பாபா தனது பக்தர்களை எவ்வளவு தொலைவில் இருப்பினும் ஒரு சிட்டுக் குருவியின்
காலில் நூலைக் கட்டி இழுப்பது போல இழுத்துக் கொள்வார் என்பதை சத்சரித்திரத்தில்
படித்த அந்த அனுபவம் எனக்கு ஏற்பட்ட விதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
2008 ல் நாங்கள் ஒரு புதிய சூழலில் ஒரு வாடகை வீடடில் குடியேறினோம்.
பின் வீட்டில் இருந்த பிராமணப் பெண்ணின் நட்பு கிடைத்தது. ஒரு நாள் பாபாவின் அருமை
பெருமையை கூறி அவரை பூஜிப்பவர்களுக்கு மட்டும்தான் ஆரத்தி புத்தகம் கொடுப்பதாகக்
கூறினார்.
எனக்கு பாபா கோயில் இருப்பது
மட்டும் தெரியும். ஆனால் அவரைப் பற்றி எதுவும் தெரியாததால் அதைப் பற்றி நான்
கவலைப்படவில்லை.
சில மாதங்களில் ஒரு தம்பதியரை
குருவாக ஏற்று அவர்களின் புகைப்படத்தை வைத்து பூசை செய்த பக்கத்து வீட்டார் பூசையில் கலந்துகொள்ள அழைத்தனர்.
பூசை என்றதும் நான் போய் அமர்ந்து விட்டேன். அவர்கள் நட்பின் காரணமாக,
“ஒரு முறை கோயிலுக்குப் போய் வாருங்கள், குருவருளால் நாங்கள் நலமுடன் இருக்கிறோம்!’ என்று கூறினர்.
எனக்கு மனிதர்களை குருவாக
ஏற்க மனம் இடம் கொடுக்காது. இருப்பினும் குடும்ப
நலன் கருதி சென்று
வர எண்ணினேன்.
ஒரு வெள்ளிக்கிழமை, என் மகனை அழைத்துக் கொண்டு சாய் பாபா கோயில் உள்ள அந்த பிரார்த்தனைக்கூடம் சென்றோம்.
அங்கு சாட்சிகளாக பக்தர்கள். நான் இப்படி பிரார்த்தனை செய்தேன். நான் இங்ஙனம் உள்ளேன்
என சாட்சி கூறினர்.
ஒருவர் என் தொலைபேசி வீட்டு
முகவரியைப் பெற்றுக்கொண்டு, நாங்கள்
வந்து உங்கள் வீட்டில் கனக பூசை நடத்துகிறோம். அதன் பிறகு நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள்
என ஆசை காட்டினார். சிறிது நேரம் அங்கேயே இருந்து வேடிக்கைப் பார்த்து விட்டு வீடு
திரும்பினோம்.
பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின்
விட்டுப்போன எனது கல்வியைத் துவக்கினேன். ஒன்பது வார விரதத்திற்குப் பிறகு,
படிப்பில் சற்று பின் தங்கியிருந்த என்
மகள் எனது மனம் குளிரும்படி பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றாள். பள்ளி
அறிவிப்புப் பலகையில் என் மகள் படம் இடம் பெறவில்லையே என கண்ணீர் சிந்தினேன்.
அதைத் துடைத்தெறிந்தார் என் பாபா. என் மகளுக்கு அடிக்கடி வலது கால் முட்டியில் வலி
வரும். வலியால் துடிப்பாள்.
ஒரு நாள் இரவு பதினோறு மணி.
மருந்து வாங்க முடியாது. இருப்பினும் என் கணவரை மருந்து வாங்கி வருமாறு
அனுப்பினேன். பின் உதியின் நினைவு வந்தது. எழுந்துச் சென்று பாபாவிடம் பிரார்த்தனை
செய்து மிகுந்த நம்பிக்கையுடன் உதியை வலித்த இடத்தில் தடவி விட்டேன்.
என்னே அதிசயம்! வலி மாயமாக
மறைந்துவிட்டது. வாங்கி வந்த மருந்தின் தேவை இருக்கவில்லை. அன்றுதான் பாபாவின் உதியின்
மகிமையைப் புரிந்துகொண்டேன்.
ஜூன் 2, 2013 அன்று என் சித்திப் பையன் திருமணத்திற்குச் சென்றோம்.
நானும் என் மாமியாரும் அங்கேயே இரவு தங்குவது என முன் ஏற்பாடாகச் சென்றோம். திருமண
விழா நடை பெற்று முடியும் தருணத்தில் என் கணவர் தான் மட்டும் வீட்டிற்குச் சென்று
தங்கிவிட்டு காலை முகூர்த்தத்திற்கு வந்துவிடுவதாகக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு
நகர்ந்தார்.
ஓரிரு நிமிடங்களில் அவர் கால்
இடறி கீழே விழுந்துவிட்டதாக வந்து கூறினார்கள். ஓடிச் சென்று பார்த்தோம். அவரால்
இடது காலை நகர்த்தக் கூட முடியவில்லை. எப்படிப்பட்ட வலியையும் பொறுத்துக் கொள்பவர்,
காலைத் தொட்டாலே கதறினார். அருகிலிருந்த
எலும்பு முறிவு சிகிச்சை மையம் சென்றோம். அங்கு சென்றபோது அந்த அதிர்ச்சியான
தகவலைச் சொன்னார்கள். இடுப்பு எலும்பு முறிந்து விட்டது என்று! அறுவை சிகிச்சையால்
மட்டுமே குணப்படுத்த முடியும், அறுவை
சிகிச்சையை அவர் உடல் தாங்காது என்றும், நாங்கள் சம்மதித்தால் மட்டுமே அறுவை செய்வோம் என்றும் மருத்துவர் கூறினார்.
இதைக் கேட்டு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. மருத்துவர் கூறியதற்கும் ஒரு
காரணம் இருந்தது.
சிறுவயது முதலே என் கணவர் இதய
நோயாளி. இதயத்தில் ஓட்டை இருப்பது தெரிந்தே திருமணம் செய்துகொண்டோம். திருமணமாகி எந்த
ஒரு பிரச்சினையும் இருபது ஆண்டுகளாக வரவில்லை.
இப்போதுதான் முதன் முறையாக
பிரச்சினை. அதுவும் உயிருக்கு உத்தரவாதமில்லை என்கிற அளவுக்குப் பிரச்சினை.
அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே
பிழைப்பார், இல்லாவிட்டால்
படுக்கை நோயாளியாகி விடுவார் என்ற நிலையில், எல்லோரும் ஜோதிடம், கோயில் என படையெடுக்க நினைக்க, நானோ என் பாபாவை மட்டுமே நினைத்தேன்.
பத்து அடி வைத்தால் பாபா கோயில்.
அங்கு சென்று மனம் உருகி பிரார்த்தனை செய்தேன். பிறகு, தைரியத்தோடு அறுவை சிகிச்சை செய்வதற்குச் சம்மதம் சொன்னேன்.
என் கணவருக்கு தைரியமும் ஆறுதலும் கூறி அருகிலிருந்தேன்.
கணவரை மருத்துவர்கள் அறுவை அரங்கிற்கு
அழைத்துச் சென்றார்கள். அவர்கள் திரும்ப அழைக்கும்வரை பாபாவைத் தவிர யாரையும்
நினைக்கவே யில்லை. மருத்துவர்கள் அழைத்த போது ஓடிச் சென்று பார்த்தேன்.
என் கணவர் மங்கலகரமாக, நான் வைத்த அதே திலகத்துடன் இருந்தார்.
மகிழ்ச்சியில் அவரது கையைப் பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டேன். அவரும் பரிவோடு
என் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
பாபாவின் கருணையே கருணை.
என்னுடைய கணவரை பிழைக்க வைத்து என்னிடம் தந்தார்.
என்னிடம் வருகிறவர் களுக்கு நான்
உதவி செய்து வழிகாட்டுகிறேன். என்னை அடைக்கலமாகக் கொண்டு சரணடைகிறவர்களுக்கு நான்
அபயம் தந்து காக்கிறேன் என்று சொன்ன அவரது வாக்கை அவர் காத்துத்தந்தார்.
தா. பத்மாவதி, கோவை
No comments:
Post a Comment