Friday, June 14, 2013

உன் குடும்பம் கரை சேரும்!-2





நேற்றைய தொடர்ச்சி

ஓடக்காரன் எதற்கு?
டிரைவரை நம்பித்தானே வண்டியில் சொகுசாகப் பயணிக்கிறோம்.. நமது பாதுகாப்பு, உடைமைகள், உயிர், எதிர்காலம் எல்லாவற்றையும் பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி, ஓட்டுநரை நம்பி உட்காருவதில்தானே ஐயா இருக்கிறது அவன் பிரயாசைப்பட்டு, கண் விழித்து, வழியில் மேடு பள்ளங்கள், எதிர் வண்டிகள், குறுக்கே வரும் தடைகள் எல்லாவற்றையும் பார்த்து கவனமாக நம்மை இலக்குக்குக் கொண்டு போய் சேர்க்கிறான்.
இவ்வளவு தூரம் கொண்டு போனீர்களே! வாருங்கள் வீடு வரை என்று டிரைவரைக் கூப்பிடுகிறோமா என்ன? அதுபோல உன் இலக்கை சேரும் வரை யாவது சத்குருவை உன் டிரைவராக வைத்துக்கொள். அவர் உன்னை கொண்டு சென்று சேர்ப்பார்..
பகவான் ராமகிருஷ்ணரிடம் தண்ணீர் மேல் நடக்கக் கற்றுக்கொண்ட மூடயோகி ஒருவர் வந்து, பகவான், பதினைந்து ஆண்டுகள் தவமிருந்து நீர்
மேல் நடக்கும் யோகத்தைக் கற்றுக்கொண்டேன்என்று சொன்னான்.
பைத்தியக்காரா! ஒரு எட்டணா தந்திருந்தால் ஓடக்காரன் உன்னை தண்ணீரை கடக்க வைத்து அக்கரையில் பத்திரமாக சேர்த்திருப்பானே! இதற்குப்போய் பதினைந்து முழு ஆண்டுகளை வீணடித்து விட்டாயே! என்றார்.
நாம் எல்லோருமே அந்த மூடயோகியைப் போல, தேவையற்ற ஒன்றுக்காக வாழ்நாளை வீணாக்குகிறோம். இது தேவையற்ற ஒன்று என்ற தெளிவு நமக்கு வருவதில்லை.
ஐம்பது ரூபாய் கொடுத்து ஆட்டோவில் போக வேண்டிய விஷயத்திற்காக ஐந்து லட்சம் கொடுத்து கார் வாங்குகிறவனைப் போன்றதுதான் நமது தெளிவு. பெட்ரோல், மெயின்டனென்ஸ், டிரைவிங், டாக்ஸ் செலவுகள் மிச்சம் என நினைக்கவேண்டும்.
அந்தத் தெளிவு இல்லாததால் காருக்கு அடம் பிடிக்கிறோம்.. அது ஒரு சின்ன விபத்தில் சிக்கினாலும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறோம். ஐம்பது ரூபாய் கொடுத்து போய்விட்டிருந்தால் இந்தக் கவலை நமக்கு வந்திருக்காது..
சரி.. இந்தத் தொல்லைகள் வராமல் வாழ்வை நகர்த்த சத்குருவைப் பிடித்துக்கொள்ள வேண்டும். எப்படி அவரைப் பிடிப்பது? எப்படி அவரை நம் ஓடக்காரனாக்குவது?
முதலில் உனது குரு யார் என அடையாளம் காண். அவரது தகுதிகளை அறிந்துகொள்ள முயற்சி செய்.. உனது தகுதிக்கு ஏற்றவரா? உனது குணாதிசயங்களுக்கு ஒத்து வருகிறவரா? அவர் உன்னை கடைசி வரை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு சென்று சேர்ப்பாரா என்று ஆராய்ந்து பார்.
நான் ஆராய்ந்து பார்த்தேன்.. பல குருமார்களிடம் சென்றேன்.. கடைசியில் பாபாவே எல்லாவற்றுக்கும் தகுதியானவர் என்பதைத் தெளிந்து அவரைப்பிடித்துக்கொண்டேன். அவர் என் படகை செலுத்திக் கொண்டிருக்கிறார்.
மனிதர்களில் பலரை நாடினேன்.. பலரிடம் அடைக்கலம் புகுந்தேன்.. அவர்களை சோதித்தேன்.. ஆனால் கடைசியில் பாண்டிச்சேரியில் உள்ள பாபா மாஸ்டர் அருணாச்சலம் அவர்களை மட்டும் மிக நெருக்கமாக பிடித்து வைத்துக்கொண்டேன். மானசீகமாக அன்னையாக, தந்தையாக, குருவாக அவரை நினைக்கிறேன்.. எல்லாரும் உயர்ந்தவர்கள்தான்.. ஆனால் என் இயல்புக்கு ஏற்றவர் அவர்..
நான் தப்பு செய்தால், கடுமையாக கண்டிக்கமாட்டார்... திருத்துவார்.. நான் நல்லது செய்தால் உற்சாகப்படுத்துவார்.. நான் உயர்ந்துகொண்டு போகும்போது என்னை தூக்கிவிடுவதற்கு என்ன வழிகள் உள்ளன.. எப்படி முன்னேற வேண்டும் என்று சொல்லித் தருவார்..
எல்லோரிடமும் என்னைப் பற்றி பெருமையாகப் பேசுவார் (என்னிடம் ஒன்றுமில்லை என்று அவருக்கு தெரிந்திருந்த போதிலும்). எப்போது கூப்பிட்டாலும் ஓடி வருவார்.. நான் போனால் எனக்கு எளிமையாக காட்சி தருவார்.. உபசரிப்பார்..
இதனால் அவரை எல்லாவற்றுக்கும் பிடித்து வைத்திருக்கிறேன். இப்படித்தான் அனுபூதி சித்தரை நண்பராக, உறவாக, குருவாக வைத்திருக்கிறேன்..அவர்கள் இன்முகம் காட்டி நன்மையை எனக்குச் செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட குரு போல உனது சத்குரு இருக்க வேண்டும்.. அந்த குரு யார் என்பதைத் தீர்மானம் செய்.. அவருக்கு பரீட்சை வை..
இதன் தொடர்ச்சி நாளை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...