நமது மனதில் நிறைய ஆசைகள் இருக்கின்றன. தோன்றி மறையும் ஆசைகள், சில காலம் நீடிக்கும் ஆசைகள், நம்மையே பிடித்துக் கொண்டிருக்கும் ஆசைகள் என
அவற்றை வகைப்படுத்தலாம்.
அவையெல்லாம் நிறைவேறிவிட்டால்,
நாம் பூலோக குபேரனாகி விடுவோம். நம்முடைய
ஆசைகள் நமது லட்சியங்களாகிவிடுவதில்லை. விருப்பங்களே லட்சியங்கள் ஆகின்றன. பார்த்த
உடனே அதன் மீது மனதைச் செலுத்துவது ஆசை. அது நல்லதா கெட்டதா?
இதனால் நாம் பலன் அடையமுடியுமா?
அடைய முடியாதா என்பதையெல்லாம் ஆராய்ந்து
அதன் மீது வைக்கிற ஆசைதான் விருப்பம். ஒன்றை அடையவேண்டும் என்று முடிவு
செய்துவிட்ட பிறகு, தீவிரமாக
அதைப் பற்றியே சிந்தித்தும், அதை நோக்கியே
நடைபோட்டுக் கொண்டும் இருந்தால் அதை நிச்சயம் நாம் அடைந்துவிடுவோம்.
சில சமயம், பல தடைகள் நமது விருப்பத்திற்கு முட்டுக்கட்டைப்
போட்டுக் கொண்டிருக்கும். இந்த முட்டுக்கட்டையை நீக்கி நமது விருப்பத்தை எப்படி அடைவது
என்பதைப் பற்றி சத்சரித்திரம் நமக்கு அழகாகச் சொல்லிக்கொடுக்கிறது.
சத்சரித்திரம் பத்தொன்பதாவது
அத்தியாயத்தில் பின் வருகிற வாசகங்களைப் படியுங்கள்.
”இந்த
உலகமே தலைகீழாக மாறலாம். ஆயினும் நாம் வழி தவறிவிடக்கூடாது. நம் நிலையிலேயே உறுதியாக
நின்றுகொண்டு அமைதியாக இவ்வுலகை வேடிக்கை பார்க்கவேண்டும். உனக்கும் எனக்கும்
நடுவேயுள்ள மதில் சுவரை உடைத்து முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குப்
போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசன்னமான பாதை கிடைத்துவிடும்.
குருவுக்கும் சிஷ்யனுக்கும்
இடையேயுள்ள தடுப்புச் சுவர் நீங்கள் நான் என்னும் மனோபாவமே. அதை உடைத்து
எறியாவிட்டால், இருவரும் ஒன்றே என்னும்
நிலையை அடையமுடியாது. அல்லாவே யஜமானர். அல்லாவே யஜமானர்! அவரைத் தவிர ரட்சகர் வேறு
எவரும் இல்லை. அவருடைய செய்கைகள் உலகியலுக்கு அப்பாற்பட்டவை. விலை மதிப்பற்றவை,
கற்பனை செய்து பார்க்க முடியாதவை.
அவர் நினைப்பதே நடக்கும். அவரே
வழியைக் காட்டுவார். நம் மனத்தின் இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும்
நேரம் வரும். பூர்வ ஜன்மங்களின் சம்பந்தத்தினால் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்
பாக்கியம் பெற்றோம்.
இதயத்தின் அடித்தளத்திலிருந்து
பொங்கும் அன்புடன் நாம் ஒருவரையொருவர் தழுவுவோம். சுகத்தையும், பூரணமான திருப்தியையும் அனுபவிப்போம்!”
நாம் இந்த திருவாய் மொழிகளை தியானிக்கலாம்.
நமது விருப்பங்கள் நிறைவேற வேண்டுமானால் முதலாவது் நம் நிலையிலேயே உறுதியாக
நிற்கவேண்டும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு - என்று திருக்குறள் கூறுகிறது.
ஒரு வீடு வாங்க வேண்டும்,
ஒரு கடனை அடைக்க வேண்டும், வாழ்க்கையின் முன்னேற வேண்டும் என்று எப்படி
திட்டமிட்டாலும் அதை செயல்படுத்தும் வழியில் முனைப்போடு இருக்க வேண்டும். நமது
செயல்களை இந்த உலகம் பழிக்கலாம், கேலி
செய்யலாம், இது நடக்காத விக்ஷயம்
என ஏளனமாகப் பேசலாம், இவருக்கு
வேறு வேலையில்லை என்று புறக்கணிக்கலாம். இப்படிப்பட்ட சூழல்களில் நாம்
டென்க்ஷனாகிவிடக்கூடாது.
ஒரு வேளை நமது முடிவு தவறாக
இருக்குமோ எனக் குழம்பக்கூடாது. சித்தம் தடுமாறாமல் அமைதியாக உலகத்தை வேடிக்கைப்
பார்க்க வேண்டும். எது எப்படியிருந்தாலும் நமது கொள்கையில் நாம் திடமாக
நின்றுவிடவேண்டும். இப்படி உறுதியாக நிற்கும்போது, எண்ணியதை எண்ணியவாறு நம்மால் அடைய முடியும்.
கடவுளை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்!
இன்றைக்கு நீங்கள் பாபாவை வணங்குவது
இந்த ஜென்மத்தில் ஏற்பட்ட தொடர்பினால் அல்ல பல ஜென்மங்களில் அவர் மீது பக்தி
செய்ததன் தொடர்ச்சியாகத்தான் இந்த ஜென்மத்திலும் அவர் மீது பக்தி
செலுத்துகிறீர்கள். இதுவே உண்மையான நிலையாகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
ஜென்ம ஜென்மமாய் நம்மைத்
தொடர்ந்து வரும் நமது சத்குருவின் மீது நாம் அன்பு செலுத்த வேண்டும். மாறாத
சுயநலமற்ற இந்த அன்பு நாளடைவில் அதிகமாகும். இவ்வாறு அதிகரிக்கிற நிலைக்குத்தான்
பக்தி என்று பெயர். இந்த பக்தியை அடிப்படையாக வைத்து இறைவனை மனதிற்குள் ஆரத்தழுவுகிற
நிலையை உருவாக்க வேண்டும்.
இப்படி அவரை உங்களுக்குள்
வைக்கும்போது, அவருக்குள்ளும் நீங்கள்
நிலை மாறாமல் இருப்பீர்கள். இதற்கு ஒன்றுபட்ட நிலை என்று பெயர். இந்த ஒன்றுபட்ட
நிலையை அடைந்து விட்டால், நாம்
வேறு பாபா வேறு என்ற எண்ணம் நீங்கிவிடும். இந்த நிலையை சுலபத்தில் அடைந்து விடமுடியாது.
அவர் பரப்பிரம்மம், நான் சாதாரண பாமரன் என்ற எண்ணம் நம்மை அவரிடம்
நெருங்கவிடாமல் தடுக்கும்.
நான் இறைச்சி உண்கிறேன்,
புகைக்கிறேன், சுயநலமாக சம்பாதிக்கிறேன்.. என் பெண்டு பிள்ளை என்ற
குறுகிய மனோபாவத்துடன் வாழ்கிறேன் என்பன போன்ற எண்ணங்கள் தோன்றும்போது, பாபா என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்ற முடிவுக்கு
மனம் வரும்.
மற்றவர்களைப் பார்க்கும்போது
அவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிற நிலையை மனம் எடுக்கும். அவர்கள் மாதிரி நம்மால்
பாபாவிடம் நெருங்க முடியாது என முடிவு செய்துகொள்ளும்.
இவையெல்லாம் நம்மை
கடவுளிடமிருந்து பிரிக்கிற தடுப்புச் சுவர்களாகும். இவற்றை உடைத்து எறிய வேண்டும்.
உன்னிடம் என்ன குறைபாடுகள் இருந்தாலும் சரி, அந்த குறைபாடுகளுடனேயே இறைவனைத் தஞ்சமடை. அவர் உன்னை
ஏற்றுக்கொள்வார். அவர் ஏற்றுக்கொண்டதும் குறைகள் நிறைகளாக மாறும்.
தீர்மானம் செய்
உனக்கு என்ன செய்ய வேண்டும்
என்பதை அவர் தீர்மானம் செய்து வைத்திருப்பார். உலகத்தாரால் உன்னால் முடியாது என்று
சொன்ன விக்ஷயங்களாக இருந்தாலும், நமது
மனமே நம்மிடம் இது உன்னால்முடியாது என்று சொன்ன விக்ஷயங்களும் மிக சுலபமாக
நிறைவேறும்.
ஏனெனில் செய்யப் போவது நீயல்ல,
உனக்குள் இருக்கிற அவர். அவரது செயல்கள்
கற்பனைக்கு எட்டாதவை. உலகியலுக்கு அப்பாற்பட்டவை. இந்த நிலைக்கு நீங்கள் வரும்போது
உள்ளம் விரும்பிய அனைத்தும் தாமதமின்றி நிறைவேறும்.
அது எப்போது வரும்?
பாபாவே சொல்கிறார். உனது மனதின்
விருப்பங்கள் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும். அப்படியானால் இப்போது அந்த
நேரமில்லை என்றுதானே அர்த்தம்.
இதிலென்ன சந்தேகம்?
இன்றைக்கு நீ தீர்மானம் செய்..
பாபா, இந்த உலகமே என்னை ஏளனம்
செய்தாலும் நான் உன்னைப் பின்தொடர்வதை விட்டுவிடமாட்டேன். உலகமே குறைகூறினாலும்
உன் மீதுள்ள நம்பிக்கையைக் குறைத்துக்கொள்ள மாட்டேன்.
என்னை பக்தியில்லாதவன், மடியில்லாதவன், குறையுள்ளவன் என்று பிறர் கூறினாலும் மனதிற்குள் நீயும்
நானும் ஒன்று என்ற எண்ணத்தோடு வாழ்வேன். நான் நினைப்பதெல்லாம் நீ நினைப்பது, நான் செய்வதெல்லாம் நீ செய்வது, என் வாழ்வில் என்ன நடந்தாலும் அது உனக்காகவும்,
உனக்கும் நடப்பது என்று தீர்மானம் செய்யுங்கள்.
தீர்மானித்தபடி அவரது நாம
ஜெபத்தைத் தொடங்கித் தொடருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறப் போவது உறுதி.
சாயி வரதராஜன்
No comments:
Post a Comment