Monday, March 3, 2014

உனது துன்பம் எல்லாம் இன்றோடு முடிந்துவிட்டது

கி.பி.1854 ம்ஆண்டு. இன்றைக்கு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் சீரடி மண் வீடுகள் கொண்ட ஒரு குக்கிராமம். அந்த ஊர் மக்கள் நல்ல மக்கள், திருப்தியாக வாழ்ந்தவர்கள். வஞ்சனை தெரியாதவர்கள்.
                இப்படிப்பட்ட கிராமத்தில் ஒரு வேப்பமரத்தின் கீழே அழகான, அமைதியான முகம் கொண்ட 16 வயதுடைய ஒரு இளைஞன் தவம் செய்து கொண்டிருந்தான்.  உடம்பில் வெள்ளை நிறத்தில் நீண்ட அங்கி. தலையில் தலைப்பாகை, ஒளி வீசும் முகம். கடும் வெயில், மழை, கடுங்குளிர் இவை எதையுமே பொருட்படுத்தாது பசி, தாகம் மறந்து தவம் செய்து கொண்டிருந்தார் அந்த இளைஞர்.
                வேப்ப மரத்தின் கீழ் இளைஞனைப் பார்த்த ஆடு மேய்ப்பவர்கள் அவரைப்பைத்தியம் என தீர்மானித்து அவர் மீது கல் எறிந்தனர். இந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. ஊர் மக்கள் வந்தனர், பார்த்தனர். ஒரு சிலர் இந்த இளைஞன்  ஒரு யோகி, தவசீலன், ஞானி. ஒரு மா பெரும்மகான் என்று சொல்லி அவரை பூ, பழங்கள் வைத்து வழிபட்டனர்.
                கல்லால் அடித்தவர்களையும் தன்னை வழி பட்டவர்களையும் பார்த்து புன்னகை புரிந்தார் அந்த இளைஞர். வெறுப்பு விருப்பற்ற நிலை. இவரை அந்த ஊர் மக்கள் ‘பால பக்கிரி என்றழைத்தனர். இவர்தான் பின்னாளில் மகல்சாபதியால் சாயி என்று அழைக்கப்பட்ட சாயி பாபா.
                ஒரு நாள் காலை. வீர் சந்திர அன்னப்பா கபாடே. கண் பார்வை இழந்தவர். பிறவியிலேயே பார்வை இழந்தவர். தன் கஷ்டத்தை நொந்துகொண்டும், இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டும் தனக்கு கண் பார்வை தா எனப் பிரார்த்தித்துக் கொண்டும்  பால பக்கிரியைத் தாண்டிச் சென்றார். இதைக் கண்ட பக்கிரி அவர் முன் வந்தார். அவரை நிறுத்தி அவர் கண்களைத் தன் கரங்களால் தொட்டார்.
                ஓ! என்ன அற்புதம்! அந்த மனிதர் உடனே கண் பார்வை பெற்றார். பால பக்கிரியை முழுமையாகத் தரிசித்தார். அவரின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. துள்ளிக் குதித்தார். ஊருக்குள் ஓடினார்.
                பால பக்கிரி தனக்கு கண் பார்வைக் கொடுத்து விட்டார் என, தான் கண்ட அனைவரிடமும் சத்தமாகக் கூவினார்.. தான் பார்க்க முடியாததை யெல்லாம் தற்போது பார்க்கமுடிந்தது என ஆனந்தக்கூத்தாடினார்.
                கண்பதி ராவ் மூலே, சீரடியில் வசித்து வந்தார். குஷ்ட ரோகத்தால் பாதிக்கப்பட்டவர். புண்களில் இருந்து இரத்தமும் சீழும் வழிந்தோடின. மூக்கு, காது, விரல்கள எல்லாம் அழுகி விட்டன. பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்தளவு நோயின் கொடுமை.
                ஒருநாள் பால பக்கிரி போய்க்கொண்டு இருந்த போது மூலேயைப் பார்த்து அன்போடு அழைத்தார். தன்னை யார் கூப்பிடுவது என அவருக்கு சந்தேகம். இது கனவா, நனவா என ஸ்தம்பித்து நின்றார். அவரைப் பார்த்தாலே எல்லோரும் விரட்டுவார்கள். இது ஒரு தொற்று வியாதி என்று யாரும் அவரை பக்கத்திலேயே அனுமதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவரை பாபா அன்போடு கூப்பிட்டதும் அங்கேயே சிலையாக நின்றார்.
     தன்னையும் மதித்து ஒருவர் கூப்பிட்டாரே என அவருக்கு உள்ளூர மகிழ்ச்சி. பால பக்கிரி மூலேயை அணுகி, உனது துன்பம் எல்லாம் இன்றோடு முடிந்துவிட்டது என அவரை தலை முதல் பாதம் வரை தொட்டார். என்ன ஆச்சர்யம்! அந்த நொடியே மூலேயின் வியாதி போயே போய்விட்டது. குஷ்டத்தின் அறிகுறி எதுவுமே இல்லை. அவரால் இதை நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் தன்னையே பார்த்தார். கவனமாகப் பார்த்தார். மகிழ்ச்சியால் பேச்சே வரவில்லை. ஊருக்குள் ஓடினார், பார்த்தவர்களிடம் எல்லாம் பால பக்கிரியின் அற்புதத்தைச் சொன்னார். பின் பக்கிரியுடனே தங்கிவிட்டார்.
     அப்பா சாகேப் ஓர் முடவர். அவரையும் சரி செய்தார் பால பக்கிரி. அது மட்டுமல்லாமல், தன்னிடம் வந்தவர்களின் வியாதியை தன் தொடுதல் மூலமாகவே குணமாக்கினார். தன்னை தரிசனம் செய்தவர்களின் எல்லாவித துன்பத்தையும் கஷ்டத்தையும் நிவர்த்தி செய்தார்.
     இதைக் கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக பால பக்கிரியைப் பார்க்க வந்தார்கள். பக்கிரியை மனதார வழிபட்டனர். தன்னிடம் ஒன்றிரண்டு பழங்களை மட்டும் வைத்துக் கொண்டு, அனைத்தையும் அங்கேயே விநியோகித்து விடுவது பால பக்கிரியின் வழக்கம்.
     நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் வருவது அதிகம் ஆனது. பக்கிரி இந்த மாலை மரியாதை எதையுமே விரும்பவில்லை. ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் சீரடியை விட்டுப் புறப்பட்டு விட்டார். எங்கு சென்றார் என்பது யாருக்கும் தெரியாது. நான்கு ஆண்டுகள் கழிந்தன.
     மீண்டும் பால பக்கிரி ஒரு கல்யாண கோஷ்டியுடன் சீரடிக்கு வந்தார். கண்டோபா கோயிலில் வண்டியில் இருந்து இறங்கினார். இவரைப் பார்த்த கண்டோபா கோயில் அர்ச்சகர் மகல்சாபதி, சீரடியை விட்டுச் சென்ற பால பக்கிரி அல்லவா இவர்! என அடையாளம் கண்டு ஆனந்தத் தோடு ‘யா சாயி டூ சாயியே வருக என வரவேற்றார்.
     மற்றவர்களும் சாயி என்றே அழைத்தனர். நாளடைவில் சாயி பாபா என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். சாயி என்றால் தெய்வீகப் புருக்ஷர். பாபா என்றால் தந்தை. இந்துக்கள் சாயி என்றும், முகம்மதியர்கள் பாபா என்றும் வழிபட ஆரம்பித்தனர்.
     பாபாவின் அவதார நோக்கத்தில் ஒன்று மத நல்லிணக்கம், இதை அவர் மிக நேர்த்தியாகச் செய்தார். ஒரு மகான், ஆன்மீக குரு, மக்களின் துன்பத்தை துடைக்கும் சக்தி பெற்றிருக்க வேண்டும். அதிலும் அவனின் உடல் வியாதியை நிவர்த்திக்கும் வல்லமை பெற்றிருக்க வேண்டும். உடல் வியாதியுள்ளவனால் அமைதியாக இருக்கமுடியாது. பக்தி செலுத்தமுடியாது. ஆண்டவனை நினைக்கக்கூட முடியாது.
     இதை நன்கு உணர்ந்த விவேகானந்தரும் ஆன்மீக அறிவுரைக்காக தன்னிடம் வந்த நோஞ்சானிடம் கால்பந்து விளையாடச் சொன்னார். பசியோடு இருப்பவனுக்கு உணவு கொடு, போதனை செய்யாதே என்றார் புத்தர் தனது சீடனுக்கு. இதை நன்கு உணர்ந்த பாபா, மக்களின் வியாதியைப் போக்கினார். பார்வையற்றவர்க்கு பார்வை தந்தார். குஷ்ட ரோகியை குணப்படுத்தினார். முடவனை நடக்கவைத்தார். தன் தொடுதலாலேயே நிவாரணமளித்தார். மன, உடல் நலத்துக்கு உதியையே சர்வரோக நிவாரணியாக விட்டுச்சென்றார்.
     இதற்காக பாபா நம்மிடம் பக்தியைத் தவிர வேறு எதையாவது எதிர்பார்த்தாரா? அதனால்தான் அவர் பெயர் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கோயில்கள் உள்ளன. இப்படிப்பட்ட தெய்வீகப் புருக்ஷருக்கு நாம் பக்தர்களாக இருப்பது, அவர் நமக்கு குருவாக இருப்பது நாம் பெற்ற பேரும், அவரின் அருளும் தான். என்றும் பாபாவின் பாதம் பணிவோம்


கு. ராமச்சந்திரன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...