ஓர் ஆசிரமத்தில் வசித்த குருவுக்கு ஒரு சிஷ்யன் சேவகம் செய்துவந்தார்.
ஆசிரமத்திலிருந்த பெருமாள் விக்ரகத்திற்கு பூஜை செய்வது முதல் குருவுக்கு பணிவிடை
செய்வது வரை அந்த சிஷ்யன்தான் கவனித்துக்கொண்டார்.
குருவைத் தேடி வரும் சில
பக்தர்கள், விஷ்ணு விக்ரகத்தை
தரிசிக்காமல், குரு இருக்கிறாரா
என்று கேட்பார்கள். குரு இல்iலை
என்றால் பகவானை மதிக்காமல் சென்றுவிடுவார்கள். இது சிஷ்யனுக்கு எரிச்சலைத் தருவதாக
இருந்தது.
பகவானுக்கு உரிய மரியாதை செலுத்தாமல்,
புத்தி கெட்டவர்கள் அவரது பக்தனுக்கு
மரியாதை செலுத்துகிறார்கள்.. இது எவ்வளவு அபச்சாரம்! எனப் புலம்பும் அவர், ஒரு காலக்கட்டத்தில், குருவைத் தேடி வருவோர் அனைவரையும் முகத்தில்
அடித்தாற்போல பேசி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.
ஒரு முறை சிஷ்யனுக்கு உடம்பு சரியில்லை.
படுத்த படுக்கையானார். யாராவது உதவுவார்கள் என எதிர்பார்த்து நொந்து போய்விட்டார்.
குரு இதைக் கண்டும் காணாமல் போய்
விட்டார். வழக்கமாக வரும் பக்தர்களும் இதைப் பொருட்படுத்தாமல் போய்க்கொண்டு
இருந்தார்கள்.
கடைசியாக ஒரு பக்தர் வந்து,
திரும்பிப் போகும் போது, எரிச்சலடைந்த சிஷ்யன் கேட்டான், “ஐயா, இங்கே ஒருவன் உயிர் போகும் அவஸ்தையில் இருக்கிறானே! அவனுக்கு உதவி
செய்வோம் என்ற எண்ணம் இல்லாமல், கடவுளையும்
விட்டு குருவை தேடுகிறீர்களே! இது மனிதாபிமானமான செயலா?
பாதிக்கப்பட்டவனுக்கு உதவி
செய்வதே இறை தொண்டு என உணராமல் இருக்கிறீர்களே!” என்று கடிந்துகொண்டான்.
அதற்கு பக்தன், “உன்னைத் தூக்கிக் கொண்டு போக நாங்கள் யார்?
பெருமாள் நேரில் வந்து வைத்திய
சாலைக்குத் தூக்கிக்கொண்டு போவார் என்றிருந்துவிட்டோம். குருவும் அதைத்தான் சொன்னார்” என்று கூறினார்.
“பெருமாள் யாராவது ஒரு மனிதன் மூலமாகத் தானே வந்து தூக்கிச் செல்வார்?’ என்றான் சிஷ்யன்.
“அப்படியா? பகவான், தான் ஞானிகளிடத்திலும், தனது அடியார்களிடத்திலும், அவர்கள் வடிவிலும் இருப்பதாகக் கூறியிருக்கிறானே! அவனை, அவர்களிடத்தில் தேடக் கூடாது! விக்ரகத்தில் மட்டும்தான்
தேட வேண்டும் என்று நீதானே அப்பா ஞானம் பேசி, வருவோர் போவோரை எல்லாம் விரட்டிக் கொண்டிருந்தாய்?
இப்போது தேவை வந்து விட்டதால் இறைவனை
மனிதன் வடிவில் தேடுகிறாயே? இது
தான் நீ கடவுளை தரிசிக்கச்சொன்ன லட்சணமா?”
எனக் கேட்டார் பக்தர்.
சிஷ்யனுக்கு ஞானம் பிறந்தது.
பக்தர்கள் எதற்காக குருவைத் தேடி வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டான்.
குருவின் மூலமாக இறைவனைப்
பார்க்க வேண்டும் என்பதால்தான் குருவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் என்றார்கள்.
முலே சாஸ்திரி என்ற
ஒருவர்இருந்தார். அவர் சாயி பக்தர் அல்லர். குரு கோலப் என்பவரின் பக்தர். ஆனால் சீரடிக்கு வந்தார்.
அவரிடம் தட்சணை கேட்டு பூட்டியை அனுப்பினார் பாபா. அக்னிசூத்ரம் செய்யும்
வைதீக பிராமணரான
முலே சாஸ்திரி, “பாபா ஒரு
முஸ்லீம். நான் பாபாவுக்கு கடன் பட்டவன் அல்லேன்.. எதற்காக தட்சணை தரவேண்டும்!” என கேட்டுக்கொண்டார்.
மசூதிக்கு வந்தபோது, பாபாவை கீழ்ச்சாதிக்காரன் என நினைத்து அவர் அருகில் செல்லத்தயங்கியபடி
தூரத்திலிருந்து மலர்களை அவரது பாதங்களில் வீசி எறிந்தார். சற்று நேரத்தில் எல்லோருக்கும் சாயியாக, முலே சாஸ்திரிக்கு மட்டும் அவரது குருவாகக் காட்சியளித்தார் பாபா.
முலே சாஸ்திரி ஓடிவந்து, தன் குருவின் பாதங்களில் வீழ்ந்து கட்டியணைத்துக் கொண்டார்.
எப்போதோ சமாதியாகிவிட்ட குரு கோலப், எப்படி இங்கே வந்தார்? என அவர் நினைக்கக்கூட முடியவில்லை. குரு நாமம் ஜெபித்தார், ஆரத்தி பாடினார். நினைவு திரும்பியபோது அங்கே சாயி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, தன் தவறை உணர்ந்தார்.
இதேபோல, ராமனை மட்டுமே வணங்குகிற ஒரு டாக்டர் பாபாவை தரிசிக்க
வந்தார். அவர்,
முஸ்லீமான பாபாவின்
பாதங்களை வணங்க முடியாது. தன்னை கட்டாயமும்
செய்யக் கூடாது
என்ற கண்டிப்போடு சீரடிக்கு வந்தவர்.
மசூதியில் கால் வைத்தவுடன் ஓடிச் சென்று பாபா
கால்களில் விழுந்து
வணங்க ஆரம்பித்தார்.
அவரை அழைத்துவந்த மாம்லத்தாருக்கு ஆச்சரியம்! பாபாவின் கால்களில் விழ மாட்டேன் என்று சொன்ன,
இவருக்கு என்ன ஆயிற்று? என அவரிடமே விவரம் கேட்டார்.
நான் அங்கே பாபாவைப் பார்க்கவில்லை. எனது ராமனை தரிசித்தேன்.. இவர்
ஒரு அவதாரப்
புருக்ஷர் என்று வியப்பிலாழ்ந்தார் டாக்டர்.
ஒரு மனிதனின் அகந்தையை அழிப்பதற்காகவே, இறைவன் பக்தன் ரூபத்திலோ,
அடியார் ரூபத்திலோ, துறவியின் வடிவிலோ சுற்றிக் கொண்டிருக்கிறான்.
இதை உணராதவர்கள் உண்மையான பக்தர்களாக இருக்கமுடியாது.
ஒருவருடைய குரு எவராக இருந்தாலும்
அவர் மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும். வேறு எங்காகிலும் (இறைவன் விக்ரகமாக
இருந்தாலும்) அந்த விசுவாசத்தை வைக்கக்கூடாது.
முழுமை நிலையை எட்டாத எந்த
மனிதனும் எது நியாயம்? எது அநியாயம்
என்பதை தானே தீர்மானிக்கக் கூடாது.
அதிதியை உபசரியுங்கள் என்று
பெரியவர்கள் சொன்னது ஏன்?
அதிதி தேவோ பவ! அதாவது இறைவனே
அதிதி வடிவிலும் நம் வீடு தேடி வரலாம் என்பதற்காகச் சொன்னார்கள். அதிதியே தேவர் என்றால்,
உன்னோடு இருக்கிற, உனது குரு யார் என்பதை நீ உணர வேண்டாமா?
யாரோ சிலர் வாதிடுகிற ஒரு விக்ஷயத்தை
பிடித்துக்கொண்டு மனிதனை வணங்கலாமா எனக் கேட்காமல், வணக்கம் செலுத்து. அது நன்மையைத் தரும்
சாயி வீரமணி
No comments:
Post a Comment