழே விழுந்துவிட்டதாக வந்து கூறினார்கள். ஓடிச் சென்று பார்த்தோம். அவரால் இடது காலை நகர்த்தக் கூட முடியவில்லை. எப்படிப்பட்ட வலியையும் பொறுத்துக் கொள்பவர், காலைத் தொட்டாலே கதறினார். அருகிலிருந்த எலும்பு முறிவு சிகிச்சை மையம் சென்றோம். அங்கு சென்றபோது அந்த அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்கள். இடுப்பு எலும்பு முறிந்து விட்டது என்று! அறுவை சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும், அறுவை சிகிச்சையை அவர் உடல் தாங்காது என்றும், நாங்கள் சம்மதித்தால் மட்டுமே அறுவை செய்வோம் என்றும் மருத்துவர் கூறினார். இதைக் கேட்டு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. மருத்துவர் கூறியதற்கும் ஒரு காரணம் இருந்தது.
     சிறுவயது முதலே என் கணவர் இதய நோயாளி. இதயத்தில் ஓட்டை இருப்பது தெரிந்தே திருமணம் செய்துகொண்டோம். திருமணமாகி எந்த ஒரு பிரச்சினையும் இருபது ஆண்டுகளாக வரவில்லை.
     இப்போதுதான் முதன் முறையாக பிரச்சினை. அதுவும் உயிருக்கு உத்தரவாதமில்லை என்கிற அளவுக்குப் பிரச்சினை.
     அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைப்பார், இல்லாவிட்டால் படுக்கை நோயாளியாகி விடுவார் என்ற நிலையில், எல்லோரும் ஜோதிடம், கோயில் என படையெடுக்க நினைக்க, நானோ என் பாபாவை மட்டுமே நினைத்தேன்.
     பத்து அடி வைத்தால் பாபா கோயில். அங்கு சென்று மனம் உருகி பிரார்த்தனை செய்தேன். பிறகு, தைரியத்தோடு அறுவை சிகிச்சை செய்வதற்குச் சம்மதம் சொன்னேன். என் கணவருக்கு தைரியமும் ஆறுதலும் கூறி அருகிலிருந்தேன்.
     கணவரை மருத்துவர்கள் அறுவை அரங்கிற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் திரும்ப அழைக்கும்வரை பாபாவைத் தவிர யாரையும் நினைக்கவே யில்லை. மருத்துவர்கள் அழைத்த போது ஓடிச் சென்று பார்த்தேன்.
     என் கணவர் மங்கலகரமாக, நான் வைத்த அதே திலகத்துடன் இருந்தார். மகிழ்ச்சியில் அவரது கையைப் பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டேன். அவரும் பரிவோடு என் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
     பாபாவின் கருணையே கருணை. என்னுடைய கணவரை பிழைக்க வைத்து என்னிடம் தந்தார்.
     என்னிடம் வருகிறவர் களுக்கு நான் உதவி செய்து வழிகாட்டுகிறேன். என்னை அடைக்கலமாகக் கொண்டு சரணடைகிறவர்களுக்கு நான் அபயம் தந்து காக்கிறேன் என்று சொன்ன அவரது வாக்கை அவர் காத்துத்தந்தார்.

தா. பத்மாவதி, கோவை

Monday, March 17, 2014

குரு மீது முதலில் நம்பிக்கை வை

ஓர் ஆசிரமத்தில் வசித்த குருவுக்கு ஒரு சிஷ்யன் சேவகம் செய்துவந்தார். ஆசிரமத்திலிருந்த பெருமாள் விக்ரகத்திற்கு பூஜை செய்வது முதல் குருவுக்கு பணிவிடை செய்வது வரை அந்த சிஷ்யன்தான் கவனித்துக்கொண்டார்.
     குருவைத் தேடி வரும் சில பக்தர்கள், விஷ்ணு விக்ரகத்தை தரிசிக்காமல், குரு இருக்கிறாரா என்று கேட்பார்கள். குரு இல்iலை என்றால் பகவானை மதிக்காமல் சென்றுவிடுவார்கள். இது சிஷ்யனுக்கு எரிச்சலைத் தருவதாக இருந்தது.
     பகவானுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், புத்தி கெட்டவர்கள் அவரது பக்தனுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.. இது எவ்வளவு அபச்சாரம்! எனப் புலம்பும் அவர், ஒரு காலக்கட்டத்தில், குருவைத் தேடி வருவோர் அனைவரையும் முகத்தில் அடித்தாற்போல பேசி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.
     ஒரு முறை சிஷ்யனுக்கு உடம்பு சரியில்லை. படுத்த படுக்கையானார். யாராவது உதவுவார்கள் என எதிர்பார்த்து நொந்து போய்விட்டார்.
     குரு இதைக் கண்டும் காணாமல் போய் விட்டார். வழக்கமாக வரும் பக்தர்களும் இதைப் பொருட்படுத்தாமல் போய்க்கொண்டு இருந்தார்கள்.
     கடைசியாக ஒரு பக்தர் வந்து, திரும்பிப் போகும் போது, எரிச்சலடைந்த சிஷ்யன் கேட்டான்,  “ஐயா, இங்கே ஒருவன் உயிர் போகும் அவஸ்தையில் இருக்கிறானே! அவனுக்கு உதவி செய்வோம் என்ற எண்ணம் இல்லாமல், கடவுளையும் விட்டு குருவை தேடுகிறீர்களே! இது மனிதாபிமானமான செயலா?
     பாதிக்கப்பட்டவனுக்கு உதவி செய்வதே இறை தொண்டு என உணராமல் இருக்கிறீர்களே! என்று கடிந்துகொண்டான்.
     அதற்கு பக்தன், “உன்னைத் தூக்கிக் கொண்டு போக நாங்கள் யார்? பெருமாள் நேரில் வந்து வைத்திய சாலைக்குத் தூக்கிக்கொண்டு போவார் என்றிருந்துவிட்டோம். குருவும் அதைத்தான் சொன்னார் என்று கூறினார்.
     “பெருமாள் யாராவது ஒரு மனிதன் மூலமாகத்   தானே வந்து தூக்கிச் செல்வார்? என்றான் சிஷ்யன்.
     “அப்படியா? பகவான், தான் ஞானிகளிடத்திலும், தனது அடியார்களிடத்திலும், அவர்கள் வடிவிலும் இருப்பதாகக் கூறியிருக்கிறானே! அவனை, அவர்களிடத்தில் தேடக் கூடாது! விக்ரகத்தில் மட்டும்தான் தேட வேண்டும் என்று நீதானே அப்பா ஞானம் பேசி, வருவோர் போவோரை எல்லாம் விரட்டிக் கொண்டிருந்தாய்? இப்போது தேவை வந்து விட்டதால் இறைவனை மனிதன் வடிவில் தேடுகிறாயே? இது தான் நீ கடவுளை தரிசிக்கச்சொன்ன லட்சணமா? எனக் கேட்டார் பக்தர்.
     சிஷ்யனுக்கு ஞானம் பிறந்தது. பக்தர்கள் எதற்காக குருவைத் தேடி வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டான்.
     குருவின் மூலமாக இறைவனைப் பார்க்க வேண்டும் என்பதால்தான் குருவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் என்றார்கள்.
     முலே சாஸ்திரி என்ற ஒருவர்இருந்தார். அவர் சாயி பக்தர் அல்லர். குரு கோலப் என்பவரின் பக்தர். ஆனால் சீரடிக்கு வந்தார்.
                அவரிடம் தட்சணை கேட்டு பூட்டியை அனுப்பினார் பாபா. அக்னிசூத்ரம் செய்யும் வைதீக பிராமணரான முலே சாஸ்திரி, “பாபா ஒரு முஸ்லீம். நான் பாபாவுக்கு கடன் பட்டவன் அல்லேன்.. எதற்காக தட்சணை தரவேண்டும்! என கேட்டுக்கொண்டார்.
                மசூதிக்கு வந்தபோது, பாபாவை கீழ்ச்சாதிக்காரன் என நினைத்து அவர் அருகில் செல்லத்தயங்கியபடி தூரத்திலிருந்து மலர்களை அவரது பாதங்களில் வீசி எறிந்தார். சற்று நேரத்தில் எல்லோருக்கும் சாயியாக, முலே சாஸ்திரிக்கு மட்டும் அவரது குருவாகக் காட்சியளித்தார் பாபா.
                முலே சாஸ்திரி ஓடிவந்து, தன் குருவின் பாதங்களில் வீழ்ந்து கட்டியணைத்துக் கொண்டார்.
                எப்போதோ சமாதியாகிவிட்ட குரு கோலப், எப்படி இங்கே வந்தார்? என அவர் நினைக்கக்கூட முடியவில்லை. குரு நாமம் ஜெபித்தார், ஆரத்தி பாடினார். நினைவு திரும்பியபோது அங்கே சாயி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, தன் தவறை உணர்ந்தார்.
                இதேபோலராமனை மட்டுமே வணங்குகிற ஒரு டாக்டர் பாபாவை தரிசிக்க வந்தார். அவர், முஸ்லீமான பாபாவின் பாதங்களை வணங்க முடியாது. தன்னை கட்டாயமும் செய்யக் கூடாது என்ற கண்டிப்போடு சீரடிக்கு வந்தவர்.
                மசூதியில் கால் வைத்தவுடன் ஓடிச் சென்று பாபா கால்களில் விழுந்து வணங்க ஆரம்பித்தார்.
                அவரை அழைத்துவந்த மாம்லத்தாருக்கு ஆச்சரியம்! பாபாவின் கால்களில் விழ மாட்டேன் என்று சொன்ன, இவருக்கு என்ன ஆயிற்று? என அவரிடமே விவரம் கேட்டார்.
                நான் அங்கே பாபாவைப் பார்க்கவில்லை. எனது ராமனை தரிசித்தேன்.. இவர் ஒரு அவதாரப் புருக்ஷர் என்று வியப்பிலாழ்ந்தார் டாக்டர்.
                ஒரு மனிதனின் அகந்தையை அழிப்பதற்காகவே,  இறைவன் பக்தன் ரூபத்திலோ, அடியார் ரூபத்திலோ, துறவியின் வடிவிலோ சுற்றிக் கொண்டிருக்கிறான். இதை உணராதவர்கள் உண்மையான பக்தர்களாக இருக்கமுடியாது.
     ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர் மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும். வேறு எங்காகிலும் (இறைவன் விக்ரகமாக இருந்தாலும்) அந்த விசுவாசத்தை வைக்கக்கூடாது.
     முழுமை நிலையை எட்டாத எந்த மனிதனும் எது நியாயம்? எது அநியாயம் என்பதை தானே தீர்மானிக்கக் கூடாது.
     அதிதியை உபசரியுங்கள் என்று பெரியவர்கள் சொன்னது ஏன்?
     அதிதி தேவோ பவ! அதாவது இறைவனே அதிதி வடிவிலும் நம் வீடு தேடி வரலாம் என்பதற்காகச் சொன்னார்கள். அதிதியே தேவர் என்றால், உன்னோடு இருக்கிற, உனது குரு யார் என்பதை நீ உணர வேண்டாமா?
     யாரோ சிலர் வாதிடுகிற ஒரு விக்ஷயத்தை பிடித்துக்கொண்டு மனிதனை வணங்கலாமா எனக் கேட்காமல், வணக்கம் செலுத்து. அது நன்மையைத் தரும்


சாயி வீரமணி

Sunday, March 16, 2014

சமாதி நிலை

திரும்பத்திரும்பச் செய்யப்படும் தியானம் பரிபூரணமாகி, தியானத்திற்கும் தியானம் செய்பவருக்கும் இடையே உள்ள வேறுபாடு மறைந்துவிடுகிறது. காற்றடிக்காத இரவில் எரியும் விளக்கைப் போல மனம் அமைதியாகவும் நிலை பெற்றதாகவும் ஆகிவிடுகிறது. இதுவே சமாதி நிலை.

தொகுப்பு் வி. நந்தினி,

சென்னை - 15

Saturday, March 15, 2014

அது அப்படித்தான்! அவர்கள் அப்படித்தான்!

என் அன்புக் குழந்தாய்! உன்னுடைய மனதின் பிரார்த்தனையைக் கேட்டேன். வீட்டில் இருப்பவர்கள் உன்னைப் புரிந்து கொள்ளவில்லை. உன் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. நீ என்ன பேசினாலும் அதற்கு மாறாகப் பேசுவதை கடமையாக வைத்திருக்கிறார்கள். சரி,
     வீட்டில்தான் இப்படி, வேலையிலாவது நிம்மதியாக இருக்கலாம் என்றால் அங்கும் பிரச்சினை. உன்னைப் பற்றி பிறர் முகத்திற்குப் பின்னால் பேசுகிறார்கள். அதிகாரிகளும் மற்றவர்களும் உன் திறமையைக் குறை கூறுகிறார்கள். வேலையில் போட்டிப் பொறாமை ஏற்படுகிறது.
     ஏற்கனவே, கடன் பிரச்சினைகள், உறவு முறைகளில் பிரச்சினைகள் என பலவித பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறாய். இ;ந்த நிலையில் என்னை அறிந்து, வணங்கி என்னிடம் நீ வைத்த பிரார்த்தனையை நான் கேட்டேன்.
     உன்னைப் பிறர் மனம் நோகுமாறு பேசும்போதும், உண்மையான உனது உழைப்பை உதாசினப்படுத்தி உன்னைத் துன்புறுத்தும்போதும், நீ என்னிடம், “அப்பா, என்னைப் பிறர் தூற்றும் போதும், துன்புறுத்தும் போதும், நீ என்னை கண்டு கொள்ளவில்லை  என உன்னை நான் கடிந்து கொள்கிறேன்.. இது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. என்னை ஏன் கை விடுகிறீர்கள்? என்று கேட்டுப் புலம்புகிறாய்.
     சில செயல்கள் நீ எதிர்பார்த்தது போல நடக்காமல் போகும்போதும், நீ நம்புகிறவர்கள் உன்னை ஏமாற்றி, உனக்குத் துரோகம் செய்து, உன்னைப் பற்றி புறம் பேசி, உன்னைத் துன்புறுத்தும்போதும் நீ சோர்ந்து போய், “எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? எனப் புலம்புகிறாய்
     இது உனக்கு மட்டும் வரும் பிரச்சினை என நினைத்துக் கொள்ளாதே. பிறந்த குழந்தை முதல் படிக்கிறவர்கள், திருமணத்தை எதிர்பார்க்கிறவர்கள், திருமணம் செய்தவர்கள், குழந்தைப் பெற்றவர்கள், பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டவர்கள், குடும்ப உறுப்பினரையோ, நேசித்த ஒருவரையோ இழந்தவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக சண்டை சச்சரவிட்டுக் கொண்டிருக்கும் தம்பதியர், பிரிந்து போனவர்கள், மனதில் அனைத்தையும் போட்டு அடக்கிக்கெர்ணடவர்கள் என பலதரப்பட்ட மக்களும் இத்தகையப் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களும், ஆண்களும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டு திணறுவது அதிகம்.
     நீ சந்திக்கிற சூழலில் உனக்கு ஏற்படுகிற பின்னடைவுகள், ஏமாற்றங்கள், போராட்டங்கள் போன்றவற்றால் நீ பாதிக்கப்பட்டு இப்படி புலம்புகிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாய்.
     சில நேரங்களில் எதற்கு இந்த வாழ்க்கை எனத்தடுமாறுகிறாய். இனி என்னால் வாழ முடியுமா என தன்னம்பிக்கை இழக்கிறாய். வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் வெறுமையாக இருப்பதாக நினைப்பாய். ஒரே குடும்பமாக இருந்தாலும் ஆளாளுக்குத் தனித் தனியாகஇருக்கிறோம் என்று எண்ணுகிறாய். எதிர்காலம் உனக்கு சாதகமாக இருக்காது என நீயே முடிவு செய்து கொள்கிறாய்.
     நான் வாழத் தகுதியில்லாத நபர் என உன் உள்ளம் உன்னை பரிதாபமாகப் பார்க்கிறது. மொத்தத்தில் உனது சிந்தனையில், நடத்தையில், செயல்பாடுகளில், உணர்வுகளில் மாற்றம் ஏற்படுகிறது.இந்த மாற்றம் உன்னை ஆக்கிரமிக்கும் போது நீ தனித்து உட்கார்ந்துவிடுகிறாய்.
     ஏதோ களைப்பாக இருப்பது போலவும், சக்தியை இழந்தது போலவும், தலை வலிப்பது போலவும், உடம்பை தடியால் யாரோ அடித்துப் போட்டது போலவும் உணர்கிறாய். யாரைப் பார்த்தாலும் எரிச்சல், எதைப் பார்த்தாலும் எரிச்சல், தொட்டதற்கு எல்லாம் கோபம், யார் எதைச் சொன்னாலும் தன்னைத் தான் சொல்கிறர்கள் என்ற குற்ற உணர்ச்சி, காரணமே இல்லாமல் பரப்பரப்பாக இருத்தல் போன்றவற்றால் தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது வந்து போகிறது.
     உன்னைப் புரிந்துகொள்ளாத நபர்கள், வீட்டாள்கள் இல்லாதபோது நன்றாக சிரித்துப் பேசுவதாகவும்,அவர்கள் வந்த பிறகு முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டதாகவும் குறை சொல்கிறார்கள்.
     இதையெல்லாம் நீ எதிர்கொள்ளும்போது இயற்கையாக இருந்த ஆர்வம் எல்லாம் குறைந்து விட்டது. முன்பு எதையெல்லாம் விருப்பத்தோடு செய்தாயோ, அதை இப்போது கடமைக்காகவும், நாட்டம் இல்லாமலும் செய்கிறாய்.
     இதற்கு முன்பெல்லாம் எதை விரும்பி சாப்பிட்டாயோ இப்போது அதையும் சாப்பிடப் பிடிக்கவில்லை. பசியே இல்லாததைப் போன்ற உணர்வு, சாப்பிட்டாலும் ஜிரணம் ஆகாத நிலைமை, எதிலும் பிடிப்பு இல்லாத நிலைமை, கேட்ட விக்ஷயத்தையும், வைத்த பொருட்களையும் அடிக்கடி மறந்து போதல் என தடுமாறுகிறாய். எந்த விக்ஷயத்தையும் உன்னால் சரியாக தீர்மானிக்க முடியவில்லை. மொத்தத்தில் நீ பழைய ஆளாக இல்லை.
     உனது திறமைகளை இழந்து தடுமாறுகிறாய். இதனால் வாழ்க்கையே போச்சு என்பதும், வெறுமையாக தனித்து விடப்பட்டது போல உணர்வதும், பரிதாபத்திற்கு ஆளாவதும், கோபப்படுவதுமாக காட்டிக் கொள்கிறாய்.
     உன் மனம் முழுவதும் நெகட்டிவ் எண்ணங்களே தலை தூக்கி நிற்கின்றன. எதன் மீதும் நாட்டம் காட்டாத நீ, என் மீதும் நாட்டம் காட்டுவது இல்லை.  என் சரிதத்தை முழுமையாக ஒரு அத்தியாயத்தைக் கூட உன்னால் படிக்கமுடியாது, என்னைப் பற்றிய ஒரு பாடலை முழுதாகக் கேட்க முடியாது.
     உனக்கு மனப்பிரச்சினை என நினைத்து மருத்துவரிடம் போனால், ஆயிரங்களில் செலவாகுமே தவிர, நிரந்தரத் தீர்வு கிடைக்காது. சாமியார்களைத் தேடிப் போனால், நிம்மதியிருக்காது. தீர்வும் கிடைக்காது. எங்கே தீர்வு எங்கே தீர்வு என்று தேடி அலைந்து கொண்டிருப்பாய்.
என் குழந்தாய்!
     இங்கேதான் தீர்வு இருக்கிறது. இதைத் தாண்டி நீ எங்கு சென்றாலும் கதி மோட்சமில்லை என்பதைப்புரிந்து கொள்.
எங்கே அப்பா தீர்வு இருக்கிறது என்கிறாயா?
     இந்த அப்பா சாயியிடம்தான். குழந்தாய்! நான் சொல்லும் விக்ஷயங்களை சிறிது கவனித்து உள்வாங்கு.எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளப் பழகு.
     ஒரே வரியில் உனக்குச் சொல்ல வேண்டும் என்றால், அது அப்படித் தான்.. அவர்கள் அப்படித்தான்... நீயோ அவற்றைப் பற்றிக் கவலைப் படாதே.. எப்போதும் என் நாமத்தையே உச்சரித்துக் கொண்டு இரு! எல்லாம் நன்மைக்கே நான் சொல்லவருவதைப் பொறுமையாகக் கவனி.
     இந்த உலகம் நாம் எதிர்பார்ப்பது போல இருப்பது கிடையாது. நாமும் மற்றவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட முடியாது. நமக்கும் மற்றவர்கள் அப்படியே ஒரு விக்ஷயத்தை நன்றாகக் கூர்ந்து பார்த்தால் எல்லாவற்றுக்கும் நாம் போராடியாக வேண்டும்.
     இந்தப் போராட்டத்தை நம் தாய் ஆரம்பித்து வைத்தாள். ஆமாம், நமது பிரசவத்தின்போது, மிகப் பிரயத்னப்பட்டு, போராடித்தான் இந்த பூமிக்கு நம்மைக் கொண்டுவந்தாள்.
     நமது முதல் சுவாசமும் போராட்டத்துடன்தான் வெளியே வந்தது. அன்றுமுதல் நாம் ஒவ்வொரு விக்ஷயத்திற்காகவும் எதிர்த்துப் போராடிக் கொண்டும், ஜெயித்துக் கொண்டும்தான் இருக்கிறோம். சில சமயம் நம் மீது நமக்குப் பிடிக்காத சில விக்ஷயங்கள் திணிக்கப்படுகின்றன. இதையும் அம்மாதான் தொடங்கி வைத்தாள்.
     பிடிக்காத உணவை மறுத்தபோது, நிலாவைக் காட்டி ஏமாற்றி ஊட்டினாள். சில சமயம் வலுவில் வாயில் திணித்தாள். விருப்பத்திற்கு மாறானதை பொறுமையாகவோ, அழுதோ எதிர்த்தாலும் பிரயோசனமின்றி ஏற்றுக் கொண்டோம்.
ஏன்?
     அம்மா நினைத்தாள்! குழந்தை என்றால் அப்படித்தான்! அடம் பிடிக்கும். நாம்தான் அதன் நலனைப்பேணவேண்டும்!
     குழந்தை நினைக்கும்! அம்மா என்றால் இப்படித்தான்.. தலையெழுத்து ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்..
     வளர்ந்த பிறகும் சூழ்நிலைகளை கவனித்து, நமக்கு எதிரான நிலைமைகளை எப்படியெல்லாம் சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைக்கற்றுக்கொண்டு, முடிந்தவரை அதற்கு இணங்கி நடக்க முயற்சிக்கிறோம். முடியாத பட்சத்தில் நாம் எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பு கோபமாக, வெறுப்பாக, பிரிவாக, இழப்பாக இப்படியெல்லாம் வெளிப்பட்டு நம்மை பிறரிடமிருந்து தனித்து வைக்கிறது.
     இந்தத் தனிமையான நிலைமை வரும்போதுதான் நாம் தடுமாறிப் போகிறோம். நம்மை எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள், ஏளனமாகப் பார்க்கிறார்கள், உதாசினப்படுத்துகிறார்கள், கொடுமை செய்கிறார்கள், மரியாதை தர மறுக்கிறார்கள், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, என்னை பிறர் மத்தியில் அவமானப்படும் வகையில் நடத்துகிறார்கள் என்றெல்லாம் புலம்புகிறோம்.
     இந்த நிலைகள் உளவியல் காரணமாகத்தான் வரும் என்று சொல்லமுடியாது. இயற்கையில் நமது வாழ்வில் ஏற்படும் சில திடீர் நிகழ்வுகளின் காரணமாகக் கூட இப்படி ஏற்படலாம். நான் முன்னே சொன்னது போல, நமது உணர்வுகள் பாதிக்கப்படும் போது நாம் இத்தகைய நிலைக்கு ஆளாகிறோம்.
     நம்முடைய எதிர்ப்பு உணர்வுதான் நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இதில் நமது இயலாமையை நாம் சேர்த்துக்கொண்டுவிட்டதால் இப்படி புலம்புகிறோம்.. என்பதைப் புரிந்து கொண்டு, எப்படியும் ஜெயித்துக் காட்டுவேன் என துணிந்து பாரேன்.. நீ அதை ஜெயித்து விடுவாய்.
     எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சரி, மனதில் இரண்டு விக்ஷயங்களை முன்னிறுத்திக்கொள். அது என்ன தெரியுமா?
     அவர்கள் அப்படித்தான்!
     அது அப்படித்தான்!
     ஆசிரியர் பள்ளியில் திட்டுவார்... அவர் அப்படித்தான்.. அண்ணன் எப்போதும் சீண்டிக் கொண்டே இருப்பான்... அவன் அப்படித்தான்..
     தங்கை அப்பாவிடம் போட்டுக் கொடுத்து விடுவாள்.. அவள் அப்படித்தான்..
     தெருவில் நடக்கவே முடியவில்லை.. ஏதோ வெளி உலக ஜந்துவைப் பார்ப்பதைப் போல முறைத்துப் பார்க்கிறார்கள்! அவர்கள் அப்படித்தான்.
     காதலித்தவர் கைவிட்டு விட்டார்.. அவர் அப்படித்தான்...
     மாமியார் கொடுமை செய்கிறார்.. கணவர் அதை ஏன் என்றுகூட கேட்பதேயில்லை.. அவர்கள் அப்படித்தான்.
     கடன் கொடுத்தவன் வந்து மானம் போகுமாறு பேசுவான்.. உடனே, மனம் உடைந்துவிடாதே.. அவன் அப்படித்தான்!
     வேலையில் மேலதிகாரியின் தொல்லை தாங்க முடியவில்லை.. என்னை என்னுடன் வேலை செய்கிறவனே போட்டுக்கொடுக்கிறான்.. அவன் அப்படித்தான்!
     என் பிள்ளை என் பேச்சைக் கேட்பது கிடையாது. அவன் அப்படித்தான்.
     இப்படி ஒவ்வொன்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், எந்த ஒரு நபரும் தனது விருப்பத்தை செயல்படுத்தவே முனைவார். அப்போது அவருக்கு நாம் ஒரு பொருட்டாகத் தெரியமாட்டோம். அவர் விருப்பத்திற்கு ஈடு கொடுக்கிறவரைத்தான் அவர் விரும்புவார். தனித்து நிற்கிற குணம் உடைய நம் போன்றவரை புறம் தள்ளிவிடுவார்கள்.
     எந்த ஒரு பொருளும் தனது இயல்பு நிலையை மாற்றினால், அதன் தன்மை கெட்டுவிடும். இதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
     உன்னால் முடிந்தால் அவர்களோடு இணங்கிப் போ. இல்லாவிட்டால் அந்த இடத்தை விட்டு சிறிது காலமாவது விலகி இரு.
     உனக்கு நெருக்கமானவர்களை அழைத்து அவர்களிடம் விக்ஷயத்தைப் பகிர்ந்து கொள். தனித்து இல்லாமல் நாலு பேருடன் சேர்ந்து செல்லவும், பழகவும் கற்றுக் கொள். கண்ட சிந்தனைகள் மனதில் நுழையாமல் முடிந்தால் எனது நாமத்தை தியானம் செய். உடம்பைப் பார்த்துக் கொள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடு, காற்றோட்டமாக நடந்து வா.
     இதையெல்லாம் செய்து பார். எதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், நமதுபெருங்களத்தூர் மையத்திற்கு வந்துவிடு. என் முன் அமர்ந்து கண்களை மூடியோ திறந்தோ என்னிடம் வேண்டுதல் செய். நான் உன்னை சிறிது சிறிதாக ஆனால் முற்றிலுமாக மாற்றிவிடுகிறேன்.
     அப்பா பழைய ஹக்கீம் என்கிற வைத்தியராயிற்றே! அதனால் இப்படி மனம் தொடர்பாகப் பேசுகிறார் என நினைத்துவிடாதே.
     நீ இழந்து போன நிம்மதியை, உறக்கத்தை, உற்சாகத்தை, திறமையை, ஆர்வத்தை மீண்டும் கொடுத்து உன்னை பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற அக்கறையில்தான் நான் இதை உனக்குச் சொல்கிறேன்.
     எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொண்டால் எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கும். அம்மா, என்னை எடுத்துக் கொள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பரப்பிரம்மம் நான். ஆனால், நான் கிழிந்த ஆடையை உடுத்தினேன், கந்தல் கோணியில் அமர்ந்தேன், வீடு வீடாகப் பிச்சை எடுத்தேன். எனது உணவுகளை நாய்களோடும், பறவைகளோடும், பன்றிகளோடும் ஒன்றாகப் பகிர்ந்து உண்டேன்.
     இருக்க இடம் தராமல் பாழடைந்த மசூதியில் தங்க வைத்தார்கள். என்னை கல்லால் அடித்தார்கள், பைத்தியக்காரன் என்று தூற்றினார்கள், பணத்தாசை பிடித்தவன் என்றார்கள்.
     இவையெல்லாம் என்னைத் தாழ்ச்சி அடையச் செய்தனவா? இல்லையே மகளே! அவதாரங்களில் எனது இந்த சாயி அவதாரமே சிறந்த அவதாரம் என்ற பெயரை எனக்கு உண்டாக்கியது.
     காரணம் என்ன?
     எல்லாவற்றையும் எனக்குச் சாதகமாக நான் மாற்றிக் கொண்டேன். இதனால் படித்தவர்கள் முதல் பாமரர் வரை என் பேச்சைக் கேட்டார்கள். என் வார்த்தைகளை வேதம் என்றார்கள்.
     என் உடம்பு சமாதியில் படுத்துக் கொண்ட பிறகும் கோடிக்கணக்கான மக்கள் என்னைத் தேடி வருகிறார்கள்.
     என் செல்லக் குழந்தையே!
     இந்த துன்பங்களை சகித்துக் கொள் என உனக்கு கற்றுத் தரமாட்டேன், இவை அனைத்தையும் ஒரு பொருட்டாக நினைக்காதே என்று சொல்லித் தருகிறேன். எல்லாவற்றையும் எதிர்த்தே நாம் ஓட வேண்டும்.
     உலகமும் அதன் செயல்பாடுகளும் ஒரு நோய்க்கிருமிகள் போன்றவை. நாம் அதை எதிர்க்கிற நோய் எதிர்ப்புச் சக்தி போன்றவர் என்பதை உணர்ந்து கொள்..
     போ.. போய்.. என் உதியை எடுத்து வாயில் போட்டுக் கொள். அமைதியாகப் படுத்து என் பெயரை உச்சாடணம் செய்..
     உன் நிலைமைகளை நிச்சயம் விரைவில் மாற்றிவிட்டு, உன்னை உயர்த்திக்காட்டுகிறேன். கடனா? பிரச்சினையா? பிள்ளைகள் வாழ்வா? வேலை இல்லையா? எதுவானால் என்ன? நான் உனக்குத் துணை செய்கிறேன். உன் நிலையை மாற்றிக் காட்டுகிறேன். நான் இந்த மசூதியில் அமர்ந்து கொண்டு பொய் பேசமாட்டேன் என்பதை நீ அறிந்திருக்கிறாய் தானே! இந்த அப்பாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வை.
     துணிந்து நில், துணிந்து செல், தைரியமாக அனைத்தையும் எதிர்கொள். இதுதான் இந்த அப்பா உனக்கு இடுகிற அன்புக்கட்டளை. உன்னை வெகு விரைவில் வந்து சந்திக்கிறேன். அதுவரை என் நாமமே உனக்குத் துணையாகட்டும்.

அன்புடன் அப்பா
சாயி பாபா

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...