Friday, June 21, 2013

பித்ருக்கள் ஏற்பார்களா?






ஐயா, என் பெற்றோர் காலமாகிவிட்டனர். உயிரோடு  இருந்தவரையில் அவர்களை நான் கவனிக்கவில்லை. இறந்த பிறகு அவர்களுக்கு பித்ரு கடன்களை செலுத்திவருகிறேன். ஆனாலும் இருக்கும் போது அவர்களுக்கு எதுவும் செய்யவில்லையே என மனம் உறுத்துகிறது.. என்ன செய்வது?
( எம். குமரகுரு, நெசப்பாக்கம், சென்னை)
உண்மையாகவே நீங்கள் நல்ல மகன் என்பதால் இப்போதாவது உணர்கிறீர்கள். சிலருக்கு உணர்வேயில்லை. நீங்கள் செய்கிற கடன்கள் உங்கள் பித்ருக்களுக்கு எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். வாழும்போது அவர்களை நரகத்தில் வாழவைத்தீர்கள்.
செத்த பிறகு நீங்கள் செய்யும் தர்ப்பணம் அவர்களை புண்ணிய லோகத்திற்குக்கொண்டு சேர்க்காது. அவர்களுக்கு நரகமே கிடைத்திருந்தாலும் அது ஒன்றும் பெரிதாக அவர்களுக்குத் தெரியாது. வலி, வேதனை அனுபவிக்கிற சரீரத்தை அவர்கள் இங்கேயே விட்டு விட்டார்கள். வேறு ஜென்மா எடுத்திருப்பார்கள்.
நான் ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். ஒரு புண்ணியசாலிகளான பெற்றோர் தமது ஒரே மகனை விட்டுவிட்டு இறந்தார்கள். பலவித ஞானங்களையுடைய அந்தப் பிள்ளையின் வீட்டிலேயே பிறக்க வேண்டும் என இருவரும் கடைசி நேரத்தில் நினைத்திருந்தார்கள். போன ஜென்மத்து புண்ணியக் கணக்குப்படி, தந்தையார் அந்த வீட்டில் மாடாகவும், தாயார் நாயாகவும் பிறந்தார்கள். வளர்ந்தார்கள். பூர்வ புண்ணியத்தால் தாங்கள் யார் என்பது இருவருக்குமே தெரிந்திருந்தது.
ஒருமுறை சிரார்த்தம் செய்யவேண்டிய நாள் வந்தது. அதற்கான ஏற்பாடுகளை பையன் செய்து கொண்டிருந்தான். அன்றைய தினம் வீட்டிலுள்ள மாடு, நாய் போன்ற அனைத்தையும் பட்டினி போட்டான்.
சிரார்த்தத்திற்காக எடுத்து வைத்த பாலில் ஒரு சர்ப்பம் வந்து விக்ஷத்தைக் கக்கிவிட்டுச் சென்று விட்டது. இதை கவனித்த நாய், அந்தப் பாலை ஓடிச் சென்று கவிழ்த்துவிட்டது. பாலை நாய் கவிழ்த்ததைப் பார்த்த அந்தப் பையன், தடியை எடுத்து நாயை நன்றhக அடித்து கட்டி வைத்துவிட்டு உணவை தராமல் விட்டுவிட்டான். சிரார்த்தத்தை முடித்துக்கொண்டு அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்த மாடு, தனது மனைவியிடம்,  நம்மைப் பட்டினியாக போட்டுவிட்டு, நமக்கு இவன் சிரார்த்தம் செய்கிறானே.. இவன் செய்த சிரார்த்தத்தால் நமக்கு என்ன பயன்? நமக்கு என்ன திருப்தியுண்டாயிற்று?  நமக்குத் தீனியைப் போடாமல் இப்படி கொல்லுகிறானே! என்று பசியால் புலம்பிச் சொன்னது.
இத்தகைய விலங்குகளின் பாஷைகளையும் அறிந்திருந்த அந்தப் பையன், மாடு சொன்னதைக்கேட்டு மனம் வருந்தினான். தனது பெற்றோரே இப்படி மாடாக,நாயாகப் பிறந்து இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவைகளின் பசியைத்தீர்த்தான்.
பாபா கூட, ஆடோ, மாடோ, நாயோ, பூனையோ யாராக இருந்தாலும் பூர்வ ஜென்மத் தொடர்பில்லாமல் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாது என்றிருக்கிறார். இழிந்த விலங்காயினும் உன்னைத் தேடி வந்தால் அவற்றின் பசியைப் போக்கு என்றார்.
ஒருவன் ஆடுகளையும் மாடுகளையும் அல்லது நாய்களையும் வளர்ப்பான். அவனது இல்லறத்தார் அவனைப் பழிப்பார்கள், அல்லது புறக்கணிப்பார்கள். அவனது பூர்வ புண்ணியத்தால் இந்த விலங்குகளாக தேவர்களே வந்து அவனிடம் நைவேத்தியத்தை ஏற்பார்கள். இது பிறருக்குத் தெரியாது.
தேவர்கள் மனித உருக்கொண்டு பிச்சை எடுக்க வருவது உண்டு என்பதால்தான், திண்ணை கட்டி அந்நியருக்கு சோறு போட்டார்கள்.
போய் ஏழைகளுக்கும், பசித்தோருக்கும், விலங்குகளுக்கும் உணவிடுங்கள். அதுவே நல்ல சிரார்த்தம். இது உங்கள் பெற்றோருக்கு சத்கதியைத் தராவிட்டாலும் உங்களுக்கு புண்ணியத்தைச் சேர்க்கும். பித்ருக்கள் மனிதர் வடிவில் சாப்பிட்டு திருப்தி அடைவார்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...