Sunday, March 30, 2014

நல்லவர்களுக்கு சோதனை ஏன்?

நல்லவர்களுக்கு மட்டும் சோதனைக்கு மேல் சோதனை, கஷ்டங்கள் வருவது ஏன்?
( கே.பி. பவித்ரா, விருத்தாச்சலம்)
நல்லவர்கள் கெட்டவர்கள் என யாரையும் பேதம் பார்த்து கஷ்டம் வருவதில்லை. கஷ்டப்படுகிறவர்களுக்கு அனுபவத்திற்காகவும், பிறருக்குப் பாடமாக அமைவதற்காகவும் கஷ்டங்கள் வருகின்றன.
நான் ஒருமுறை, என் வீட்டுச் சுவரை உளி வைத்து உடைத்துக்கொண்டிருந்தேன். உளி மழுங்கிவிட்டது. கொல்லனிடம் கொடுத்து, பழுக்கக் காய்ச்சி கூராக்கி எடுத்து வந்து மீண்டும் உடைத்தேன். உளியின் தலையில் சுத்தியல் பட்டு, அது தலைப் பக்கத்திலும் பிசிறுகள் சிதறின.
அப்போது, அந்த உளி என்னிடம், நீ சுவரை உடைப்பதற்காக என்னை ஏன் இப்படி அடித்து, நெருப்பிலிட்டுக் காய்ச்சி வடித்து, மீண்டும் மீண்டும் அடிக்கிறாய்? நான் தப்பிப் போகாதபடி என்னை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு என் தலையிலேயே அடிக்கிறாயே நீ தலையில் அடிக்கிற வேகத்திற்கு, என் கால்கள் கடினமான காங்க்ரீட் ஜல்லியில் இடி படுகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் தாங்கமுடியாத அளவுக்கு அடிபடுகிறேன் என்று சொல்வது போல இருந்தது.
என்ன செய்வது? எனக்குத்தேவையில்லாத ஒன்றை நீக்குவதற்காகவே, பெரிய இரும்பாக இருந்த நான் உன்னைத் துண்டாக வெட்டியெடுத்து உளியாக  வடித்தேன். இப்போது உன்னைச்சிரமப் படு;த்தினால்தான் தேவையற்ற ஒன்றை என்னால் நீக்க முடியும் என்பதால் உன்னை அடிக்கிறேன் என்று சொன்னேன்.
மாமல்லபுரத்திற்குச் சென்ற போது, கல்லின் மீது உளியைப் பொருத்தி, சுத்தியலால் ஒருவன் அடித்து அடித்து கல்லை உடைப்பதைப் பார்த்தேன். கல் உடைந்து சிலையாக வேண்டுமானால், உளி அடிபட்டுத்தான் ஆகவேண்டும்.
பிறர் நன்மை பெற வேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
நீண்ட இரும்புக் கம்பியாக இருந்த ஒன்றை துண்டாக வெட்டி உளியாக்கி பயன்படுத்துவதைப் போல, பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்களாய் இருந்த உன்னை, மானுடனாய் கடவுள் பிறக்க வைத்தது, அவன் தன் தேவைகளை உன்னை வைத்துப்பூர்த்தி செய்து கொள்ளவே!
நாம் பயன்படுத்துகிற அழகு சாதனம் முதல், அணிந்து கொள்ளும் நகைகள், கட்டுகிற கடிகாரம் உட்பட அனைத்துமே அடிபட்டதால் உருவானவை. அனுபவிக்க மட்டுமே நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, எதற்காக என்று கேள்வி கேட்க நமக்கு உரிமையில்லை.
கேட்டாலும் இறைவன் நம்மை விடமாட்டான் என்பதைப் புரிந்து கொண்டேன் நான். எதற்காகவோ இந்தக் கஷ்டத்தை கடவுள் அனுமதித்து இருக்கிறான் என நினைத்து சகித்துக் கொள்ளுங்கள்.. அதிலும் சந்தோக்ஷம் இருக்கத்தான் செய்கிறது.


சாயி புத்ரன் பதில்கள்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...