உனது கொடிய துயரம் அகலுவதற்கு எளிய வழி ஏதேனும்
இருக்கிறதா என்றால், நிச்சயமாக இருக்கிறது.
நமக்கு வருகிற கடுமையான துயரங்கள் அனைத்தும் நீக்கப்படுவதற்கான எளிய உபாயத்தை சாயி
பாபா, ஹேமாட்பந்த் மூலம்
கூறியிருக்கிறார். அது சத்சரித்திரம் பதினைந்தாவது அத்தியாயத்தைப் படிப்பது.
அதன் சாராம்சம் என்ன?
எவர் ஒருவர் அத்தியாயம் பதினைந்தை பக்தியுடன் படிக்கிறாரோ அல்லது தினமும் கருத்தூன்றி பயில்கிறாரோ அவருக்கு, சத்குரு சாயிபாபாவின் அருளால் அனைத்து கடுமையான துயரங்களும், துயரமான நிலைகளும் அகற்றப்படும்.
இந்த அத்தியாயம் என்ன சொல்கிறது?
எளிய பக்தியைக் கடைப்பிடித்தாலே எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என போதிக்கிறது. கீர்த்தனைகள் செய்வதற்கு கோட்டோ, விலை மிகுந்த தரம் மிகுந்த அங்க வஸ்திரமோ, குல்லாயோ, தலைப்பாகையோ தேவையில்லை. அவற்றை அணிந்து அலங்காரம்செய்து கொண்டுதான் கீர்த்தனை செய்ய வேண்டும் என்கிற அவசியமும் இல்லை என்பதை
பாபா தாசகணு மூலம் நமக்கு உதாரணம் காட்டுகிறார்.
காவல்துறையைச் சேர்ந்த சாயி பக்தரான தாசகணு மகராஜ்,
கீர்த்தனை செய்வதிலும், கவிதை எழுதுவதிலும் வல்லவர். அவர் கீர்த்தனை
செய்வதற்காக இப்படி சர்வ அலங்காரத்தோடு புறப்பட்டார். புறப்படும் முன்பு பாபாவிடம்
ஆசி பெற வந்தபோது, பாபாவால் அவரது
இந்த அலங்கார விஷயங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு, இடுப்புக்கு மேல் ஒன்றும் அணியாமல் கைகளில் ஒரு ஜதை
சப்ளாக்கட்டையோடும், கழுத்தில்
மாலையோடும் எப்போதும் இருந்து கீர்த்தனை செய்தார்.
பக்தியில் நாரதரைப் போல தன்னை மறந்து பக்தி செய்யும்
நிலையை தாசகணு பெறவேண்டும் என விரும்பினார். தாசகணு என்றால் நாம்தானே மேற்சொன்ன அலங்காரம்,
ஆடம்பரம் என்றால் உலகத்தைச் சார்ந்தவை.
அது பக்திக்குத் தேவையற்ற ஒன்று. இப்படி அலங்காரம் செய்துகொண்டு திரிவதன் மூலம்
நமது பெருமையை வேண்டுமானால் பறைசாற்றலாம், மனிதர் மத்தியில் அங்கீகாரம் பெறலாம். ஆனால் இறைவன் முன்னால் எதையும் பெற
முடியாது.
அனைத்தையும் துறக்க வேண்டும். எதுவெல்லாம் நமக்குப்
பெருமை சேர்ப்பதாக நினைக்கிறோமோ அவை அனைத்தையும் துறக்கும்போதுதான் அவர் அருள்
என்கிற மாலையால் நம்மை அலங்கரிப்பார்.
ஆடம்பரமோ, அலங்காரமோ இல்லாமல் மிக எளிய முறையில் தூய்மையோடு இருந்தாலே போதும். தூய
பக்தியே மிகச் சிறந்தது என்கிறார் பாபா.
தாசகணு மகராஜ் ஒருமுறை
தானே என்ற இடத்தில் கவுபீனேஷ்வர் கோவிலில் சாயி பாபாவின் புகழைப் பாடி கீர்த்தனை செய்துவந்தார்.
அந்த சமயத்தில் சோல்கர் என்பவரும் கீர்த்தனையைக் கேட்டு மெய் உருகி பாபாவிடம் பிரார்த்தனை
செய்தார்.
சிவில் கோர்ட்டில் தற்காலிக ஊழியராக வேலை செய்துவந்த
அவரது பிரார்த்தனை என்னவெனில், ’குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கும் பரம ஏழையான எனக்கு
நிரந்தரமான உத்யோகம் வேண்டும். தற்போது எனக்கு இலாக்கா தேர்வு நடைபெறுகிறது. இதில்
தேர்ச்சி பெற்று உத்தியோகம் நிரந்தரமானால், சீரடிக்கு வந்து, தங்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்கி கற்கண்டை விநியோகிப்பேன்’ என்பதே அவரது பிரார்த்தனை கேட்கப்பட்டது. பாபா அவருக்கு நிரந்தர வேலை
அளித்தார். சீரடிக்குப் போகும் வசதியில்லாத அவர், தினமும் தேநீரில் சர்க்கரை சேர்ப்பதில்லை என
தீர்மானித்து அந்தப்பணத்தை சேமித்தார். அதைக் கொண்டு அவர் சீரடிக்குப்
புறப்பட்டார்.
தேநீருக்குப் போடுகிற சர்க்கரைக்கு எவ்வளவு செலவாகிவிடும்?
இது ஒரு சேமிப்பாகவும் தெரியாது, இழப்பாகவும் தெரியாது. இந்த சொற்பப் பணத்தைத்தான்
அவரால் சேமிக்கமுடிந்தது. ஓரளவு சேர்ந்ததும் சீரடிக்குச் சென்று பாபாவை கண்குளிர
தரிசித்து அவர் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்து, கற்கண்டை விநியோகித்தார்.
பாபா அவரதுபக்தியை மெச்சி், ‘என் முன்னர் பக்தியுடன் உங்களது
கரங்களை நீட்டுவீர்களேயானால் உடனேயே இரவும் பகலும் உங்களுடன் கூடவே நான்
இருக்கிறேன். இந்த உடம்பால் நான் இங்கேயே இருப்பினும் ஏழு கடலுக்கு அப்பால், நீங்கள் செய்வதையும் நான் அறிவேன். இந்தப்
பரந்த உலகில் நீங்கள் விரும்பியபடி எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், நான் உங்களுடனேயே இருக்கிறேன். உங்களது இதயமே நான்
வாழும் இருப்பிடம். நான் உங்களுக்குள்ளேயே இருக்கிறேன். உங்களது இதயத்திற்குள்ளும், சகல ஜீவராசிகளின் இதயங்கள் அனைத்திலும்
இருக்கும் என்னையே எப்போதும் வணங்குவீர்களாக.
என்னை இங்ஙனமாக அறிபவன் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப் பட்டவனும்,
அதிர்ஷ்ட சாலியும் ஆவான்’. என்றார்.
இப்படி பாபா சோல்கரை ஆசீர்வதித்தார். அந்த ஆசீர்வாதம்
நம் அனைவருக்கும் பொருந்தும். பக்தியுடன் நாம் நம் கரங்களை பாபாவின் முன் நீட்ட
வேண்டும். இதயத்தை களங்கப்படுத்தாமல் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லா உயிர்களிலும்
பாபா இருப்பதை நாம் உணர்ந்து அவற்றை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எவரிடமும் கடுஞ்சொற்களையோ, அவர்களுக்கு தீமை செய்வதையோ உள்ளத்தாலும் நினைக்கக்கூடாது.
இத்தகைய நீதியைப் போதிக்கும் பதினைந்தாவது
அத்தியாயத்தைப் படித்தால் நிச்சயமாகவே நமது கஷ்டங்கள் போகும், இன்பம் வந்து சேரும்.
சாயி கலியன்
No comments:
Post a Comment