Sunday, June 16, 2013

மனதை அடக்கு!




மனம் தடுமாறுகிறது. எப்போதும் அலை பாய்ந்தபடியே இருக்கிறது. இதை அடக்கி நிலைப்படுத்தும் வழி என்ன? தியானம் யோகம் என்று சொல்லாமல் சரியான வழியை விளக்குங்களேன்.
( ஆர். கார்த்திக் ராஜா, கும்பகோணம்)
நம் மனம் எப்பொழுதும் எதைப் பற்றியேனும் சிந்தித்துக்கொண்டே இருப்பதால், தெளிவான முடிவுகளை எடுக்கமுடியாமல் தடுமாறும். குறிப்பாக சின்னச் சின்ன விஷயம் அவ்வப்போது நடக்கும் போது அதைப் பற்றியே பெரிதாக விரிவுபடுத்திப்பார்ப்பது மனதின் இயல்பு.
உதாரணமாக யாராவது நம்மைத் திட்டிவிட்டால் பதிலுக்கு நம்மால் திட்டமுடியாத போது, நேரில் கூனிக் குறுகி விட்டு, அவருக்குப் பின்னால் அவரை மனத்திற்குள் அதிகமாக திட்டுவதுபோல, அடிப்பது போல, கொல்வது போல கற்பனை செய்து தன்னை ஒரு பெரிய கதாநாயகனாகக் காட்டிக்கொண்டு, ஒரு பெரிய கதையைப் பின்னிக்கொண்டிருக்கும்.
பொறாமை, சந்தேகம், அவமதிப்பு, கோபம், பயம், அவமானம், பேராசை, தற்பெருமை, கட்டுப்படுத்த முடியாமல் வளவள என பேசுதல் போன்ற உணர்ச்சிகள் நம்மைத் தாக்கும் போது மனம் அதிலேயே உழன்று, அதில் ஏதோ தீர்வைக் காண்பது போல தன்னிலே உழன்று கொண்டிருக்கும். உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாதபோது அதை வெளிப்படுத்தி விடுவோம். மற்ற சமயங்களில் எல்லாமே மனதிற்குள்தான் அரங்கேற்றமாகும். இதனால்தான் மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறது.
இதை அடக்கவேண்டும். எப்படி அடக்குவது?
முழுமையாக அந்த எண்ணங்கள், சிந்தனைகள் உங்களைக் கடந்து போகட்டும் என விட்டுவிட வேண்டும். கண்களை மூடி அமைதியாக இந்த நிகழ்வுகள் முடியும்வரை உட்கார்ந்திருங்கள்.
கரையான்கள் புற்றிலிருந்து புறப்படுவதைப் போல இந்த எண்ணங்கள் மனதிலிருந்து புறப்பட்டுச் சென்ற பிறகு, மனதில் ஒரு வெற்றிடம் தோன்றுவதை உங்களால் உணரமுடியும். இந்த வெற்றிடம் துவக்கத்தில் ஒரு சில வினாடிகள் வரை நீடிக்கும். இதையே பழக்கப்படுத்தினால் ஒரு சில நிமிடங்கள் தொடரும். காலப்போக்கில் நிமிடங்கள் மணிக்கணக்கில் ஆகும்.
இந்த எண்ணங்களைக் கட்டுப்படுத்தத்தான் மூக்குக்கு மேலே புருவ மத்தியில் ஒரு கற்பனை உருவத்தைக் கொண்டுவந்து நிறுத்திக்கொண்டு, அதில் பார்வையை செலுத்துவார்கள். இப்படி செய்துவந்தால் எண்ணங்கள் தடைபட்டுவிடும் என்பது நமது முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. இதைப் பின்பற்றிப் பாருங்களேன்.
எதன் மீதாவது ஆசைப்படுதல், எண்ணமிடுதல் ஆகியவற்றாலும் மனம் அலைபாயும். பகவான் மீது பாரத்தை வைத்தால் நாளடைவில் சரியாகும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...