Wednesday, June 26, 2013

பஞ்சமா பாவம் போக்கும் அன்னதானம்




 
நாம் நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாமலே செய்கிற பாவங்கள் எண்ணற்றவை. இந்த பாவங்களில் ஐந்து விதமான பாவங்கள் மிகக்கொடுமையானவை என்கின்றன நமது சாஸ்திரங்கள்.
இந்த உலகத்தில் பிறக்கிற அனைத்தும் வாழ்வதற்கு உரிமை உள்ளவை. ஆனால் அவற்றுக்கான உரிமை மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. பெரியது சிறியதைக் கொல்வதும், சிறியது தன்னிலும் சிறியதைக் கொல்வதும் காலம் காலமாக இருந்து வருகிற நிதர்சனம். வலியவர் எளியவரை வீழ்த்துவதும், வலியவரை தேவர் வீழ்த்துவதும் நம்மிடையே கண்கூடு.
வாழ்வதற்காகப் பிறப்பெடுத்த உயிரிகளை நாம் நமது அன்றாடச் செயல்பாடுகளால் கொன்றுவிடுகிறேhம். அதிலும் கண்ணுக்குத் தெரியாமல் கொல்வது என்பது அதிகமாக நடக்கிற செயல்கள். இத்தகைய செயல்கள் ஐந்து விதங்களால் விளைவதாக அந்தக்காலத்தில் கூறினார்கள்.
அவை உலக்கை, உரல், அம்மி, அடுப்பு, நீர்ப்பாத்திரம், துடைப்பம் இவைகளால் வேலை செய்யும்போது சிறிய உயிரினங்களுக்கு இம்சை உண்டாகிறது.இவற்றை பஞ்சசுனா தோக்ஷம் என்றார்கள். இத்தகைய தோஷமும் ஒருவர் வாழ்க்கையை பாதிக்கும் என்பது அறிஞர்கள் கருத்து.
கண்டநீ பேஷணீ கல்லி உதகும்பி சமார்ஜநீ
பஞ்சஸுநாக்ருஹஸ்தஸ்ய தாபிஸ் ஸ்வர்க்கம் ந விந்ததி
இப்போதெல்லாம் எல்லாம் மின்மயமாகிவிட்டது. உரலும் உலக்கையும் செய்த பாவங்களைவிட இப்போது கிரைண்டர், மிக்சி செய்கிறது. அந்தக் காலத்தில் இதையே பாவம் என்று கருதி பரிகாரங்கள் பலவற்றைச் செய்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் அதிகமாகச் செய்கிற நாம், எவ்வளவாகப் பரிகாரங்களைத் தேட வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பாவங்கள் தொலைய பல வழிகளை நமது முன்னோர்கள் வகுத்திருந்தார்கள். இவை நம் அன்றாட வாழ்வில் செய்ய முடிகிற, செய்ய வேண்டிய வேள்விகள் அல்லது யக்ஞம் ஆகும்.  இவற்றையும் ஐந்தாகப் பிரித்து பஞ்ச யக்ஞம் என்றார்கள். அவை பிரம்ம யக்ஞம், பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், பூதா யக்ஞம், மனுஷ்ய யக்ஞம்.
பிரம்ம யக்ஞம் என்பது தினமும் வேதத்தைப் பாராயணம் செய்வது. இறைவனுக்கு உணவினை சமர்ப்பித்துவிட்டு உண்பது. எதற்காக வேதத்தைப் பாராயணம் செய்யவேண்டும் என்றால், இந்த உலகம் நிலையில்லாதது, இந்த உலகத்தில் நான் வாழும்போது எனக்கு என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது. அவற்றின் மீது நான் கருணை காட்டவேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதற்காக.
 பித்ரு யக்ஞம் என்பது நமது குடும்ப முன்னோர், குலதெய்வம் ஆகியவற்றை வணங்கி, அவர்களுக்கு தர்ப்பணம், சமர்ப்பணம் செய்து வேண்டிக்கொள்வது. என்னால் அறியாமல் செய்யப்பட்ட பாவங்களை மன்னித்து என் குடும்பம் நன்றாக உதவி செய் என வேண்டிக் கொள்வதன் பொருட்டு நாம் இதைச் செய்கிறோம்.
தேவ யக்ஞம் என்பது தேவர்களுக்கானது. நாம் நன்றாக வாழவும், நம்மைச் சுற்றியுள்ளவை அனைத்தும் வாழவும் மழை தேவை, சரியான அளவு வெயில் தேவை, காற்று தேவை.. இப்படி ஒவ்வொரு தேவைக்கும் நாம் ஒரு கடவுளை ஆராதிக்கிறோம். அந்தக் கடவுள்கள் தினமும் உண்ண வேண்டும், அவ்வாறு அவர்கள் நம்மிடம் சாப்பிட்டால் மன மகிழ்ச்சியடைந்து நமக்கு நல்லதைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. இதன் பொருட்டே தேவ யக்ஞம் செய்கிறோம். ஓமம் வளர்த்து அதில் வரும் புகையையும், பிரசாதங்களையும் அவிர்ப்பாகமாகத் தருகிறோம்.
பூத யக்ஞம் என்றால் பூதங்களில் சேர்க்கையால் உருவாகியிருக்கிற நம்மை விட தாழ்ந்த உயிரினங்கள் அனைத்திற்கும் உணவு தருதல்.
மனுஷ்ய யக்ஞம் என்றால், வீடு தேடி வரும் அந்நியரை உபசரித்து அவருக்கு உணவிடுதல். அந்நியர்  ரூபத்தில் இறைவனே வருவார் என்பது நம் மக்களின் அனுபவம்.
இவையெல்லாம் நாம் செய்த பாவங்களைக் கரைத்துப் புண்ணியத்தை நமக்குச் சேர்ப்பதற்காகவே என்று முன்னோர்கள் வகுத்திருந்தார்கள்.
இதற்காக அவர்கள் ஊர்த் திருவிழா, அமாவாசை போன்றவற்றையும் ஏற்படுத்தினார்கள். இதை யோசித்துப் பார்த்தால் நமக்கே புரியம்.
நாம் நமக்கு விருப்பமான ஒரு தெய்வ வடிவில் கடவுளை கும்பிடுகிறோம். இந்தக்கடவுள்தான் நம் இஷ்ட தெய்வம். பெரும்பாலும் நாம்
இஷ்ட தெய்வ வழிபாட்டின் மூலமாகவே யக்ஞங்களைச் செய்கிறோம்.
நமது அன்றாட வழிபாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இஷ்ட தெய்வத்தின் முன் நின்று ஸ்லோகம் சொல்லுவோம். எந்த சுலோகம் சொன்னாலும் ஓம் என்ற பதத்தைச் சேர்த்துச் சொல்வோம். இது ஓங்காரம், வேதத்தின் சாரம். இதுவே கடவுள். இதை நாம் சொல்லித் துதிக்கும் போது இறைவனை திருப்தி செய்கிறோம். எனவே இது பிரம்ம யக்ஞம்.
இஷ்ட தெய்வத்தின் முன் வெறும் வாயால் மட்டும் துதிப்போமா? நமக்கு விருப்பமான கனி வகைகளை அல்லது பிரசாதம் படைப்போம். இதை இறைவன் ஏற்றுக்கொள்ளவேண்டுவோம். இவ்வாறு இறைவனுக்கு போடப்படும் படையலை நம் இஷ்ட தெய்வத்திற்குப் போடுவது தேவ யக்ஞம்.
இலை போட்டுப் படைக்கும்போது தனியிலை போடமாட்டார்கள். மூன்று அல்லது ஐந்து எனப்போடுவார்கள். ஐந்து இலை போடுவதே சரியானது. இவ்வாறு போடப்படும் படையலை சாப்பிடுவோம். நம் மூலம் பித்ருக்கள், குல தெய்வம் சாப்பிடுவதால் இது பித்ரு யக்ஞத்தை நிறைவேற்றுகிறது.
சாப்பிடும் முன்பாக, காகத்திற்கு உணவிடுவோம். நம்மை விடத் தாழ்ந்த உயிருக்கு தருவதால் இது பூத யக்ஞம்.
பண்டிகையின் போது நாம் மட்டுமே சாப்பிடாமல் அந்நிய மனுஷிளையும் அழைத்து உணவு தருவோம். அல்லது வீட்டிற்கு வருவோருக்கு அன்னம் இடுவோம். இதற்குப் பொருள் தெய்வம் மனுஷ ரூபமாக வருகிறது என்பதாகும். இது மனுஷ யக்ஞத்தைச் செய்வதாகும்.
இப்படிப்பட்ட விஷயங்களை நாம் தொடர்ந்து செய்தால் நம் கணக்கிலுள்ள பாவங்கள் அழிந்து புண்ணியம் சேரும்.
சாயி பக்தர்களுக்கு இந்த யக்ஞங்கள் எல்லாம் கண்டிப்பாகச் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏன் அப்படி என்றால், யார் ஒருவர் சாயி பக்தராகிறாரோ, அவர் இயல்பாகவே இந்த ஐந்து யக்ஞங்களையும் செய்துகொண்டுதான் இருப்பார்.
எப்போதும் சாயி ராம் சாயி ராம் என்று சொல்லி பிரம்ம யக்ஞத்தை நிறைவேற்றுவார். ஜாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் அன்னதானம் செய்வதன் மூலம் ஒரேயடியாக தேவ,  பித்ரு, மனுஷ யக்ஞத்தையும், விலங்குகளுக்குக் கொடுத்து பூத யக்ஞத்தையும் நிறைவேற்றுவார்.
அன்னதானம் என்ற பெயரில் அவர் அனைத்து உயிரினங்களையும் போஷிப்பார். அன்னமே பிரம்மம், அன்னமே உலகின் ஆதாரம், அன்னமே வாழ்வின் துவக்கம், அன்னமே வாழ்வின் முடிவு என்பதை அறிந்து அனைத்து உயிர்களையும் காக்கும் வகையில் அவர் உணவிடுவார்.
இவ்வாறு அன்னதானமிடும்போது எஞ்சிய உணவுகள் வீசப்படுகின்றன அல்லவா? அவை தாழ்ந்த உயிரினங்களுக்கும் உணவாகப் பயன்படும்.
இப்படி எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்பதால்தான் பாபா அன்னதானத்தை வலியுறுத்தி வைத்துவிட்டுச் சென்றார்.
ராமலிங்க வள்ளலாரும், ஐயப்ப சுவாமியும் அன்னதானத்தை வலியுறுத்தினார்கள். நமது மதம் அன்னதானத்தை பிரதானமாக வலியுறுத்துகிறது.
சமீபத்தில் குரோம்பேட்டை ரமா அம்மையார் பேசும்போது, தொலைக் காட்சி பேட்டியொன்றில் ஓர் அடியார், அன்னதானம் செய்வது தப்பு, அது பிறரை சோம்பேறியாக்குவது என்று குறிப்பிட்டதாக கூறினார்.
இந்த உலகத்தின் ஆதாரமே ஆகாரத்தில்தான் இருக்கிறது. இதனால்தான் அன்னமே பிரம்மம் என்றார்கள். அப்படிப்பட்ட அன்னம் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இறைவனின் சித்தம். சிவன் கல்லுக்குள் உள்ள தேரைக்கும் படியளப்பான் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆகவே, அரைகுறை அடியார்கள் சொல்வதைக்  கேட்டு அன்னதானத்தை நிறுத்திவிடாதீர்கள். உங்களால் முடிந்தளவு தினம் ஒரு காக்கை, குருவி,, எறும்பு என எதற்கேனும் அன்னமிடுங்கள். பசித்தோர் முகம் பாருங்கள். பாபாவின் அனுக்கிரகம் தப்பாமல் கிடைக்கும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...