Tuesday, June 11, 2013

முடியாது என சோர்ந்து விடாதே! முடியும் வரை உன்னுடனிருப்பேன்!-2





 இதன் முந்தைய பகுதியினை படிக்க

அரிச்சந்திரன், நளமகாராஜன், தர்மராஜன், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோரின் வரலாறுகளைப் படித்து இருப்பீர்கள். இவர்கள் எல்லோருமே உங்களைவிட நேர்மையானவர்கள், தூய்மையான, இறை அம்சம் பொருந்தியவர்கள். ஆனால் அவர்களும் பிறர் அனுபவிக்க முடியாத அளவுக்குத் துன்பங்களை அனுபவித்தார்கள்.
உங்களுக்குச் சொல்கிற விஷயமும் இது தான்.. உங்கள் நேர்மைக்காக நீங்கள் இப்போது சோதிக்கப்படவில்லை. சாயி மீது நீங்கள் வைத்துள்ள பக்தி உண்மையானதுதானா? இப்படிப்பட்ட சோதனை நேரத்தில் நீங்கள் ஓடிவிடுவீர்களா? தொடர்ந்து என்னையே தஞ்சமாகக் கொண்டு வாழ்வீர்களா? என்பதை சோதிப்பதற்காக, கிரகங்கள் தரும் சோதனைகள். முடிவு வரை பொறுமையோடும், நம்பிக்கையோடும் இதை சகித்துக்கொண்டும், அவமானங்களைத் தாங்கிக் கொண்டும் நிலைத்து நிற்பவன் வெற்றி பெறுவான்.
இதை உங்களுக்கு சமாதானத்திற்காக கூறவில்லை. அனுபவத்தைக் கூறுகிறேன்..
எனக்குத் திருமணமாகி முதல் குழந்தை வயிற்றிலேயே இறந்த நேரத்தில், எனக்கு மிகக் குறைந்த சம்பளம். மருத்துவ உதவிகூட செய்ய முடியாத நிலை.. உறவினர் ஒருவருக்குப் போன் செய்து, இந்த நிலையாகிவிட்டது. எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தால் தருவீர்களா? எனக்கேட்டேன்.
அவர் பதில் சொல்லாமல் போன் ரிசீவரை வைத்துக்கொண்டே யாரிடமோ, நான் ஏமாற்றுவதாக சொன்னார்.. பிறகு என்னிடம், இப்போது பணம் இல்லை என்று சொன்னார். நான் போனை வைத்து விட்டேன்.. அவரிடம் பேசிய முதலும் முடிவுமான வார்த்தை அதுதான்..
கடவுள் என் மனைவிக்கு அந்த நிலையிலும் சுகப் பிரசவத்தை அருளினார்.. உடல் நலனைத் தேற்றினார்.. பல காலங்களுக்குப் பிறகு நான் நல்ல நிலைக்கு உயர்ந்தேன்.. ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் என் மனதைவிட்டு நீங்கவேயில்லை..
இன்றைக்கு எத்தனை ஆயிரமாக இருந்தாலும் பாபா பிறருக்கு உதவும் நிலைக்குக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்..
அவ்வளவு ஏன்?
சமீபத்தில் சாயி தரிசனம் பத்திரிகையை மார்க்கெட்டிங் செய்வதற்காக தம்பி ஒருவரை அழைத்து வந்தேன்.. பொருளாதாரத்தில் தனக்கு உள்ளதை இழந்து கடனால் செய்வதறியாது திகைத்த நேரத்தில்தான் அழைத்துவந்தேன்.
இது பாபாவின் புத்தகம். இதை விரிவு படுத்த உண்மை யோடு உழை. உனது பிள்ளைகள் எதிர்காலத்தை பார்த்துக் கொள்கிறேன்.. உனக்குத் தேவையானதை நீ எடுத்துக் கொண்டு பாபாவுக்கு மீதியை வை’, என்றேன்.
அவரும் உழைத்தார். அவரது கடனை அடைக்க சிறிது உதவி செய்தேன்..கடனை முழுவதும் அடைக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு வந்துவிட்ட பிறகு, இது நட்டத்தில் போகிறது.. எனக்கு தண்டமாக சம்பளம் தருகிறீர்கள்.. நான் ஊருக்குப் போனால் மாதம் முப்பது முதல் ஐம்பதாயிரம் வரை சம்பாதிப்;பேன்.. மாதந்தோறும் வந்து இதை சப்ளை செய்துவிட்டுப் போகிறேன்.. என்றார்.
கஷ்டமோ நஷ்டமோ செய். பாபா வரவழைத்து உன்னிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதை முழு மூச்சாகச் செய்ய வேண்டும். நட்டத்தைப் பற்றி கவலைப்படாதே என்றேன்.. அவர் கேட்கவில்லை. குடும்பத்தோடு கிளம்பிவிட்டார்.
நடந்தது என்ன? போன இடத்தில் இன்னும் கஷ்டத்திற்கு ஆளானார். அவரை முக்கியமானவர் என நினைத்த உறவினர் பகைத்தார்கள்.. ஒரு நாள் கூட நிம்மதி இல்லாமல் தவித்தார். படுத்தால் உறக்கமில்லை என புலம்பினார்..
அவருக்கு ஆறுதல் சொல்வதற்காக நான் போனபோது, இரவு மூன்று மணியிருக்கும்.. அவர் பெயரை உச்சரித்து, அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து தீவிரமாகிவிட்டது..என்ற குரல் என் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. திடுக்கிட்டு எழுந்து, பாபாவிடம் வேண்டினேன்.. அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள் பாபா.. உனக்காக நான் எவ்வளவு தூரம் சிரமப்படுவதாக இருந்தாலும் தயாராக இருக்கிறேன்.. பிறரை எதற்கு வருத்தப்படவைக்க வேண்டும்? என்றேன்.

                                       இதன் தொடர்ச்சி நாளை......

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...