1897 - ம் ஆண்டு வாக்கிலிருந்துதான் சீரடிக்கு ஏராளமானன
மக்கள் வர ஆரம்பித்தார்கள் என்று சொல்லலாம். அதற்கு முன்பெல்லாம் சீரடியில்
பாபாவுக்காக வரும் பக்தர்கள் கூட்டம் சிறு நூறுகள் அல்லது சில ஆயிரங்களிலேயே இருந்தன.
அதன் பிறகு அது ஏழாயிரம் முதல் எழுபத்தைந்தாயிரம் வரை உயர்ந்தது. பிறகு லட்சக்கணக்கான
மக்கள் வெள்ளம் சீரடியில் குவியத் தொடங்கியது.
இத்தகைய சிறப்பு மிக்க ராம நவமித் திருவிழா சீரடியில்
எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அப்போதே மக்கள் வெள்ளம் திரள ஆரம்பித்தது. இதற்கு
வித்திட்டது ஒரு சர்வேயர். அவரது பெயர் கோபால் ராவ் குண்ட். அவருக்கு மூன்று மனைவியர்
இருந்தும் பிள்ளைப்பேறு இல்லை. பாபாவை வேண்டிக் கொண்டு பிள்ளைப்பேறு கிடைத்ததும்
அதற்கு நன்றிக்கடனாக ஏதாவது ஒரு விழாவை நடத்தவே அவர் தீர்மானித்திருந்தார்.
பாபா முஸ்லீம் என கருதப்பட்டதால், அவரை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகவோ என்னவோ,
அவர் முஸ்லீம் மகான்களின் நினைவு தினமான உரூஸ்
பண்டிகையைக் கொண்டாட விரும்பி, தன்
போன்ற பக்தர்களான தாத்யா பாடீல், தாதா
கோதே பாடீல், சாமா போன்றவர்களிடம்
தெரிவித்தார்.
அவர்கள் பாபாவிடம் வேண்டி அனுமதியைப் பெற்றபோதிலும்,
அந்த ஊர் கிராம முன்சீப் குல்கர்னி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அனுமதி தரக்கூடாது என்று எழுதி அனுப்பினார்.
ஆனால் பாபாவின் அனுக்கிரகம் இருந்ததால் விழாவுக்கு அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு, உரூஸ் கொண்டாடப் பட்டது. இந்த தினம் ராமநவமி தினமாக
இருக்கக் கூடும் என பக்தர்கள் தீர்மானித்தனர். அதன் விளைவாகத்தான் இரண்டு
விழாக்களையும் ஒன்றாக நடத்த முடிவு செய்தனர்.
இந்துக்களும், முஸ்லிம்களும் இதற்கு ஒப்புதல் தரவே, விழா களைகட்டத் தொடங்கியது. சீரடியில் இந்து முஸ்லீம்
இணைப்புக்கு இது பாலமாக விளங்கியது. இதில் சந்தனக்கூடு ஊர்வலம் போன்றவையும்
சேர்ந்து விழாவைப்புதுமையாக்கியது. இது 1912-ல் நடந்தது.
பாபாவின் முஸ்லீம் பக்தரான அமீர் சக்கர் அவர்களின்
மேற்பார்வையில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. மூன்று ஆண்டுக்குப் பிறகு அவரது மனைவி
இதை மேற்பார்வை செய்தார்.
ராமநவமித் திருவிழா பெரிய அளவில் பேசப்படுவதற்கும்,
சீரடி ஒரு சமஸ்தானமாக மாறுவதற்கும் ராதா
கிருஷ்ண மாயி என்ற அன்னை தான் காரணம். அவரது கடுமையான உழைப்பு காரணமாக செல்வந்தர்கள்,
பக்தர்கள் என சேர்ந்து ராமநவமித்திருவிழாவை
பிரபல்யப் படுத்தினார்கள். இந்த விழா மிகப்பெரிய அளவு பிரபல்யமானது
1912 - ம் ஆண்டில்தான். கிருஷ்ணராவ் ஜாகேஷ்வர் பீஷ்மா
என்ற பக்தர், காகா மகாஜனி ஆகியோர்
கலந்து பேசிதான் உணுஸ் தினத்தில் ராம நவமி கொண்டாட பாபாவிடம் அனுமதி பெற்றனர்.
ராமர் பற்றிய பாடல்கள் அனைத்தையும் பீஷ்மா இயற்றிப்
பாடினார். பகலில் ராமநவமித் திருவிழா, இரவில் சந்தனக் கூடு விழா என நடந்தது. 1913 - ல் இருந்து ராம நவமிக்
கொண்டாட்டத்தில் நிகழ்ச்சிகள் அதிகமாக்கப் பட்டன.
சித்திரை முதல் தேதியிலிருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சப்தாஹம்
செய்ய ஆரம்பித்தாள் ராதாகிருஷ்ணமாயி. பக்தர்கள் அனைவரும் முறை வைத்துக் கொண்டனர். சித்திரை ஒன்று முதல் பன்னிரண்டாம் தேதி வரை
பக்தர்களின் கூட்டத்தால் சீரடி திணற ஆரம்பித்தது. மல்யுத்தப்போட்டிகள்
நடத்தப்பட்டன.
இதற்குப் பிறகுதான் தாஸ்கணு மகராஜ் பாபாவிடம் வந்து அங்கு
கீர்த்தனை செய்தார். துவக்கத்தில் ஐந்து முதல் ஏழாயிரம் பேராக இருந்த மக்கள்
கூட்டம், எழுபத்தைந்தாயிரமாக
உயர்ந்தது. இந்தளவுக்கு சீரடியை ராமநவமித் திருவிழா உயர்த்தியது.
நமது பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் இந்த விழா
ராம நவமி அன்று மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது. காலை முதல் பகல் பன்னிரண்டு
மணி வரை ஹோமம், ஆரத்தி, அன்னதானம் என அமர்க்களப்படும். இடம் சிறியதாக
இருப்பதாலும், பக்கத்தில் கிறித்தவ
குடும்பத்தின் இடையூறாலும் இவ்விழா எளிமையாக நடைபெற்றாலும் பக்தர்கள் எறும்புகளைப்
போல வருகிறார்கள். உண்மையாகவே வெல்லக்கட்டியை மொய்க்கும் எறும்புகளைப்போல, பக்தர்கள் வரிசையாக தெருவில் நின்று பாபாவை
தரிசிக்க வருவது நமது பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் காணக் கண்கொள்ளாக்காட்சியாகும்.
அனைவரும் வாருங்கள், அவன் அருளைப்
பெறுங்கள்.