உயிரே போய்விடும் என்ற அளவுக்கு நமக்கு துன்பம் வந்த போதிலும், நாம் எவ்வளவுதான் சாயி பக்தராக இருப்பினும்
நமக்கு தளர்ச்சி வந்துவிடும். அந்த சமயத்தில் கடவுள் நம்மை கைவிட்டு விட்டதாக
நினைத்து பதற்றமடைந்துவிடுவோம். நமது இதயம்
சுக்கு நூறாக உடைந்து விடும். எல்லாவற்றிலும் எனக்கு உதவி செய்த சாயி நாதா, என்னை ஏன் கை விட்டீர்? என்று கேட்கத்தோன்றும்.
உண்மையில் என்ன நடந்திருக்கும்
என்றால், பாபா நமக்காக செயல்பட
ஆரம்பித்திருப்பார். அவரது இந்த லீலை நமக்குத் தெரியாது. சாமா என்ற பாபாவின் மிக நெருங்கிய
பக்தர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் இது்
ஒரு நாள் மாலை ஏழு மணி அளவில்
சாமாவை ஒரு நாகம் தீண்டி விட்டது. சகிக்க முடியாத வேதனையில் உயிரே போய் விடும்
போலிருந்தது. அவருக்குகவலையும், பீதியும்
ஏற்பட்டது. எல்லோரும் ஒவ்வொரு முறையைச்சொன்னார்கள். சாமாவின் உறவினரும் நிமோண்
என்ற ஊரில் கவுரவ மாஜிஸ்ட்ரேட்டராக பணிபுரிந்தவருமான நிமோண்கர் என்பவர் ‘முதலில்
உதியை எடுத்துக் கொள். பிறகு கோயிலுக்குப் போ’ என்று சாமாவுக்கு அறிவுரை வழங்கினார்.
சாமாவோ, தனது இறைவனான சாயியிடம் ஓடினால் பிழைத்துக்கொள்வோம்
என்ற நம்பிக்கையில் மசூதிக்கு ஓடினார். அவரது நம்பிக்கைக்கு எதிர் மாறான
சம்பவம்தான் அங்கே நடந்தது. சாமாவைப் பார்த்ததும், பாபா, சபிக்கவும்
திட்டவும் ஆரம்பித்து விட்டார். “ஏய், பாப்பானே ஏறாதே! ஏறாதே! ஏறினால் தெரியும் சேதி! போ.. வெளியே... இறங்கி
ஓடு..” என்று கர்ஜனை செய்தார்.
பாபாவின் கோபம் அனைவருக்கும்
தெரியும். கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பது வழக்கமான செயல் என்பதால் சாமா திகைத்தார்.
அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. யார் காப்பார் என்று நம்பினோமோ அவரே
விரட்டும்போது இனி நம்மை யாரால் காப்பாற்ற முடியும்? பாபா தன்னை கை விட்டதாக நினைத்து நம்பிக்கையற்ற
நிலையிலும், பலமற்ற நிலையிலும் அங்கேயே
கல்லாய் படியில் உட்கார்ந்து விட்டார்.
சற்று நேரத்தில் பாபாவின்
முகத்திலிருந்த கோபம் தணிந்ததை கவனித்த சாமா, மெதுவாக படியேறி பாபாவின் பாதத்தருகே சென்று அமர்ந்தார்.
கனிவான பார்வையால் அவரை முழுவதுமாக வருடிக்கொடுத்தபடி பாபா சொன்னார்:
“தைரியத்தை இழந்துவிடாதே! உன்
மனத்தில் எந்தவிதமான கவலையும் வேண்டா. சுகமாகிவிடும். கவலையை விடு. பக்கீர் தயாள குணமுள்ளவர்.
உன்னை ரட்சிப்பார். வீட்டிற்குப்போய் அமைதியாக இரு. வீட்டை விட்டு வெளியே எங்கும்
போகாதே..,தைரியமாக இரு. கவலையை
விட்டொழி. என்னிடம் நம்பிக்கை வை” என்று ஆறுதல் கூறி அனுப்பி விட்டார்.
சாமா வீட்டிற்குப் போகும்
முன்பே, தாத்யா கண்பத் கோதே பாட்டீல்
என்ற பக்தரைக் கூப்பிட்டு, சாமாவை
தூங்கவேண்டாம் என்று சொல். வீட்டினுள்ளேயே நடமாட்டமாக இருக்க வேண்டும். விருப்பமான
எதையும் அவன் சாப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் தூங்கும் விக்ஷயத்தில் மட்டும் ஜாக்கிரதையாக இருக்கச் சொல். அவனுக்கு
தூக்கக் கலக்கமாக இருந்தாலும்கூட யாரும் அவனை தூங்க விடக்கூடாது என்று அவனது
வீட்டாரிடம் சொல்’ எனக் கூறி அனுப்பிவைத்தார்.
No comments:
Post a Comment